Wednesday, February 20, 2008

அதியமான்கோட்டை காவல்நிலைய துப்பாக்கி கொள்ளை சம்பவம் - உண்மையறியும் குழு அறிக்கை


செய்தியாளர் கூட்டத்தில் அ.மார்க்ஸ்...


செய்தியாளர் கூட்டத்தில் உண்மையறியும் குழுவினர்...


செய்தியாளர் கூட்டத்தில் உண்மையறியும் குழுவினர்...


நடந்தவற்றை விளக்குகிறார் அரிபாபு...


அதியமான்கோட்டை காவல்நிலையம்...


சர்ச்சைக்குரிய இடம்...


துப்பாக்கிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வாழைத்தோப்பு ...


காவல்துறையால் பாதிக்கப்பட்ட குமார்...


காவல்நிலையத்தில் வைத்து
விசாரிக்கப்பட்ட குமாரின் குடும்பம்...


தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டதை (9.02.2008) தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் மீது விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது குறித்து புகார்கள் வந்ததை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சார்பில் கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு உருவாக்கப்பட்டது.

1. விஞ்ஞானி கோபால், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), சென்னை.

2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.

3. வழக்குரைஞர் கோ. அரிபாபு, குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் (CPCL), சேலம்.

4. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR).

5. உதயம் சுப.மனோகரன், மக்கள் வழக்கறிஞர் சங்கம் (IAPL), இந்தியா.

6. வழக்குரைஞர் பாவேந்தன், தமிழக மக்கள் உரிமைக் கழகம்.

7. பூமொழி, தமிழ்நாடு மனித உரிமை இயக்கம்.

8. வழக்குரைஞர் கா.கேசவன், குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் (CPCL).

9. வழக்குரைஞர் பா. சுதாகரன், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் (CPCL).

இக்குழு பிப்ரவரி 17, 18 (2008) ஆகிய தேதிகளில் தர்மபுரி நகரம், அதியமான் கோட்டை, நாயக்கன் கொட்டாய், நல்லம்பள்ளி, நத்தம், வெள்ளாளப்பட்டி, செம்மானஅள்ளி, புளியம்பட்டி ஆகிய ஊர்களுக்குச் சென்று விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களையும், அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் ஜே।உதயகுமாரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நஜிமல் ஹோடா ஐ.பி.எஸ். அவர்களையும் நேரில் சந்தித்து விபரங்களைக் கேட்டு அறிந்தது.

சம்பவம்

பிப்ரவரி 9-ம் தேதி அதிகாலையில் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் ஆயுத பாதுகாப்பு அறைக்குள் இருந்த 6 துப்பாக்கிகள் மற்றும் 1 வாக்கி டாக்கி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு சென்றதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகிறது. அதனை தொடர்ந்து மோப்பநாய்கள் சகிதம் போலீஸ் விசாரணை துவங்கியது. அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் தவிர 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் 6 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் செய்திகள் வந்தன. நக்சலைட்டுகள் இதனை செய்து இருக்கலாம் என்கிற ரீதியிலும் செய்திகளை வெளியிடப்பட்டன.

தொடர்ந்து மேலே குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள பலர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்। சிலர் உடனடியாக விசாரணை முடித்து திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். ஒரு சிலர் நான்கு நாட்கள் வரை வழக்கு பதிவுகள் எதுமின்றி, சட்டவிரோத காவலில் வைத்து கடும் சித்ரவதைகளுக்குப் பின் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய சித்ரவதை எதுவும் செய்யப்படவில்லை எனவும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை செய்யக் கூடாது எனவும், யாரிடமும் புகார் செய்யக்கூடாது என்றும் அவர்களிடம் இருந்து எழுதி வாங்கப்பட்டுள்ளது.

யார் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்। யார் சித்ரவதை செய்யப்பட்டு சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டனர் என்று கூறும்முன், இதற்கு சில நாட்கள் முன்பு நடைபெற்ற ஒரு முக்கிய சம்பவத்தைக் குறிப்பிடுவது அவசியமாகிறது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேசம்பட்டி என்ற கிராமத்தில் தியாகி கூன்மாரியிடம் இருந்து தியாகி பச்சையப்பன் என்பவர் நெடுஞ்சாலை ஒரத்தில் உள்ள 4.5 ஏக்கர் நிலத்தை அடைமானம் பெற்றுள்ளார். உரிய நேரத்தில் திருப்பாவிடின் தனக்கே சொந்தமாகி விடும் என்கிற “எதிரிடை கிரயம்” என்னும் முறையில் இந்த அடைமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறித்த ஆண்டில் அவர் அடைமானத்தை திரும்ப பெறாததால் அந்த இடம் பச்சையப்பனின் பாத்தியத்தில் இருந்து வருகிறது. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் நிலவுரிமையாளர் கூன்மாரி தொடுத்த வழக்கொன்றில் கிருஷ்ணகிரி உரிமையியல் நீதிமன்றம் 1982-ஆம் ஆண்டு அடைமானம் பெற்ற பச்சையப்பனுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கிறது. பின்னர் கூன்மாரி உயர்நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெறுகிறார். பச்சையப்பன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தோற்று விடுகிறது. பல ஆண்டுகளுக்கு பின் அடைமானம் பெற்றவரை வெளியேற்ற உரிய ஆணையை கூன்மாரி பெற்று போலீஸ் உதவியுடனும், ஏராளமான உறவினர் மற்றும் ஆதரவாளர்களுடனும் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி பச்சையப்பன் குடும்பத்தினரை வெளியேற்றி, அங்கிருக்கும் அவர்களது வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி வெளியேற்றுகிறார். பச்சையப்பன் குடும்பத்தினர், கால அவகாசம் கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கூன்மாரியிடம் இருந்து அரசியல் ரீதியிலும், பிற வகைகளிலும் செல்வாக்கு மிகுந்த தர்மபுரியை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் சில கோடி ரூபாய்களுக்கு அந்த நிலத்தை பெற்றுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, தனது செல்வாக்கை காவல் துறையினரிடம் செலுத்தியதாகப் பலர் எங்களிடம் புகார் செய்தனர்.

நிலத்திலிருந்து கட்டயமாக வெளியேற்றப்பட்ட பச்சையப்பன் குடும்பத்தை சேர்ந்த ஒரு சிலர் காவல் துறை ஒரு பக்க சார்பாக நடந்து கொண்டதாக தங்களது கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிகிறது। காவல் துறையின் மீது ஊழல் குற்றச்சாட்டையும் சிலர் கூறியுள்ளனர். இதனால் காவல்துறை பச்சையப்பன் குடும்பத்தின் மீது கடும் ஆத்திரம் அடைந்து உள்ளனர்.

இந்த சம்பவங்களை ஒட்டி அடுத்த சில நாட்களில் துப்பாக்கி கொள்ளை நடைபெற்றது. காவல் துறையின் விசாரணையும் தொடங்குகிறது. நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட உண்மைகள் தெரிய வந்தன.

உண்மைகள்

1) விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களின் விபரம்

i) பச்சையப்பன் குடும்பத்தினர் குறிப்பாக வெள்ளாளபட்டியைச் சேர்ந்த குமார், சேசம்பட்டியை சேர்ந்த நேதாஜி மற்றும் வெள்ளாளப்பட்டி தன்ராஜ் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தற்பொழுது நேதாஜி கோவை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இவர்களை தவிர பெண்கள் உள்பட பச்சையப்பன் குடும்பத்தை சேர்ந்த பலரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ii) கூன்மாரி குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒரிருவர் மட்டும் விசாரணை செய்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். கூன்மாரியின் பேரன் சசிகுமார் என்பவரை நேரில் சந்தித்த பொழுது அவர் இதனை ஏற்றுக் கொண்டார்.

iii) இந்த சம்பவத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத நக்சல்பாரி இயக்கத்தை (ம.ஜ.இ.க, ம.ஜ.இ.அ) சேர்ந்த பலரின் மீது காவல்துறை ஆரம்பத்தில் இருந்தே பொய்க் குற்றச்சாட்டு பரப்பியுள்ளதோடு, தங்களது பழைய பகையைத் தீர்க்கும் வண்ணம் நத்தம் கோவிந்தசாமி, வெள்ளாளப்பட்டி மாதன், மத்தன்கொட்டாய் மாதன், ஏலகிரி ராமன், வெள்ளாளப்பட்டி சித்தானந்தம் ஆகியோர் விசாரணைக்கு உட்பட்டு மிரட்டப்பட்டுள்ளனர். பா.ம.க ஒன்றிய செயலாளரும் வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து தலைவருமான மதியழகன், ம.தி.மு.க சண்முகம் ஆகியோரும் கடுமையாக விசாரிக்கப்பட்டுள்ளனர்.

ம.ஜ.இ அணியைச் சேர்ந்த சித்தானந்தன் தான் தலைமறைவாய் இருந்த காலத்தை காட்டிலும் இச்சம்பவத்தை ஒட்டியே தேடுதல் வேட்டைக்குட்படுத்தபட்டதாக எங்களிடம் கூறினார்.

2) காணாமல் போனது தொடர்பான காவல் துறையினரின் விசாரணையில் தெரியவரும் குளறுபடிகள்.

i) காவல் நிலையத்தில் பாதுகாப்பு அறையில் பூட்டி வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களை அங்கிருந்த காவலர்கள் முன்னிலையில் அவர்களுக்கு தெரியாமல் எடுத்துச் சென்றதாக சொல்லப்படுவது நம்பக்கூடியதாக இல்லை। பூட்டை உடைத்து ஆயுதங்கள் கொள்ளை போன போது பணியிலிருந்த காவலர்கள் தூங்கியதாக சொல்வது ஏற்கக்கூடியதாக இல்லை. சக்தி வாய்ந்த .303 துப்பாக்கிகளை விட்டுவிட்டு ஏன் சாதாரண துப்பாக்கிகளை எடுத்துச் சென்றனர் என்பதும் விளங்கவில்லை.

ii) சரியாக ஒரு வாரத்திற்குப் பின் சென்ற 6-ம் தேதியன்று காவல் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு வாழைத்தோப்பில் (சுமார் 150அடி) ஆறு துப்பாக்கிகளில் ஐந்து கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்வதும் நம்பத் தகுந்ததாக இல்லை। இடையில் மோப்ப நாய்கள் சகிதம் போலீசார் தேடியும் இவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

iii) இதிலும் இன்னும் ஒரு துப்பாக்கியும், வாக்கி டாக்கியும் கண்டு பிடிக்கப்படவில்லை என்பதும் புரியவில்லை.

iv) இந்த ஆறு துப்பாக்கிகள் மட்டும்தான் உண்மையிலேயே எடுத்துச் செல்லப்பட்டதா இல்லை டெபாசிட் செய்யப்பட்டிருந்த தனியார் துப்பாக்கிகள் எதுவும் எடுத்துச் செல்லப்பட்டதா என்பதும் தெரிவில்லை.

v) இது தொடர்பாக நிலைய ஆய்வாளரிடம் விசாரித்த பொழுது எதையும் சொல்வதற்கு மறுத்து விட்டார்.

vi) காவல் துறைக்கும், பச்சையப்பன் குடும்பத்திற்கும் பகை இருந்ததை மாவட்ட கண்காணிப்பாளர் ஒத்துக் கொண்டார். குறிப்பாக நேதாஜியின் மீது காவல் துறைக்கு ஆத்திரம் இருந்ததை ஒத்துக் கொண்டார். காவல் துறையைப்பற்றி (Big Mouth) இழிவாக பேசியதாகவும், வாய்ப்பு கிடைத்தால் தக்க பாடம் புகட்ட தயாராக இருந்ததையும் ஒத்துக் கொண்டார். அவதூறுகள் பேசியதற்குச் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்று நாங்கள் கேட்டபொழுது, இத்தகைய சூழ்நிலைகளில் எல்லாவற்றையும் சட்டபூர்வமாக செய்ய முடியாது என்றார்.

vii) ஏடிஜிபி விஜயகுமார் கொடுத்துள்ள அறிக்கையில் காவலர்களே இதனை செய்து இருக்கலாம் என்கிற ஐயம் உறுதியாகின்றது. மாஜிஸ்திரேட் உத்தரவு பெற்று அவர்களின் மீது மருத்துவ சோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், பெங்களுருக்கும் அழைத்துச் சென்று அவர்களின் மீது உண்மையறியும் சோதனைகள் செய்ய இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்து உள்ளது. சந்தேகத்திற்குரிய ஆறு போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதும் அவர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. நாங்கள் சந்தித்த காவல்துறை அதிகாரிகள் விபரம் கூற மறுத்துவிட்டார். அவர்களின் மீது துறைசார் விசாரணையே நடைபெறுவதாகவே கண்காணிப்பாளர் எங்களிடம் குறிப்பிட்டார். வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படாத நபர்கள் மீது உண்மை அறியும் சோதனை செய்வதற்குச் சட்டத்தில் இடம் இல்லை. நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்றதாக கண்காணிப்பாளர் கூறுகிறார்। எப்படி இது சாத்தியம் என்பதும் தெரியவில்லை.

மொத்தத்தில் காவல் துறை பல விஷயங்களை மூடி மறைப்பது விளங்குகிறது। இந்த துப்பாக்கி திருட்டு உண்மையிலேயே நடைபெற்றதா என்பதே அய்யத்துக்குரியதாக உள்ளது. இது நாடாகமெனில் காவல் துறை தன் மீது உள்ள சில குற்றசாட்டை மறைப்பதற்கும், குற்றசாட்டை கூறியவர்களை பழி வாங்குவதற்கும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளது என்பது உறுதி.

கோரிக்கைகள்

1. காவல் நிலையத்தில் நுழைந்து ஆயுத கொள்ளை நடைபெற்று இருப்பது கவலைக்குரிய நிகழ்வு. இது குறித்து காவல் துறை பொய் தகவல் பரப்பியது கண்டிக்கத்தக்கது. குற்றச்சாட்டில் காவலர்களே தொடர்புடையவராக இருப்பதாக கூறுவதால் தமிழக போலீசாரின் விசாரணை நம்பக்குரியதாக இருக்காது. எனவே, சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமென எங்கள் குழு கோருகிறது.

2. இந்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதா, இல்லையா எந்த சட்ட விதியின் கீழ் உண்மை அறியும் சோதனை நடைபெறுகிறது என்பதனை காவல் துறை விளக்க வேண்டும்.

3। உண்மை அறியும் சோதனை அடிப்படை மனித உரிமைகளை மீறக்கூடாது. அரசியல் சட்டத்தின் உறுப்பு 20 (1) விதிக்கு எதிரானது. காவலர்கள் மீது மேற்கொள்ளப்பட இருக்கின்ற உண்மை அறியும் சோதனை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

4. விசாரணை என்ற பெயரில் தனிப்பட்ட விரோதத்தைக் காட்டி மக்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ள காவல் துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்க்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

Thursday, February 14, 2008

புதுச்சேரி காவல் ஆய்வாளர் வெங்கடசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் - படங்கள்




புதுச்சேரி, வில்லியனூரில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தடியடி நடத்தி தாக்கிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 13-02-2008 புதன்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, வில்லியனூர் கிராமப்புற மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

சுதேசி பஞ்சாலை எதிரே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். கிராமப்புற மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத் தலைவர் முத்து (எ) பாஸ்கர் முன்னிலை வகித்தார். சிறப்புத் தலைவர் சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார்.

வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாராயணசாமி தன்னுடைய தொகுதியில் வளர்ச்சிப் பணிகளைச் சரிவர நிறைவேற்றவில்லை என்று கூறி வில்லியனூர் பகுதி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கடந்த 31-01-2008 அன்று போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீசார் போராட்டம் நடத்தியவர்கள் மீது தேவையில்லாமல் தடியடி நடத்தினர். அப்போது வில்லியனூர் காவல் ஆய்வாளர் வெங்கடசாமி பெண்களை கேவலமாக பேசி கடுமையாக தாக்கினார். ஏராளமான் பெண்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் குறிப்பாக கர்ப்பிணிப் பெண் உட்பட 16 பேர் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் மற்றும் அவரது நண்பர்கள் சென்றிருந்தனர். அங்கு சிகிச்சை பெற வந்தவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது குறுக்கிட்டு சிகிச்சை அளித்து முடித்த பிறகு விசாரணை நடத்துங்கள் என்று கோ.சுகுமாரன் கூறியுள்ளார்.

அப்போது மேட்டுபாளையம் காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் தகாத சொற்கள் கூறி கோ.சுகுமாரன் மற்றும் உளவாய்க்கால் சந்திரசேகரன் ஆகியோரை தாக்க வந்துள்ளார். இதுகுறித்து கோ.சுகுமாரன் பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் கோ.சுகுமாரன் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக உதவி ஆய்வாளர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, அச்சுறுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

• போராடிய மக்கள் மீது தடியடி நடத்தி தாக்கிய வில்லியனூர் காவல் ஆய்வாளர் வெங்கடசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• மேட்டுப்பாளையம் உதவி ஆய்வாளர் பழனிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• மனித உரிமை ஆர்வலர் கோ.சுகுமாரன் உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்.

• பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ம.தி.மு.க. சார்பில் சந்திரசேகரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு தலைவர் கே.இராம்குமார், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர், கவுன்சிலர் பா.சக்திவேல், பொறையாறு கவுன்சிலர் பொன்.சுந்தரராசு, தேங்காய்த்திட்டு கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், செம்படுகை நன்னீரகம் அமைப்புச் செயலாளர் பார்த்திபன், சமூக நீதிப் போராட்டக் குழு பாகூர் மஞ்சினி, புதுவைக் குயில் இலக்கியப் பாசறை ச.ஆனந்தகுமார், வெள்ளையணுக்கள் இயக்கத் தலைவர் பாவல், கிருத்துவ மக்கள் கூட்டமைப்புத் தலைவர் சாமி.ஆரோக்கியசாமி உட்பட பல்வேறு கட்சி, அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர். போலீசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Saturday, February 09, 2008

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் லீலைகள் – சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை!

கடலூர் மாவட்டம், சிதம்பரம், நடராஜர் கோயிலில் சிவனடியார் ஆறுமுகசாமி அவர்களை சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் பாடி தமிழில் வழிபடக்கூடாது என்று தீட்சிதர்கள் அடாவடித்தனம் செய்து வருகின்றனர். இதனை எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்புக் மையம் அனைத்துக் கட்சி, இயக்கங்களை ஒருங்கிணைத்துப் போராடி வருகிறது. அதோடுமட்டுமல்லாமல், சட்ட ரீதியாகவும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை முன்னின்று அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் விருத்தாசலம் இராஜு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கொலை, கொள்ளை, பாலியல் விவாகாரங்கள் என அனைத்து சட்டவிரோதமான செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட வேண்டுமென ஒரு வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்சொன்ன போராட்டங்களில் கலந்துக் கொள்வதற்காக அடிக்கடி சிதம்பரம் சென்று வந்த போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் நடத்தும் தனி ராஜ்யம் பற்றி பல தகவல்கள் கிடைத்தன. அவை அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தாலும், புனித்தின் பிறப்பிடமாக கருதப்பட்ட காஞ்சி சங்கர மடத்தில் நடந்த விவாகரங்களை ஒத்த விவகாரங்கள் நடராஜர் கோயிலிலலும் நடந்துள்ளன.

கோயிலின் உள்ளேயே கொலை உட்பட அனைத்து சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளும் அரங்கேறியுள்ளன. கடவுளின் அவதாரங்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் தீட்சிதர்கள் குற்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். மிதிவண்டி திருடிய குற்றத்திற்காக தீட்சிதர்கள் மீது 6 வழக்குகள் சிதம்பரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கில் தீட்சிதர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புனிதம், ஆச்சாரம் என்றேல்லாம் பேசும் பார்ப்பன தீட்சிதர்களின் சேட்டைகள் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களையும் ஏமாற்றும் துரோகமாகும்.

சிதம்பரத்தில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சிதம்பரம் நகர மன்ற முன்னாள் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், முன்னாள் இந்து அறநிலைய துறை அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் ஆகியோர் நிறைய தகவல்களைக் கூட்டங்களில் பேசி வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை மரபுக்கு புறம்பாக தங்கள் வசம் கொண்டு வந்து ஏராளமான முறைகேடுகளிலும், ஊழல்களிலும் தீட்சிதர்கள் தொடந்து ஈடுபட்டு வருவதாக அனைத்துக் கட்சி, இயக்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக நடராஜர் கோயிலை இந்து அறநிலைய துறை கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.

இதுபற்றி, சிதம்பரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இளங்கோ, தமிழக முதலமைச்சர், உள்துறை செயலர் ஆகியோருக்கு விரிவான புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் உட்பட பல்வேறு ஆதாரங்கள் அடிப்படையிலேயே தீட்சிதர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இனி அவர் அளித்த புகார் மனுவை அவரது சொற்களிலேயே தந்துள்ளேன்:

சிதம்பரம் நடாஜர் கோயில் தீட்சிதர்கள் யாருக்கும் அந்த சமூகத்திற்குச் சொந்தமல்ல என்று 100 ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளித்திருக்கிறது. இருந்தாலும் பெரிய கோயிலை, தீட்சிதர்கள் தங்கள் சமூகத்திற்குச் சொந்தமான சொத்துபோல் தீட்சிதர்கள் கோயிலின் 4 கோபுர வாயிற் கதவுகளையும் பிறகு 2-வது உட்பிரகார கதவுகளையும் இரவில் மூடிக்கொண்டு, கோயில் வெளிப்பிரகாரத்திலும் உட்பிரகாரத்திற்குள்ளும் சுமார் 10 தீட்சிதர்கள் அடங்கிய கும்பல்கள், கள்ள சாராயம், அயல்நாட்டு மதுபானங்கள் சகலத்தையும் குடிப்பதும், பரோட்டா, சிக்கன், மட்டன், ஆம்லட், அவிச்ச முட்டை சகலமும் சாப்பிட்டு விட்டு, வெற்றிலை, பீடி, சிகரெட், பான்பராக் போட்டுக்கொண்டு, பெண்களுடன் உறவு கொண்டு, சொர்க பூமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திடுக்கிடும் 2 அல்லது 3 கொலைகளையும் நடத்தி, அதை குடித்துவிட்டு இறந்து விட்டார்கள் என்று மறைத்துவிட்டார்கள். அந்த ரௌடி தீட்சிதர்களும் நல்ல பணக்காரர்கள். சாமி பைத்தியம் பிடித்தவர்களிடம் குளத்தை தூர் வார வேண்டும். திருப்பணி செய்ய வேண்டும் என்று பணத்தைக் கணிசமாக வசூல் செய்து, ஆளுக்கு ஒரு செல் போன் வைத்துக்கொண்டு, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தங்களுக்கு முதலமைச்சரும் சில அமைச்சர்களும் வேண்டியவர்கள் என்று சொலலிக்கொண்டு, போலீசைப் பயமுறுத்துகிறார்கள்.

நடராஜர் கோயிலுக்குள் பஞ்சமா பாதகம் செய்து, போலீஸ் மற்றும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கும் முக்கிய தீட்சிதர்கள் பெயர்கள்: (1) தில்லை தீட்சிதர் த.பெ. கீர்த்திவாசக தீட்சிதர், சபாநாயகர் கோயில் தெரு (2) ராஜா தீட்சிதர் த.பெ. குப்புசாமி தீட்சிதர், கீழரத வீதி (3) பட்டு தீட்சிதர் த.பெ. கோபால் தீட்சிசதர், வடக்கு சந்நதி (4) கனகு தீட்சிதர் த.பெ. வைத்திநாத தீட்சிதர், கீழ வீதி, (5) குப்புசாமி தீட்சிதர் த.பெ. சிச்சுவடி மணி தீட்சிதர், கீழரத வீதி (6) முருக தீட்சிதர், (7) அமர்நாத் தீட்சிதர், கீழ வீதி முதலாவோர்.

சிதம்பரம் டவுன் கீழ ரத வீதியில் உள்ள வேம்பு தீட்சிதர் மகன் மூர்த்தி தீட்சிதரை சுமார் ஒரு வருடத்திற்கு முன் நடராஜர் கோயில் உள் பிரகாரத்திற்குள் கருங்கல் தூண் அல்லது சுவற்றில் மோதி, தீட்சிதர்கள் கொன்றுவிட்டார்கள். மேல கோபுர வாசல் வழியாக கோயில் முதல் பிரகாரத்திலிருந்து, கற்பகிரகம் உள்ள உள் பிரகாரத்திற்குள் செல்லும் மேல் புறமுள்ள கதவு, காலை 6.3.4 மணியாகியும் ஒரு நாள் திறக்காமல், கோயிலுக்குள் பக்தர்கள் போக முடியாமல் திணறிக்கொண்டு இருந்தார்கள்.

அப்பொழுது ப.சிதம்பரம் கட்சியைச் சேர்ந்த திரு. நாகராஜன், இன்னும் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, கீழ சந்நதி வழியாக ஒரு ஆட்டோ வந்தது. மேல்புறம் கோயில் கதவு திறக்கப்பட்டு, மேலே கண்ட தீட்சதர்கள் மூர்த்தி தீட்சிதரை ரத்தம் ஒழுக ஒழுக துக்கி வந்ததைப் பார்த்து, கொலை நடத்திருக்கும் என்று சந்தேகப்பட்டு, ராஜ்குமார் மேலரத வீதி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் செய்திருக்கிறார். போலீஸ் கொலை கேசு என்று தெரிந்ததும், உடனே வராமல் ராஜ்குமாருடன் வாதம் செய்து, டி.எஸ்.பி.க்குப் புகார் செய்வேன் என்று தெரிவித்த பிறகு வேண்டாவெறுப்புடன் போலீசுடன் குற்றம் நடந்த இடத்திற்குப் போனபோது, ஆட்டோ டிரைவரை விசாரித்தால் யார் அவரை அழைத்து வந்த தீட்சிதர் என்பதும் மற்றும் என்ன நடந்தது என்பதும் தெரியும்.

ஆனால், ராஜ்குமார் போலீசிடம் சொல்லி, புலன் விசாரணை செய்ய சொல்லிவிட்டுப் போய்விட்டார். பிணத்தை வேம்பு தீட்சிதர் வீட்டில் போட்டுவிட்டு, குற்றம் செய்தவர்கள் போய்விட்டார்கள். பணத்தை வசூல் செய்து, பங்கு பிரித்துக் கொள்வதில் மூர்த்தி தீட்சிதர் சரியாக கணக்கு வரவு செலவு காட்டாமல் ரூ.50000-க்கு மேல் மறைத்துவிட்டதாக தகராறு செய்ததால் மற்ற தீட்சிதர்கள் கல் தூணில் மோதி கொன்றுவிட்டதாகத் தகவல். மூர்த்தி தீட்சிதருக்கு கே.அடுரிலிருந்துதான் ஒரு ஆதிதிராவிடர் கள்ளச் சாராயம் கொண்டு வந்து கொடுத்து, அதை சொம்பில் ஊற்றி வைத்துக்கொண்டு, நடராஜப் பெருமாள் உள்ள பொற்சபையிலேயே வைத்துக்கொண்டு, தீர்த்தம் சாப்பிடுவது வழக்கமாம்.

கே.ஆடூரில் மளிகைக் கடை வைத்திருந்த செல்வராஜ் மனைவியை சிதம்பரம் கோயிலுக்கு அழைத்துவந்து அனுபவிப்பதில் தகராறு ஏற்பட்டு, செல்வராஜை சிதம்பரத்தில் கொன்று, ஆட்டோவில் ஊருக்குக் கொண்டு போனார்கள். இறந்து போன செல்வராஜ் மனைவி சிதம்பரத்தில் தான் இருக்கிறார். அவள் பெயர் ராஜகுமாரி.

போலீஸ், டிபூடி கலெக்டருக்குச் சொல்லி, பினத்தைப் பரிசோதனை செய்திருக்க வேண்டும். சந்தேகப்பட்ட கொலை வழக்கு என்று பதிவு செய்து, சம்பந்தப்பட்ட தீட்சதர்களை விசாரித்திருந்தால் உண்மை தெரியும். இறந்துபோன மூர்த்தி தீட்சிதர் குடித்துவிட்டு குடும்பத்தில் தொல்லை கொடுத்து வந்ததால் கொலை கேசு புகார் செய்ய பயந்து, போஸ்மார்டம் பண்ணுவதைத் பெரிய தீட்சிதர்கள் முயன்று கொலை குற்றத்தை மறைக்க முயன்றிருக்கலாம்.

ஆனால், கோயில் பொது இடம், புனிதமான இடம். பக்தர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடம். அதற்குள் கொலை நடக்க போலீஸ் அனுமதிக்கக்கூடாது. மூர்த்தி கொலை நடந்த இரவுக்கு முன்னாள் மாலை, காலம் சென்ற மக்கள் தலைவர். ஜி.கே.மூப்பனாருக்கு, அம்மன் கோயிலில் உள்ள சித்திரகுப்தருக்கு, இ.காங்கிரஸ் நிர்வாகிகள் திரு. நாகராஜன், திரு.ராஜன் போன்றவர்கள் இறந்துபோன மூர்த்தியை வைத்துதான் விசேஷ பூஜை செய்திருக்கிறார்கள். எனவே, சிதம்பரம் டவுன் போலீஸ் இதற்குமுன் கோயிலில் நடந்த ராயர் கொலையையும் புலன் விசாரிக்காமல் விட்டுவிட்டதால், நடராஜர் கோயிலின் புனிதத்தையும் அங்கு வருகிற வயதானவர்கள் மற்றும் பக்தர்கள் உயிர் உடமைகளைக் காப்பாற்றவும் முதலமைச்சர் சி.பி.சி.ஐ.டி. மூலம் விசாரனை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கோர்டில் நிறுத்த அரசு உத்தரவிட வேண்டும்.

மூர்த்தி கொலைக்கு முன் வீட்டு புரோக்கர் ராயர் என்ற ஒரு ஏழை சில தீட்சிதர்களால் 1/4 பிராந்தி பாட்டிலை கீழவீதியிலுள்ள ஆட்டோ ரிக்ஷாக்காரர்களில் ஒருவர் பிடுங்கிக் கொண்டதால் அவர் அன்று டவுன் போலீஸ் சர்க்கிளாக இருந்த இப்ராகிம் ராவுத்தரிடம் பிடிபட்டு, தீட்தர்கள் தான் பிராந்தி பாட்டில், பரோட்டா, சிக்கன் எல்லாம் வாங்கிவரச் சொன்னார்கள் என்று கீழகோபுர வாசலில் தீட்சதர்களைக் காட்டிக் கொடுத்தாலும் ராயரை உதைத்து கொன்று, கோபுர வாசலுக்குள் போட்டுவிட்டார்கள் என்று தகவல்.

கீழ கோபுர வாசலில் பிராந்தி, பாட்டில், பரோட்டா, சிக்கன் பொட்டலத்துடன் வந்தவரைப் பிடித்த டவுன் போலீஸ் ஏன் அதில் சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குத் தொடரவில்லை? அல்லது ராயர் இறந்த பிறகாவது சந்தேகப்படவில்லை? சந்தேகப் பட்ட கொலை என்ற ராயர் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை என்பது முக்கியமாக கவினிக்க வேண்டிய விஷயம்.

இதுவும் பொதுஇடம். புனிதமான இடம். கோயிலுக்குள் நடந்த கொலை. கடந்து 1 வருடத்தில் கோயிலுக்குள் இரண்டு பெண்கள் மர்மமான முறையில் இறந்திருக்கின்றனர்.

ராயர் கொலை நடந்த இரவு பல்லாக்கு திருவிழா. மூர்த்தி கொலை, ராயர் கொலைக்கு முன் ஒருவர் கோயிலுக்குள் வந்து, அம்மன் கோயிலில் குடித்துவிட்டு தூங்கும் ஒருவரை தீட்சிதர்கள் பங்கு மாமுல் கேட்டு, கொடுக்காததால், சிவகங்கை குளத்திற்கு அருகில் கொன்றுவிட்டதாக ஒரு தகவல். சிதம்பரம் டவுனில் தீட்சிதர்கள் மீது புகார் கொடுக்கவே பயப்படுகிறார்கள் என்று எனக்கு கிடைத்த தகவல்களை முதலமைச்சருக்கும் உள்துறை செயலாளருக்கும் உரிய நடவடிக்கைக்கு அனுப்புகிறேன்.

மதிப்புக்குரிய குமாஸ்தாக்கள் சங்கத் தலைவர் திரு.ராஜ்குமார், காங்கிரஸ் தலைவர் திரு. நாகராஜ், திரு.ராஜு முதலியவர்களை விசாரித்தால் விளக்கமாகச் சொல்வார்கள்.

தயவுசெய்து தீட்சிதர்கள் தாட்சண்யத்திற்காகவோ, தீட்சதர்கள் மீது வழக்குப் போட்டால் தெய்வ குற்றம் ஏற்படும் என்று பயந்தோ, வழக்கு சி.பி.சி.ஐ.டி.மூலம் விசாரிக்காமல் விட்டால் மனித உரிமை மீறல் குற்றத்திற்காக மனித உரிமைக் கமிஷனுக்குப் புகார் செய்ய வேண்டிவரும்.

வேலுர் ஜலகண்டேஸ்வரர் கோயிலை அரசு எடுக்க எவ்வளவு காரணங்கள் உண்டோ, அதைவிட 1000 காரணங்கள் இருக்கின்றன. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க கொள்ளையர்கள், கொலைக்காரார்கள், ஆணவக்காரர்கள், சர்வாதிகாரிகள் கடாராமாக விளங்கும் கோயிலை, மனித உரிமைகளும், இந்திய அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளையும் மதிக்காமல் மிதிக்கும் சில தீட்சிதர்கள் பிடியில் இருந்து மீட்டு, அவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி.மூலம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.

இதுதான் சிதம்பர ரகசியமோ?

கிருஷ்ணவேணி அம்மாவும் அவரது மகனும் பிணம் புதைக்கும் புகைப்படம்...


புதுச்சேரியில் உள்ள சந்நியாசித்தோப்புச் சுடுகாட்டில் பிணம் புதைக்கும் கிருஷ்ணவேணி அம்மாவும், அவரது மகனும் பிணம் புதைக்கும் போது எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளேன்.

கிருஷ்ணவேணி அம்மாவின் மகன் வினோ பிரசாத் புதுச்சேரி லாசுப்பேட்டையிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறான். மதிய உணவு இடைவேளையின் போது வீட்டிற்குச் சாப்பிட வந்த அவன், தன் தாய் சிரமப்பட்டு வேலை செய்வதைக் கண்டு, அவருக்கு உதவி செய்யும் நோக்கோடு பிணத்தைப் புதைக்கின்றான். பள்ளிச் சீருடையுடன் அவன் பிணத்தைப் புதைப்பது மனதை வாட்டுகிறது.

06-02-2008 அன்று மதியம் எடுத்து, 07-02-2008 அன்றைய தினகரன் புதுச்சேரி பதிப்பில் வெளியாகியுள்ள புகைப்படம் இது.

மகன் தாய்க்கு ஆற்றும் கடமை இது?

"சாவு வந்தாதான் சமைப்போம்" - அனாதைப் பிணம் புதைக்கும் தலித் பெண்மணியின் துயரம்..

Friday, February 08, 2008

மக்கள் உரிமைக் கூட்டமைப்புக்குப் புதிய இணைய தளம் - கருத்துக்களை வரவேற்கிறோம்!



மக்கள் உரிமைக் கூட்டமைப்புக்கு புதிய இணைய தளம் ஒன்றை உருவாக்கி வருகிறோம். இதற்கான வேலை முழு அளவில் நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கென புதுச்சேரியில் ஒரு எளிய தொடக்க நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.

தற்போது நான் என்னுடைய வலைப்பூவை அமைப்புச் செய்திகளை வெளியிடப் பயன்படுத்தி வருவதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மனித உரிமைகள் குறித்து உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை அனைத்தையும் இத்தளத்தில் கிடைக்கும் வகையில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். மனித உரிமைகள் குறித்த பிரகடனங்கள், சட்டங்கள், தீர்ப்புகள், வழிகாட்டும் உத்தரவுகள்,அறிக்கைகள் என அனைத்து ஆவணங்களும் இத்தளத்தில் வழங்கவும் எண்ணியுள்ளோம்.

மனித உரிமை மீறல்கள் பற்றிய புகார்களை இணைய தளத்தின் வழியாகவே அனுப்ப ஒரு புகார் பெட்டி வடிவமைக்க இருக்கிறோம். இவ்வாறு பெறப்படும் புகார்கள் முறையே விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்.

மனித உரிமை மீறல்கள் நடக்கும் போது அதில் தலையிட்டு தடுப்பதற்கு பொதுமக்கள் பங்கேற்பை தீவிரப்படுத்துவதற்கு உரிய வழிவகை செய்ய உள்ளோம்.

மனித உரிமைச் சார்ந்து வரும் இலக்கியங்கள், புத்தகங்கள் பற்றி அவ்வப்போது தகவல்களும் வெளியிட இருக்கிறோம்.

தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இத்தளத்தைக் காணலாம்.

இத்தளத்தை மேலும் செழுமைப்படுத்த உங்களின் மேலான கருத்துக்களை எதிர்நோக்குகிறோம்.

"http://www.peoplesrights.in/

Wednesday, February 06, 2008

"சாவு வந்தாதான் சமைப்போம்" - அனாதைப் பிணம் புதைக்கும் தலித் பெண்மணியின் துயரம்..

ப்யூச்சர் இராதா புதுச்சேரியில் வலுவாக உள்ள தலித் அமைப்புத் தலைவர். இவர் தலைமையில் செயல்படும் ‘ப்யூச்சர் தலித் அரசு ஊழியர் அமைப்பும், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படையும் தலித் மக்களின் பிரச்சனைகளை மட்டுமல்ல அனைத்து சமூக அவலங்களையும் எதிர்த்துப் போராடும் பண்பு கொண்டவை.

2003-இல் புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடைபேற்ற போது, சுடுகாட்டில் பிணம் புதைக்கும் பெண்மணி ஒருவருக்கு நிரந்தர வேலை அளிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தினர் இவ்வமைப்பினர். அன்றைய தினம் நான் ஊரில் இல்லாததால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

ப்யூச்சர் இராதா நடத்தும் எந்த போராட்டமானாலும் அதில் எனக்கு என்று உரிய இடமிருக்கும். அந்த அளவுக்கு அவர் என் மீதும், நான் அவர் மீதும் அளவுகடந்த அன்பும், மரியாதையும் கொண்டுள்ளோம். இன்றுவரை அந்த உறவுத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

ஊர் திரும்பியவுடன் அந்த பெண்மணியைச் சந்தித்து அவரது நிலைப் பற்றி அறிய வேண்டுமென்று முடிவு செய்தேன்.

நானும், புகைப்படக் கலைஞர் புதுவை இளவேனில் அவர்களும் ஒருநாள் பகல் அப்பெண்மணியைச் சந்திக்க சந்நியாசித்தோப்புச் சுடுகாட்டிற்குச் சென்றோம். சந்நியாசித்தோப்புச் சுடுகாடு என்பது பலகாலமாக அனாதைப் பிணங்களைப் புதைக்கும் இடம். அந்த இடத்தின் பெயரைச் சொன்னாலே அருவருப்பாக மக்கள் எண்ணுவார்கள்.

அங்கிருந்த அந்தப் பெண்மணியைச் சந்தித்து உரையாடினேன். என் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் பல தரப்பினரைச் சந்தித்துள்ளேன். இன்றைக்கும் மறக்கமுடியாத அவர்களது அவலங்கள் பல நேரத்தில் மன வருத்தத்தைத் தரும். அந்தப் பெண்மணியின் வாழ்க்கை என்னை மிகவும் பாதித்தது.

ஒரு பெண்ணாக இந்த சமூகத்தில் வாழ்வதே சிக்கல் நிறைந்ததாக இருக்கும் காலக்கட்டமிது. இச்சூழலில் ஒரு பெண்மணி தன் குடும்பத்தை நடத்துவதற்காக சுடுகாட்டில் பிணம் புதைத்துப் பிழைக்க வேண்டியிருப்பது எவ்வளவு துயரமானது, கொடுமையானது என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதுவும் அந்தப் பணியை நிரந்தரமாக்க வேண்டுமென அப்பெண்மணி போராடுவது இச்சமூகத்திற்கு எதை உணர்த்துகிறது என்ற கேள்வியையும் என்னுள் எழுப்பியது.

அவரது துயரமான வாழ்வை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி அவருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமெனெ முடிவு செய்து, ‘தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன் அவர்களைத் தொடர்புக் கொண்டேன். அவர் உடனடியாக அனுப்புங்கள் வெளியிலாம் என்று கூறினார். தலித் முரசு இதழில் விரிவாக அவரது வாக்குமூலம் வெளியானது.

அதைத் தொடர்ந்து தினமணியில் முதல் பக்கத்தில் அப்பெண்மணியின் வண்ணப் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. அப்போது தினமணியின் ஆசிரியராக இருந்த இராம.சம்பந்தம் அவர்கள் இதை நம்பாமல் பலமுறை செய்தி அனுப்பிய செய்தியாளரை விசாரித்துள்ளார். அதன்பின், பல்வேறு செய்திதாள்கள், தொலைக்காட்சி ஊடங்கங்கள் என அனைத்திலும் அவரது துயர வாழ்க்கைப் பதிவானது.

‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்போன்ற உலக அளவிலான மனித உரிமை அமைப்புகள் இப்பிரச்சனையை தீர்க்கக் கோரி குரல் எழுப்பின. தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் செயல்பட்ட மனித உரிமை அமைப்புகள் பல அப்பெண்மணிக்காக குரல் கொடுத்தன.

அதேநேரத்தில், அப்பெண்மணியை அந்த பணியைச் செய்யச் சொல்லக் கூடாது என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. கடைசியில், அவருக்கு அந்த சுடுகாட்டை பராமரிக்கும் பணி ஆணையை புதுச்சேரி அரசு வழங்கியது. நாளொன்றுக்கு ரூ. 105 ஊதியமாக வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

நாங்கள் பலமுறை வலியுறுத்திக் கூறியும் அவர் அந்த சுடுகாட்டை விட்டு வரத் தயாராக இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.

நான் குறிப்பிட்ட அந்த பெண்மணி கிருஷ்ணவேணி. தற்போது அவரது வயது: 40. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது வாக்குமூலம்:

என் வீட்டுக்காரர் பெயர் அல்பேர். என் வீடு துப்ராயப்பேட்டையிலே லசார் கோயில் தெருவிலே இருக்குது. என் வீட்டுக்காரர் 15 வருசமா இங்க வேலை செஞ்சாரு. அவர் 1998-இல் செத்துப்போன் பிறகு நான் போய் வேலை கேட்டேன். அப்போ பிண வேலை போய்ப்பாரு, ஆறு மாசம் கழிச்சி வேலை போட்டுத் தர்றோம்னு சொன்னாங்க. ஆனால், இது வரைக்கும் எனக்கு வேலை தரலை.

2000 2001 இல் அப்ளிகெஷன் கொடுத்தேன். நான் போய்க் கேட்கும் போதெல்லாம் போஸ்டிங் கிடையாதுன்னு சொன்னாங்க. இங்கேயே ஆள் அதிகமாக இருக்குது, நாங்களே வேலை செய்யற ஆளுங்களை நிறுத்தலாம்னு இருக்கிறோம்னு சொன்னாங்க.

அப்போ வைத்திலிங்ம் கவர்மென்ட். ஒரு பொணதுக்கு 15 ரூபாய் மேனிக்குதான் வேலை செஞ்சேன். இப்போ எங்க ஊட்டுக்காரர் செத்து மூணுமாசம் ஆன பிறகுதான் 100 ருபாயா ஆக்கினாங்க. எங்களுக்கு பாடி எடத்தாதான் சம்பளமே, பாடி இல்லன்னா சம்பளமும் கிடையாது, ஒண்ணுமே கிடையாது.

எனக்கு மூணு புள்ளைங்க இருக்கு. மூணும் ஆண்தான். இரண்டு பேர் படிக்கிறாங்க. ஒருத்தன் என்னோடு வேலை செய்றான். ஏழாவது ஒருத்தன் படிக்கறான். அஞ்சாவது ஒருத்தன் படிக்கறான். முதல் பையன் பேரு சங்கர். இரண்டாவது மதியழகன், மூணாவது வினோத் பிரசாந்த். சங்கர் அஞ்சாவது படிச்சிட்டு நின்னுட்டான். அவன் வேலைக்குப் போனாதான் காசு. எங்களுக்கு என்னக்கிதான் சாவு வருதுன்னு கிடையாது. சாவு வந்தா தான் வருமானமே. சாவு எப்போ வருமோன்னு உட்கார்ந்துன்னு இருப்போம். சாவு வந்தாதான் சமைப்போம்.

சங்கர் என்னோடதான் இந்த வேலையை செய்யாறான். எனக்கு 84-லிலே கல்யாணம் நடந்துச்சி. அவர் குருசுக்குப்பம். அவர் சின்ன வயசிலேயே இந்த ஊருக்கு வந்திருந்து என்னை பஞ்சாயத்து மூலம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அவர் 85-லிருந்தே இங்கே வேலை செய்யறாரு. முனிசிபாலிடிலே இருக்கிற சுப்பையா டாக்டர்தான் வேலை கொடுத்தாரு. நீ வேலை செஞ்சிகினே இரு. மூணு மாசம் கழிச்சி போஸ்டிங் போட்டுத் தர்றேன்னு சொன்னாரு. அவரும் போட்டுத் தரலே. போய் கேக்கற சமயத்துல இதோ...இதோன்னு...சொன்னாரு. அவரும் மாத்திகினு போயிட்டாரு. அவருக்கு சர்வீஸ் முடிஞ்சிபோச்சி இப்போ.

அனாதைப் பொணம், ஒப்பித்தாலே போஸ்ட் மார்டம் பண்ணி அழுகிப் போனது, கடலிலே, ஆத்துல செத்து ஒரு மாசம் 15 நாள் ஆனது, அழுகிப் போய் புழு கொட்டுற மாதிரி இருக்கிற பொணத்தைத்தான் தூக்கிட்டு வருவாங்க. அப்போ ரோட்லே போற வர்றவங்க எல்லாம் திட்டுவாங்க. இதுமாதிரி எடுத்துக்கின்னு போறீங்களே, இது கிடையாதா? நாங்கெல்லாம் ரோட்டுல நடக்குறமே மனுசாலா மாடா. ஒரு தடவை பஞ்சாயத்துக்காரங்க, போற வர்ற ஜனங்க எல்லாம் எங்களை அடிக்க வந்துட்டாங்க.

வீட்டுக்கு ஏட்டு பி.சி.யும் வருவாங்க. தகவல் சொல்லுவாங்க. அந்த வண்டியை எடுத்துகின்னு போய் பாடியைக் கொண்டு வருவோம். இங்கே புதைப்போம். பாடியை புதைச்ச உடனே காசு கொடுக்க மாட்டாங்க. பில் போட்டோம்னா ஒரு மாசம் ஆகும். இந்த மாசம் போட்டமுன்னா அடுத்த மாசம் தருவாங்க. அவருக்கு வேலை கொடுத்ததிலிருந்தே 15 வருஷமா வேலை செஞ்சுகின்னு வந்தார். அப்புறம் 98-லே செத்துட்டாரு. செத்த உடனே நான் போய் முனிசிபாலிடிலே வேலை கேட்ட உடனேயே இந்த வேலை கொடுத்தாங்க.

நான் இல்லாம இங்க ரெண்டு ஆம்பளை வேலை செய்யறாங்க. அவங்களும் எங்களை மாதிரிதான். அவங்களும் நிரந்தரம் கிடையாது. அவங்க இங்கே பாடியை எரிச்சாதான் காசு. பாடியை புதைச்சாதான் எங்களுக்கு காசு. செத்தவங்களை கொளுத்தறது அவங்க. அனாதை பாடியைப் புதைக்கிறது எங்க வேலை. அனாதைப் பொணத்தை எடுக்கிறதனாலே, போலீஸ் ஒரு பாடிக்கு 50 ருபா கொடுப்பாங்க. எந்த நேரத்திலும் போலீஸ்காரங்க வருவாங்க. நைட் எத்தனை மணியாக இருந்தாலும் வந்து கூப்பிடுவாங்க.

பிரச்சனைதான் சார். என்ன பண்றது. இதை நம்பித்தானே சாப்பிட்டுக்கினு இருக்கோம். நைட்லே வந்து கூப்பிடறது தொந்தரவாதான் இருக்குது. போஸ்டிங் போட்டுக் கொடுத்து சம்பளம் போட்டுக் கொடுத்தாங்கன்னா, நாங்க எதையுமே கேக்க மாட்டோம்.

தகவல் வந்த உடனே போவோம். ரோட்லே கிடக்கிறது, கடலிலே விழுந்து செத்துன்னு எல்லாத்தையுமே எடுக்கினு வருவோம். கூட என் பையன் சங்கர் வருவான். நான் வண்டியை புடிச்சிக்குவேன் அவன் பாடியை தூக்கி உள்ளே போடுவான். ரோட்டுலே கிடக்கிற பாடியா இருந்தா இங்கதான் எடுத்துக்கிட்டு வருவோம். ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போக மாட்டோம். தண்ணில விழுந்தது. கடலிலே போனது. கிணத்துல விழுந்து சாவறது. மருந்து குடிச்சி செத்தா ஆஸ்பத்திரிக்குப் பொய் ஒரு வாரம் வரைக்கும் வச்சிருந்து பாப்பாங்க. அப்புறம் பாடி ரொம்ப உப்பிப் போச்சுன்னா போலீஸ் வந்து எங்களைக் கூட்டிக்கிட்டுப் போவாங்க.

கடல்லே எல்லாம் விழுந்துட்டா, நம்மள வந்து போலீஸ்காரங்க கூப்பிடுவாங்க. வண்டியிலே எடுத்து வச்சி ஆஸ்பத்திரிலே வைச்சிட்டு வந்துருவோம். அப்புறம் பேப்பர்லே போட்டா போட்டு அவங்க ஜனங்க வரவரைக்கும் காத்திருப்பாங்க. ஜனங்க வரலைன்னா அதுக்கு மேல்பட்டு நம்மள வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க. அங்க ஆஸ்பத்திரியிலே இருந்து பாடியை வண்டியிலே வைச்சி எடுத்துக்கிட்டு வருவோம். இங்க வெச்சி நாங்களே குழி தோண்டி பள்ளம் எடுப்போம். நாங்களே புதைச்சிடுவோம். எரிக்க மாட்டோம். புதைக்கிறதோட சரி.

இதெல்லாம் பழக்கமாகிப் போச்சு. கரண்ட் கிடையாது இங்கே. ஒரே எருக்கம் செடியெல்லாம் முளையுது. பயமா இருக்குது. மதில் கிடையாது. கேட் கிடையாது. எதுவுமே கிடையாது. எவன் எவனோ வர்றான். இங்கேயே குடிக்கறானுங்க. எல்லா வேலையும் நடக்குதுன்னா பாருங்க. இங்கே முள் செடியிலே தூக்கு மாட்டிக்கிட்டான் ஒருத்தன். அதனாலே பயமா இருக்குது. முனிசிபாலிடிலே|” போய்க கேட்டா இன்னும் ரெண்டு மாசத்துல மதில் போட்டுத்தர்றேன், கேட் போட்டுத் தர்றேன்னு சொல்றாங்க.

சிலபேர் வர்றாங்க. நாங்க புதைச்சு ஒரு மாசம், இரண்டு மாசம் கழிச்சு வந்து கேட்டா, நாங்க குழியைக் காட்டுவோம். அவங்க வந்து கற்பூரம் கொளுத்திப் படைப்பாங்க. இதபோல வெளியூர் ஜனங்க நிறைய பேர் வருவாங்க. படைச்சிட்டுப் போவாங்க. அவங்க எங்களுக்கு காசு கொடுக்க மாட்டாங்க. சிலபேர் இஷ்டப்பட்டு 10 ரூபா, 20 ரூபா கொடுத்துட்டுப் போவாங்க, அதான். அதுக்கு மேலே கிடையாது.

பக்கத்துல இருக்கிற தொழு நோயாளிங்க பொணத்தை இங்க தான் புதைப்போம். அங்க செத்துப் போயிட்டா யாராவது நோயாளியை விட்டு சொல்லி அனுப்புவாங்க. ராத்திரி பகல் எந்த நேரமானாலும் வீட்டுக்கு அனுப்புவாங்க. உடனே நாங்க போய் எடுத்துக்கின்னு வந்து புதைச்சிடுவோம். இங்கேயே பள்ளம் எடுத்து புதைச்சிடுவோம். அவங்க ஒரு பொணத்துக்கு 100 ரூபா கொடுப்பாங்க. இந்தப் பொணத்துக்கு முனிசிபாலிட்டிலேகாசு கொடுக்கமாட்டாங்க. இந்த ஆஸ்பத்திரிகாரங்கத்தான் கொடுப்பாங்க. அனாதைப் பொணத்துக்குத்தான் முனிசிபாலிடிபணம் கொடுப்பாங்க.

அனாதைப் பொணம் வந்துச்சின்னா அப்படியே பள்ளம் எடுத்து புதைச்சிடுவோம். பொணத்தை அப்படியே பள்ளத்திலே இறக்கி வைச்சி புதைச்சிடுவோம். அவ்வளவுதான். அவங்க நாலு நோயாளிங்க வருவாங்க. அவங்க மாலை போட்டு கற்பூரம் கொளுத்திட்டுப் போவாங்க. எயிட்ஸ் நோய், பெரிய வாயு நோய், அவங்க எல்லாம் எங்ககிட்டேதான். எயிட்ஸ் நோயாளி பொணம் நெறைய வந்திருக்கு. ஆறு மாசத்துக்கு முன்னேகூட ஒரு பாடி வந்திச்சி. தாயாரம்மா ஆஸ்பத்திரி. பெரிய ஆஸ்பத்திரி. நல்லாம் கிளினிக் இப்படி எல்லா இடத்திலே இருந்தும் வரும்.

பயமா இருக்காது. எங்களுக்கு அதுக்கு அதுக்கு ஒரு ஊசி போடுவாங்க. டி.டி.ன்னு பேரு அதுக்கு. நாங்க போய்க் கேட்டா இந்த டி.டி.யை தர்றோம் நீ போய்ப் போட்டுக் கோன்னு சொல்றாங்க. அவ்வளவுதான். டாக்டர் சொல்லுவாரு. இது எய்ட்ஸ் நோய், பார்த்து எடுத்துகிட்டுப் போய் புதைங்கன்னு சொல்லுவாரு. உடனே வண்டியிலே எடுத்துக்கிட்டு வருவோம். இந்த வண்டியிலே எடுத்து வெச்சி அப்படியே திரையைப் போட்டு எடுத்துக்கிட்டு வருவோம். பாதுகாப்பு எல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. யாரும் இது பத்தி ஒண்ணும் கேட்கமாட்டாங்க. அப்படியே எடுத்துகிட்டு வந்து பள்ளம் தோண்டி புதைச்சிடுவோம்.

எயிட்ஸ் நோய், பெரிய வாயு நோய், டி.பி.நோய், காச நோய், யானைக்கால் நோய், நாய்க்கடி நோய் எல்லாம் வரும். நாய்க்கடிச்சிடுச்சின்னு வச்சிக்க அந்த பாடியை வீட்டுக்கே கொடுக்க மாட்டோம். அதை வீட்டுக்கு எடுத்துக்கினு போக அனுமதியே கிடையாது. உடனே என்னைக் கூப்பிட்டு அனுப்பி நான் பெற்றுக் கொண்டேன்னு கையெழுத்துப் போட்டு வாங்கிக்கனும். நானே பாடியை வாங்கிக்கின்னு நானே மேரியிலே (நகராட்சி) அடக்க உத்தரவு வாங்கிக்கனும். பார்டிங்க எங்கக்கூட வந்தாகூட அவங்க எட்டதான் நிக்கணும். கிட்டே வரக்கூடாது. நாய்கடி பாடியை பிளீச்சிங் பவுடர் போட்டுப் புதைப்போம். ஈச்சம் பாயைப் பெரிய மார்க்கெட்டில் வாங்கிட்டு வருவோம். இதுக்கு யாரும் காசு கொடுக்க மாட்டாங்க. சொந்தக்காரங்க வந்தா அவங்க வாங்கிக் கொடுப்பாங்க. ஒப்பிதால்லே கீழே போட்டு படுக்கிற பாயை வாங்கிட்டு வந்து போடுவோம்.

என் வீட்டுக்காரர் செத்துட்ட உடனே பாடி எடுக்க ஆள் இல்லேன்னு பேப்பர்ல போட்டுட்டாங்க. பாடி புழு பூத்திருச்சு, எடுக்கிறதுக்கு ஆளே கிடையாதுன்னு போட்டாங்க. அப்போ எங்கெங்கேயோ ஆள் தேடனாங்க. உப்பளத்து கல்லறையில் இருந்து இரண்டு பேரை இட்டுக்கின்னு வந்தாங்க. ஒரு பத்து நாள் அவங்க எடுத்தாங்க. பத்தாவது நாள் அவங்க வண்டியைப் போட்டுட்டு ஓடிட்டாங்க. அதுக்கு அப்புறம் பாடி எடுக்கிறதுக்கு ஆளே கிடையாது. அதுக்கப்புறம் எனக்கு ஆள்விட்டு அனுப்பி கூப்பிட்டாங்க. நான் போனேன். உடனே நீ வேலை செய். ஆறு மாசம் கழிச்சி வேலை போட்டுத் தர்றேன்னு சொன்னாங்க. அப்புறமேட்டு நான் பர்ஸ்ட் பெரிய மார்க்கெட் போலிஸ்காரர் வந்து என்னை எடுக்கச் சொன்னாரு . அப்போ அவர் 50 ருபா கொடுத்தாரு. அதை எடுத்துகினு வந்து புதைச்சோம்.

கஷ்டமாகத்தான் சார் இருந்துச்சி. அது எடுத்தாதான் சாப்பாடு. பழக்கமாயிடுச்சி இப்போ. எங்க வீட்டுக்காரரு செத்துப் போயிட்ட பிறகு ரொம்ப கஷ்டப்பட்டோம். எங்களுக்கு யார் உதவியும் கிடையாது. நான் சம்பாதிச்சாதான் மூணு பிள்ளைகளும் சாப்பிடும். எங்க வீட்டுக்காரர் சொன்னார், நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் செத்துட்டா போய்க் கேளு, கவர்மெண்ட் வேலை போட்டுக் கொடுப்பாங்கன்னு சொன்னாரு.

எங்க வீட்டுக்காரார் தண்ணி போட்டுட்டு இந்த வேலையைச் செய்வாரு. நான் அப்படி இல்லேங்க. கஷ்டமாகத்தான் இருக்குது. கவர்மென்ட் வேலைக்காகத்தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை செஞ்சிக்கிட்டு இருக்கேன். முனிசிபாலிடி கமிஷனரே சொல்றாரு. உங்களை விட்டா வேற ஆள் கிடையாது. நீங்கதான் பாடியை எடுக்கனும்னு சொல்றார். அப்புறம் நான் என்ன செய்யறது. வேறவேலை செய்யனும்னு தோணல. இதே பழகிடுச்சு. இதே வேலைதான் செய்வோம். யாரும் செய்யாத வேலையா இருக்குது. அதான் செய்யறோம். மனசிலேயும் திருப்தி.

மார்ச்சுவரியிலே போய்க் கேட்டா ஒண்ணும் தரமாட்டாங்க. அந்த பாடியைக் கூட பிடிச்சு தூக்கி வைக்க மாட்டாங்க. எல்லாமே நம்மளே உள்ளே போய் நம்மளே தூக்கி வரணும். நானும் என் மகனும் தூக்கி வருவோம். கையிலே மாட்டிக்கிறதுக்கும், மூஞ்சியை மூடிக்கிற துணியும் கேட்டா கொடுக்க மாட்டாங்க. பலராமன் டாக்டரைப் பொய்க் கேளுன்னு சொல்வாங்க. முனிசிபாலிடியிலே கொடுக்க மாட்டாங்க. பலராமன் டாக்டர் சில சமயம் கேட்டா கொடுப்பார். சோப், துண்டு எதுவும் கொடுக்க மாட்டாங்க. முனிசிபாலிடியிலே மற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்கும் போது எங்களுக்கு ரெண்டு லைப்பாய் சோப் கொடுப்பாங்க. துண்டு எல்லாம் கொடுக்க மாட்டாங்க. மூணு மாசம் கழித்து ஆறு சோப் இப்பத்தான் கொடுத்தாங்க.

என் வீட்டுக்காரர் இருக்கும போது, பழைய முதலமைச்சர் வைத்தியலிங்கம் வெள்ளத்தைச் சுத்திப் பார்க்க இங்க வந்த போது மனு கொடுத்தோம். அவர் படிச்சிப் பார்த்திட்டு ஆபிசுக்கு வாங்கம்மான்னு சொன்னாரு. ஆபிசுக்குப் போனபோது, அந்த சீட்டிலே கையெழுத்து போட்டுக் கொடுத்தார். எல்.ஏ.டி. (உள்ளாட்சித் துறை) ஆபிசுக்குப் போய்க் கொடுத்த உடனே மேரிக்கு போன் பண்ணி, இது போல அல்பேர் என்கிறவர் வைத்திலிங்கம் சிபாரிசிலே வந்திருக்காருன்னு சொல்லி அனுப்பினார். அப்போ மேரி ஆபிசிலே எங்க வீட்டுக்காரரை செமத்தியா திட்டானங்க சார். நீ எப்படி எங்க உத்தரவு இல்லாமல் எல்.ஏ.டி.க்குப் போகலாம்ன்னு திட்டானாங்க.

பாடி உப்பிடுச்சுன்னு வெச்சுக்கிங்க வண்டியை இழுக்க முடியாது. வண்டி வரும்போது பாடியிலே இருந்து நீர் ஒழுகிக் கிட்டே வரும். சொட்டு சொட்டா ஊத்திக்கிட்டே வரும். ஒரே நாத்தம், பயங்கர நாத்தம் அடிக்கும். ரோட்டுலே போற வர்றவங்க எல்லாம் திட்டுவாங்க. பயங்கரமா திட்டுவாங்க.

பி.எம். பண்ணா பாடியை ஒழுங்கா தைக்க மாட்டாங்க, இப்போ புது பஸ்டாண்ட் எதிரிலே அம்மாவும், புள்ளையும் கொன்னுட்டாங்களே, அதுலே பாடியை தைக்கவே இல்லேங்க. ஒரு வாராமா மார்ச்சுவரிலே வெச்சிருந்தாங்க சார். சரியா தைக்கவே இல்லை. போலீஸ்காரரே பார்த்து பயந்துட்டார். பாடியைக் கட்டும்போது கொடலும் மற்றதும் அப்படியே கொட்டிக்கிச்சி. இதப் போய் கேட்டா, இப்படித்தான் தைப்போம், உனக்கு இடம் இருந்தா தூக்கு, இல்லேன்னா போங்கன்னு சொல்றாங்க. டாக்டர்கிட்டே கம்ப்ளய்ண்ட் செஞ்சா இரண்டு நாளைக்கு ஒழுங்கா செய்யறாங்க.

ரோட்டெல்லாம் ரத்தம் சொட்டு சொட்டா ஊத்திக்கிட்டு வரும். எல்லாரும் திட்டுவாங்க. ரெண்டு மூணுபேர் அடிக்க வருவாங்க. அடியெல்லாம் வாங்கி இருக்கோம். ரோட்டுப் பக்கம் வர ஜனங்க அடிப்பாங்க. கையை ஓங்கிக்கிட்டே வருவாங்க. நாங்க உடனே பாடியை இப்படியே நடுரோட்ல போட்டுட்டு போயிடுவோம்னு சொன்னா கொஞ்சம் பேசாமா இருப்பாங்க. போலீசிலே போய் சொல்லுவோம்னு சொல்லுவோம். போலீஸ்காரங்க பின்னால வர்றாங்கன்னு சொல்லுவோம் சார்.

அனாதை பாடி போஸ்ட்மார்டம் பண்ணாதான் அப்படி செய்யறாங்க. மற்ற பிணம் வந்தா நல்லா செய்யறாங்க. அனாதை பாடி கடலில் விழுந்தது, தண்ணியிலே விழுந்தது, கிணத்துலே விழுந்தது இதெல்லாம் வந்தா இப்படிதான் செய்யறாங்க. எவ்வளவு பெனாயில் ஊத்தினாலும் நாத்தம் வரும் சார். வீட்டுக்குப் போய் சாப்பிடும்போது அதே நாத்தம் அடிக்கிற மாதிரி இருக்குசார். என்ன செய்யறது வயித்துப் பிழைப்பு. பிள்ளைங்க இருக்குது.

அவங்க ஊருக்காரங்க வந்து எதுவுமே என்ன நினைக்கமாட்டாங்க. கஷ்டப்படுது இந்தப் பொண்ணு, ஆம்பளை மாதிரி கஷ்டப்படுது இந்தப் பொண்ணு. இது நல்ல பொண்ணு. நல்ல வேலை செய்யுது. இந்த பொண்ணுக்கு எந்தக் குறையும் வரக்கூடாதுன்னு வேண்டிக்குவாங்க. எங்க ஊரிலே இருக்கறவங்க எல்லாம் என்னை நிரந்தரம் பண்ணிட்டா பாடி ஒழுங்கா எடுக்க மாட்டேன்னு நினைக்கிறாங்க. உன்னை நிரந்தரம் பண்ணிட்டா பாடி எடுக்க மாட்டேன்னு கமிஷனரே சொல்றாரு. அப்போ எப்படி நாங்க செய்யாம விட்டுடுவோம். இந்த வேலையை நம்பித்தானே பிழைச்சிக் கிட்டிருக்கோம்.

ஜுன், 2003-இல் அவர் அளித்த வாக்குமூலம்.

அண்மையில் இரண்டு நாட்களுக்குமுன் கிருஷ்ணவேணி அவர்களை புதுச்சேரி நீதிமன்றம் அருகில் பார்த்தேன். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அரசு நலத் திட்ட உதவிக்காக விண்ணப்பம் வாங்கப் போய்க் கொண்டிருப்பதாக கூறினார். என்னைப் போன்ற பலர் அவருக்கு அறிமுகம் இருந்தும் எங்களைப் பயன்படுத்தி வேலையை முடிக்கக்கூட தெரியாமல், சமூகத்தின் அடித்தட்டில் உழலும் கிருஷ்ணவேணி அவர்களை என்றும் என்னால் மறக்க முடியாது.

நமக்கு தெரிந்து ஒரு கிருஷ்ணவேணியின் நிலையே இதுவென்றால் இன்னும் நம் கண்ணுக்குப் புலப்படாத கிருஷ்ணவேணிகள் எங்கொ ஓர் மூலையில் துயரங்களோடு உழன்றுக் கொண்டிருப்பார்கள்.

கிருஷ்ணவேணியின் வாழ்க்கை சந்நியாசித்தோப்புச் சுடுகாட்டோடும், மனதை அறுக்கும் துயரத்தோடும் தொடர்ந்துக் கொண்டிருப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது...

Tuesday, February 05, 2008

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) - நான் பார்த்ததும், உணர்ந்ததும்..


ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU)


நூலகம்


ஜனநாயக மாணவர் சங்கம்..


தந்தை பெரியார் பிறந்த நாள் விழா


பகுஜன் சமாஜ் கட்சி மாணவர் அமைப்பு
பெரியார் பிறந்த நாளுக்கு...



போலி மோதல் கொலை தொடர்பாக...


மதவாத ஏ.பி.வி.பி.


பாலியல் தொந்தரவுக்கு எதிராக...


மக்கள் இடம்பெயர்வது பற்றி...


ஜே.என்.யூ-வில் படித்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த
சந்திரசேகர். சி.பி.ஐ.(மா-லெ) கட்சியில்
இருந்ததால் கொல்லப்பட்டார். அவருக்கு அஞ்சலி.

உலக வங்கியின் தாக்கங்கள் பற்றி புதுதில்லியில் நடந்த மக்கள் தீர்ப்பாயத்தில் கலந்து கொள்ள நானும், நண்பர் தேவநேயன் அவர்களும் தில்லி சென்றோம். சென்ற 2007, செப்டம்பர் 21 முதல் 24 வரை, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழத்தில் (ஜே.என்.யூ) நடைபெற்ற இத்தீர்ப்பாயத்தில் இந்தியா முழுவதும் இருந்தும், உலக அளவிலும் ஏராளமான அறிஞர்கள் கலந்துக் கொண்டு கட்டுரை படித்தனர். மிகவும் பயனளிக்க கூடிய வகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நிறைய நண்பர்கள் எனக்கு அறிமுகமாயினர்.

எல்லாவற்றையும்விட ஜே.என்.யூ. சூழல் என்னை மிகவும் கவர்ந்தது. ஜே.என்.யூ. பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தும் நேரில் பார்த்த போது அதன் பரிமாணத்தைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.

ஜே.என்.யூ. கல்வி நிலையில் முன்னணியில் இருக்கும் பல்கலைக்கழகம் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு இந்தியா முழுவதும் மற்றும் உலகமெங்கும் இருந்து ஏறக்குறைய 4000 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 50 சதவீதத்திற்கு மேல் மாணவிகள். தமிழ்நாட்டிலிருந்து 130 பேர் படிக்கின்றனர். மற்ற மாநிலத்தைக் காட்டிலும் இது ஒப்பீட்டளவில் மிக மிக குறைவு. கேராளாவிலிருந்து 400 பேர் படிக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

ஜே.என்.யூ.வில் பணியாற்றும் பேராசிரியர்கள் அறிவுநிலையில் கற்றுத் தேர்ந்தவர்களாக உள்ளனர். பேராசிரியர்களில் 90 சதவீதத்தினர் ‘பார்ப்பன, ‘மேல்சாதிக்காரர்கள் என்பது உற்று கவனிக்க வேண்டியது.

இங்கு பயின்றவர்களில் ஆண்டுக்கு 30 முதல் 35 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். இங்குள்ள சமூக அறிவியல், அரசியல் துறைகள் மிகப் பிரபலம். இங்கு பயின்ற பலர் இன்றும் இந்திய அரசியலில், அரசில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

மாணவர்கள் பயிலுவதற்கு நல்ல சூழல் நிலவுகிறது. படிப்பதற்கேன்றே தனியே படிப்பறைகள் உள்ளன. இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கனவுகளோடு மாணவர்கள் இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

ஒவ்வொரு துறையிலும் குளிர்வசதி செய்யப்பட்ட கருத்தரங்க அறைகள் உள்ளன. நாள்தோறும் கல்வி சார்ந்து கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. ஜே.என்.யூ. பேராசிரியர்களும், வெளியிலிருந்து வரும் அறிஞர்களும் படிப்பு, அரசியல் சார்ந்தும் உரை நிகழ்த்துகின்றனர். மாணவர்கள் மட்டுமல்லாது, வெளியிலிருந்தும் நிறைய பேர் இக்கருத்தரங்க உரைகளைக் கேட்க வருகின்றனர்.

இங்குள்ள நூலகம் மிகப் பிரபலம். வானுயர்ந்து நிற்கும் 9 மாடிக் கட்டடம். இதில் 5 லட்சம் அளவில் நூல்கள், பத்திரிகைகள், ஆவணங்கள், குறுந்தகடுகள் உள்ளன. படிப்பதற்கென்று அனைத்து வசதிகளுடன் அரங்குகள் உள்ளன. இங்கு கிடைக்காத நூல்கள் இந்தியாலுள்ள வேறு நூலகங்களில் இருக்கிறதா என்பதை இணையம் மூலம் கண்டறிகின்றனர். அவ்வாறு வெளி நூலகத்திலுள்ள நூல்களைப் பெற்றுத் தரும் வசதி இங்கு உள்ளது. மாணவர்கள் அல்லாதவர்களும் இந்நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நூலகத்திற்கு வருவது மிக மிக குறைவு என்றும், தமிழ்நாட்டிலிருந்து வே.ஆனைமுத்து அவர்கள் இந்நூலகத்திற்கு வருவதுண்டு என்றனர் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்.

ஜே.என்.யூ-வில் நல்ல புத்தகக் கடைகள் உள்ளன. பல துறை பாட புத்தகங்கள் தவிர மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் நூல்கள், முற்போக்கு இலக்கிய, அரசியல் நூல்கள் இங்கு கிடைக்கின்றன.

மாணவ-மாணவிகள் தங்கிப் படிக்கும் பல்கலைக்கழக விடுதிகள் நிறைய உள்ளன. இந்த விடுதிகளுக்கு இந்தியாலுள்ள நதிகளின் பெயர்களைச் சூட்டியுள்ளனர். ஒவ்வொரு விடுதியின் அருகேயும் ‘கேன்டீன்கள் உள்ளன. இங்கு உணவுப் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

மாணவர்கள் விடுதிக்குள் மாணவிகள் செல்ல தடையில்லை. மாணவிகளை ஈவ் டீசிங் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். இதற்கென மாணவ–மாணவிகள் அடங்கிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் தாண்டி, என்னை மிகவும் கவர்ந்தது அங்கு அரசியல் செயல்பாடுகளுக்கு சுதந்திரம் உள்ளதுதான்.

மாணவர் அமைப்புகள் வலுவாக உள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் முதல் மாவோயிஸ்ட் வரையிலான கட்சி சார்ந்த மாணவர் அமைப்புகள் உள்ளன. அந்தந்த மாணவர் அமைப்பு சார்பில் அன்றன்றைக்கு என்ன பிரச்சனை அரசியலில் களத்தில் உள்ளதோ அதுபற்றி ஒரு கருத்தரங்கம் நடக்கிறது. அதில் கலந்துக் கொள்ளும் பேராசிரியர்கள் குறிப்பாக ஜே.என்.யூ-வில் பணிபுரியும் பேராசிரியர்கள் அரசை விமர்சித்தும், பிரதமர் போன்ற அதிகாரத்தின் உயர்பொறுப்பில் இருப்பவர்களையும் கடுமையாக, வெளிப்படையாக விமர்சித்தும் பேசுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.

நான் அங்கு இருந்த போது, அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.என்.யூ மாணவர் பேரவை சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங், சி.பி.எம். பிரகாஷ் காரத் மற்றும் ஜே.என்.யூ பேராசிரியர்கள் பலர் கலந்துக் கொள்வதாக அறிவிக்கபட்டிருந்தது. வி.பி.சிங் ‘டையாலிசிஸ் செய்துக் கொள்ள வேண்டியிருந்ததால் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை. அவரைப் பார்க்க வேண்டுமென்பதற்காக கூட்டத்திற்குச் சென்றோம். அக்கூட்டத்தில், ஜே.என்.யூ பொருளாதார துறை பேராசிரியை ஒருவர் பிரதமரையும், அவரது பொருளாதார கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்தார். இக்கூட்டத்தைக் கண்டித்து மாணவ காங்கிரஸ் அமைப்பினர் பிரகாஷ் காரத் உருவ பொம்மையை அரங்கத்தின் வெளியே எரித்தனர்.

இடதுசாரி இயக்க மாணவர் அமைப்புகள் வலுவாக உள்ளன. குறிப்பாக மாவோயிஸ்ட், சி.பி.ஐ. (எம்.எல்.), சி.பி.எம்., சி.பி.ஐ. போன்றவற்றை சொல்லலாம். தற்போது கூட மாணவர் பேரவைத் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சியின் ‘ஜனநாயக மாணவர் சங்கத்தைசார்ந்த மாணவர் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாணவ-மாணவியர் தங்கள் கருத்துக்களை எளிய சுவரொட்டிகள் மூலம் தெரியப்படுத்துகின்றனர். அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என்று மாணவர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு முடிவு செய்து, அதைக் கடைபிடிக்கின்றனர். வசதி வாய்ப்புள்ள அமைப்புகள் பெரிய பெரிய சுவரொட்டிகளை ஒட்டுவார்கள். போதிய நிதி இல்லாத அமைப்புகள் அந்தளவுக்கு ஒட்ட முடியாது என்று இந்த முடிவுக்கு வந்ததாக மாணவர் ஒருவர் கூறினார்.

சமற்கிருத துறைப் பேராசிரியர் ஒருவர் 9 மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவிகள் சுவரொட்டி ஒட்டியிருந்தனர்.

கேன்டீன்கள்அரசியல் தலைவர்களைக் கிண்டலடித்து கையால் வரையப்பட்ட சுவரொட்டிகள் நிறைந்துக் காணப்படுகின்றன. குறிப்பாக மதவாத பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி ஆகியவற்றை எதிர்த்து நிறைய சுவரொட்டிகளைக் காண முடிந்தது.

சிறப்புப் பொருளாதார மணடலங்களுக்கு எதிராக மேற்குவங்க சி.பி.எம். கட்சியைக் கடுமையாக விமர்சித்து ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலையரசன், வீரமணி, பிரியா போன்றவர்கள் பெரியார் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். பெரியார் பிறந்த நாள் விழா நடத்தியுள்ளனர். வே.ஆனைமுத்து அவர்கள் ஒருமுறை இங்கு மாணவர்களிடம் நிறைய நேரம் உரையாடியுள்ளதை கூறினர்.

இரவு 10 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை விடுதிக் ‘கேன்டீன்களில் அரசியல் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இது மாணவர்களின் அரசியல் களமாகத் திகழ்கிறது.

ஜே.என்.யூ-வில் மாணவர்கள் உரிமைக்காகத் தீரமாகப் போராடுகின்றனர். சில எடுத்துக்காட்டுக்களை மட்டும் சொல்கிறேன்.

ஜே.என்.யூ-வில் நேரு சிலை ஒன்று அமைக்கப்பட்டு அதனை பிரதமர் மன்மோகன்சிங் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. மன்மோகன்சிங் ஜே.என்.யூ-விற்கு வருவதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிலை திறப்பு விழாவன்று கறுப்புக் கொடி காட்டுவோம் என மாணவர்கள் அறிவித்தனர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது. விழாவன்று சிலையைத் திறந்து வைத்து மன்மோகன்சிங் பேசும் போது மாணவிகள் தங்கள் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த கறுப்புக் கொடியை எடுத்துக் காட்டி அவரை வெளியேறுமாறு முழக்கமிட்டுள்ளனர். தொடர்ந்து பேச முடியாமல் மன்மோகன்சிங் கூட்டத்தைவிட்டு வெளியேறியுள்ளார்.

அதேபோல், மகாராஷ்டிரா மாநிலம், கயர்லாஞ்சியில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உயிரோடு தீ வைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதை யாராலும் எளிதில் மறக்க முடியாது. இச்சம்பவம் நடந்த பின்பு அம்மாநிலத்தின் முதலமைச்சர் விலாசராவ் தேஷ்முக் ஒரு கூட்டத்தில் பேச ஜே.என்.யூ வந்துள்ளார். அப்போது, மாணவர்கள் ‘தலித் விரோதிக்கு ஜே.என்.யூ-வில் இடமில்லை என்று கூறி அவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர் போலீஸ் பாதுகாப்போடு வெளியே தப்பியோடியதை மாணவர்கள் கூறினர்.

அண்மையில், பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ஜே.என்.யூ-விற்குச் சென்றுள்ளார். அவரை முற்றுகையிட்டு அவரை வெளியேற சொல்லி மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். நந்திகிராம், சிங்கூர் பிரச்சனைகளுக்காக இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

அதோடுமட்டுமல்லாமல், ஊழியர்களின் பிரச்சனைகளுக்காகவும் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். குறிப்பாக கடைநிலை ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமைக் கொடுத்துப் போராடுகின்றனர்.

ஜே.என்.யூ. கல்வி வழங்குவதில் மேம்பட்டும், அரசியல், ஜனநாயக களமாக திகழ்வதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

அண்மையில் பேராசிரியர் மார்க்ஸ், நானும் இந்திய அளவில் அரசியல் சிறைவாசிகள் விடுதலை குறித்து நடந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தில்லி சென்று வந்தோம். அப்போது ஜே.என்.யூ-வில் இரண்டு கூட்டங்கள் நடந்தன. ஒன்று தமிழகத்திலிருந்து பயிலும் மாணவர்களோடு கலந்துரையாடல். இரவு 10.30 மணிக்குத் தொடங்கி 12.30-க்கு முடிந்தது. பெரியார், மார்க்சியம் சார்ந்த செய்திகளை மார்க்ஸ் முன்வைத்துப் பேசினார். அதன்பின், இரவு 1.00 மணிக்குத் தொடங்கி 2.30 வரை ஜனநாயக மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியரோடு கலந்துரையாடல். மார்க்சியம், அரசியல், இந்திய அளவில் நடக்கும் போராட்டங்கள், தமிழகச் சூழல் என பலவற்றைக் குறித்து விவாதம் நடந்தது.

இவ்வாறு ஜே.என்.யூ-வோடு என் உறவு தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. நல்ல கல்வி பெற்று உயர்நிலை அடைய வேண்டும் என்பவர்களுக்கும், என் போன்ற சமூக ஆர்வலர்களுக்கும் ஜே.என்.யூ-வில் படிக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்புதான். இதைப் படிக்கும் உங்களுக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன்...

தமிழ் மொழி உரிமைக்காகப் போராடியவர்கள் மீது தமிழக காவல்துறை தாக்குதல் - கண்டனம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மொழி உரிமைக்காக்கப் போராடியவர்கள் மீது தமிழக காவல்துறை மேற்கொண்ட அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து அக்கட்சியின் உறுப்பினர் க.பாலகுமரன் காவல் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனு:

நான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக செயல்பட்டு வருகிறேன். 25-01-2008 அன்று தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப் போர் தியாகிகள் நாள் என்பதால், எங்கள் கட்சி தமிழக அரசு கடைப்பிடிக்கும் ஆங்கிலத் திணிப்புக் கொள்கையையும் தமிழ் புறக்கணிப்புப் போக்கையும் கண்டிக்கும் வகையில் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் நடத்தியது. அதில் நானும் கலந்து கொண்டேன்.

25-01-2008 காலை சுமார் 10.00 மணிக்கு சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில், தமிழ் மொழியாக்கம் கூட செய்யப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'எஸ்.இ.டி.சி;' போன்ற எழுத்துக்களை கருப்பு மைபூசி அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். நானும் எங்கள் கட்சித் தோழர்களும் அமைதியான முறையில் பேருந்துகளுக்கு எந்த சேதமும் இல்லாத வகையில் கருப்பு மைபூசி அழித்தோம்.

அப்போது அங்கு வந்த கோயம்பேடு காவல்நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், காவலர்களும் எந்த விசாரணையும் செய்யாமல் எங்கள் போராட்டத்தைக் கைவிடும்படி அறிவிக்காமல் திடுதிடுவென அனைவரையும் பலமாக தடியால் திரும்பத் திரும்ப அடித்தனர். நாங்கள் ஆங்கில எழுத்துக்களை அழிப்பதை நிறுத்தி கொண்டோம். அதன் பிறகும் அங்கு கூட்டம் கூடிய மக்களெல்லாம் வேடிக்கை பார்க்கும் நிலையில் எங்களை மீண்டும் மீண்டும் தடியால் அடித்தும் பூட்ஸ் காலால் உதைத்தும் துன்புறுத்தியதுடன் எங்களை பெற்ற தாய்மார்களை இழிவு படுத்தும் வகையில் காமகுரோத வார்த்தைகளால் கேவலமாகப் பேசியும் அவமானப்படுத்தினார்கள்.

கோயம்பேடு காவல் நிலையத்தைச் சேர்ந்த தேன்தமிழ்வளவன் (என்கிற) தேன்தமிழ்வாணன் என்பவரும் அவரோடு சேர்ந்து மேலும் இரண்டு காவலர்களும் என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டு தடியால் தொடையிலும், இடது கையிலும், முகத்திலும் மாறி மாறி அடித்தார்கள். தேன்தமிழ்வளவன் தடியால் என் முகத்தில் ஓங்கி அடித்ததால் என் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியது. உதடு கிழிந்தும் இரத்தம் வழிந்தது. முகம், கை ஆகிய இடங்கள் வீங்கியது. இடதுகைப் புஜத்தில் காயம் ஏற்பட்டது. அத்துடன் மேற்படி தேன்தமிழ்வளவன் என்னை நோக்கி "தேவடியாமவனே, ரூபாய் நோட்டில் இந்தியும் இங்கிலீசும் இருக்கு அத கிழிச்சி போட்ருவியாடா" என்று கத்திக் கொண்டே மறுபடியும் முதுகில் தடியால் அடித்தார்.

போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைச் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன், போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் பொறியாளர் இரா.பாலசுப்பிரமணியம், கோவை பா.தனசேகர், பா.சங்கரவடிவேலு, சேலம் ச.பிந்துசாரன், கோ.தமிழ்ச்செல்வன், ஓசூர் கோ.மாரிமுத்து, சிவபெருமாள், செந்தில்மாறன், பெண்ணாடம் முருகன்குடி க.முருகன், பழனிவேலு, இராமகிருஷ்ணன், தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் காமாட்சிபுரம் க.காமராசு, நந்தவனப்பட்டி செந்தில், நீ. மாரியப்பன் ஆகிய 16 பேரையும் மேற்படி தேன்தமிழ்வளவனும் காவலர்களும் கடுமையாகத் தடியால் அடித்துத் துன்புறுத்தினர். அதன் பிறகு எங்களைக் கைது செய்திருப்பதாக அறிவித்து ஒரு பேருந்தில் ஏறச் சொன்னார்கள்.

பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தவுடன் தேன்தமிழ்வளவன் என்னை மீண்டும் தடியால் அடித்தார். பேருந்தில் வைத்து கோயம்புத்தூர் பா.தனசேகர் இடது கையில் மேற்படி தேன்தமிழ்வளவன் கடுமையாக தடியால் அடித்தார். இதில் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. பேருந்திலும் அனைவரையும் மீண்டும் மீண்டும் காவல் துறையினர் அடித்தனர். கோயம்பேடு காவல் நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கிச் செல்லும் பொழுதும் எங்களை காவல் துறையினர் தடியால் அடித்தனர். காவல் நிலையத்திற்குள் வைத்தும் எங்களைத் தடியால் அடித்தனர். பூட்ஸ் காலால் உதைத்தனர்.

இச்சம்பவங்கள் அங்கு பேருந்துக்காக காத்திருந்த பூவிருந்தவல்லி திரு. என்.ஆறுமுகம், புதுச்சேரி பொறியாளர் க.அருண், சிதம்பரம் சிவஞானம், குரோம்பேட்டை மா.கௌரி பாலன் ஆகியோருக்குத் தெரியும்.

பிறகு, கோயம்பேடு காவல்நிலையத்திலிருந்து சரக்குகள் ஏற்றும் ஒரு மினிடோர் வண்டியில் எங்களை ஏற்றிச் சென்று சேமத்தம்மன் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்துக் கதவுகளைப் பூட்டி விட்டனர். எங்களைப் பார்க்க வந்த உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

எங்களில், மிகக் கடுமையாகக் காயம் பட்டு பாதிக்கப்பட்ட 1. க.பாலகுமரன், 2. கோவை பா.தனசேகர், 3. கோவை பா.சங்கரவடிவேலு, 4. ஓசூர் கோ.மாரிமுத்து, 5. சேலம் ச.பிந்துசாரன், 6. சேலம் கோ.தமிழ்ச்செல்வன், 7. ஓசூர் செந்தில்மாறன், 8. முருகன்குடி க.முருகன், 9. முருகன்குடி பழனிவேலு ஆகிய 9 பேரையும் கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு நடராசன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் எங்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

எங்களை அன்று (25-01-2008) பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு விடுதலை செய்துவிட்டதாக ஆய்வாளர் அறிவித்தார். அதன்பிறகு தடியடிபட்டு பாதிக்கப்பட்ட எங்களுக்குத் தாங்கமுடியாத வலி இருந்ததால் உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றோம். அவ்வாறு சிகிச்சை பெற்றவர்கள் 1. க.பாலகுமரன், 2. பா.தனசேகர், 3. பா.சங்கரவடிவேலு, 4. ச.பிந்துசாரன், 5. கோ.மாரிமுத்து, 6. கோ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஆவர். இதில் பா.தனசேகருக்கு எக்ஸ்-ரே ஆய்வில் இடது முன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு அதற்குரிய மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான சீட்டுகளின் நகல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆங்கில எழுத்துகளை அழிக்கும் போராட்டம் பற்றி முன்கூட்டியே பத்திரிக்கை அறிக்கை வாயிலாகவும், பல்லாயிரக்கணக்கான துண்டறிக்கைகள் மூலமாகவும், சுவரொட்டிகள் ஒட்டியும், சுவரெழுத்துகள் எழுதியும், பதாகைகள் கட்டியும் அறிவித்திருந்தோம். கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளருக்குத் தொலைபேசி வழியிலும் தெரிவித்திருந்தோம். எனவே சனநாயக வழியில் அறிவித்துவிட்டு பகிரங்கமாக நடந்த ஒர் அடையாளப் போராட்டம் தான் இது.

சட்டவிரோதமாகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் மேற்கண்ட எங்களைத் தடியால் அடித்துக் காயப்படுத்தி, பூட்ஸ் காலால் மிதித்து, இழிவுபடுத்தி எங்களைப் பெற்ற தாய்மார்களை "தேவடியாள்" என்று கேவலப்படுத்திப் பேசி வன்முறையில் ஈடுபட்ட மேற்கண்ட காவல்துறையினரிடம் இதுகுறித்து விசாரித்து தாங்கள் கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்'

இவ்வாறு அவர் புகார் கூறியுள்ளார்.

இந்தியை தார்பூசி அழித்து வளர்த்த கட்சி நடத்தும் ஆட்சியில் இவ்வாறு மொழி உரிமைக்காகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது அடக்குமுறை ஏவியதை ஏற்றிக் கொள்ள முடியாது. உடனடியாக தமிழக அரசு குற்றமிழைத்த காவ்ல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Monday, February 04, 2008

போராடிய மக்கள் மீது போலீஸ் அடக்குமுறையும், என் மீது பொய் வழக்கும்..

மனித உரிமை ஆர்வலர்கள் சந்திக்கும் அடக்குமுறைகள் ஏராளம். பல நேரங்களில் அவர்களுக்கு அதிகார அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல் வருவதுண்டு. ஆந்திர சூழலில் பல மனித உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்கத்தில், புதுச்சேரியில் அந்தளவுக்கு சூழல் மோசமில்லை என்றாலும், மனித உரிமை ஆர்வலர்கள் மீது பல்வேறு பொய் வழக்குப் போடுவது என்பது சாதாரணமாகிவிட்டன.

திண்டிவனத்தில் இருக்கும் பேராசிரியர் கல்யாணி மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட்த்தில் பொய் வழக்குப் போட்ட உதாரணமும் உண்டு. இத்தனைக்கும் அவர் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் அமைத்து போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல நிறைய கூற முடியும்.

புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்ட்த்தை எதிர்த்துப் போடாடியதற்காக நான் உட்பட பலர் மீது காவல் ஆய்வளரைக் கொல்ல முயன்றதாக இ.பி.கோ. பிரிவு 307 பொய் வழக்கு உள்ளது.

இந்நிலையில், கடந்த 31-01-2008 அன்று வில்லியனூரில், அத்தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நிட் நாராயணசாமி, அரசு ஒதுக்கிய நிதியினை செலவு செய்யவில்லை என்பதை எதிர்த்து போராட்டம் நடத்திய உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் மீது போலீஸ் காட்டுமிராணடிதனமாக தாக்குதல் நடத்தியது. இதில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்காக உதவிட போன இடத்தில் நடந்த சம்பவத்தில் என் மீது மற்றுமொரு பொய் வழக்கு போட்டுள்ளது புதுச்சேரி போலீஸ்.

நடந்த சம்பவம் குறித்து நான் போலீசிடம் அளித்த புகார் விவரம்:

“31-01-2008 அன்று காலை சுமார் 11.30 மணியளவில், வில்லியனூர் உளவாய்க்கால் ஊரைச் சேர்ந்த என்னுடைய நண்பர் சந்திரசேகர் தொலைபெசியில் என்னிடம் “வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் நாராயணசாமியை எதிர்த்துப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது வில்லியனூர் காவல் ஆய்வாளர் வெங்கடசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் தடியடி நடத்தி தாக்கியதால், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் காயமடைந்து சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு வந்திருப்பதாக” கூறினார். மேலும் அவர், போலீசார் தாக்கியதால் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ள மக்களுக்கு உதவி செய்திட உடனடியாக என்னை மருத்துவமனைக்கு வருமாறு கூறினார்.

நான் உடனடியாக என்னுடைய நெருங்கிய நண்பர்களான லோகு.அய்யப்பன், சாமிஆரோக்கியசாமி மற்றும் சிலரோடு மேற்சொன்ன மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் இருந்தனர். அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவர் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு முன்னாள் இருந்த இருக்கையில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் அமர்ந்துக் கொண்டிருந்தார்.

அப்போது நான் அங்கிருந்த மேற்சொன்ன சந்திரசேகரிடம் என்ன நடந்தது என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த மேற்சொன்ன காவல் உதவி ஆய்வாளர் காயம்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்த மக்களிடம் கடுமையான முறையில் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது நான் தலையிட்டு, “காயம்பட்டு மயக்க நிலையில் பொதுமக்கள் உள்ளனர், நீங்கள் உங்கள் விசாரணையை சிகிச்சை முடிந்த பின்னர் மேற்கொள்ளுங்கள்” என்று அவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டேன். உடனடியாக அவர் கோபத்துடன் என்னை நோக்கி தகாத வார்த்தைகளைக் கூறி திட்டி, மிரட்டினார். வழக்குப் போட்டு சிறையில் தள்ளிவிடுவேன் என்று அச்சுறுத்தினார். மேலும், அவர் என்னை நோக்கித் தாக்க வந்தார். அப்போது, அவருடன் இருந்த போலீசார் என்னை அங்கிருந்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தனர். என்னுடன் வந்தவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்காமல் என்னிடம் கடுமையாக நடந்துக் கொண்டார். இத்தனைக்கும் மேற்சொன்ன காவல் உதவி ஆய்வாளர் எனக்கு நன்கு அறிமுகமானவர்.

கடந்த 1989 முதல் மனித உரிமைக்ககாகப் பாடுபட்டுவரும் என்னிடம் மேற்சொன்ன காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் இவ்வாறு நடந்துக் கொண்டது எனக்கு மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது. நான் உடனடியாக மதியம் சுமார் 1.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து, பெரியக்கடை காவல்நிலையப் பொறுப்பு அதிகாரிக்கு தந்தி மூலம் நடந்தவற்றை தெரிவித்தேன்.

மேற்சொன்ன வில்லியனூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நேர்ந்ததால் உடனடியாக நான் காவல்நிலையம் வந்து புகார் அளிக்க முடியவில்லை. எனவே, நான் தற்போது தங்களிடம் இப்புகார் மனுவை அளிக்கின்றேன். தாங்கள் இப்புகாரை விசாரித்து வழக்குப் பதிவு செய்து, சட்டத்திற்குப் புறம்பாக என்னை தகாத வார்த்தைகள் கூறி மிரட்டி, அச்சுறுத்தி, தாக்க வந்த மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.”

இதுதான் நான் அளித்த புகார் மனு. இதனைப் பெற்றுக் கொண்ட பெரியக்கடை போலீசார், நான் புகார் கொடுத்த ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக புகார் கொடுத்த்து போல், என்னை தாக்க வந்த உதவி ஆய்வாளரிடம் ஒரு புகாரை எழுதி வாங்கி என் மீது வழக்குப் பொட்டுள்ளனர்.

அதாவது இ.த.ச. 353 (அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் அச்சுறுத்தித் தடுத்தல்), 506(1) (குற்ற எண்ணத்தோடு மிரட்டுதல்) மற்றும் பல பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளனர். நான் கொடுத்த புகார் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், போலீசார் என்னை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்ற நிலை உள்ளது.

இந்திய அளவில் பல மனித உரிமை ஆர்வலர்கள் மக்கள் உரிமைக்காகப் போராடி உயிர் நீத்துள்ளனர். அவர்களை எல்லாம் ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிதில்லை என்றாலும், நம் பணியை முடக்க அரசும், போலீசும் செய்யும் ஒரு தந்திரமே இது.