நண்பர் வாசுதேவன் இந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு 'இது எந்த சிறைச்சாலை?' என்று பின்னூட்டம் போட்டிருந்தார். இது சிறைச்சாலைதான். ஆனால், நீங்கள் நினைக்கும் சிறைச்சாலை அல்ல. புதுச்சேரியில் என் வயதை ஒத்தவர்களுக்கு இந்த 'ஜெயில்' பற்றி தெரியும். நகரத்தின் மையப் பகுதியில் உள்ள பெத்தி செமினார் பள்ளியின் வகுப்பறைகள் தான் இவை. அழகிய பள்ளியின் ஒரு மூளையில் இந்தக் கட்டிடம் இருக்கும். அப்படியே சிறை போன்ற வடிவமைப்புக் கொண்ட கட்டிடம் இது. இதனை 'ஜெயில்' என்றே மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் விளிப்பர். அதன் நுழைவுக் கதவு சிறைக் கதவு போலவும், ஒவ்வொரு வகுப்பறையும் ஒவ்வொரு சிறை 'செல்' போன்றும் காட்சியளிக்கும். தற்போது இந்தக் கட்டிடம் முழுக்க இடிக்கப்பட்டு, புதிதாக வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இங்குதான் எங்களுக்கு கல்வி கற்பிக்கிறோம் என்ற பெயரில் தண்டனை அரங்கேறும். ஒன்றாம் வகுப்பு முதல் இந்தப் பள்ளியில் படித்தாலும், 6, 7, 8-ம் வகுப்புகள் இந்த 'ஜெயிலில்' படித்தேன். கண்டிப்பிற்கு பேர் போன பள்ளி இது. அப்போது இந்தப் பள்ளியில் படிப்பதையே பெருமையாக கருதுவார்கள். இப்போது இதுபோல நிறைய பள்ளிகள் வந்துவிட்டன. எங்களை அடிக்க நாங்களே பள்ளிக்கு எதிர்க்கடையில் உள்ள பிரம்புக் கடையில் இருந்து பிரம்பு வாங்கிச் செல்ல வேண்டும். அங்குப் பிரம்புகளை அழகாக சீவி பாலிஷ் போட்டு விற்பார்கள். அப்போது மாணவர்களை அடித்தால் கேட்பதற்கு நாதி இருக்காது. இப்போது சின்ன தண்டனை என்றால் பெரும் பிரச்சனையாகி விடுகிறது. போலீஸ், வழக்கு என்ற நிலை வந்துவிட்டது. வகுப்பறை தண்டனைப் பற்றி ஆசிரியர்களிடத்தில் மட்டுமல்ல பெற்றோர்கள் மத்தியிலும் கூடுதலான விழிப்புணர்வு வந்துவிட்டது.
இந்த ஜெயிலில் இடதுபுறம் அமைர்வதற்கு சிமெண்டால் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் அப்போது கிடையாது. குட்டிச்சுவர் போன்ற அந்தக் கட்டையில்தான் 'இன்டர்வெல்' நேரத்திலும், காலை, மதியம் வகுப்பு தொடங்கும் முன் கிடைக்கும் சில நிமிடங்கள் சக மாணவர்களிடம் பேசிக் கொண்டிருப்போம். அந்த விடலைப் பருவத்திற்கே உரிய விஷயங்கள் பேசுவோம். அந்தக் கட்டையில் சாய்ந்துக் கொண்டுதான் பேச முடியும். அமர்வதற்குத் தடை. அமர்ந்து இருப்பதை ஆசிரியர்களோ அல்லது முதல்வரோ பார்த்தால் தொலைந்தோம். முதல்வரைப் பார்த்தால் சினிமாவில் வரும் அன்பான பாதிரியார் போல் அல்லாமல் கொடூரமாக தோன்றும். எல்லாம் மிலிட்டரி ரெஜிமன்டேஷன் மாதிரி தான்.
அப்போது எங்களுக்கு வியாழக்கிழமை அரை நாள் விடுமுறை. மதியம் 12 மணிக்கு பள்ளி முடித்து அவசரம் அவசரமாக வீட்டிற்கு வந்து மதிய உணவு உண்டுவிட்டு சினிமாவிற்கு கிளம்பி விடுவோம். ஆங்கிலப் பட பிரியர்களுக்கு 'ரத்னா தியேட்டர்' ஒரு வரப்பிரசாதம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்படம் ரிலீசாகும். 'என்டர் தி டிராகன், ஸ்டார் வார்ஸ், ரைடர்ஸ் ஆப் தி லாஸ்ட் ஆர்க், பைவ் மேன் ஆர்மி..' என எண்ணற்ற படங்கள் பார்த்துள்ளோம். அப்போது இரண்டாம் உலகப் போரை முன்வைத்து நிறைய படங்கள் வெளிவந்தன. ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மிகவும் பிரபலம். இப்படியாக ஆங்கிலப் படங்களைப் பார்த்துவிட்டு, எங்கள் ஜெயில் கட்டையில் சாய்ந்துக் கொண்டு, அப்படக் கதையை மாணவர்களிடம், வாயால் பின்னணி இசை அமைத்து, அப்படியே விளக்கிக் கூறுவேன். சுற்றி நின்று சக மாணவர்கள் ரசித்தபடியே கேட்பார்கள். மனதில் அப்படியொரு குதூகலம் பிறக்கும். பள்ளிக்கூட மணி ஒலித்தவுடன் ஆங்கிலப் படத்தில் போடுவது போல 'இன்டர்வெல்', 'இன்டர்மிஷன்' என்று சத்தமாக கத்திவிட்டு வகுப்பிற்குச் சென்று விடுவோம். பிறகு தொடர்வோம். இப்படியாக முழுக் கதையையும் கூறி முடிப்பேன்.
இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லலாம் எங்கள் பள்ளியைப் பற்றி. அப்படி எங்கள் உணர்வோடு கலந்த ஜெயில் அது. அந்த ஜெயிலை ரசித்த நான், பின்னாளில் தமிழகம், புதுச்சேரி என மத்திய சிறைகளில் வதைபடுவேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒரு ஜெயில் மகிழ்ச்சி, ஒரு சிறை துன்பம்.