Sunday, September 09, 2007

பொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி


ஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. மக்களுக்கு ஜனநாயகத்தின் தூண்கள் மீதான நம்பிக்கையைக் குலைத்துவிடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் அருகேயுள்ள உப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சுஜாதா. 12 வயது. 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. அதே பள்ளியில் படிக்கும் கார்மேகம் என்ற மாணவன் சுஜாதா மீது காதல் (?) கொண்டு, அவரை 6.4.1997 அன்று கடத்திச் சென்றுள்ளான். இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருச்சியிலுள்ள தன் நண்பர் வீட்டில் 18 நாட்கள் தங்கிய இருவரும், பின்னர் புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளனர். அங்கு யாருடைய ஆதரவும் இல்லாததால், ஒரு நாள் இரவு முழுவதும் இரயில் நிலையத்தில் தங்கியுள்ளனர். அப்போது, சுஜாதாவை அங்கேயே விட்டுவிட்டு கார்மேகம் தப்பிச் சென்றுள்ளார். அதன்பின் சுஜாதா என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இதனிடையே, சுஜாதாவின் தந்தை சேவகன் தொண்டி காவல் நிலையத்தில் தன் மகள் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அப்புகார் மீது 26.4.1997 அன்று முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, போலிசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பின்னர், புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகியோர் மீது சுஜாதாவை பாலியல் வன்கொடுமைச் செய்து, கொலைச் செய்ததாகவும், கார்மேகம் கடத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில், கிருஷ்ணமூர்த்தி ஆட்டோ ஓட்டுநர். அவரது தந்தை ஒரு முன்னாள் இராணுவ வீரர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, கிருஷ்ணமூர்த்தியை 24.01.1998 அன்று போலிசார் அழைத்துச் சென்றுள்ளனர். தொண்டி காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன், காவல் ஆய்வாளர்கள் மாதவன், பாஸ்கரன் உள்ளிட்ட போலிசாரால் பல நாட்கள் சட்ட விரோதக் காவலில் வைத்து, கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவரைத் தலைக்கீழாகத் தொங்கவிட்டு அடித்துள்ளனர். இதனால் அவரது வலது முட்டி எலும்பு முறிந்துள்ளது. பின், அவரிடம் சுஜாதாவைக் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலைச் செய்து, உடலை சுடுகாட்டில் எரித்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும், சுஜாதாவின் உடலை எரிக்க கொண்டு சென்ற 5 லிட்டர் பிளாஸ்டிக் பெட்ரோல் கேன் ஒன்றையும் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர், கிருஷ்ணமூர்த்தியை திருவாடனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை நடுவண் சிறையில் அடைத்துள்ளனர். 90 நாட்களுக்கு மேல் சிறையிலிருந்த அவர் பின்னர் பிணையில் வெளியே வந்துள்ளார். இதே வழக்கில் சென்னையில் மீன் வியாபாரம் செய்துகொண்டிருந்த பழனியை ஒன்றரை ஆண்டு கழித்துப் போலிசார் கைது செய்தனர்.

மேலும், கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன் இராமச்சந்திரனையும் போலிசார் கடுமையாக சித்தரவதை செய்துள்ளனர். அவரையும் தலைகீழாகத் தொங்கவிட்டு உடம்பெல்லாம் அடித்துள்ளனர். 10 நாட்கள் கழித்து அவரைப் போலிசார் வெளியே விட்டுள்ளனர். வெளியேவந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளார். இவர் புதுக்கோட்டையிலுள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இதுபோல, சட்டவிரோதக் காவலில் பலரையும் வைத்து போலிசார் விசாரித்துள்ளனர்.

இதனிடையே, போலிசாரின் இந்த நடவடிக்கை மீது நம்பிக்கை இழந்த சேவகன், தன் மகள் காணாமல் போனது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்ப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்தமனுவை விசாரித்த நீதிமன்றம், 26.06.1998 அன்று சுஜாதா காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாராணைக்கு மாற்றி உத்திரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. போலிசாரும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், தொண்டி போலிசார் வழியிலேயே வழக்கைக் கொண்டு சென்றுள்ளனர். கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகியோர் மீது சுஜாதாவைக் பாலியல் வன்கொடுமைச் செய்து கொலைச் செய்ததாககவும், கார்மேகம் கடத்தியதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டு காலமாக நடந்து வருகிறது.

வழக்குச் செலவுக்காக கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான இரண்டு வீட்டு மனைகளை ரூபாய் 2 இலட்சத்து 75 ஆயிரத்திற்கும், விவசாய நிலத்தை ரூபாய் 50 ஆயிரத்திற்கும் விற்றுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை முடியும் நிலையில் 11.10.2006 அன்று மதுரை நீதிமன்றத்தில், தீடீரென தன் கணவர் மற்றும் கைக் குழந்தையுடன் ஆஜரானார் காவல்துறையால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட சுஜாதா. காவல்துறையினரும், நீதித்துறையினரும் வெட்கித் தலைகுனிந்தனர்.

அப்பாவிகளான கிருஷ்ணமூர்த்தியும் பழனியும் போலிசின் அலட்சியத்தால் குற்றவாளிகளாக்கப்பட்டு, 9 ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைந்ததோடு, ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக பழியையும் சுமந்துள்ளனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நவம்பர் 2006-இல் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகியோரை சட்ட விரோதக் காவலில் சித்திரவதை செய்து, பொய் வழக்குப் போட்ட போலிசார் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு 22-08-2007 அன்று நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனித உரிமைக்காகப் பாடுபடும் மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், சகாய பிலோமின்ராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆஜராகி வாதாடினர். சுஜாதா தன் குழந்தையுடன் ஆஜரானார்.

அப்போது அரசு வழக்கறிஞர் “இந்தப் பெண் சுஜாதா அல்ல, இந்தப் பெண் நாடகமாடுகிறார்'' என்று தெரிவித்தார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, “இவர் உங்கள் மகள் என்று எப்படி உறுதி செய்தீர்கள்“ என்று சுஜாதாவின் தந்தை சேவகனிடம் கேட்டார். “என் மகளுக்கு மாடு முட்டி காயம் இருக்கும் அதை வைத்து கண்டுபிடித்தேன்“ என்றார். பிறகு இந்த வழக்கை விசாரித்த ஆய்வாளர் மாதவனிடம் (தற்போது காவல் துணைக் கண்காணிப்பாளர்) “இவர் சுஜாதா என்று எப்படி உறுதி செய்தீர்கள்“ என்று நீதிபதி கேட்டார். அதற்கு அவர் “விசாரணையில் இந்தப் பெண் சுஜாதா என்று உறுதியானது“ என்று தெரிவித்தார். பின்பு சுஜாதாவிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டார். சுஜாதா நடந்த சம்பவத்தை விளக்கியதோடு, “புதுக்கோட்டையில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தேன். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இரண்டு பேருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது“ என்று கூறினார்.

இறுதியில் நீதிபதி ராஜசூர்யா, “இந்தப் பெண் சுஜாதாதானா என்பதை உறுதி செய்ய மரபணு சோதனை நடத்திட வேண்டும். அந்த அறிக்கையை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்“ என உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி “இந்த வழக்கால் எங்கள் குடும்பமே பாதிக்கப்பட்டது. வழக்குக்குப் பல ஆயிரம் செலவு செய்திருக்கிறோம். எங்களுடைய சொத்தெல்லாம் விற்றோம். 9 ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைந்திருக்கிறேன். இதையெல்லாம்விட அப்பாவியான என்னை, ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலிசும், இந்த சமுதாயமும் குற்றம் சுமத்தியதைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பதால் இந்த உலகமே இதை நம்பியது. ஆட்டோ ஓட்டுநர் அனைவரும் குற்றவாளிகளா?“ என்று முகத்தில் அறைந்ததுபோல் கேட்டார்.

எந்த தவறும் செய்யாத கிருஷ்ணமூர்த்தியும் பழனியும் தங்கள் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கவும், நீதிக்காகவும் வானுயர்ந்து நிற்கும் மதுரை உயர்நீதிமன்ற நெடிய படிகளை இன்றும் ஏறிக் கொண்டிருக்கின்றனர்...

''உரியதை நிரூபிக்க
அன்று எவ்வளவோ
மன்றாடிய என் சொற்கள்
இறுதியில் தன்
உதிரத்தை இழந்தது

அன்று என் சொற்கள்
மெளனமாக இருந்திருக்கலாம்''

- மெய்யருள்

5 comments:

மாசிலா said...

மிகுந்த வேதனையளிக்கும் நிகழ்வு.

கிருஷ்ணமூர்த்தியும், பழனியும் விரைவில் நீதி கிடைக்கப்பெற்று அமைதியான வாழ்க்கைக்கு திரும்புவர் என நம்புவோம்.

மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே இப்படி செய்தால், பாவம் எளிய மக்கள் எங்கு போய் முறையிடுவார்கள்?
:-(

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கோ.சுகுமாரன்.

Anonymous said...

:(

Anonymous said...

என்ன கொடுமை இது. இதுபோன்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வுதான் என்ன?

மக்கள் சட்டம் said...

இது போன்ற பிரசினைகள் நாளை நமக்கும் வரலாம் என்ற பொறுப்புடன் இது போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக உரத்து குரல் கொடுப்பதே உரிய தீர்வாகும்.

இதை விடுத்து பின்னூட்டத்தில்கூட பெயரை வெளிப்படுத்த விரும்பாமல் ஒளிந்து கொள்வது மனித உரிமைகளை மீறுபவர்களை ஆதரிப்பது போலாகும்.

-சுந்தரராஜன்

மக்கள் சட்டம் said...

காவல் சித்ரவதைகள் குறித்த மற்றொரு பதிவை படிக்க:
http://makkal-sattam.blogspot.com/2007/07/blog-post.html

-சுந்தரராஜன்