சென்ற
ஜூலை 23 அன்று,
திருவாரூர் அருகேயுள்ள கண்டிரமாணிக்கம் என்ற கிராமத்தில் ஐந்தரை அடி
உயரமுள்ள 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை ஒன்று நிலத்திற்கு
அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த கிராம மக்கள் அந்த
புத்தர் சிலையை ஊருக்கு நடுவே வைத்து சுத்தம் செய்து, எண்ணெய்
பூசி, விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதை அறிந்த
வருவாய் துறையினர் உடனடியாக அங்கு வந்து புத்தர் சிலையை எடுத்துச் செல்ல முற்பட்டனர்.
அதற்கு அந்த கிராம மக்கள் திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே நீண்ட
போராட்டத்திற்குப்பின் அச்சிலையை எடுத்துச் சென்றனர். தற்போது
அந்த சிலை திருவாரூர் தியாகராஜ சாமி கோயில் வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த
நாங்கள் (நான்,
அ.மார்க்ஸ், சிவகுருநாதன்,
அமானுஷன், காளிதாஸ்), சென்ற
ஜூலை 28 அன்று, திருவாரூர் அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டு இருந்த புத்தர் சிலையை காணச் சென்றோம். அங்கு வைக்கப்பட்டிருந்த
புத்தர் சிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். கோயில் நுழைவு வாயிலுக்கு
நேரெதிரே அருங்காட்சியகத்திற்கு அருகேயுள்ள மேடையில் சிலை தெரியாமல் இருக்க முன்புறம்
தட்டி ஒன்றை வைத்து மறைத்தும், சிலையை சிவப்புத் துணிப் போட்டு
மூடியும் வைத்திருந்தனர். அதுபற்றி அங்கிருந்த அருங்காட்சியக
பொறுப்பாளரிடம் கேட்டதற்கு, அவர் ‘கோயில்
நிர்வாகத்தினர் சிலையை இங்கு வைக்க எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அதனால் மூடி வைத்திருக்கிறோம்’ என்று கூறினார்.
பின்னர் ஓரிரு தினங்களில் அப்பகுதி காலைக்கதிர், தினமலர் நாளேடுகளில் இதுகுறித்து செய்தி வெளியானவுடன் தட்டியை அகற்றியும்,
துணியை நீக்கி புத்தர் சிலையை சுத்தப்படுத்தியும் வைத்துள்ளனர்.
இதுவொரு
புறமிருக்க சென்ற ஆகஸ்ட்
15, சுதந்திர தினத்தன்று, கண்டிரமாணிக்கம் கிராம
சபைக் கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் காளிமுத்து அவர்கள் தலைமையில் நடந்துள்ளது.
அக்கூட்டத்தில் புத்தர் சிலையை திரும்பவும் ஊருக்குக் கொண்டு வந்து வழிபட
தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர்.
கிராம
சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
25வது தீர்மானம்:
“நமது ஊரில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
அது தற்போது திருவாரூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அதை ஊருக்குக் கொண்டு வந்து தியான மண்டபம் கட்டி, அரசு விதிகளின்படி வழிபாடு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்களை அனுகி கேட்பதற்குத்
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.”
இத்தீர்மானத்தின்
நகலை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அளித்து நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர்.
கண்டிரமாணிக்கத்தின்
மக்களின் உணர்வு பெரிதும் போற்றப்பட வேண்டியது. அவ்வூரில் தற்போது யாரும் பெளத்த மதத்தைச் சார்ந்தவர்கள்
இல்லை என்றாலும், தங்கள் ஊரில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையைக்
கோயில் கட்டி வழிபட தீர்மானித்துள்ளது நெகிழ்ச்சி அளிக்கிறது.
No comments:
Post a Comment