Friday, August 10, 2012

பொன்விழா காணும் எங்கள் தாகூர் கலைக் கல்லூரி – கோ.சுகுமாரன்

நேற்றைய முன்தினம் (08.08.2012) புதுச்சேரி லாசுப்பேட்டையில் அமைந்துள்ள தாகூர் கலைக் கல்லூரியின் பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. அவ்விழாவில் கலந்துக் கொண்ட முதல்வர் ரங்கசாமி அவர்கள் இக்கல்லூரி வளாகத்தில் மாநிலப் பல்கலைக்கழகம் ஒன்று துவங்கப்படும் என அறிவித்துள்ளார். நான் பயின்ற, அதாவது எங்கள் இளமைக்கால அத்தனைக் குறும்புகளையும் அரங்கேற்றிய எங்கள் கல்லூரி வளாகம் பல்கலைக்கழகமாக மாறப்போகிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறம். இந்திய ஆளுமையின் பிம்பமாக திகழும் இரபீந்திரநாத் தாகூர் பெயரில் அமைந்துள்ள எங்கள் கல்லூரி துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது என்கிற மகிழ்ச்சி மறுபுறம்.

நான் இக்கல்லூரியில் 1986 முதல் 1989 வரை இளம் அறிவியல் கணிதவியல் பயின்றேன். பயின்றேன் என்பதைவிட படிப்பை மறந்துப் போராட்டங்களில் ஈடுபட்டேன் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். எங்களின் கல்லூரி அனுபவங்கள் பற்றி அடுத்தப் பதிவுகளில் எழுத உள்ளேன். தற்போது எங்கள் கல்லூரி தொடங்கப்பட்ட வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

பொன்விழாவை முன்னிட்டு கல்லூரி சார்பில் விழா மலர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் இராஜா அவர்கள் இம்மலரைத் தொகுத்துள்ளார். இதில் அரிய பல தகவல்கள் அடங்கியுள்ளன. ஆசிரியர்கள் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களின் சுத்திகரிக்கப்படாத படைப்புகள் இடம்பெற்றுள்ளன. எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டுமென்ற தேடல் நிறைந்த எனக்கே தெரியாத பல தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.

1961, ஜூன் 30ல் தற்போது மிஷன் வீதியில் அமைந்துள்ள ‘கல்வே காலேஜ்’ (அப்போது அரசு உயர்நிலைப் பள்ளி) கட்டிடத்தில் ‘அரசுக் கலைக் கல்லூரி (Government Arts College)’ என்ற பெயருடன் இக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.  அப்போதைய பிரஞ்சு இந்திய தலைமை ஆணையர் எஸ்.கே. தத்தா இக்கல்லூரியை முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்பட்டுள்ளது. முதலில் பி.யூ.சி. (Pre University Course) வகுப்புகள் மட்டுமே தொடங்கப்பட்டன. 1961–1962 கல்வியாண்டில் மொத்தம் 160 மாணவர்கள் பயின்றுள்ளனர். இதில் 35 மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துள்ளனர். இக்கல்லூரிக்கு முறையான கட்டிடம் கட்ட அப்போது 1 லட்சத்து 96 ஆயிரத்து 553 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தனியார் வசம் கட்டிடப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1961-1962ல் இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டை முன்னிட்டு (1861-1941) இக்கல்லூரிக்கு ‘தாகூர் கலைக் கல்லூரி” என பெயர் சூட்டப்பட்டது. இக்கல்லூரியின் முதல் முதல்வராக சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வராக இருந்த டி. பாலகிருஷ்ணன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். கணிதவியல் துறை பேராசிரியராக வி. பாலக்கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

1962, மே 21ல், இளங்கலை பொருளாதாரம், பிரஞ்சு மற்றும் இளம் அறிவியல் கணிதவியல், தாவரவியல் ஆகிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கென அரசிதழில் அறிவிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது (No. F. 25.96/62-EDM, General Administration Department, Government of Pondicherry. Dated 21st May 1962). இதற்கென விண்ணபிக்க விரும்புவோர் 50 நயா பைசா மணியார்டர் செய்து விண்ணப்பம் மற்றும் கையேடு பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை அப்போதைய அரசுத் துறை செயலர் சுர்ஜித் சிங் மமக் வெளியிட்டுள்ளார். 1970ல் இக்கல்லூரியில் முதுகலை, முதுஅறிவியல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

1963, ஜூன் 13ல், அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு தற்போது கல்லூரி அமைந்துள்ள இலாசுப்பேட்டையில் இக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டியுள்ளார். பின்னர் கட்டிடப் பணிகள் அனைத்தும் முடிந்து புதிய கட்டிடத்தை அப்போதைய இந்திய கல்வி அமைச்சர் ஶ்ரீமாலி திறந்து வைத்துள்ளார். இதன் முதல் ஆண்டு விழாவில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்க்காடு லட்சுமணசாமி முதலியார் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளார்.        

நீண்ட வரலாறு கொண்ட தாகூர் கலைக் கல்லூரி இன்று பல்வேறு துறைகளாக பல்கிப் பெருகியும், முதுகலை மற்றும் முதுஅறிவியல் வகுப்புகளுக்கென ‘பட்ட மேற்படிப்பு மையம்’ தனியே துவங்கப்பட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழுக்குப் பங்களிப்பு செய்து வரும் மா.இல.தங்கப்பா, க.பஞ்சாங்கம், ராஜ் கெளதமன், பசுபதி, நா.இளங்கோ என பலரும் இங்கு பணியாற்றி உள்ளனர், பணியாற்றியும் வருகின்றனர்.

பரந்து விரிந்த, மரங்கள் நிறைந்த வளாகத்தில் அமைந்துள்ள எங்கள் கல்லூரியின் கம்பீரம் இன்றைக்கும் என்னை ஈர்த்த ஒன்று. பொன்விழா காணும் எங்கள் கல்லூரியின் இனிமை நிறைந்த அந்த நாட்கள் என் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

No comments: