Saturday, September 18, 2021

சுப்பிரமணியன் காவல் மரண வழக்கு: காவல் ஆய்வாளர் உட்பட இருவருக்குப் பிடியாணை

கடந்த 2015ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தில் வசித்து வந்த மும்தாஜ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மர்ம நபர்கள் அவரது வீட்டில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றனர்.

இவ்வழக்கில் சந்தேகத்தின் பேரில் கடந்த 29.05.2015 அன்று நள்ளிரவில் பட்டாம்பாக்கம், பி.என்.பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை நெய்வேலி நகரியப் போலீசார் பிடித்துச் சென்றனர்.

அவரை 6 நாட்கள் காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால், சுப்பிரமணியன் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 06.05.2015 அன்று சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து காவல் மரணம் என வழக்குப் பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்தார்.

பின்னர், இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் அப்போழுது காவல் ஆய்வாளராக இருந்த இராஜா, காவலர்கள் செந்தில்வேல், செளமியன் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் இ.த.ச. 218, 330, 343, 348, 304(ii) ஆகிய பிரிவுகளில் குற்றஞ்சாட்டி குற்ற அறிக்கைத் தாக்கல் செய்தனர். தற்போது இவ்வழக்கு சிதம்பரம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கு கடந்த 16.09.2021 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் செளமியன் மட்டும் ஆஜராகி உள்ளார். காவல் ஆய்வாளர் இராஜா, செந்தில்வேல் ஆஜராகவில்லை.

நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளர் இராஜா, செந்தில்வேல் ஆகியோருக்குப் பிணையில் வெளிவர முடியாத பிடியாணைப் பிறப்பித்து நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவிட்டார். மேலும், சிபிசிஐடி போலீசார் இருவரையும் பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கை கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் குழுவினர் நடத்தி வருகின்றனர். மேலும், இவ்வழக்கை அக்கட்சியின் மாநிலச் செயலர் தோழர் கே.பாலகிருஷ்ணன் நேரடியாகக் கவனித்து வருகிறார்.

இச்சம்பவம் நடந்த போது உண்மை அறியும் குழு அமைத்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளித்தோம்.

Monday, August 23, 2021

தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளை செப்டம்பர் 1 அன்று திறக்க வேண்டும்!

 

தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளை செப்டம்பர் 1 அன்று திறக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.08.2021) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு வரும் 01.09.2021 அன்று முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும் என அறிவித்துள்ளது. அதேபோல், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

ஆனால், புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. ஏற்கனவே பள்ளிகள் திறக்கும் நாள் அறிவிக்கப்பட்டு பின்னர் அதுவும் தள்ளி வைக்கப்பட்டது.

சென்ற ஜீலை 15 முதல் அரசு ஊழியர்கள் 100 விழுக்காடு பணிக்குத் திரும்ப வேண்டுமென அரசு உத்தரவிட்டது. ஆனால், அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் ஆசிரியர்களைப் பணிக்குத் திரும்ப உத்தரவிடவில்லை. இதனால், மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குதல், மாணவர் சேர்க்கைப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகளும் முறையாக அனைத்து ஆசிரியர்களும் நடத்தவில்லை. ஏழை எளிய மாணவர்கள் போதிய வசதி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடத்தாத ஆசிரியர்கள் மீதும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவர்களின் கல்விப் பாதிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் புதுச்சேரி அரசு மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறையின் செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

எனவே, தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் வரும் 01.09.2021 அன்று பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’சார்பில் வலியுறுத்துகிறோம்.

Saturday, August 14, 2021

உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.08.2021) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் போலியான பயனாளிகளைக் கண்டறிந்து நீக்கி உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே அரசு உதவித் தொகை வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் முதியோர், விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு சமூக நலத்துறை மூலம் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. புதுச்சேரி முழுவதும் ஒரு லட்சத்து 64 ஆயிரம் பேர் மேற்கண்ட திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

புதுச்சேரியில் ஏற்கனவே வழங்கப்பட்ட உதவித் தொகையில் ரூ. 500 உயர்த்தப்பட்டு 18 வயது முதல் 54 வயது வரை உள்ள விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2000, 55 வயது முதல் 59 வயது வரை உள்ள முதியோருக்கு ரூ.2000, 60 வயது முதல் 79 வயது வரை உள்ள முதியோருக்கு ரூ.2500, 80 வயதுக்கு மேலுள்ள முதியோருக்கு ரூ.3500 என உயர்த்தப்பட்ட உதவித் தொகை வழங்க தற்போதைய அரசு அரசாணை வெளியிட்டது. தற்போது உயர்த்தப்பட்ட உதவித் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், புதுச்சேரியில் முதியோர் உதவித் தொகைப் பெறும் பயனாளிகளில் சுமார் 40 சதவீதம் பேர் 55 வயது முழுமையடையாத நிலையில், வயதைத் திருத்திப் போலியான ஆதார் அட்டைகளைத் தயாரித்து சட்ட விதிகளுக்கு முரணாக உதவித் தொகைப் பெற்று வருகின்றனர். அதே போன்று தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

புதுச்சேரி அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் இதுபோன்று போலியான பயனாளிகளுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டு அரசுப் பணம் பெருமளவில் வீணடிக்கப்படுகிறது.

கடந்த கால ஆட்சிகளில் நடந்த இந்த முறைகேடுகளைத் தடுக்க முதியோர் உதவித் தொகை பெறும் அனைத்து பயனாளிகளின் வயதுச் சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டும். போலியான ஆதார் அட்டைகள் வழங்கியவர்களைக் கண்டறிந்து குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியான பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். உதவித் தொகைப் பெறும் பயனாளிகளின் ஆதார் அட்டை எண்களை இணைத்து போலியான பயனாளிகள் உதவித் தொகைப் பெறுவதைத் தடுக்க வேண்டும்.

அதேபோல், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னிகள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைப் பெறும் பயனாளிகளையும் ஆய்வு செய்து உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சமூக நலத்துறைச் செயலர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம். 

Tuesday, July 20, 2021

சேலம் முருகேசன் காவல்துறையினரால் கொலை: வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்!

சேலம் முருகேசன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து இன்று (20.07.2021) தமிழக முதலமைச்சர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:-

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி சார்பில் கடந்த 16.07.2021 அன்று சேலம் அருகேயுள்ள இடையப்பட்டி சிற்றூருக்குச் சென்று காவல்துறையால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து வந்ததின் அடிப்படையில் இக்கோரிக்கைகளைத் தாங்கள் உடனே நிறைவேற்ற வேண்டி இம்மனுவைச் சமர்ப்பிகின்றோம்.

சேலம் மாவட்டம், இடையப்பட்டி சிற்றூரைச் சேர்ந்த முருகேசன் (வயது 47) த/பெ. ஆறுமுகம் (மறைவு) என்பவர் கடந்த 22.06.2021 அன்று ஏதாப்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவரால் பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையின் போது அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டு ஏதாப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றமிழைத்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குற்றமிழைத்த காவல் அதிகாரி ஏதாப்பூர் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவ்வழக்கை அக்காவல் நிலைய காவல்துறையினர் விசாரித்தால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயமும் நீதியும் கிடைக்காது. எனவே, இவ்வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும், இக்கொலை நடந்த போது சம்பவ இடத்தில் இருந்த மூன்று காவலர்களையும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்க வேண்டும்.

தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 10 இலட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. ஆனால், பட்டப்பகலில் சீருடை அணிந்த காவல்துறையினரால் எவ்விதக் குற்றமும் செய்யாத அப்பாவி ஒருவரைக் கொலை செய்தது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மேலும், இந்திய அரசியல் சட்டப்படி இக்கொலைக்குத் தமிழக அரசுக்கு முழுப் பொறுப்பு (Vicarious liability) உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசுக் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியான அரசு வேலை வழங்க வேண்டும். கொல்லப்பட்ட முருகேசனின் மூன்று பிள்ளைகளான கல்லூரியில் முதலாண்டு பட்டப் படிப்புப் படிக்கும் ஜெயபிரியா (18), +2 படிக்கும் ஜெயபிருந்தா (17), 8ஆம் வகுப்பு படிக்கும் கவிப்பிரியன் (13) ஆகியோரது படிப்புச் செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

மனித உரிமைகளைக் காக்க வேண்டி இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

Thursday, July 15, 2021

மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்!

 

‘புதுச்சேரி வரலாற்றுப் பேரவை’ சார்பில் இக்கோரிக்கை மனுவினைத் தங்களின் மேலான பார்வைக்கும் உரிய நடவடிக்கைக்கும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் ஆடித் திங்கள் திருவாதிரையில் பிறந்தான் என்பதைக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் சான்றுகளுடன் உறுதி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இராசேந்திரசோழன் ஆளுகைக்குட்பட்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய கங்கைகொண்டசோழபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட சிற்றூர்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, சென்ற 2014ஆம் ஆண்டு இராசேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். ஊர்கூடி தேர் இழுப்பது போல் ஊர்கள் பலவற்றின் மக்கள் ஒன்றுகூடி மாமன்னன் இராசேந்திரசோழன் பெருமைகளை எடுத்துக்கூரும் வகையில் மாபெரும் விழா எடுத்து தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தனர்.

தற்போது எதிர்வரும் 05.08.2021 நாளன்று, ஆடித் திங்கள் திருவாதிரையில் மாமன்னன் இராசேந்திரசோழனின் பிறந்த நாள் வருகிறது. தொல்லியல், வரலாற்று உணர்வுகளை மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வளர்க்கவும் தமிழக அரசு சார்பில் “மாமன்னன் இராசேந்திரசோழனின் பிறந்த நாள் விழா” மிகச் சிறப்பாக நடத்த வேண்டுமென கங்கைகொண்டசோழபுரம் மற்றும் சுற்றியுள்ள சிற்றூர்புற மக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ள செய்தி அறிந்தோம்.

முடிகொண்டான், கங்கைகொண்டான், கடாரங்கொண்டான் போன்ற எண்ணற்ற விருதுகளைப் பெற்ற இராசேந்திரசோழனின் பெருமைகளை உலகறியும். கப்பற்படைக் கட்டி, கடல் கடந்து சென்று கடாரம் வென்றது தமிழனுக்கு ஆகச் சிறந்த வரலாற்றுப் பெருமையாகும். அறிவுக்கூர்மையுடன் ஆட்சிப் புரிந்த மாமன்னன் இராசேந்திரசோழன் புகழைப் போற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

புதுச்சேரிக்கும் சோழ ஆட்சிக்குமுள்ள தொடர்பு பாகூர் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. திருபுவனை அருகேயுள்ள குண்டாங்குழி மகாதேவர் ஆலயம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் சிறுவடிவம் (Miniature) என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். புதுச்சேரி அருகேயுள்ள மரக்காணம் சோழர் காலத்தில் துறைமுகமாக விளங்கியது. இராசேந்திரசோழனின் பிறந்த நாள் விழா நடத்துவது தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரிக்கும் பெருமையுடையதாகும்.

தமிழக முதலமைச்சராக இருந்த போது கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ் மாமன்னன் இராஜராஜசோழன் பெருமைகளைப் போற்றி விழா எடுத்து பெருமைப்படுத்தி வரலாற்றில் நிலைநிறுத்திக் கொண்டார். தாங்களும் இதேபோல் இராஜராஜசோழனின் மகனான இராசேந்திரசோழனின் பிறந்த நாள் விழா எடுத்து வரலாற்றில் இடம்பெற விழைகிறோம்.

எனவே, தாங்கள் இக்கோரிக்கையைப் பரிசீலித்து தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழனின் பிறந்த நாளைத் தமிழக அரசு சார்பில் அரசு விடுமுறை அளித்து மிகச் சிறப்பாகக் கொண்டாட உரிய நடவடிக்கை எடுத்திட ‘புதுச்சேரி வரலாற்றுப் பேரவை’ சார்பில் பேரன்புடன் வேண்டுகிறோம்.

இவண்,

கோ. சுகுமாரன், தலைவர், புதுச்சேரி வரலாற்றுப் பேரவை.

செயற்குழு உறுப்பினர்கள்:

முனைவர் நா. இளங்கோ, மேனாள் முதல்வர், தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி.

பொறிஞர் இரா. தேவதாசு, தமிழ் வரலாற்று ஆர்வலர்.

ஓவியர் இராஜராஜன், மேனாள் பேராசிரியர், பாரதியார் பல்கலைக்கூடம்.

இரா. சுகுமாரன், கணினித் தமிழ் ஆர்வலர்.

சின்ன. சேகர், மேனாள் ஆசிரியர்.

புதுவைத் தமிழ்நெஞ்சன், தனித்தமிழ் ஆர்வலர்.

இரா. சுகன்யா, சமூக ஆர்வலர்.

Sunday, July 11, 2021

"கொங்கு நாடு" பிரிக்கக் கோருவதன் பின்னணி என்ன?

"கொங்கு நாடு" என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழைத் திட்டித் தீர்த்து பலரும் கோவத்தை வெளிக்காட்டி உள்ளனர். இது என்ன தினமலர் நாளிதழின் சதியா? இல்லை.

இந்திய ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் "கொங்கு நாடு" என்று குறிப்பிட்டது, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டது என்ற பின்னணியோடு இச்செய்தியைப் பார்க்க வேண்டும். அதோடு, "Pushing For Kongu Nadu — BJP Backers Needle Ruling DMK With Separate State Question" என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். இதழான "Swarajyam" ஒரு குறிப்பு எழுதியுள்ளது. 

மொழிவழி மாநிலம் என்பது மகாத்மா காந்தியின் எண்ணம் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திர குகா. 1918-இல் மொழிவழி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று காந்தி கூறியுள்ளார். ஆனால், நேரு 1950 வரையில் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. முதலில் காங்கிரஸ் கமிட்டிகளை மொழிவழியில் பிரித்து அமைக்கிறார் காந்தி. அதற்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளது.  மேலும், மொழிவழி மாநிலம் அமைய அந்தந்தப் பகுதிகளில் நடந்த போராட்டங்களும் உயிர் ஈகங்களும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இதுவொரு நீண்ட வரலாறு. 

இந்திய ஒன்றியத்தைக் கூறுபோடுவது என்பது ஆர்.எஸ்.எஸ். நீண்ட காலமாக வைத்திருக்கும் திட்டம். இந்திய ஒன்றியத்தில் 74 புதிய பிரதேசங்கள் உருவாக்க வேண்டுமென்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை. இதை நோக்கியே, இந்திய ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. ஒருபுறம் காந்தியின் கொள்கையைச் சிதைப்பது. மறுபுறம் தேசிய இன அடையாளத்திற்கு அடித்தளமாக இருக்கும் மொழிவழி மாநிலங்களைக் கூறுபோடுவது. இதன் மூலம் தேசிய இன ஓர்மையைச் சிதைத்து தன் மதவாத அரசியலை நிலைநாட்டுவது. 

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் நான்கு அல்லது ஐந்து பகுதியாக பிரித்து எல்லாவற்றுக்கும் "நாடு" என்ற பெயரைச் சூட்டுவது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட காலத் திட்டம். தற்போது, இத்திட்டத்தைக் "கொங்கு நாடு" என்றிலிருந்து தொடங்க உள்ளனர். இதற்கான கருத்தியல் மோதல் (Ideological conflict) உருவாக்கவும் செய்வார்கள். இப்போழுதே, கொங்கு நாட்டிற்கு ஆதரவாக பேசுகிறவர்கள் சென்னைக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாடு அரசியல் ரீதியாக பாஜகவிற்குச் சாதகமாக இல்லாததும், தமிழர்களிடத்தில் தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்ற உணர்வு வேரூன்றி இருப்பதும் இந்தப் பிரிவினைத் திட்டத்திற்கு மூலமான காரணம்.
ஏற்கனவே, பாமக நிறுவநர் மருத்துவர் இராமதாசு வடநாடு X தென்னாடு என்ற முரணை முன்நிறுத்தி "வட தமிழ்நாடு" தனியாக பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார். சிறியவை சிறந்தது என்று தொடர்ந்து எழுதி வருகிறார். வட தமிழ்நாடு கோரிக்கைக்கு வன்னியர்கள் மத்தியில் கணிசமான ஆதரவும் உள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். அரசியலுக்குத் துணைபுரிகிறது. 

காஷ்மீர் நிலப்பரப்பை மூன்றாக பிரித்ததுடன் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 370-இன்படி வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியையும் நீக்கப்பட்டதற்குக் காஷ்மீர் தவிர்த்து இந்திய ஒன்றியத்தில் பெரும் எதிர்ப்புக் கிளம்பவில்லை என்பதில் இதுபோன்ற மாநிலங்களைக் கூறுபோடுவதில் பாஜகவினர் ஊக்கமடைந்துள்ளனர். 

பாஜக அரசியலுக்குப் பின்னால் கார்ப்பரேட் நலன் அரசியல் இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். "கொங்கு நாடு" அரசியலுக்குப் பின்னால் கார்ப்பரேட்களின் மிகப்பெரும் வலைப்பின்னல் கொண்ட கனிம வள சுரண்டலும் உள்ளது. எட்டு வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்த முடியாமல் போனதும் இப்பிரிவினை நோக்கத்திற்கு முக்கிய காரணம். இதுகுறித்து இன்னமும் ஆய்வு செய்ய வேண்டும். 

தமிழ்நாட்டு திமுக அரசு இந்தப் பிரிவினை முயற்சியை எப்படி தடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். 

Tuesday, July 06, 2021

அரசுப் பள்ளி ஆசிரியர்களை உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.07.2021) விடுத்துள்ள அறிக்கை:

அரசுப் பள்ளி ஆசிரியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசையும் கல்வித்துறையையும் வலியுறுத்துகிறோம்.

கொரோனா தொற்று இரண்டாவது அலையின் காரணமாக அரசு ஊரடங்குப் பிறப்பித்ததால் புதுச்சேரி முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் சென்ற ஜூன் 15 முதல் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பணிக்குத் திரும்ப வேண்டுமென அரசு உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர்களைப் பணிக்குத் திரும்ப அரசு இன்னமும் உத்தரவுப் பிறப்பிக்காததால் அவர்கள் விடுமுறையிலேயே உள்ளனர்.

தற்போது தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கவும், மாணவர்கள் சேர்க்கையும் நடத்தப்பட வேண்டும். அதேபோல், மாணவர்களுக்கு வாட்சாப் மூலம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் விடுமுறையில் உள்ளதால் மேற்சொன்ன பணிகளும், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரும் ஏழை எளிய மாணவர்கள்தான் கல்விப் பயில்கின்றனர். இந்நிலையில், ஆசிரியர்களைத் தொடர்ந்து விடுமுறையிலேயே இருப்பது அம்மாணவர்களின் கல்விப் பெருமளவில் பாதிக்கும்.

கொரோனா தொற்றால் மாணவர்கள் முழுக் கல்வியாண்டும் கல்விப் பயில முடியாமல் போய்விட்டது. இந்நிலையில், கொரோனா தொற்றுக் குறைந்தும் பள்ளிகள் திறக்காத சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாட்சாப் மூலமாவது வகுப்புகள் எடுப்பது ஓரளவிற்கு உதவியாக இருக்கும்.

எனவே, அரசுப் பள்ளி ஆசியர்களை உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசையும், கல்வித்துறையையும் வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், கல்வித்துறைச் செயலர், இயக்குநர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

Saturday, July 03, 2021

மதுரை மேலவளவு தியாகிகளின் நினைவிடத்தில் மலரஞ்சலி!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.07.2021) விடுத்துள்ள அறிக்கை:

மதுரை மேலூர் அருகேயுள்ள மேலவளவில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தலித்துகளின் நினைவிடத்தில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1997ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள மேலவளவில் பஞ்சாயத்து தலைவராக இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட 7 பேர் சாதி வெறியர்களால் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையிலான வழக்கறிஞர் குழு பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக இப்படுகொலை வழக்கை விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நடத்தி குற்றவாளிகள் 17 பேருக்கு ஆயுள் தண்டனைக் கிடைக்க காரணமாக இருந்தது.

வழக்கறிஞர் பொ.இரத்தினம் வழிகாட்டுதலில் செயல்படும் பெளத்த பொதுவுடைமை இயக்கம் சார்பில் மேலவளவு முருகேசன் உள்ளிட்டோர் கொல்லப்பட்ட நினைவு நாளான ஜூன் 30 அன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மேலூர் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், வட்டாட்சியர் பல்வேறு கட்சிகள், அமைப்புகளுக்கு அனுமதி அளித்தும் இந்த இயக்கத்தினருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், வழக்கறிஞர் பொ.இரத்தினம் இந்த இயக்கத்தைச் சேர்ந்த ஜெயசேகர் மூலம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலவளவு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்குமாறு உத்தரவிட கோரி வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆனந்து வெங்கடேஷ் கடந்த 01.07.2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் அஞ்சலி செலுத்த பெளத்த பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த 10 பேருக்கு அனுமதி அளிக்குமாறு மேலூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையில் மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 பேரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மேலவளவு, சென்னகரம்பட்டி, எட்டிமங்களம் ஊர்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரியில் இருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், புதுவைத் தமிழ்நெஞ்சன், இரா.சுகன்யா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலவளவு தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

Tuesday, June 22, 2021

இலங்கையில் சீனா துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.06.2021) விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை அம்பாந்தோட்டை பகுதியில் சீன அரசு துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்திய பெருங்கடலில் சூயஸ் கால்வாய் அருகேயுள்ள மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. இத்துறைமுகத்தை சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு 1.12 மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. இத்துறைமுகம் 4500 எண்ணெய் கப்பல்கள் உட்பட 36 ஆயிரம் கப்பல்களைக் கையாளும் வசதி உடையது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டியுள்ள 269 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தி, அதில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக சீனாவுக்கு வழங்கிட இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் சீனா கடற்படைத்தளம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் அமையுமானால், அது இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். சீனா இலங்கைக் கடற்பகுதியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதால் தமிழகத்திற்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இறுதிப் போரின் போது ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு சீனா இராணுவ ரீதியாக பெருமளவில் உதவியது. தற்போது தமிழகம் அருகில் சீன துறைமுகம் அமைவது தமிழகத்தின் நலனுக்கு எதிரானது.

இச்சூழலில் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட தமிழ்நாட்டின் பகுதியான கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மீனவர்களின் நலனைக் காக்கவும், தமிழ்நாட்டின் மீதான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் உதவும்.

எனவே, இலங்கை அம்பாந்தோட்டை பகுதியில் சீன அரசு துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

Friday, June 18, 2021

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.06.2021) முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து அளித்த மனு:

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கடந்த 2015ஆம் ஆண்டு தாங்கள் முதலமைச்சராக இருந்த போது உருவாக்கப்பட்டது. ஆனால், அத்துறையை செயல்படுத்த உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, அத்துறைக்கான இயக்குநர் பணியிடம் உருவாக்க அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த கோப்பிற்கு இதுவரையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு இயக்குநர் உள்ளிட்ட பணியாளர்களை நியமித்து அத்துறையை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்.

மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நியமிக்கப்படாததால் ஆணையத்தின் செயல்பாடுகள் முடங்கிப் போயுள்ளன. எனவே, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குப் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனே நியமிக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான சிறப்புக்கூறு திட்ட நிதிகள் முறையாக, ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்குச் செயல்படுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான பின்னடைவுப் பணியிடங்கள் (Backlog) அனைத்தையும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

தமிழகத்தில் அருந்ததிய இன மக்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள்ஒதுக்கீடு சட்டப்படி செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியிலும் அருந்ததிய இன மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

பழங்குடியின மலைக்குறவன், காட்டுநாயக்கன், எருகுலா, குருமன்ஸ் ஆகிய சமூகங்களைப் பட்டியலின பழங்குடியினராக அங்கீகரித்து மத்திய அரசு அரசாணை வெளியிட ஆவன செய்ய வேண்டும். வில்லியனூர் பெருமாள்புரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பழங்குடியினர் 23 குடும்பங்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும்.

முஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 2 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு வாரிய சொத்துக்களை மீட்டு அவற்றை முஸ்லிம் மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.