Sunday, April 25, 2021

தமிழறிஞர் பிரான்சுவா குரோ மறைந்தார்: தமிழுக்குப் பேரிழப்பு!

நாங்கள் எல்லாம் செல்லமாக “தாத்தா” என்று அழைக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் பிரான்சுவா குரோ (Francois Gros) தனது 88ஆவது அகவையில் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் இந்தியவியல் துறையின் ஆய்வாளரான கண்ணன்.எம். மூலம் அறிமுகமானவர். கற்றுத் தேர்ந்த, அறிவார்ந்தத் தமிழறிஞர். பழகுவதற்கு எளிய மனிதர். அவருடன் தேநீர் கடையில் தேநீர் பருகியபடி உரையாடிய நாட்களை நினைத்தால் கண்கள் கலங்குகின்றன. நிறை குடம் அவர். என்றும் தளும்பியது கிடையாது.

1960களின் தொடக்கத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த பிரான்சுவா குரோ (1933 – 2021) பாரீசில், பாரீஸ் பல்கலைக்கழகத்தின் Ecole Pratique Des Hautes Etudes என்ற உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான (Philology) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் துவக்கிய பிரான்சுவா குரோ 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ்வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப் பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது. பரிபாடல் (1968) திருக்குறள் காமத்துப்பால் (1993) இரண்டும் பிரெஞ்சில் நூல் வடிவம் பெற்றுள்ளன. காரைக்கால் அம்மையார் குறித்த நூலையும் பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார். தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பும்  வெளிவந்துள்ளது.

அவர் இடைக்காலத் தென்னிந்திய வரலாறு மற்றும் தொல்லியல் குறித்த நூல்களும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக உத்திரமேரூர், திருவண்ணாமலை  உள்ளிட்ட கோயில் நகரங்களின் வரலாறு  பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.

பிரான்சுவா குரோ, கண்ணன்.எம். ஆகியோர் இணைந்து பாரதியார் தொடங்கி ஆத்மாநாம், பிரமிள், வில்வரத்னம் (இலங்கை) போன்றோரது கவிதைகள் உள்ளடக்கிய 200 கவிதைகளைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளனர். அதேபோல், தேர்த்ந்டுக்கப்பட்ட 20 சிறுகதைகளையும் பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளனர்.  

தென்னிந்திய வரலாற்று அட்லஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் கி.பி. 1600  வரலாற்றுக்கு முந்தைய தென்னிந்திய வரலாற்றை வரைபடங்களாகச் சித்தரித்துள்ளார்.  இது உலகிலேயே சிறந்த, அரிய தொகுப்பு என்கிறார் கண்ணன்.எம்.

இலக்கியம் மட்டுமன்றி வரலாறு, பண்பாடு, தொல்லியல் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். புகழ்ப் பெற்ற வரலாற்றிஞர் ரொமீலா தாப்பரின் சகோதரர்  ரோமேஷ் தாப்பருடன் நட்பாக இருந்துள்ளார். அதேபோல், பிபின் சந்திரா, லோகேஷ் சந்திரா போன்றோருடன் நட்புடன் இருந்துள்ளார்.  கலை வரலாற்றறிஞர் கபில வட்சாயயன் உடனும் நட்புடன் இருந்தார். அவருடனான நட்பு பயன் தரக் கூடியது என்று பிரான்சுவா குரோ கூறியுள்ளார்.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்டசோழபுரம் கோயில் குறித்த நூல்கள் வெளிவர காரணமாக இருந்துள்ளார்.

பிரெஞ்சு, சமற்கிருதம், லத்தீன, கிரேக்க மொழிகள் மட்டுமின்றி தமிழிலும் புலமைப் பெற்ற அறிஞராக இருந்துள்ளார். 1994-இல் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடந்த மாநாடு தவிர்த்து, 1996-இல் கோலாலம்பூர் தொடங்கி 1995-இல் தஞ்சாவூரில் நடந்தது வரையில் அனைத்து உலகத் தமிழ் மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். இம்மாநாடுகளில் கல்விக் கற்பிக்கும் முறைக் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டிருந்ததாகவும்  கூறியுள்ளார்.

பிரான்சுவா குரோவிற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் செயல்படும் மத்திய செம்மொழி உயராய்வு நிறுவனத்தால் வழங்கப்படும் 2008 – 2009 ஆண்டிற்கான குறள்பீட விருதும், ரூ. 5 லட்சம் தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.  

பிரான்சுவா குரோ பிரான்சின் தென்கிழக்கில் உள்ள லியோன் நகரத்தில் வாழ்ந்துவந்தார்.  ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதக் காலத்தைப் புதுச்சேரியில் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட்டு வந்தார். அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் புதுச்சேரிக்கு வராமல் பிரான்ஸ் நாட்டிலேயே தங்கியிருந்தார். பிரான்சுவா குரோ தன்னிடமிருந்த ஆயிரக்கணக்கான அரிய நூல்களைக் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கியுள்ளார்.

“தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி அறிவித்தது மட்டும் போதாது. அருங்காட்சியகத்தில் உள்ள செவ்வியல் கலைப்பொருட்கள் இறந்துப் போய்விடுகின்றன. அவற்றை அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். அவற்றை வெகுமக்களின் பொது பண்பாட்டிற்குள் எடுத்துச் செல்ல வேண்டும். இதைச் செய்வதற்கான ஆய்வு, சிறந்த கல்வி கற்பிக்கும் முறைகள், தமிழில் கல்விச் சார்ந்த மொழிநுட்பங்கள் (Education tools in Tamil) உருவாக்க வேண்டும். இது தமிழ்நாடு மேலைநாடுகளுக்குத் தமிழைக் கற்றுத் தர ஏதுவாக இருக்கும்” என்று பிரான்சுவா குரோ கூறியுள்ளார்.

ஒரே மகனான இவருக்கு, பொறிஞரான அவரது தந்தையார் இலக்கிய நூல்களைக் கொடுத்து ஊக்கப்படுத்தி உள்ளார். தந்தையின் ஊக்கத்தால் உலகப் புகழ்ப் பெற்ற அறிஞராக மிளிர்ந்துள்ளார் பிரான்சுவா குரோ.

பிரான்சுவா குரோவின் மறைவு தமிழ் செவ்வியல் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, நவீனத் தமிழ் இலக்கியத்திற்கும் பேரிழப்பாகும். மொத்தத்தில், தமிழ் மொழிக்குப் பேரிழப்பாகும்.

துயரமான இத்தருணத்தில் அவருடனான உறவை எண்ணிப் பெருமை அடைகிறேன்..

அவருக்கு என் ஆழ்ந்த அஞ்சலி..

கோ.சுகுமாரன்

Sunday, April 18, 2021

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை சாதித்தோம்: அய்யா ஆனைமுத்து பாராட்டினார்!

2004-இல், புதுச்சேரியில் வன்னியர், மீனவர், நாவிதர், முடிதிருத்துவோர், ஒட்டர், எருகுலா உள்ளிட்ட சாதிகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென ‘சமூக நீதிப் போராட்டக் குழு’ சார்பில் வணிக அவையில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினோம்.

கம்பன் கலையரங்கில் ‘சமூக நீதி மாநாடு’ நடத்தினோம். மிகவும் பிற்படுத்தப்படோர் சமூக அமைப்புத் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்தோம். அய்யா ஆனைமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு, தனக்கே உரிய பாணியில் மிகச் சிறந்த உரையாற்றினார்.

அப்போழுது முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி. அவரைப் பலமுறை சந்தித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டையினால் விளையும் பயன்களை எடுத்துச் சொன்னோம். அதோடு, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கு இடஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதையும் சட்ட ரீதியாக விளக்கினோம்.

நாங்கள் கூட்டம் நடத்தி சரியாக மூன்று மாதத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் மட்டும் 20% வழங்கி அரசாணைப் பிறப்பித்தார் முதல்வர் ரங்கசாமி. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தங்கமணி அரசுக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசாணை நகல் அய்யா ஆனைமுத்து பார்த்து சரியென சொன்ன பின்னால் பிறப்பிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்த வரலாற்று சாதனைக் குறித்து ‘சிந்தனையாளன்’ இதழில் தலையங்கம் எழுதினார் அய்யா ஆனைமுத்து. இதற்காக சீனு.அரிமாப்பாண்டியன் வழியாக என்னிடமிருந்த ஆதாரங்கள், யார் யார் போராடினார்கள் போன்ற விவரங்களைப் பெற்று அவற்றை முறையாக பதிவு செய்திருந்தார்.

முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கிடைக்கப் பாடுபட்ட அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அதில் என்னைக் குறிப்பிட்டதோடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மூன்றே மாதத்தில் சாதித்த என்னைப் பெருமைப்படுத்தி எழுதியிருந்தார்.

பின்னர், 2006-இல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பிலும் 20% இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார் முதல்வர் ரங்கசாமி. இந்த இடஒதுக்கீட்டினால் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த விளிம்புநிலை மக்கள் பெரிதும் பயன்பெற்றனர், பயன்பெற்று வருகின்றனர்.

நான் பெரியாரை பார்த்ததில்லை. வாழும் பெரியாராக வாழ்ந்து காலமான அய்யா ஆனைமுத்து என்னைப் பாராட்டியது உலகளவில் எந்தவொரு பெரிய விருதைக் காட்டிலும் சிறந்தது. அதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்.

 

Wednesday, April 14, 2021

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கு: அதிமுக, திமுகவும் ஒரே நிலைதான் எடுத்தன...

கர்ணன் படச் சர்ச்சைக் குறித்து பலரும் பேசி வருகின்றனர். 1995 என்பதற்குப் பதிலாக 1997 என்று கொடியன்குளம் சம்பவம் நடந்த காலத்தை மாற்றி சொல்லியுள்ளது தவறுதான். 1991 – 1996 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி. 1996 – 2001 வரை கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, அதனைத் திருத்திவிடுவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாக செய்தி வந்துள்ளது.

இந்தத் தவறை வைத்துக் கொண்டு ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டும்தான் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நடந்தது போலவும், திமுக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் பலரும் எழுதியுள்ளனர். மனுஷ்யபுத்திரன் தீக்குளித்துவிடுவார் போல. ஆனால், அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறின என்பதுதான் உண்மை.

1996-இல் மேலவளவில் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 6 தலித்துகள் அப்பகுதியிலுள்ள ஆதிக்கச் சாதியினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த முருகேசன் தலையை வெட்டி வீசினர் சாதி வெறியர்கள். முருகேசன் திமுகவைச் சேர்ந்தவர்.

இச்சம்பவம் நடந்த நாள் முதலே வழக்கறிஞர் பொ.இரத்தினம், உடன் பல்வேறு வழக்கறிஞர்கள் குழுவாகப் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்கப் பாடுபட்டனர். அம்மக்களுக்குச் சட்ட ரீதியாக உதவிகள் செய்தனர்.

இவ்வழக்கில் 41 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை உயர்நீதின்ற உத்தரவின் அடிப்படையில் சேலத்திற்கு மாற்றப்பட்டு நடந்தது. விசாரணை முடிந்து 27.06.2001 அன்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஏ.ஆர்.இராமலிங்கம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மீதமுள்ள 24 பேரையும் விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென அரசு வழக்கறிஞர் (அதிமுக) அரசுக்கு அறிக்கை அளித்தும், அபோதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் அனைவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், என்.பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு 19.04.2006 அன்று தீர்ப்பு வழங்கியது.

அத்தீர்ப்பில் விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், மீதமுள்ளவர்களுக்குப் போதிய ஆதாரங்கள் இருந்தும் அரசு மேல்முறையீடு செய்யாத காரணத்தால் தண்டிக்க முடியவில்லை எனத் தீர்ப்பில் நிதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

“52 …. we have concluded that there is enough material to hold against all the accused. But, unfortunately, the State has not preferred appeal against the acquittal of the remaining accused”

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென அப்போதைய திமுக அரசுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பிலும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், திமுக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. முதல்வர் கருணாநிதி தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வார்கள், அதில் பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறி மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.சிர்புர்க்கர், தீபக் வர்மா ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 22.10.2009 அன்று குற்றவாளிகள் 17 பேரின் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. விடுதலை செயப்பட்ட 24 பேருக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யாததால் உச்சநீதிமன்றமும் இவர்களுக்குத் தண்டனை வழங்கவில்லை.

அதிமுக, திமுக என இரண்டு அரசுகளும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டன. இதனால், மீதமுள்ள 24 கொடும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டனர்.

தலித்துகளின் வழக்குகளில் அதிமுக, திமுக இரண்டுமே ஆதிக்கச் சாதிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றை விட்டு ஒன்றை நியாயப்படுத்துவது சரியல்ல.

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது. அதுகுறித்து விரிவாக எழுத வேண்டும்.