கடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை:
குள்ளஞ்சாவடி முகாம் நிலைமையை விளக்கும் தலைவர் |
1. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி
3. சத்யா சிவராமன், பத்திரிகையாளர், டெல்லி
4. இரா. பாபு, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, கடலூர்
5. சு. காளிதாஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி
டெல்லி பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன், அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், காளிதாஸ் ஆகிய நால்வரும் மூன்று ஈழ அகதிகள் முகாம்களுக்கு ஆகஸ்ட் 3 அன்று சென்று வந்தோம். புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புத்துப்பட்டு, குள்ளஞ்சாவடிக்கு அருகில் உள்ள அம்பலவாணன்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஆகிய ஊர்களில் உள்ள முகாம்கள் இவை. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் 452 குடும்பங்கள் (சுமார் 1500 பேர்கள்) உள்ளன. குள்ளஞ்சாவடியில் 125 குடும்பங்கள் (414 பேர்கள்) உள்ளன. குறிஞ்சிப்பாடியில் 167 குடும்பங்கள் (530 பேர்கள்) உள்ளன.
எங்கள் அமைப்புகள் சார்பாக ஈழ அகதிகள் முகாம்களுக்கு நாங்கள் சென்று வருவது இது நான்காவது முறை. இம்முறை எங்களுடன் குழுவில் பங்கேற்ற சத்யா சிவராமன் உலக அளவில் அகதிகள் பிரச்சினையில் அக்கறை உள்ளவர். பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு இன மக்களுக்கான முகாம்களுக்கும் சென்று வந்தவர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த முகாம்கள் நான்கு. மற்ற இரண்டும் விருதாசலத்திலும் காட்டுமன்னார்குடியிலும் உள்ளன. இவை இரண்டிற்கும் ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் எங்கள் குழுவைச் சேர்ந்த கடலூர் பாபு சென்று வந்தார். விருத்தாசலம் முகாமில் 65 குடும்பங்கள் (239 பேர்கள்) உள்ளன. காட்டுமன்னார்குடியில் 74 குடும்பங்கள் (246 பேர்கள்) உள்ளன.
தமிழக அளவிலுள்ள ஈழ அகதிகள் முகாம்களின் நிலைமை, இங்குள்ள மக்களின் அவல நிலை ஆகியன குறித்து எங்களின் முந்தைய அறிக்கைகளில் விரிவாகப் பேசியுள்ளோம். தி.மு.க, அடுத்து வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளில் ஈழ அகதிகளுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை முதலியன அதிகரிக்கப்பட்டதன் பின்னணியில் எங்களின் அறிக்கைகளுக்கும் ஒரு பங்குண்டு.
அகதிகள் முகாம் நிலைமைகளைத் திருத்துவதற்கான கோரிக்கைகள் குறைந்தபட்சம் மூன்று மட்டங்களில் வைக்கப்பட வேண்டும். இந்திய அளவில், தமிழக அளவில் மற்றும் மாவட்ட அளவில் இக்கோரிக்கைகள் அமைகின்றன. இவை தவிர குறிப்பான அந்த கிராம அளவிலும் கூட கோரிக்கைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக தேசிய அளவில் ஒரு அகதிகள் கொள்கையை (National Policy on Refugees) உருவாக்குதல், ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை (Dual Citizenship) வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை நாம் மத்திய அரசை நோக்கி வைக்க வேண்டும். உதவித் தொகைகளை உயர்த்துதல், இடஒதுக்கீடு அளித்தல் ஆகியவற்றிற்கு நாம் மாநில அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். உதவிகளை வினியோகிப்பதில் உள்ள குறைபாடுகள் முதலானவற்றிற்கு மாவட்ட நிர்வாகத்தை அணுகவேண்டும்.
மைய அரசை நோக்கி வைக்கிற கோரிக்கைகள் அப்படியே இருக்கின்றன. அகதி உரிமைகளை அங்கீகரிப்பதில் மைய அரசு இம்மியும் முன்னே நகரவில்லை. ஈழ அகதிகளுக்கு மாநில அளவில் அளிக்கும் உதவிகள் முதலானவற்றை முந்திய அரசும் இந்த அரசும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன. முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாநில அரசு அளிக்கும் உதவித் தொகையை ஈழ அகதிகளுக்கும் நீட்டித்து ஜெயலலிதா அரசு ஆணை வழங்கியுள்ளது. உயர் கல்வியில் இடஒதுக்கீடு குறித்தும் இப்போது ஒரு ஆணை இடப்பட்டுள்ளது. இவை வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்க முடியாது.
ஆனால் இவை யாவும் யானைப் பசிக்குச் சோளப் பொறி போடுவது போலத்தான் என்பதை எங்களின் முந்தைய அறிக்கைகளைப் படிப்போர் விளங்கிக் கொள்ளலாம். பத்தடிக்குப் பத்தடி (10’*10’) என்கிற அளவில் தார்ப்பாய்க் கூரைகளுடன் அமைத்துத் தரப்பட்ட வீடுகள் இன்று தகர அல்லது ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளுடன் காட்சியளிக்கின்றன. வெயில் நேரத்தில் ஐந்து நிமிடங்கள் கூட உள்ளே யாரும் இருக்க இயலாது. ஆனால் இவற்றில்தான் இந்த ஏதிலியர் கடந்த பல ஆண்டுகளாக வசிக்கின்றனர்.
பாதுகாப்பற்ற வீட்டில் ஈழத்தமிழ் மூதாட்டி |
ஆஃபர் (OFFER), அட்ரா (ADRA), ஜே.ஆர்.எஸ் (JRS) முதலான தொண்டு நிறுவனங்கள் சில முகம்களில் கூரை வேய்வதற்கு உதவியுள்ளன. காட்டுமன்னார்குடியில் மட்டும் தொண்டு நிறுவன உதவிகளுடன் 100 சதுர அடிக்கு கான்கிரீட் கூரை போடப்பட்டுள்ளது. குள்ளஞ்சாவடி முகாமைத் தத்து எடுத்துள்ள ஜூனியர் விகடன் இதழ் குழந்தைகளுக்கான பாலவாடியைக் கட்டிக் கொடுத்துள்ளது. மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் செலுத்தப் போகிறார்களாம். இப்படிப் பத்திரிகைகள், வங்கிகள், அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் முதலியன தமிழகத்தில் உள்ள 110 முகாம்களையும் தத்து எடுத்துக் கொண்டால் கூட ஓரளவு நிலைமை சீராகும் எனத் தோன்றியது.
பயன்படாத கழிவறைகள் |
பால்வாடி அருகில் திறந்த வெளியில் சுடுகாடு |
நான்கு மாதங்களாக முதியோர், விதவைத் தொகை கிடைக்கவில்லை என புகார் |
இந்த முகாம்கள் தொடங்கப்பட்டபோது போடப்பட்ட மின் இணைப்புகள் புதுப்பிக்கப்படவே இல்லை. முறையாகக் கம்பம் நட்டு மின் கம்பிகள் வழியாக மின்சாரம் வீடுகளுக்கு வினியோகிக்கப்படாமல் வெறுமனே கம்பங்கள் இல்லாமல் ஒயர்கள் மூலம் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை குறிஞ்சிப்பாடியில் பார்த்தோம். தாணே புயலுக்குப் பின் தார்பாய்களும், கூரைகளும் அகற்றப்பட்டு தகரக் கூரைகள் போடப்பட்டுள்ளன. இதில் மின் கசிவு ஏற்பட்டால் என்ன ஆகும் என்பது குறித்த கவலையை மக்கள் வெளிப்படுத்தினர்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு முகாமும் ஒரு கிராமம் அளவு மக்கள் தொகையைக் கொண்ட போதிலும் முறையான சாலை வசதிகள் எந்த முகாம்களிலும் கிடையாது. கழிவு நீர் வெளியேறும் வசதியும் கிடையாது. குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி முதலிய முகாம்கள் சரியான களிமண் தரையில் அமைந்துள்ளன. மழைக்காலத்தில் உள்ளே நடக்க இயலாது. அதேபோல பல இடங்களில் முகாம்களை ஒட்டித் தனியார் சாகுபடி நிலங்கள் அமைந்துள்ளன. இது பாதுகாப்பின்மைக்கும் பாம்பு முதலியன முகாம்களுக்குள் வருவதற்கும் காரணமாகிறது.
கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் இருந்த சுடுகாட்டுப் பிரச்சினை குறித்துச் சென்ற அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். தற்போது அது ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள அந்த முகாமில் இறக்கும் கிறிஸ்தவர்களைப் புதைக்க அங்குள்ள பாதிரியார் தங்களுக்கான கல்லறைத் தோட்டத்தில் இடம் தருகிறாராம். மற்றவர்களைப் புதைக்க குழந்தைகள் பயிலும் பால்வாடிக்கருகில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முகாமுக்கு மத்தியில் இப்படியான ஒரு சிறு இடத்தை ஒதுக்க நமது அதிகாரிகளுக்கு எப்படித்தான் மனம் வந்ததெனத் தெரியவில்லை. சிறிய இடமாகையால் குழி தோண்டும்போது பழைய உடல்களின் சிதைந்த எலும்புகளை அப்புறப்படுத்திவிட்டுத்தான் புதைக்க வேண்டியுள்ளதாம்.
முந்தைய அறிக்கைகளில் நாங்கள் குறிப்பிட்டிருந்த ஒரு முக்கிய பிரச்சினை இன்னும் தொடர்கிறது. முப்பதாண்டுகளாக முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் சில இப்போது இரண்டு குடும்பங்களாகியுள்ளன. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் மட்டும் இவ்வாறு 125 புதிய குடும்பங்கள் உருவாகியுள்ளன. இவர்களுக்கு வீடுகள் இல்லை. வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால், இந்த தாலுக்காவிலேயே இடம் கிடையாது, நீங்களே ஏதாவது இடம் பார்த்துச் சொல்லுங்கள் என்கிறார்களாம். அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற பதிலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. எந்த அடிப்படையில் இந்த ஏதிலியர் புதிய இடத்தைக் தேடிக் கண்டுபிடிக்க இயலும்? உரிய ஆவணங்களைக் கையில் வைத்துள்ள வருவாய்த் துறையின் பொறுப்பு அது, நமது கிராமங்களில் இந்த ஏதிலி மக்களுக்கு அளிக்க இடமே இல்லை என்பது எத்தனை பெரிய பொய்?
இன்னொரு புதிய பிரச்சினையும் தற்போது எழுந்துள்ளது. போர் முடிந்ததனால் முகாம்களில் உள்ளவர்கள் திரும்பிப் போக ஐ.நா. அகதிகள் ஆணையம் சில உதவிகளைச் செய்கிறது. விமான டிக்கட், சிறு உதவித் தொகை முதலியவற்றைத் தருகிறார்கள். மிகச் சில குடும்பங்கள் அவ்வாறு போயுள்ளன. இந்த முகாம் வாழ்வைக் காட்டிலும் அங்கே நிலமை மோசம் என்பதால் பெரிய அளவில் யாரும் போவதில்லை. ஒரு சில குடும்பங்களில் குடும்பத் தலைவர் அல்லது யாரேனும் ஒருவர் நிலைமையைப் பார்த்து வருவதற்கோ, விட்டுச் சென்ற வீடு முதலியவற்றின் கதி என்னாயிற்று என்று பார்ப்பதற்கோ நாடு திரும்புகின்றனர். போர்ச் சூழலில் முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள் இவர்கள். திரும்பிச் செல்ல பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமானால். இங்கே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அகதிகள் அட்டையிலிருந்து அவர்களின் பெயரை நீக்குவதை ஒரு விதியாக வைத்துள்ளது இந்திய அரசு. இப்படிச் சென்றவர்கள் வேலை முடிந்த பின்போ, அல்லது அங்கு இருக்க முடியாமலோ, அல்லது இங்கே படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்ப்பதற்கோ திரும்பி வந்தால் அவர்களுக்கு மீண்டும் அகதி அட்டையில் இடம் கொடுப்பதில்லை. இதனால் அவர்களுக்கு அளிக்கப்படும் அகதி உரிமைகள், உதவித் தொகைகள் எல்லாம் ரத்தாவதை விடப் பெரிய கொடுமை என்னவெனில் அவர்களை முகாம்களில் உள்ள தம் குடும்பத்தோடு வாழ்வதற்கும் நமது ‘கியூ’ பிரிவு போலீசார் அனுமதிப்பதில்லை. குள்ளஞ்சாவடியில் உள்ள இப்படியான குடும்பங்களைச் சேர்ந்த சில பெண்கள் பரிதாபகரமாக இது குறித்து முறையிட்டனர்.
ஒரே ஒரு அம்சத்தில் மட்டுமே கொஞ்சம் முன்னேற்றத்தைக் காண முடிந்தது. ‘கியூ’ பிரிவுப் போலீசின் கண்காணிப்பும் கெடுபிடிகளும் கொஞ்சம் குறைந்துள்ளன. போர் முடிந்துள்ளது இதற்கொரு காரணம். ஆனால் அதே காரணத்தை முன்வைத்துச் செங்கல்பட்டுச் சிறப்பு முகாமை மட்டும் கலைப்பதற்கு தமிழக அரசு தயாராக இல்லை. முகாம்களை விட்டு வெளியே செல்லும்போது அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து விட்டுப் போனால் போதும் என்கிற நிலையே தற்போது நிலவுகிறது. ஆனாலும் பிரதமர் போன்ற முக்கிய தலைவர்கள் அருகிலுள்ள ஊர்களுக்கு வரும்போது அந்த நாட்களில் யாரும் முகாமை விட்டு வெளியே செல்ல வேண்டாமென ‘கியூ’ பிரிவுப் போலீஸ் வந்து எச்சரித்துச் செல்வது தொடர்கிறது.
வேறென்ன பிரச்சினை என்று கேட்ட பொழுது குறிஞ்சிப்பாடி முகாம் தலைவர் குணரட்ணம் சிரித்துக் கொண்டே சொன்னார்: “எங்கள் இளைஞர்களுக்குத்தான் இந்த வாழ்க்கை பெரிய பிரச்சினையாக உள்ளது. வயதானவர்கள் எப்படியோ இந்த வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆகி விட்டார்கள். குறைந்தபட்சம் குடியுரிமை கூட இல்லாமல் இங்கே வாழ்வதை இளைஞர்கள் வெறுக்கிறார்கள். வெளி நாட்டில் மூன்றாண்டுகளில் ஈழ அகதிகளுக்குக் குடியுரிமை கொடுக்கிறார்கள். ஆஸ்திரேலியா போகலாம் என்கிற ஆசை வார்த்தைகளில் மயங்கி எங்கள் இளைஞர்கள் நிறையப் பணத்தையும் இழந்து பிடிபடவும் செய்கிறார்கள்” என்றார்.
எங்களை மிகவும் உறுத்திய விஷயம் என்னவெனில் நாங்கள் சென்று பார்த்த அத்தனை முகாம்களிலும் அவ்வளவு பேர்களும் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, இந்திய அரசு நன்றாக வைத்துள்ளது என்று சொன்னதுதான். ஆனால் ஒவ்வொன்றையும் கேட்கக் கேட்கவும், பார்க்கப் பார்க்கவும்தான் எத்தனை அவல வாழ்வை அவர்கள் வாழ்கிறார்க்ள் என்பது நமக்குத் தெரிகிறது. முன்னால் இருந்த தார்ப்பாய்க் கூரையை விட தற்போதுள்ள தகரக் கூரையை அவர்கள் பெரிதென நம்பும் மனநிலையில் உள்ளனர். என்ன இருந்தாலும் நாம் அகதிகள். எந்த உரிமையும் இல்லாதவர்கள். நமக்கு இதுவே அதிகம் என்பது போன்ற மன நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.
ஒரு வேளை பிரச்சினை இல்லாமலிருந்து நீங்கள் உங்கள் ஊரிலேயே இருந்திருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்கலாம் என நினைக்கிறீர்களா என்று கீழ்ப்புத்துப்பட்டு முகாமிலிருந்த வீரேந்திராவைக் கேட்டார் சத்யா. அதற்கான பதில் எதையும் வீரேந்திராவால் முறையாகச் சொல்ல இயலவில்லை. இப்படியான ஒரு hypothetical question-ஐ அவர் எதிர் கொள்ளத் தயாராக இல்லாததை நாங்கள் புரிந்து கொண்டோம்.
அகதி வாழ்வை அனுபவிக்கும் அவலம் நேராதிருந்தால் இவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டே நாங்கள் கீழ்ப்புத்துப்பட்டு முகாமை விட்டு நகரத் தொடங்கியபோது, ஒரு பெண் ஓடி வந்து அவசரமாக எங்களை வீட்டுக்குள் அழைத்தார். எட்டிப் பார்த்தோம். கட்டிலில் படுத்த படுக்கையாய் ‘கோமா’ நிலையில் கிடந்தார் ஒருவர். அவர் விஜயசேகரன், 43 வயது. எட்டு மாதத்திற்கு முன் ஒரு நாள் மாலையில் கடைக்குச் சென்றபோது இரு சக்கர வாகனம் ஒன்று மோதித் தலையில் அடிபட்டு வீழ்ந்துள்ளார். கோமா நிலைக்குச் சென்றுவிட்ட அவரை மருத்துவமனையிலிருந்து கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.
ஆஃபர் தொண்டு நிறுவனம் ஒரு கட்டிலையும் மெத்தையையும் வாங்கித் தந்துள்ளது. அவரைக் கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி ராஜேஸ்வரியும் வேலைக்குப் போவதில்லை. ஆக இப்போது வீட்டில் இருவருக்கு வேலை இல்லை. 16 வயது மகன் விஜயராஜைக் கூலி வேலைக்கு அனுப்புகிறார் ராஜேஸ்வரி. விஜயராஜ் கூலி வேலை செய்து சம்பாதித்து வரும் கொஞ்சக் காசு + அரசு அக்குடும்பத்துக்கு அளிக்கும் 2500 ரூபாய், இதை வைத்துக் கொண்டுதான் ராஜேஸ்வரி, கோமாவில் கிடக்கும் கணவருக்கு வைத்தியம் செய்தாக வேண்டும், எல்லோரும் சாப்பிட்டாக வேண்டும். கண்களில் நீர் வழிய ஒரு பையிலிருந்த காகிதங்களைக் கொட்டி, உதவிக்காக அவர் யார் யாருக்கோ எழுதிய கடிதங்களை அள்ளி எங்கள் முன் காட்டினார். அகதி வாழ்வின் கொடுமை இதுதான். மோதிவிட்டுப் போனவரிடமும் நீதி கேட்க முடியாது. மருத்துவமனையில் வைத்துச் சிகிச்சை அளிக்க வேன்டும் என வற்புறுத்தவும் முடியாது.
கோரிக்கைகள்:
1. அரசு அளிக்கும் மாதாந்திர உதவித் தொகைகள் மற்றும் விதவைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அளிக்கப்படும் உதவித் தொகைகள் ஒவ்வொரு மாதமும் சரியான தேதிகளில் வினியோகிக்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடலூர் மாவட்டத்தில் இப்பிரச்சினை அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடி முகாம்களில் உள்ள இக்குறை உடனடியாகப் போக்கப்பட வேண்டும். கடலூர் மாவட்ட ஆட்சியர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. அகதி முகாம்களில் அளிக்கப்படும் மாதாந்திர ரேஷன் அரிசியின் தரம் மோசமாக உள்ளது என்கிற புகாரையும் மக்கள் முன்வைத்தனர். குறிப்பாக விருதாசலம் முகாமில் இக்குறைபாடு உள்ளது. மாவட்ட நிர்வாகம் இக்குறையைப் போக்க ஆவன செய்ய வேண்டும்.
3. புதிதாக உருவாகியுள்ள குடும்பங்களுக்கு உடனடியாக வீடு கட்ட இடம் ஒதுக்க வேண்டும். எல்லா முகாம்களிலும் இப்பிரச்சினை உள்ளது. குறிப்பாகக் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ்ப் புத்துப்பட்டு முகாமில் இவ்வாறு 125 குடும்பங்கள் கண்டறியப்பட்டும் அவர்களுக்கு வீடு கொடுக்கப்படவில்லை. நீங்களே இடம் பார்த்துச் சொல்லுங்கள் என வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்வது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியாளர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தற்போதுள்ள முகாம்களுக்கு அருகிலேயே இவர்களுக்குப் புதிய குடியிருப்பு மனைகளையும் கட்டுமானப் பொருள்களையும் அளிக்க வேண்டும்.
4. பால்வாடிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுப்பதோடு பிள்ளைகள் விளையாடுவதற்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள் முதலானவற்றையும் அளிக்க வேண்டும்.
5. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் சடலங்களைப் புதைப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள இடுகாட்டின் பரப்பு அதிகரிக்கப்படுவதோடு அந்த இடம் சுத்தமாக்கப்பட்டுச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட வேண்டும்.
6. குள்ளஞ்சாவடி முகாம் தனியார் கரும்புத் தோட்டம் ஒன்றை ஒட்டி அமைந்துள்ளது. காம்பவுண்ட் சுவர் ஒன்று அங்கு உடனடித் தேவையாக உள்ளது. எல்லா முகாம்களுக்கும் காம்பவுண்ட் சுவர் கட்டித் தருவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். காட்டுமன்னார்குடி முகாமுக்கென கட்டப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டியை உள்ளடக்கிக் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட வேண்டும்.
7. எல்லா முகாம்களிலும் உள்ள பழைய மின் இணைப்புகள் நீக்கப்பட்டு, முறையாக மின் கம்பங்கள் நட்டு மின்சார இணைப்பை வழங்க வேண்டும். மின் கசிவால் பெரிய விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இப்பணி மேற்கொள்ளப்படுதல் அவசியம்.
8. முகாம்களுக்குள் கான்க்ரீட் நடைபாதைகள், கழிவு நீர் வெளியேற்று வசதிகள் ஆகியவை செய்யப்படுதல் வேண்டும். குறிப்பாகக் குள்ளஞ்சாவடி மற்றும் குறிஞ்சிப்பாடி முகாம்களில் இது உடனடித் தேவையாக உள்ளது.
9. போர் முடிந்ததை ஒட்டி நாடு திரும்புபவர்களுக்கு அளிக்கப்படும் உதவிகள் மாவட்டந்தோறும் ஒரே சீராக இல்லை என்கிற குறையையும் காட்டுமன்னர்குடி முகாமில் தெரிவித்தனர். இந்தக் குறைகள் சீராக்கப்பட வேன்டும். நாடு திரும்பியவர்கள், அங்கிருக்க இயலாமல் மீண்டும் இங்கு வர நேரும்போது அவர்கள் முறையாக விசாரிக்கப்பட்டு மீண்டும் அவர்களுக்கு அகதி அட்டைகளை வழங்கி அவர்கள் தம் குடும்பத்துடன் வாழ வழிசெய்ய வேண்டும். குள்ளஞ்சாவடி முகாமில் அவ்வாறு திரும்பி வந்த சிலர் ‘கியூ” பிரிவு போலிசாரால் குற்றவாளிகள்போல நடத்தப்பட்டு அவர்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காவல்துறை இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை நிறுத்த வேண்டும்.
10. கீழ்ப்புதுப்பட்டு முகாமில் 47ம் குடியிருப்பில் வசிக்கும் விஜயசேகர் விபத்தொன்றின் விளைவாக இன்று கோமா நிலையில் உள்ளார். அவரைக் கட்டாயமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிய இரக்கமற்ற செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து உரிய மருத்துவ உதவி அளிக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
11. விபத்துக்களால் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு 100 சதுர அடிக்கு மட்டுமே கூரைகள் தருவது என்கிற நிலையைக் கைவிட்டு அவர்களின் முழு வீட்டிற்கும் கூரை வேய மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும். உடைந்துபோன கழிப்பறைகள் முதலியன சீர்திருத்தப்படுதல் வேண்டும்.
நாங்கள் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல மாவட்ட அளவில் நடவடிக்கை மேற்கொண்டு சீர்திருத்தப்படக் கூடிய கோரிக்கைகளை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளோம். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகங்கள் இக்குறைபாடுகளை உடனடியாக நீக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.
1 comment:
பதிவுக்கு நன்றி ஈழத்தில் இருக்கும் தமிழருக்கு குரல் மட்டும் தான் நம்மால் கொடுக்க முடியும் அதை விடுத்து நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பது தான் திண்ணம் இங்கு அகதிகளாக வந்து அவதி படும் தமிழருக்கு நம்மால் ஆன அடிப்படை உதவிகள் செய்ய ஆவன செய்ய முடியும் அதை காலம் கருதி செய்தமைக்கு நன்றி
Post a Comment