இந்நிகழ்வுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.
இதற்கு கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர் ஒவியர். இரா.இராஜராஜன், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவநர் சீ.சு.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன் தொடக்கவுரை ஆற்றினார்.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி படத்தைத் திறப்பு வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
இதில், சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் கோ.செ.சந்திரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா. அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மாவட்டச் செயலர் ஐ.முகம்மது சலீம், புதுவை கிறிஸ்துவர் கூட்டமைப்பின் தலைவர் சாமி ஆரோக்கியசாமி, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், பெற்றோர், ஆசிரியர்,மாணவர் நலச் சங்கத் தலைவர் மு.நாராயணசாமி, புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் பா. சரவணன் செயலாளர் பா.சரவணன், ஆகியோர் கலந்துக் கொண்டு நினைவேந்தல் உரையாற்றினர்.
முடிவில் தம்பு. சுப்ரமணியின் மகனும், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினருமான சு. காளிதாஸ் நன்றி கூற நிகழ்வு முடிவு பெற்றது.;
தம்பு.சுப்ரமணி ( 20-11-1933 - 13-01-2011 )
புதுச்சேரி உப்பளம் நேத்தாஜி நகர் 2-ல் வாழ்ந்து வந்த திராவிட இயக்க சுயமரியாதை வீரர் திரு. தம்பு. சுப்ரமணி அவர்கள் சென்ற 13-01-2011 அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைவுற்றார். இவர் உப்பளம் பகுதி மக்களால் குரு என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.
இளம் பருவத்தில் தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் மீது பற்றுக் கொண்டு இறுதிநாள் வரையில் கொள்கை மாறாமல் வாழ்ந்தவர்.
அப்போதைய திராவிடர் கழகத் தலைவர்களான பாரதிதாசன், ம. நோயேல், புதுவைச் சிவம், ஏத்துவால் ரங்கசாமி, ப. கனகலிங்கம், அவுக்கா பெருமாள், சாமிநாதன் ஆகியோரோடு நெருங்கிப் பழகி பகுத்தறிவுப் பணியாற்றியவர். அப்போதைய புதுச்சேரி திராவிடர் கழகம் தீண்டாமைக்கு எதிராகப் போராடிய வரலாறு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கோயில் நுழைவுப் போராட்டம், மாதா கோயிலில் நடுக்கட்டை உடைப்புப் போராட்டம் போன்றவை ஒடுக்கப்பட்ட மக்கçள எழுச்சிப் பெற செய்தது.
உப்பளத்தில் உருவாக்கப்பட்ட தன்மதிப்புக் கழகத்தில் இணைந்து பணியாற்றியவர். 1955-ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள அழைத்து வந்து, எத்துவால் துய் மெர்த்தேன் திடலில் (தற்போது பெரியார் போக்குவரத்து கழகப் பணிமனை) தன்மதிப்புக் கழகம் திருவள்ளுவர் விழாவை நடத்தியது. அப்போது ஈஸ்வரன் கோயில் வீதியில் இருந்த விடுதியில் தங்கியிருந்த தந்தை பெரியாரை சந்தித்து உரையாடிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர். திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர் பகுத்தறிவு ஏடு, விடுதலை நாளிதழ் போன்றவற்றின் தீவிர வாசகராக இருந்தார்.
தன்மதிப்புக் கழகத் தோழர்கள் எத்துவால் ரங்கசாமி, தூய்ழான் தர்மசிவம், இராமகிருட்டிணன், எழிலன், பெரம்புக்கடை பெருமாள், தொல்காப்பியர், மாணிக்கவேல் சகேர் போன்றவர்களோடு இணைந்து பகுத்தறிவு கருத்துக்களைப் பரப்பியவர்.
மூலிகை மருத்துவத்திலும் புலமைப் பெற்று விளங்கியவர். நாய் கடிக்கு இவர் கொடுத்த மருந்தால் பலர் உயிர் பிழைத்ததை அப்பகுதி மக்கள் இன்றும் நினைவு கூர்கின்றனர்.
இவருக்கு மனைவி அஞ்சலை, காளிதாஸ், கார்த்திகேயன் ஆகிய மகன்களும், விமலா, விஜயா, வினோலியா ஆகிய மகள்களும் உள்ளனர். இதில் காளிதாஸ் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்புக் குழு உறுப்பினர். திரு. தம்பு. சுப்ரமணி அவர்கள் தந்தை பெரியார் வழியில் ஆற்றிய பணிகள் என்றும் மறக்கக்கூடியவை அல்ல. காலத்தால் நிலைத்து நிற்கும் அவரது கொள்கைப் பணிகளைப் போற்றுவோம். பின்பற்றுவோம்.