மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 08-12-2006 அன்று புதுச்சேரியில் வெளியிட்ட அறிக்கை:
தமிழர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கப் பாடுபட்ட தந்தை பெரியாரின் சிலையைத் திட்டமிட்டுச் சேதப்படுத்திய இந்துத்துவ சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறேன்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்த பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இச்செயலைச் செய்தவர்கள் காட்டுமிராண்டிகளாகவே கருத வேண்டியுள்ளது.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி கிடைத்திட வழிவகுத்தவர் பெரியார். இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட போதெல்லாம் வடஇந்தியாவில் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், தமிழகத்தில் ஒருசிறு சலனம்கூட ஏற்படவில்லை. இது பெரியாரின் உழைப்புக்கு கிடைத்த பலன் என இந்தியாவே வியந்தது. தற்போது வடஇந்தியா முழுவதும் பெரியாரின் கருத்துக்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
மதவெறியைத் தூண்டி அரசியல் லாபம் தேடும் இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முடியாமல் போனதற்குக் காரணம் பெரியார். இந்துத்துவ சக்திகளின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரே தலைவர் பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாத்திகரான பெரியார் ஆத்திகர்களை மதிக்கத் தவறியதில்லை. குன்றக்குடி அடிகளாரோடு அவர் கொண்டிருந்த நட்பே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த வரலாற்று உண்மைகளை அறியாமல் இந்துத்துவ சக்திகள் இக்கொடூர செயலைச் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்துத்துவ சத்திகளின் தாக்குதல் பெரியார் கொள்கையின்மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். பெரியாரின் கொள்கையைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதே இதற்குப் பதிலடியாக அமையும். மானமும் அறிவும் மனிதற்கு அழகு என்று பெரியார் கூறியுள்ளதை இந்துத்துவ சக்திகளுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.