Tuesday, February 03, 2009

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்றது!



சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் செயல் அதிகாரியை அரசு நியமித்தது சரிதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (02.02.2009) உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரவோடு இரவாக கோயில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது.

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு ஊழல், முறைகேடு, சட்டவிரோத செயல்கள் நடந்ததையொட்டி, கடந்த 1987ஆம் ஆண்டு தமிழக அரசு அக்கோயிலை அரசுக் கட்டுபாட்டில் கொண்டுவர செயல் அதிகாரி ஒருவரை நியமித்தது. இதை எதிர்த்து, கோயில் நிர்வாக செயலாளர் பொன் தீட்சிதர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதிகாரி நியமனத்திற்குத் தடை உத்தரவு பெற்றார்.

இந்த தடையை நீக்கக் கோரி அரசு தரப்பிலும், நெடும் போராட்டத்தை நடத்தி நடராஜர் கோயிலில் தேவாரம் பாடி வரும் சிவனடியார் ஆறுமுகசாமி தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி முன் கடந்த 22.01.2009 அன்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் குமார், அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமசாமி, அரசு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன், சிவனடியார் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, வழக்கறிஞர் சிவப்பிரகாசம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இந்த வழக்கில் நீதிபதி ஆர்.பானுமதி நேற்று உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில் நீதிபதி கூறி இருப்பதாவது:

'சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் சரியாக வைக்கப்படவில்லை என்பதும், கோயில் நகைகள் நிறைய காணாமல் போய் உள்ளது எனவும் தெரிகிறது.

இந்து அறநிலையத் துறை சட்டப்படி ஒரு கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக அரசுக்கு தகவல் வந்தால், செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதன்படி, செயல் அதிகாரியை அரசு நியமித்துள்ளது.
தீட்சிதர்கள் கணக்கு வழக்குகளை முறையாக கவனிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளின்படி, கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடந்தால் செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, செயல் அதிகாரியை நியமித்த அரசு உத்தரவு சரிதான். மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இந்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் தாக்கல் செய்த மனுவை இந்து அறநிலையத்துறை ஆணையர் விசாரித்து தள்ளுபடி செய்தது சரியானதுதான். கோயிலில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இதை முறையாக நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அரசு கருதுவது சரியானது. எனவே, கோயிலை நிர்வகிக்க இந்து அறநிலையத் துறை ஆணையர் ஒரு வாரத்தில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் கோயிலை நிர்வாகம் செய்ய தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி பானுமதி உத்தரவில் கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, விழுப்புரம் இணை ஆணையர் திருமகளுக்கு பேக்ஸ் மூலம் நேற்று இரவு நடராஜர் கோயிலை அரசு ஏற்பது குறித்து கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட இணை ஆணையர் திருமகள் கடலூர் உதவி ஆணையர் ஜெகன்நாதன், செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், சிதம்பரம் ஏஎஸ்பி நரேந்திர நாயர் ஆகியோருடன் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயிலில் ஆலோசனை நடத்தினார். அப்போது சிதம்பரம் கோட்டாட்சியர் ராமலிங்கம், வட்டாச்சியர் தனவந்த கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சுமார் 15 நிமிடம் நடந்த ஆலோனைக்குப் பிறகு அனைவரும் நடராஜர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்த தீட்சிதர்களிடம் கடித நகலை கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்களின் வழக்கறிஞர் சிவக்குமார், “நீதிமன்ற உத்தரவு வேண்டும். இணை ஆணையரின் கடிதத்தை ஏற்க முடியாது” என்று கூறினார். தீட்சீதர்களும் வாக்குவாதம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து “நாங்கள் தீர்ப்பு நகலை வழங்கவில்லை. கடிதத்தின் நகலைத்தான் கொடுக்கிறோம்” என்று அதிகாரிகள் கையெழுத்திட்டு கடிதத்தை கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருமகள் கூறுகையில், “நடராஜர் கோயில் செயல் அலுவலராக தில்லை காளியம்மன் கோயில் பொறுப்பை வகிக்கும் கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கம் போல் பூஜை நடைபெறும். தேவாரம், திருவாசகம் தொடர்ந்து பாடப்படும். அரசு என்ன உத்தரவிட்டுள்ளதோ அதன்படி எல்லாம் நடைபெறும்” என்றார்.

செயல் அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டது குறித்த அறிவிப்பு நோட்டீசை பொது தீட்சிதர்கள் செயலக அலுவலக நோட்டீசை போர்டில் அதிகாரிகள் நேற்று இரவு ஒட்டினர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததன் மூலம், பல ஆண்டுக் கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது தமிழ் ஆர்வலர்களுக்கும், பொது மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் லீலைகள் – சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை!

2 comments:

Anonymous said...

இதுக்காக மக்கள் கலை இலக்கிய கழகம், மனித உரிமை பாதுகாப்பு கழகம் போன்றவை பாடுபட்டன என்று அவர்கள் சொல்லுகிறார்களே? இந்த பதிவில் அப்படி ஒன்றும் இல்லையே?

எது உண்மை என்று தெரியவில்லை

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அனானிக்கு,

இது குறித்து என் முந்தயைப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

மக்கள் கலை இலக்கியக் கழகம், மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கம் (HRPC)ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் சிதம்பரத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இதற்காக போராடியது குறிப்பிடத்தக்கது.

இதுதான் உண்மை..