Saturday, November 18, 2006

மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை

மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி மரண தண்டனை ஒழிப்பை வலியுறுத்தி வருகின்றனர். இதற்குச் சான்றாக “மக்கள் கண்காணிப்பகம்“ சார்பில் வெளிவரும் “மனித உரிமைக் கங்காணி“ இதழ் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

கனடாவில் 1975-ஆம் ஆண்டு வரை மரண தண்டனை முறை இருந்தது. ஆனால், அப்போது 1 லட்சம் பேர்களுக்கு 3.09 நபர்கள் வீதம் கொலை மரணங்கள் இருந்தன. அதற்கு அடுத்த ஆண்டு அந்நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. அதன் பின்னர், 2003-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கொலை மரணங்கள் 1.73 ஆகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

2000-ஆவது ஆண்டு “நியூயார்க் டைம்ஸ்“ நடத்திய கணிப்பின்படி மரண தண்டனை ஒழிக்கப்பட்ட பகுதிகளைவிட மரண தண்டனை செயலிலிருக்கும் பகுதிகளில் 48 முதல் 101 விழுக்காடுவரை கொலை மரணங்கள் அதிகமாக உள்ளன.

அமெரிக்காவில் நடக்கும் கொலை மரணங்களின் எண்ணிக்கை மரண தண்டனை ஒழிக்கப்பட்ட ஐரோப்பாவைவிட நான்கு மடங்கு அதிகமாக உள்ளன.

1988 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா. அவையால் நடத்தப்பட்ட அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்பதையே காட்டுகின்றன.

இந்தியாவில் இதுவரையில்...

சுதந்திரத்துக்குப் பின் தூக்கிலிடப்பட்டவர்கள் : 55 பேர்.

முதன்முதலில் தூக்கிலிடப்பட்டவர் : நாதுராம் கோட்சே (காந்தியாரைச் சுட்டுக் கொன்றவர்).

கடைசியாக தூக்கிலிடப்பட்டவர் : தனஞ்சய் சாட்டர்ஜி (மேற்கு வங்கம்).

மரண தண்டனையைக் குறைக்கக் கேட்டு குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்துக் காத்திருப்பவர்கள் : 21 பேர்.

2003-ஆம் ஆண்டு சிறைத்துறைப் புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் மொத்தம் 333 கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையில் வாடுகின்றனர்.

நவம்பர் 2006 கணக்குப்படி கடந்த 9 மாதங்களில் 32 வழக்குகளில் மரண தண்டனை பெற்றவர்கள் : 56 பேர்.

Thursday, November 16, 2006

புதுச்சேரியில் மரண தண்டனை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 15-11-2006 அன்று காலை 10 மணியளவில், புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில், மரண தண்டனை ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன் தொடக்கவுரை ஆற்றினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, செம்படுகை நன்னீரகம் அமைப்பின் தலைவர் கு.இராம்மூர்த்தி, அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கச் செயலாளர் ம.சந்திரகுமார், சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில் அ.ஜோதிபிரகாசம், அ.மஞ்சினி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

மரண தண்டனை ஒழிப்பை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டன. நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பத்திரிகைகளும் ஊடகங்களும் உரிய முக்கியத்துவம் கொடுத்து ஆர்ப்பாட்ட செய்தியை வெளிப்படுத்தியுள்ளன.


• பாராளுமன்ற தாக்குதல் வழக்கில், முறையற்ற விசாரணையின் முடிவில், காஷ்மீரைச் சேர்ந்த முகமது அப்சல் குருவிற்கு வழங்கப்பட்ள்ள மரண தண்டனையைக் குறைக்க, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• அமெரிக்க வல்லரசின் “பொம்மை நீதிமன்றம்“ ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு வழங்கியுள்ள மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
• இந்திய சிறைகளில் மரண தண்டனையை எதிர்நோக்கி வாடும் 300-க்கும் மேற்பட்டவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• உலக அளவில் இதுவரையில் 128 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. இதனைப் பின்பற்றி இந்திய அரசும் மரண தண்டனையை முற்றிலுமாக நீக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டுமெனப் போராட்டம் நடத்தி வரும் இந்துத்துவ அமைப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் நடைபெற்று வரும் மரண தண்டனை ஒழிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆர்ப்பாட்டம் விளங்கியது. காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15-இல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தற்செயலான ஒன்று.

Tuesday, November 14, 2006

மரண தண்டனையைக் கண்டித்துப் போராட்டம்

இந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முகமது அப்சல் குரு, பாக்தாத் நீதிமன்றத்தால் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைக்கக் கோரி புதுச்சேரியில் போராட்டம் நடத்தப்படும் என மனித உரிமை மக்கள் இயக்க அமைப்பாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

8-11-2006 அன்று புதுச்சேரியில் செய்தியாளர் மன்றத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

மரண தண்டனை ஜனநாயகத்திற்கு எதிரானது. காட்டுமிராண்டித்தனமானது. மரண தண்டனையை ஒழிக்க இந்தியா முழுவதும் குரல் எழும்பி வருகிறது. தொடர்ச்சியானப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்ட போது தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தினோம். உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சில வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2001-இல் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முகமது அப்சலுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும், இந்த தண்டனை அநீதி என்றும் மிகப் பெரிய இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதேபோல், ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கும் முறையாக விசாரிக்கப்படவில்லை என உலக நாடுகள் கூறியுள்ளன. இறையாண்மை உள்ள நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, ஆக்கிரமித்துக் கொண்டு, பொம்மை நீதிமன்றத்தை வைத்து, சதாம் உசேனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களைக் கொலை செய்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 7-ஆம் நாளன்று அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலையொட்டி புஷ்சுக்கு ஆதரவாக அவசர அவசரமாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க வேண்டுமெனப் போராடிய போது, அதற்கு எதிராக யாரும் போராடவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதன்பேரில் நளினியின் மரண தண்டனைக் குறைக்கப்பட்டது.

இன்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும், வகுப்புவாதத்தை உருவாக்கி வாக்குகள் சேகரிக்கும் கட்சியினர், அப்சல் முசுலீம் என்பதால் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். இதன்மூலம் முசுலீம் சமுதாயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுபோன்ற செயல் சமூகத்தைப் பிளவுபடுத்தும்.

நாடாளுமன்றத்தைத் தாக்கியது கடும் குற்றச்சாட்டு. அதை முறையாக விசாரிக்க வேண்டும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். போலீஸ் கூற்றுபடி சதித் திட்டம் தீட்டிய மூன்று பேர் பாகிஸ்தானில் மகிழ்ச்சியாக உள்ளனர். யாரையாவது பிடித்து தூக்கிலிட வேண்டும் என்பதற்காக நான்கு பேரைச் சிக்க வைத்தனர். இவர்களுக்கு கீழ்நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றம் அப்சலுக்கு மட்டும் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. மற்றவர்களுக்கு தண்டனையைக் குறைத்தது. உச்சநீதிமன்றமே இந்த வழக்கில் நேரடி சாட்சி இல்லை என்றும், இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மக்கள் மத்தியில் உணர்ச்சியைத் தூண்டியுள்ளது எனக் கூறி தூக்குத் தண்டனை வழங்கலாம் என கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்ற தாக்குதல் மத்திய அரசும், உளவுத் துறையும் சேர்ந்து நடத்திய நாடகமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்சல் பழைய தீவிரவாதி. அதிலிருந்து விலகி போலீசிடம் சரணடைந்தவர். போலீசார் அவரைக் கையாளாகப் பயன்படுத்திக் கொண்டனர். அப்சல் போலீசின் கட்டளைப்படி, இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை காஷ்மீரில் இருந்து டில்லிக்கு அழைத்துச் சென்று, அவருக்கு வீடுபிடித்துக் கொடுத்துள்ளார். மேலும், போலீசின் வற்புறுத்தலின் பேரில் அந்த குற்றவாளிக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த கார்தான் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் அப்சலின் வழக்கைப் பார்க்க வேண்டும்.

எனவே, அப்சல் குரு, சதாம் உசேன் ஆகியோரின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும். இந்திய சிறைகளில் உள்ள அனைவரின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும். உலக அளவில் 128 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசும் மரண தண்டனையைக் கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியிலும் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

பேட்டியின் போது, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் துணைத் தலைவர் இர.அபிமன்னன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Monday, November 13, 2006

மரண தண்டனை ஒழிப்புக்கு வலுசேர்க்கும் நூல்

அப்சலின் மரண தண்டனையைக் குறைக்கப் போராடிக் கொண்டிருக்கும் தில்லியைச் சேர்ந்த “Society for Protection of Detenues and Prisoners Rights (SPDPR)“ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள “முகமது அப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?“ என்ற புத்தகத்தைத் தமிழில் பேராசிரியர் அ.மார்க்ஸ் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் முக்கிய பல நூல்களை வெளியிட்டுள்ள “கருப்புப் பிரதிகள்“ பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

8-11-2006 அன்று புதுச்சேரி செய்தியாளர்கள் மன்றத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, இப்புத்தகத்தை செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி வெளியிட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி பெற்றுக் கொண்டார். பேராசிரியர் அ.மார்க்ஸ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் துணைத் தலைவர் இர.அபிமன்னன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் போலீஸ் திட்டமிட்டுப் புனைந்த குற்றச்சாட்டுகள், விசாரணையில் நடைபெற்ற குளறுபடிகள், வழக்கறிஞர்கள் செய்த துரோகம், ஊடகங்கள் ஏற்படுத்திய பரபரப்பானப் பொய்க் கதைகள், குற்றஞ்சாட்டப்பட்டவரின் நியாயத்தைக் காது கொடுத்துக் கேட்காத நீதிமன்றங்கள்...என இழைக்கப்பட்ட “தொடர் அநீதி“யின் விளைவுதான் அப்சலுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை என்பதை ஆதாரத்துடன் முன் வைக்கிறது இந்நூல்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மரண தண்டனை ஒழிப்புப் போராட்டத்திற்கு இந்நூல் மேலும் வலுசேர்க்கும் என்பதில் அய்யமில்லை.

“முகமது அப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?“

முன்னுரையும் மொழிபெயர்ப்பும் : அ.மார்க்ஸ்
முதற் பதிப்பு : நவம்பர் 2006.
பக்கம் : 64. விலை : ரூ.25.00.
முகவரி : 45-அ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை, சென்னை – 600 005.
செல் : 94442 72500.
மின்னஞ்சல் : karuppu2004@rediff.com.

Tuesday, November 07, 2006

சிங்கள அரசின் பிடிவாதம்

"சிங்கள அரசின் பிடிவாதம்
அமைதிப் பேச்சு வார்த்தையை சீர்குலைக்கும்"

இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைத் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் மீண்டும் போர் வெடித்துள்ளது. யாழ்ப்பாணத்தை மற்ற பகுதிகளோடு இணைக்கும் “ஏ-9“ நெடுஞ்சாலையை திறக்க முடியாது என சிங்கள அரசு மறுத்துவிட்ட காரணத்தால் பேச்சுவார்த்தைத் தோல்வி அடைந்தது.

செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தின் மீது சிங்கள இராணுவம் குண்டு வீசியதால் 61 இளஞ்சிறார்கள் கொல்லப்பட்டனர். இந்த துயரத்தால் உலகம் வடித்த கண்ணீரின் ஈரம் காய்வதற்குள், கிளிநொச்சியிலுள்ள மருத்துவமனை மீது சிங்கள விமானப் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

2-11-2006 அன்று நடந்த இந்த தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இதுவரை வந்துள்ள தகவலின்படி அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் நடந்தபோது 1500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் இருந்துள்ளனர். சிகிச்சைப் பெற்றுவந்த பெண்கள் கைக்குழந்தைகளுடன் உயிரைக் காப்பற்றிக்கொள்ள வெளியே ஓடியுள்ளனர். தள்ளாத வயது முதிர்ந்தவர்கள் ஓட முடியாமல் சிக்கித் தவித்துள்ளனர். இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியுற்ற நோயாளிகள் பலர் மயக்கி விழுந்துள்ளனர்.

போர்வெறியின் தாகம் அடங்காமல் மேலும் தமிழர்களின் ரத்தத்தைக் குடிக்க, அங்குள்ள பள்ளிக் கூடம், கல்லூரி ஆகியவற்றின் மீதும் சிங்கள விமானப்படை குண்டு வீசி தாக்கியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் மாணவ மாணவிகளும் அடங்குவர். பதினெட்டு வயதே நிரம்பிய சண்முகரத்தினம், கிருசாந்த் இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எந்தவொரு சூழலிலும் மருத்துவமனைகள், பள்ளிகள் -கல்லூரிகள், நீர்நிலைகள், வழிபாட்டுத் தளங்கள் என மக்கள் புழக்கம் அதிகமுள்ள இடங்களின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பது போரில் பின்பற்றப்படும் மரபு. ஆனால், இதுபோன்ற எந்த மரபுகளையும் மதிக்காமல் தொடர்ந்து மனித உரிமைகளை மீறுவதையும் தமிழர்களைக் கொன்றுக் குவிப்பதையும் தனது கொள்கையாகக் கொண்டுள்ளன சிங்கள அரசும் அதன் இராணுவமும்.

இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜப்பான், நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இந்தியா வழக்கம்போல் தனது நடுநிலை கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.

நிலை இப்படியிருக்க, “வடக்கு-கிழக்கு ஆகிய தமிழர் பகுதிகளில் இன்னமும் இராணுவம் முழு அளவில் போரைத் தொடங்கவில்லை. இனி நீண்ட காலத்திற்குப் பொறுமையாக இருக்க முடியாது. தமிழர் பகுதிகளில் கடல்-வான்-தரை வழியாக பெரிய அளவில் முப்படைத் தாக்குதலை விரைவில் தொடங்குவோம்“ என இலங்கைப் பிரதமர் விக்கிரநாயகே மிரட்டல் விடுத்துள்ளார்.

கொழும்பு நகரில் நடைபெற்ற சிங்கள இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் பேசியுள்ளார். 80-களில் வெளிப்படத் தொடங்கி இன்றுவரையில் “சிங்கள இனவெறி“ போக்கோடு தமிழர்களை வேட்டையாடி வரும் இராணுவத்தினர் மத்தியில் பிரதமர் விக்கிரநாயகே இவ்வாறு பேசியுள்ளது, தமிழர்களுக்கு எதிராக சிங்கள இராணுவத்தினரைத் திட்டமிட்டுத் தூண்டிவிடும் சதியாகும்.

யாழ்ப்பாண நெடுஞ்சாலையை சிங்கள இராணுவம் மூடி வைத்துள்ளதால், அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


தற்போது அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசி ருபாய் முன்னூறுக்கும், ஓரு கிலோ உருளைக்கிழங்கு ரூபாய் முன்னூறுக்கும், ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் இருநூற்று ஐம்பதுக்கும் விற்பனை செய்யப் படுகிறது ரூபாய் இரண்டுக்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டி ஒன்றின் விலை ரூபாய் இருபதாக ஆக உயர்ந்துள்ளது இதனால் யாழ்ப்பாணத் தமிழர்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர்.


“நம் கண் முன்னே நடக்கும் இக்கொடுமையை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. யாழ்ப்பாண தீபகற்பத்தில் வசிக்கும் 6 லட்சம் ஈழத் தமிழர்களைப் பட்டினிச் சாவிலிருந்துக் காப்பாற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை கப்பல் வழியாக இந்தியா உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இராணுவம் மூடி வைத்துள்ள யாழ்ப்பாண நெடுஞ்சாலையைத் திறந்துவிடும்படி சிங்கள அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும்“ என, இந்திய அரசில் பங்கு வகிக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவநர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்.


“பசிப் பட்டினியால் வாடிப் பரிதவிக்கும் ஈழத் தமிழ் மக்களை காப்பாற்ற இந்திய அரசு உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் உடனடி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நேரடியாக் தமிழ்மக்களுக்கு அவை கிடைக்க செய்யவேண்டும்“. என ம தி.மு.க பொதுச்செயலர் வை.கோ வலியுறுத்தியுள்ளார்.

ஈழத் தமிழர்கள் மீது அக்கறைக் கொண்ட அனைவரின் கோரிக்கையும் இதுதான். ஈழத் தமிழர்களின் சிக்கலைப் பொறுத்தவரையில், உறங்குவது போல் பாசாங்கு செய்யும் இந்திய அரசு, ஈழத் தமிழர்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வெண்டும். தமிழக அரசியல் கட்சிகள் இதனை இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கியதாக இருக்க வேண்டும். சிங்கள அரசின் பிடிவாதம் இலங்கையில் அமைதியை நிலைநாட்ட உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சியை சீர்குலைக்கவே செய்யும்.