Saturday, May 11, 2013

அ. மார்க்ஸ் போன்றவர்கள் மார்க்சிய - லெனினிய இயக்கத்தை ஒழித்தனரா?


அ.மார்க்ஸ், கல்யாணி போன்றவர்களால் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் வளர்க்கப்பட்டதாகவும், அதனால் வட மாவட்டங்களில் மார்க்சிய - லெனினிய இயக்கங்கள் இல்லாமல் போனதாகவும் சிலர் எழுதி வருகின்றனர். இணையத்தில் சில பார்ப்பன நண்பர்கள் இக்கருத்தை மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர் என்பது தனிக்கதை.

ஒரு இயக்கம் (அது சாதி அடிப்படையில் இருந்தாலும்) உருவாவதற்கு சமூக காரணிகள் அவசியம். புற, அகச் சூழல் தான் ஒரு இயக்கத்தை வளர்க்கும். மார்க்சியம் படித்து இயக்கம் கண்டதாக கூறுபவர்கள் இவ்வாறு எழுதுவது அபத்தமான ஒன்று. ஒரு சிலரால் ஆழ்ந்த தத்துவ பலம் பொருந்திய ஒரு இயக்கத்தை ஒழித்துக்கட்ட முடியுமென்றால் அந்த இயக்கம் இருந்து என்ன பயன் என்று யோசிக்க வேண்டியுள்ளது.

வன்னியர்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தார்கள்.  அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எந்த கட்சியும், அமைப்பும் முன் வரவில்லை. அந்த சமயத்தில் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கம் கண்டு, 1987-ல் இடஒதுக்கீட்டிற்காக அரசை நிலைகுலைய செய்யும் அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தி, அதன் விளைவாக வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது. அதையும் தாண்டி வன்னியர்கள் ஒரு சக்தி என்பதையும் நிரூபித்து அது அவர்களின் அரசியல் அதிகாரத்திற்கும் வழிவகுத்தது. இடஒதுக்கீடு குறித்து மார்க்சிய – லெனினிய இயக்கங்களின் நிலை அன்றைக்கு பார்ப்பனிய சக்திகளின் நிலைப்பாட்டை ஒத்தே இருந்ததை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

சாதிய, தீண்டாமைக் கொடுமைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்ற தலித்துகளின் நியாயமான வேட்கைக்கு யாரும் சரியான தீர்வைச் சொல்லவில்லை. அதற்காக முழு மூச்சில் களம் காணவில்லை. இந்த அதிருப்தி ஒருபுறமிருந்தாலும், அம்பேத்கர் நூற்றாண்டு ஏற்படுத்திய எழுச்சியும் தலித்துகளை விழிப்படைய செய்தது. இதனால், தமிழகத்தில் திருமாவளவன், கிருஷ்ணாசாமி போன்றவர்கள் தலைமையில் தலித் இயக்கம் எழுச்சி கொண்டது. தலித்துகள் குறிப்பாக அரசியல் தளத்தில் விழிப்படைந்தனர். சகல மட்டங்களும் தங்களுக்கான பங்கைக் கோரினர்.

இந்த இரு சமூகங்களும் எழுச்சி கொண்டதன் பின்னணி குறித்தோ அல்லது அதன் தேவை எழுந்த வரலாற்று காரணிகள் பற்றியோ எந்த மார்க்சிய -  லெனினிய இயக்கங்களும் உரிய முக்கியத்துவம் கொடுத்து இதுவரையில் ஆய்வு செய்யவில்லை. ஆனால், இந்த எழுச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.

1984-ல் தோழர் தமிழரசன் மீன்சுருட்டியில் சாதி ஒழிப்பு மாநாடு நடத்தி ஒரு அறிக்கையை முன் வைத்தார். அதில் சாதி ஒழிப்புக்கு முன்னுரிமைக் கொடுத்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். வர்க்கம் – சாதி குறித்து அன்றைய அளவில் ஆழமாக ஆய்வு செய்திருந்தார். அம்பேத்கர் நூல்கள் போதிய அளவில் தமிழில் கிடைக்கப் பெறாத அந்த நாட்களிலேயே அந்த அறிக்கையில் அம்பேத்கர் மேற்கோள்களைக் குறிப்பிட்டு எழுதி இருந்தார். இன்று அ.மார்க்ஸ், கல்யாணி மீது பாயும் மார்க்சிய – லெனினிய தோழர்கள் அந்த அறிக்கையை நிராகரித்தோடு, தோழர் தமிழரசன் போன்றவர்களை அப்போது தூற்றினர்.

ரசிய, சீன வீழ்ச்சி, அது உலக அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து மாபெரும் விவாதங்கள் நடந்தன. தமிழகத்திலும் இதுபற்றி நிறைய விவாதங்கள் நடந்தன. குறிப்பாக இன்று எளிதாக குற்றம்சுமத்தப்படும் அ.மார்க்ஸ் நிறைய எழுதினார். அவர் கருத்துக்கள் மீது சூடான விவாதங்கள் நடந்து, அவை எல்லாம் தொகுத்து நூல்களாக வெளியிடப்பட்டன. அரசைக் கைப்பற்றினால் மட்டும் போதாது சிவில் சமூகத்தின் கருத்து மிக மிக அவசியம் என்றெல்லாம் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்களைத் தாண்டி சார்த்தர், கிராம்சி, அல்தூசர் ஆகியோரின் புதிய சிந்தனைப் போக்குகள் வெளிச்சம் பெற்றன. பெரியார் மீதான புதிய வாசிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்தச்சூழலில் அடையாள அரசியல் உலகமெங்கும் புத்துயர்ப்பு பெற்றது. அதன் அங்கமாக தமிழகத்திலும் இதுபோன்ற தலித், வன்னியர் அமைப்புகள் முன்னிலைப் பெற்றன.

இதுபற்றி எல்லாம் எந்த தத்துவ விவாதமின்றி மிக எளிதாக ஒரு சிலரைக் குற்றம் சுமத்தி தங்கள் பொறுப்பிலிருந்து கழன்றுக் கொள்ளும் வேலையை மார்க்சிய – லெனினிய தோழர்கள் செய்வது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். எந்த வளர்சிக்கும் பயன் தராது.

உலகைக் குலுக்கிய மார்க்சிய – லெனினியம் – மாவோவியம் இன்று நிறைய சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. இதுகுறித்து மார்க்சிய – லெனினிய தோழர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. அரபு எழுச்சி, வால் ஸ்டிரீட் போராட்டம் ஆகியவை எந்த கட்சி, அமைப்பின் தலைமையிலும், எந்த தத்துவ பின்னணி இன்றியும் நடந்ததை நாம் எப்படி விளங்கிக் கொள்ள போகிறோம். தமிழகத்திலும் மூன்று தமிழர் தூக்குத் தண்டனை, முல்லை - பெரியாறு சிக்கல் துவங்கி இன்றைய மாணவர் எழுச்சி வரை தன்னெழுச்சியாக நடந்ததே? இதன் பின்னணியில் நாங்கள் இருந்தோம் என்று சிலர் சொல்லிக் கொள்ளலாம். அனால், அந்தப் போராட்டங்கள் யார் தலைமை இன்றியும், தத்துவ பின்புலமும் இல்லாமலும்தானே நடந்தது.  உலகம் முழுவதும் ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்று இன்று தமிழகத்தில் ஆயுதப் போராட்டம் என்ற குரல்கூட ஒலிக்கவில்லையே ஏன்?

பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மீது எங்களுக்கு விமர்சனம் இல்லாமல் இல்லை. தமிழகத்தில் பாமக சாதி வெறியை கண்டித்து இயங்குவதில் அ.மார்க்ஸ், கல்யாணி போன்றவர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பது உங்கள் கண்ணிற்குப்பட வில்லையா? வரலாற்றில் மார்க்சிய – லெனினிய இயக்கங்கள் கோட்டை விட்டதை மிக எளிதாக ஒரு சிலர் மீது குற்றம் சுமத்தி தப்பிக்கப் பார்ப்பது ஆரோக்கியமான அரசியல் இல்லை.

நிலைமை இப்படியிருக்க அ.மார்க்ஸ், கல்யாணி போன்றவர்கள் ஒரு இயக்கத்தை வளர்த்தெடுக்க முடியும், ஒரு இயக்கத்தை ஒழித்துக் கட்ட முடியும் என்பது எவ்வளவு பெரிய “ஜோக்”. "கீற்று" போன்ற இணைய தளங்கள் இதுபோன்ற ஜோக்குகளை நம்பியே இருப்பது அதைவிட ஜோக்கானது.

மார்க்சிய – லெனினிய தோழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டிய தருணமிது.