Wednesday, May 18, 2011

ஐ.நா. அறிக்கைப்படி இலங்கையில் நடந்த போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 18.05.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையில் நடந்த போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. சபை அறிக்கையை ஏற்று, அங்கு நடந்த போர்க் குற்றம் பற்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை 3 பேர் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இக்குழு அங்கு ஆய்வு செய்து கடந்த மார்ச் 31 அன்று தனது 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை பரிசீலித்த ஐ.நா. சபை கடந்த ஏப்ரல் 26 அன்று அதனை முறைப்படி வெளியிட்டது.

இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் மனித உரிமையில் நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் இந்த அறிக்கை அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. குறிப்பாக இலங்கை அரசு மீது 5 குற்றச்சாட்டுகளும், போராடிய இயக்கத்தின் மீது 6 குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

இலங்கை அரசு போரில் சிக்கியுள்ள பொதுமக்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் செயல்படுவோம் என உறுதி கூறியதை மீறி அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைப் பிரகடனங்களையும், சட்டங்களையும் வெளிப்படையாக மீறியுள்ளது.

செப்டம்பர் 2008 முதல் 19 மே 2009 வரையில் நடந்த போரில் வன்னிப் பகுதியில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் பொதுமக்கள் போரில் சிக்கித் தவித்துள்ளனர் என்றும், 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் எனவும் ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் மீது கொத்துக் கொத்தாக குண்டு வீசி தாக்குதல், மருத்துவமனை மீது குண்டு வீசி தாக்குதல், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மறுப்பு, போரினால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் என சந்தேகப்படுவோர் மீது மனித உரிமை மீறல்கள், போர் நடந்த பகுதிக்கு வெளியே ஊடகத் துறையினர், அரசை விமர்சித்தவர்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள் என 5 குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது ஐ.நா. சபை சுமத்தியுள்ளது.

மேலும், இந்த கொடிய போர்க் குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், போரில் உயிரிழந்தோர் உடல்களைக் கண்டுபிடித்து இறுதி சடங்கு செய்வதற்காக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும், போரினால் காணாமல் போனவர்கள் பற்றி விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும், முகாம்களில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் அவர்களது வீடுகளுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இலங்கையில் நிலவும் அவசர கால உத்தரவை திரும்ப பெற்று, அங்கு அமலிலுள்ள அடக்குமுறை சட்டங்களை சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு உட்பட்டு திருத்த வேண்டும் என பல்வேறு பரிந்துரைகளை இலங்கை அரசுக்கு கூறியுள்ளது.

ஆனால், ஐ.நா. சபையின் அறிக்கையை குப்பையில் போட்ட இலங்கை அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் நிறைவேற்ற இதுநாள்வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது உலகம் முழுவதுமுள்ள தமிழர்களைக் கவலை அடைய செய்துள்ளது. இலங்கை அரசின் இந்த போக்கை மனித உரிமையில் அக்கறை உள்ளவர்கள் கண்டிக்க வேண்டும்.

இலங்கையில் நடந்த போர்க் குற்றம் பற்றியும், அதற்கு முழுப் பொறுப்பான இலங்கை அதிபர் ராஜபட்சே மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்படவும் சர்வதேச சமுகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

Monday, May 16, 2011

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்கைக்கு மருத்துவ கவுன்சில் தடை: கண்டனம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 05.05.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், மருத்துவ கருவிகள் போதுமான அளவு இல்லாத காரணத்தை சுட்டிக்காட்டி இந்த கல்வி ஆண்டின் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு புதுச்சேரி அரசு பொறுப்பேற்பதுடன், இதுகுறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை உடனே வெளியிட வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலர், புதுவை பல்கலைக்கழகப் பதிவாளர், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் இணைச் செயலாளர் டாக்டர் தவீந்தர் குமார் 11.04.2011 தேதியிட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் 2011 – 2012 கல்வி ஆண்டிற்கான இரண்டாவது அணி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதி அளிப்பதற்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா மற்றும் போதுமான ஆசிரியர்கள் உள்ளனரா என்பது குறித்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மதிப்பீட்டுக் குழு கடந்த 2011, பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தது.

இக்குழு தாக்கல் செய்த மதிப்பீட்டு அறிக்கையை ஏற்று மருத்துவ கவுன்சிலின் ஆட்சிமன்ற குழு அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், மருத்துவ கருவிகள் போதுமான அளவு இல்லாத காரணங்களாலும், மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற குறைபாடுகள், கருத்துக்கள் அடிப்படையிலும் 2011 – 2012 கல்வி ஆண்டிற்கான இரண்டாவது அணி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் இந்த உத்தரவால் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டிற்கான 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. இதனால், அரசு மருத்துவ கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராவோம் என மாணவர்கள் கண்ட கனவு நிறைவேறாமல் தகர்ந்துள்ளது. 

மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் புதுச்சேரி அரசு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், போதிய ஆசிரியர்கள் நியமனம் போன்ற மருத்துவ கவுன்சில் சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த காரணத்தால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசு ஒதுக்கீடான 50 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களைக்கூட வழங்காமல் மாணவர்களை ஏமாற்றி வருகின்றன. தனியார் மருத்துவ கல்லூரிகளை நிர்பந்தித்து 50 சதவீத இடங்களைப் பெற அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெற வேண்டியுள்ளது. இதனால், ஏழை, எளிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க புதுச்சேரி அரசே வழிவகுத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அரசு மருத்துவ கல்லூரியை வளர்ச்சி அடைய செய்யாமல் முடக்கி, ஒரு கட்டத்தில் மூடிவிட புதுச்சேரி அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் காரைக்காலில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரி ஒன்று தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே தொடங்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரியை மேம்படுத்தவே முடியாத இவர்கள் புதிதாக மருத்துவ கல்லூரி தொடங்குவோம் எனக் கூறுவது மக்களை ஏமாற்றுவதாகும்.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக அரசு மருத்துவ கல்லுரியில் இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியை பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் மாணவர்கள், பொதுமக்களை ஒன்றுதிரட்டி அரசை எதிர்த்துப் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.

இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டி அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

காவல் மரணம்: மேட்டுப்பாளையம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு ஐ.ஜி.யிடம் மனு

மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் தாமோதரன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை தற்காலிக பணிநீக்கம் செய்யவும், கரிக்கலாம்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெகன்நாதன் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு வரும் தெற்குப் பகுதி எஸ்.பி. நந்தகோபால் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய இயக்கங்கள் சார்பில் இன்று (2.5.2011) ஐ.ஜி (பொறுப்பு) சுக்லா, டி.ஐ.ஜி. அதுல் கத்தார் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம.சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் துணைத் தலைவர் உத்தராடம், செயலாளர் மனோஜ், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தேசிய கவுன்சில் உறுப்பினர் இர.அபிமன்னன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் உ.முத்து, கான்சிராம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை செயலாளர் கஸ்பர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ. அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் மு.மதுரை, கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மேம்பாட்டு கழகத் தலைவர் அ.மஞ்சினி, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் பா.சரவணன், மக்கள் மன்றத் தலைவர் மு.நாராயணசாமி, ஈழத் தமிழர் ஆதரவு கூட்டமைப்பு பொறுப்பாளர் கலைப்புலி சங்கர், சதுப்புநில காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தலைவர் செல்வ.மணிகண்டன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர் சு.காளிதாஸ் ஆகியோர் இன்று காலையில் ஐ.ஜி (பொறுப்பு) சுக்லா, டி.ஐ.ஜி. அதுல் கத்தார் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜெயசங்கர் கொலை வழக்கு விசாரணைக்காக மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தாமோதரன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி, சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வழக்கின் முக்கிய சாட்சிகளை குற்றமிழைத்த போலீசார் மிரட்டி வருகின்றனர். எனவே, இந்த காவல் நிலைய கொலையோடு தொடர்புடைய மேட்டுப்பாளையம் காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்நாதன், அவரது குடும்பத்தினர் மீது தெற்குப் பகுதி எஸ்.பி. நந்தகோபால் உத்தரவின் பேரில் போலீசார் இதுவரையில் 6 பொய் வழக்குகள் போட்டுள்ளனர். மேலும், கடந்த ஏப்ரல் 12ந் தேதியன்று இரவு, தேர்தலுக்கு முந்தைய நாள் எஸ்.பி. நந்தகோபால் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்நாதன் வீட்டை சுற்றி வளைத்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் சட்டவிரோதமாக வீட்டுக் காவலில் வைத்தனர். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் எஸ்.பி. நந்தகோபால் வெளிப்படையாக ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட எஸ்.பி. நந்தகோபால் மற்றும் போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஐ.ஜி. (பொறுப்பு) சுக்லா, டி.ஐ.ஜி. அதுல் கத்தார் ஆகியோர் அதன்மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கட்சி, இயக்கத் தலைவர்களிடம் உறுதி அளித்தனர்.

இந்நிலையில், வரும் 4ந் தேதியன்று கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.