Wednesday, October 31, 2012

டிவிட்டரில் விமர்சித்தவர் மீதான புகாரை கார்த்திக் சிதம்பரம் திரும்பப் பெற வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 30.10.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் விமர்சித்தற்காக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மீதான புகாரை கார்த்திக் சிதம்பரம் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

டிவிட்டர் வலைத்தளத்தில் வதேராவைவிட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து குவித்துள்ளதாக பதிவிடப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் அளித்த புகாரின் பேரில் சி.ஐ.டி. போலீசார் குறிஞ்சி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவி என்பவரை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008 பிரிவு 66 ஏ-இன் படி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
கார்த்திக் சிதம்பரத்தின் இந்த செயல் கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கை என்பதை சுட்டிக் காட்டுகிறோம். பொது வாழ்விலுள்ள அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு அவர் உரிய பதிலளிப்பதன் மூலம் எதிர்க்கொண்டு இருந்தால் அதுவே முதிர்ச்சியான நடவடிக்கை ஆகும். அதைவிடுத்து, அவர் போலீசை நாடியிருப்பது கண்டனத்திற்குரியது.
   
இதுபோன்ற சூழ்நிலையில் போலீசாரும் புகார் கொடுத்தவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மெற்கொண்டது தேவையற்ற (Unwanted), அளவுக்கு அதிகமான (Disproportionate) நடவடிக்கை ஆகும். புதுச்சேரி போலீசாரின் இந்த நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.
   
இதுபோன்று வழக்குப் போடுவது சுதந்திரமாக கருத்து கூற வாய்ப்புள்ள டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றை கட்டுப்படுத்தும் முயற்சி என்பதோடு, இணையத் தளங்களில் எழுதி வருபவர்களை அச்சுறுத்தும் போக்காகும்.
   
கருத்துச் சுதந்திரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ‘கருத்து’ என்ற அமைப்பை நடத்தி வந்த கார்த்திக் சிதம்பரம் தொழிலதிபர் மீதான புகாரை திருப்பப் பெற்று கருத்துரிமைக்கு வலுசேர்க்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Friday, October 26, 2012

தந்தை பெரியார் தி.க.வினர் கைதைக் கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்!


திருச்சி சீறிரங்கத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தலைமையில் கடந்த 20 அன்று ‘பிராமணாள் கபே’ பெயர் அழிப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கோவை இராமகிருட்டிணன் உட்பட 112 தோழர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, அனைவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் புதுச்சேரி தந்தை பெரியார் தி.க.வைச் சேர்ந்த வீரமோகன், ம.இளங்கோ, சுரேஷ், தீனதயாளன் மற்றும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் உட்பட 19 பேர் அடங்குவர்,

தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து தந்தை பெரியார் தி.க. சார்பில் சுதேசி பஞ்சாலை அருகில் இன்று (26.10.2012) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியர் தி.க. பொருளாளர்  பாலமுருகன் தலைமைத் தாங்கினார்.  இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), கோ.சுகுமாரன்  (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), ஜெகன்நாதன்  (மக்கள் வாழ்வுரிமை இயக்கம்), இரா.முருகானந்தம்  (மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்), பா.சக்திவேல் (மனித உரிமை கவுன்சில்), கோ.செ.சந்திரன் (சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்), எம்.ஏ.அஷ்ரப் (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்), ச.சத்தியவேல் (இந்திய ஜனநாயக கட்சி), கோ.பிரகாஷ் (தமிழர் களம்), அபுபக்கர் (இந்திய தவ்ஹுத் ஜமாத்), கே.சத்தியானந்தம் (புதுச்சேரி மக்கள் நல முன்னணி), மு.ப.நடராஜன் (தமிழர் தி.க.), கோகுல்காந்திநாத் (பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்), தந்தை பெரியார் தி.க. இளைஞர் அணிச் செயலாளர் ரவி, துணைச் செயலாளர் ராஜசேகர், மாணவரணித் தலைவர் சக்திவேல், அரியாங்குப்பம் தொகுதித் தலைவர் பாஸ்கரன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Wednesday, October 24, 2012

இந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்

வளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதானது, இன்னும் சிலர் தேடப்படுவது முதலியன குறித்து முகநூல் பக்கங்களில் நடை பெறும் விவாதம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கருத்துச் சுதந்திரம், அதன் எல்லை ஆகியன குறித்துக் காலங்காலமாக நடந்து வருகிற ஒரு விவாதத்தின் தொடர்ச்சியே இது. ஒரு இருபதாண்டுகளுக்கு முன் கற்பனை செய்து கூடப் பார்த்திராத அளவிற்குத் தொழில் நுட்ப வளர்ச்சியும் அதன் விளைவான கருத்து வெளிப்பாட்டு முறையும் பெரிய அளவு வளர்ந்துள்ள சூழலில் இன்றைய விவாதம் இன்னும் சற்று விரிந்த தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியதாக மாறியுள்ளது.

அச்சு மற்றும் இதழிய வளர்ச்சி என்பது மிகப்பெரிய ஜனநாயக மாற்றங்களில் ஒன்று என்பது யாரும் மறுக்க இயலாத ஒன்று. அதே நேரத்தில் இந்த ‘ஜனநாயக’ ஊடகங்கள் பெரு முதலாளிகளின் பிடியில் இருந்ததன் விளைவாக, இப்படி உருவான கருத்துச் சுதந்திரம் அதன் வெளிப்பாட்டிற்கு முன்னதாகவே ஒரு தணிக்கையை எதிர் கொள்ள வேண்டியதாக இருந்தது. அரசுகளின் கருத்திற்கும் பெரு முதலாளிகளின் கருத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை என்பதால் இந்தத் தணிக்கை மிகவும் சக்தி வாய்ந்ததாக செயல்பட்டு வந்தது. சமயத்தில் இத்துடன் கூடுதலாக அரசுத் தணிக்கையும் சேர்ந்து கொண்டது.

இருபத்தோராம் நூற்றாண்டின் அடையாளமாக முளைத்துள்ள சமூக வலைத் தளங்கள் இந்த முன் தணிக்கையை இன்று சாத்தியமில்லாமல் செய்துள்ளன. இந்த வலைத் தளங்களும் கூட உலகின் மிகப் பெரிய கார்பொரேட் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுபவைதான் என்ற போதிலும் இந்தப் புதிய தொழில் நுட்பம் முன்தணிக்கையைச் சாத்தியமில்லாமல் செய்துள்ளது. இது மிகப் பெரிய கருத்துச் சுதந்திர விகசிப்பிற்கு இன்று காரணமாகியுள்ளது. இதுகாறும் எழுதுவதற்குக் களம் கிடைக்காமற் போயிருந்த பலரும் தங்கள் எழுத்து முயற்சிகளை, அரசியல் வெளிப்பாடுகளை எல்லையற்ற சுதந்திரத்துடன் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய தர வர்க்கத்தின் வளர்ச்சி, இத் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் மலிவாகிப் பரவலாதல் என்பதெல்லாம் இந்தக் கருத்து விசாலிப்பில் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளன. இரண்டாண்டுகட்கு முன் அரபுலகில் ஏற்பட்ட புரட்சிகளில் இந்தப் புதிய ஊடகங்கள் வகித்த பங்கைக் கண்டபின்பு அரசுகள் விழித்துக் கொண்டன. இந்த ஊடகங்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளிலும் இவற்றைக் கடும் கண்காணிப்பிற்குள் கொண்டு வரும் முயற்சியிலும் இறங்கின. சமூக வலைத் தளங்களைச் செயல்படுத்துகிற கார்பொரேட்டுகள் என்ன இருந்தாலும் கார்பொரேட்கள் தானே. அவை ஒரு குறிப்பிட்ட அளவு எதிர்ப்புக் காட்டியபோதும் ஒரு கட்டத்திற்குப் பின் அரசு கெடுபிடிகளுக்கு வளைந்து கொடுக்க ஆரம்பித்தன.

கூடங்குளம் போராட்டத்தை ஒட்டி இன்று இந்தச் சமூக வலைத் தளங்கள் தமிழகத்தில் கடுமையாகக் கண்காணிக்கப் படுகின்றன. புதிய நபர்கள் யாரேனும் அணு உலைகளுக்கு எதிராக ஒரு பதிவை இட்டால், உடன் அவர்கள் வீட்டிற்கு உளவுத் துறையினர் படை எடுக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

சின்மயி விவகாரத்திற்குத் திரும்புவோம். இது தொடர்பான ஷோபாசக்தியின் முக நூல் பதிவு, அதில் தரப்பட்டுள்ள இணைப்புகள், ‘சவுக்கு’ இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கட்டுரை, சின்மயி வெளியிட்டுள்ள அறிக்கை, தொடர்புடைய சில ட்வீட்டர் பதிவுகள், சில தொலைக் காட்சி விவாதங்கள் ஆகியவற்றைக் காண நேரிட்டது. ஓரளவு பொறுப்புடனும் நடு நிலையுடனும் தத்தம் விவாதங்களை எல்லோரும் முன்வைத்துள்ளனர். 

சென்ற தலைமுறையைச் சேர்ந்த திரை உலக ‘செலிப்ரிட்டிகள்’ போல் பிரச்சினைக்குரிய விஷயங்களில் தலையிடுவதைக் கவனமாகத் தவிர்த்து ஒதுங்கியிராமல், இவர் வளர்ந்து வரும்போதே பல பிரச்சினைகளில் தலையிட்டுக் கருத்துச் சொல்லும் ஆர்வமிக்கவராகத் தெரிகிறது. இதுவும் கூட இந்தத் தலைமுறை உருவாகிவரும் சூழலின் விளை பொருளாக இருக்கலாம். எனினும் இவர் முன்வைக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் அவரது உயர் சாதி, உயர் மத்திய தர வர்க்கப் பின்னணியின் எல்லைகுட்பட்டதாகவே இருந்துள்ளது. மதவாதம், இட ஒதுக்கீடு முதலிய பிரச்சினைகளில் அவரது கருத்துக்கள் அடித்தள மற்றும் இடது சாரி மனநிலை உடையோரால் ஏற்க முடியாதவையாகவே இருந்துள்ளன. அந்த வகையில் மீனவர் பிரச்சினையில் அவர் நிலைபாடு என்னவாக இருந்திருக்கும் என்பதையும் நம்மால் ஊகிக்க முடிகிறது.

சவுக்கு இணையத் தளம் சரியாகவே சுட்டிக் காட்டியிருப்பதுபோல சின்மயியை ‘வென்றெடுக்கக்’ களம் இறங்கியவர்களின் நோக்கம் அரசியலாக வெளியில் தோற்றமளித்தாலும், ஒரு செலிப்ரிடி, அதுவும் பெண் செலிப்ரிடியுடனான நெருக்கம் என்பதே அவர்களின் முக்கிய லட்சியமாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் சின்மயா தன் கருத்துக்களில் பிடிவாதமாக இருந்தபோது அவர்கள், வழக்கமாக ஒரு பெண் இப்படியான சந்தர்ப்பங்களில் எப்படி எதிர் கொள்ளப் படுவாளோ, அப்படியே எதிர் கொண்டுள்ளனர். அவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட ட்வீட்கள் நமக்குக் காணக் கிடைக்கின்றன. சின்மயி சொன்னதாகச் சொல்லப்படும் விவாதத்திற்கு உரிய கருத்துக்களுக்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. சில இட்டுக் கட்டப்பட்டவையாக உள்ளன.

தன் தரப்புக் கருத்தை சின்மயி வெளிப்படுத்திய பின்பாவது அவர்கள் விட்டிருக்கலாம். அல்லது அவரும் அவரது தாயாரும் தொலை பேசி மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் வேண்டிக் கொண்ட போதிலாவது நிறுத்தியிருக்கலாம். அவர்கள் தமது சீண்டல்களைத் தொடர்ந்துள்ளனர். ஆக, சின்மயி தரப்பினர் காவல்துறையை நாடுவதற்கு எதிர்த் தரப்பினர் ஒரு நியாயத்தை வழங்கியுள்ளனர். காவல்துறை படு தீவிரமாகக் களம் இறங்கியதற்குப் பல காரணங்களை ஊகிக்க முடிகிறது. சின்மயியைக் குற்றம் சாட்டுபவர்கள் சொல்வதுபோல அவர் தரப்பில் செய்யப்பட்ட ‘லாபி’, அவரது செலிப்ரிடி அந்தஸ்து, சின்மயியுடன் சேர்த்து முதலமைச்சர் ஜெயலலிதாவையும் ட்வீட்டியவர்கள் அசிங்கமாக எழுதியது…

பொது வெளிக்கு வரக்கூடிய பெண்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் சமூக வலைத் தளங்களில் பங்கேற்கும் பெண்களும் சந்தித்துக் கொண்டிருப்பதை இவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்போர் உணர முடியும். பாதிக்கப்படும் சிலர் இதை வெளிப்படையாகச் சொல்லி விடுகின்றனர். பலர் இதைச் சொல்வதில்லை. வெளிப்படையான பாலியல் வக்கிரங்களோடு துன்புறுத்துவோர், தமது அரசியல் கறார்த் தன்மை அல்லது ‘புரட்சி’த் தன்மையில் ஒளிந்து கொண்டு துன்புறுத்துவோர் என இவர்களில் குறைந்தபட்சம் இரு ரகங்கள் உண்டு. இன்றைய பிரச்சினையில் சின்மயிக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளவர்கள் பெண்களுக்கு எதிரான இந்தச் சூழலைக் கவனத்தில் இருத்தத் தவறக்கூடாது. 

சின்மயிக்கு எதிராக இன்று முன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்று, அவர் ஆபாச நடனக் காட்சிகளுக்குப் பாட்டிசைக்கவில்லையா? அவர் ஆபாசப் பாடல் வரிகளைப் பாடவில்லையா என்பது. இது மிகவும் மோசமான ஒரு விவாதம். தாம் வன்புணர்ச்சி செய்யப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டும்போது நமது ஆணாதிக்கக் கலாச்சாரம் வழக்கமாகச் சொல்லும், ”அவள் என்ன யோக்கியம்? அவள் நடத்தை தவறியவள் தானே?” என்கிற எதிர்க் குற்றச் சாட்டுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? அவள் மீனவர் பிரச்சினையில் தவறாகப் பேசினாள், விளம்பரத்திற்காகப் புகார் கொடுத்தாள் என்றெல்லாம் சொல்வதும் இத்தகையதே. அவரது தவறான கருத்துக்களை எதிர்த்து நாம் கருத்துப் போராட்டம்தான் செய்திருக்க வேண்டுமே ஒழிய அதற்காக மிரட்டுவது, அசிங்கமாக எழுதுவது என்பதெல்லாம் எப்படிச் சரியாகும்?

முன்தணிக்கை சாத்தியமில்லாத இந்த ஊடகத்தில் பங்கு பெறும் நமக்கு அதிகப் பொறுப்புணர்ச்சி வேண்டும். என்ன வேண்டுமானலும் அவதூறுகளை அள்ளி வீசுவது, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கக்குவது, பெண்களாயின் அவர்களின் ஒழுக்கத்தைப் பொது வெளியில் கேள்விக்குள்ளாக்குவது, இவற்றை எப்படி நியாயப்படுத்த இயலும்?

புகார் கொடுப்பதன் மூலம் கருத்துச் சுதந்திரதிற்கு ஆப்பு வைக்கப் படுகிறது என்பது சின்மயி எதிர்ப்பாளர்களின் இன்னொரு விவாதம். ஒரு பெண்ணை இப்படித் தாக்கி அவளை வாய்மூட வைப்பதும். சமூக வலைத் தளத்திலிருந்து ஓடவைப்பதும் மட்டும் கருத்துச் சுதந்திரப் பறிப்பு இல்லையா? சுப்பிரமணிய சாமி ட்வீட்டரில் சோனியாகாந்தியை ‘விஷக் கன்னி’ எனச் சொல்வதை சோனியா தாங்கிக் கொள்ளவில்லையா, பொது வெளிக்கு வந்த நீயும் ஏன் சும்மா இருக்கக் கூடாது? என்பது இன்னொரு விவாதம். ஒரு முழு நேர அரசியல்வாதியைப் பார்த்து ‘விஷக் கன்னி’ அல்லது ‘அமெரிக்க அடிவருடி’ எனச் சொல்வதற்கும் வலைத் தளத்தில் எழுதத் தொடங்கியுள்ள ஒரு பெண்ணைப்பார்த்து, “நீ வேசி” எனச் சொல்வதற்கும் வேறுபாடுகள் உண்டு. ஒருவரது நேர்மை குறித்துப் பொய்க் குற்றச் சாட்டுகள் வைப்பது, அவரது அனுமதியின்றி அவரது படங்களை இழிவு செய்யும் நோக்குடன் வெளியிடுவது எல்லாமும் இத்தகையதே. இணையத் தளத்தில் எழுத வந்தவர்களுக்கு அற உணர்வு சார்ந்த சுய தணிக்கை தேவை. அரசியல் கறார்த் தன்மை, கொள்கை உறுதிப்பாடு முதலான எதன் பெயராலும் இந்த அற உணர்வை இழக்கலாகாது.

எள்ளளவும் இது குறித்துக் கவலைப்படாமல் எதை வேண்டுமானலும் எழுதுவது, பின் இதுபோலப் பிரச்சினையை எதிர் கொள்ள நேர்ந்தால் பம்மிப் பின் வாங்குவது என்பது வழக்கமாகிவிட்டது.

சின்மயிக்கு ஒரு வார்த்தை. பொதுக் களத்திற்கு வரும்போது பல மாதிரியானவர்களையும் சந்திக்க நேரும். இன்று இந்தப் பிரச்சினை பெரிய அளவில் பேசப்பட்டுவிட்டது. உங்களைத் துன்புறுத்தியவர்களுக்கு இதுவே போதிய தண்டனை. உங்கள் புகாரை இந்தக் கணத்தில் நீங்கள் திரும்பப் பெறுவது ஒரு நல்ல முடிவாக இருக்கும்.

இந்தப் புகாரின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையில் அவ்வளவாகத் தொடர்பில்லாத சிலரை சின்மயி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தொல்லை செய்வதாக நேற்று காலை ஒரு நண்பர் கூறினார். அது உண்மையாயின் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று இது. ஏற்கனவே பெண்கள் கொடுத்துள்ள 19 புகார்களில் ஒன்றும் நடவடிக்கை இல்லாதபோது, இதில் மட்டும் ஏன் இந்தத் தீவிரம் என்கிற கேள்விக்கே பதிலளிக்க இயலாத காவல்துறை இத்தகைய அத்துமீறல்களை, அவை உண்மையாயின் கைவிட வேண்டும்.

பார்க்க:

1. சின்மயியிடம் சில கேள்விகள்

 2. சின்மயி செய்தது சரியா? – பி.பி.சி. தமிழ்

3. ஷோபா சக்தி

4. ட்விட்டர்ஸ் கைது (ராஜன் லீக்ஸ்) - சொல்லும் பாடம் என்ன?

5. சின்மயி - சவுக்கு

6. இணையத் தளத் தணிக்கை சரியா? சாத்தியமா? ஒரு குறிப்பு - அ.மார்க்ஸ்

Tuesday, October 23, 2012

குறைந்த மதிப்பெண் எடுத்ததைக் காரணம் காட்டி கல்விக் கடன் மறுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!


வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, கர்நாடகா, கோலார் மாவட்டத்திலுள்ள நூரி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ரூ. 3.15 லட்சம் கல்விக் கடன் வேண்டி பஞ்சாப் நேஷனல் வங்கியில் விண்ணப்பம் செய்துள்ளார். அந்த வங்கி அவர் பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளதைக் காரணம் காட்டி அவருக்கு கல்விக் கடன் வழங்காமல் மறுத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் 'பள்ளிக்கூடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளதைக் காரணம் காட்டி வங்கி கல்விக்கடன் வழங்க மறுக்கக் கூடாது. இதுகுறித்த வங்கியின் சுற்றறிக்கையில் எங்கும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கடன் வழங்கக் கூடாது எனக் குறிப்பிடப்படவில்லை.

மத்திய அரசு பொருளாதாரத்தில் பலவீனமானவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ரூ. 4 லட்சம் வரை வழங்கப்படும் கடன்களுக்கு முன்றாவது நபரின் கேரன்டி தேவையில்லை. எனவே, அந்த வங்கி கல்விக் கடனை நான்கு வாரத்திற்குள் வழங்க வேண்டும்' எனத் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால், நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் 'அம்பேத்கர் மெட்ரிகுலேஷன் தேர்வில் 750க்கு 287 மதிப்பெண் தான் எடுத்துள்ளார். அதனால்தான் அவருடைய படிப்பிற்கு பரோடா மன்னர் பொறுப்பேற்றுக் கொண்டார்' எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு!

Monday, October 15, 2012

சிறையிலுள்ள மாவோயிஸ்டுகள் இனி “அரசியல் கைதிகள்” - கோ.சுகுமாரன்


ஆயுதம் தயாரித்த வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் இருக்கும் 9 மாவோயிஸ்டுகளை அரசியல் கைதிகள் என வரையறுத்து, அவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க கொல்கத்தா அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தெரிவித்த எதிர்ப்பை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 8 அன்று வழங்கிய தீர்ப்பொன்றில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்களில் ஒருவரான சத்திரதார் மகதோ மற்றும் 7 மாவோயிஸ்டுகளை அரசியல் கைதிகள் எனக் கூறியுள்ளதை அமர்வு நீதிமன்றம் சுட்டிக்காட்டி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

இதன்படி சிறையில் அரசியல் கைதிகளுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் இவர்களுக்கு வழங்கப்படும். அதாவது தனி அறை, வீட்டுச் சாப்பாடு, செய்தித்தாள்கள், புத்தகங்கள், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை முன்பைவிட சுதந்திரமாக சந்தித்தல் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். 

West Bengal Correctional Services Act 1992 என்ற சட்டப்படி அரசியல் கைதிகள் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் குற்றங்கள் செய்தவர்கள் குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூட அரசியல் கைதிகள் என இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிறையிலுள்ள மாவோயிஸ்டுகள் தங்களை அரசியல் கைதிகளாக கருத வேண்டி நீண்ட காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மனித உரிமை ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இது, கொல்கத்தா நீதிமன்ற தீர்ப்பால் நடைமுறைக்கு வந்துள்ளது. 

மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளைத் தீவிரவாதம், பயங்கரவாதம் என முத்திரை குத்தும் போக்கிற்கு இந்த தீர்ப்பு பெருத்த அடியாக அமைந்துள்ளது எனக் கூறி மாவோயிஸ்டுகள் தங்களுக்குக் கிடைத்த வெற்றி என இத்தீர்ப்பை வரவேற்றுள்ளனர். 

இத்தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இந்தியாவெங்கும் மாவோயிஸ்டுகள் சலுகைகளை கேட்பார்கள் என இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.