அதுபோன்ற ஒரு இரவில் ஒரு மணி இருக்கும். திடீரென யாரோ பதட்டமாக அறைக் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வருவது போன்று உணர்ந்தோம். நாங்கள் காவலில் இருந்த நாட்களில் இரவு நேரங்களில் நன்றாக தூங்கியதே கிடையாது. அப்போது எதிரே, நல்ல சிவப்பு நிறத்தில், உயரமான ஒரு போலீஸ் அதிகாரிக்கு இருக்க வேண்டிய லட்சணத்துடன் டீக்காக உடை அணிந்து ஒருவர் வந்து எங்கள் அருகில் நின்றார். அவர் எங்களை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரி என்பதைப் புரிந்துக் கொண்டோம். அவர் கையில் தோட்டா நிரம்பிய நவீன வகைக் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. சினிமாவில் வருவது போல விராலால் அந்தத் துப்பாக்கியை சுற்றிக் கொண்டே இருந்தார். அவரோடு வந்த கீழ்நிலை காவலர்கள் தங்களின் காலால் படுத்துக் கொண்டு இருந்த எங்களை எட்டி உதைத்து எழுப்பினார். நாங்கள் பதட்டத்துடன் எழுந்தோம்,
“டேய்.. இந்தப் பள்ளிப் பசங்களும், பறைப் பசங்களும் சேர்ந்துக்கிட்டு தமிழ்நாட்டை விடுதலைப் பண்ணப் போறீங்களாடா” என்று தொடங்கி எழுத முடியாத சொற்களால் எங்களைத் திட்டித் தீர்த்தார் அந்த போலீஸ் அதிகாரி. அதன்பின்னர் எங்களில் ஒவ்வொருவராக அழைத்துப் பெயர் ஊரைக் கேட்டுக் கடுமையாக தாக்கிச் சித்திரவதை செய்தார். “முந்திரிக்காட்டில் வைத்து உங்களை என்கவுன்டர் செய்துவிடுவேன்” என்று மிரட்டினார். தொடர்ந்துப் பல மணி நேரம் எங்களுக்கு வித விதமாக சித்திரவதைகள் நடந்தன. கொள்கை என்று ஒன்று இல்லை என்றால் அந்தச் சித்திரவதைகளை எங்களால் தாங்கிக் கொண்டுடிருந்திருக்க முடியாது. அந்தத் தருணங்களை இன்று நினைத்தாலும் மனதில் ஏதோ ஒரு அச்சம், பதற்றம் ஏற்படும். அன்று நாங்கள் அனுபவித்த சித்திரவதைகளைப் பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகக் கூறுகிறேன்.
பின்னர் அந்த போலீஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி என்பதைப் பின்னர் அறிந்துக் கொண்டோம். திருச்சி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டரான அவர் திருச்சி, கடலூர், விழுப்புரம் என இந்த மாவட்டங்களில் தமிழரசன் தோற்றுவித்து வழிநடத்திய “தமிழ்நாடு விடுதலைப் படை” என்ற தலைமறைவு அமைப்பினரை வேட்டையாடுவதையே குறிக்கோளாக கொண்டுக் கொலை வெறியுடன் செயல்பட்டவர்களில் முக்கியமனவர் என்று தெரிந்துக் கொண்டோம். மூளையே இல்லாமல் சித்திரவதை என்ற கொடிய அனுகுமுறையை மட்டுமே அறிந்தவர் அவர். தீவிர சிந்தனையுடைய, செயல்பாடுடைய அமைப்புகளில் உள்ளவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என எம்-எல் இயக்கத்தினரை ஒடுக்கவே அவர் பணிக்கப்பட்டு, அதனை அவர் செவ்வனே செய்துக் கொண்டிருந்தார், அப்போதெல்லாம் மனித உரிமைகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத காலம். எத்தனையோ தோழர்கள் சித்திரவதைக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு, உயிரிழந்ததும் உண்டு. இந்த அடக்குமுறைகளை யாரும் கேள்விக் கேட்க முடியாத சூழல் இருந்த காலம்.
1987, செப்டம்பர் 1-இல் தோழர் தமிழரசன் உள்ளிட்ட நான்கு பேரை, பொன்பரப்பி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட போது சுட்டுக் கொன்றதன் பின்னணியில் செயல்பட்டதில் மிக முக்கியமானவர். அப்பழியை பொதுமக்கள் மீது போட்டுத் திசைத் திருப்பியதை அனைவரும் அறிவர். அப்போது தமிழரசனை கொல்ல தமிழக அரசு ஒரு கோடி செலவு செய்தது என்றால் பாருங்கள். தமிழரசனை கொன்றதில் முக்கியமானவர் தான் இந்த இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி. அவரின் சித்திரவதைகள் எங்களுக்கு எந்தளவுக்குக் மறக்க முடியாது என்பதற்குச் சான்று, பழனிச்சாமி என்ற பெயரைக் கேட்டாலே அவர் ஞாபகம்தான் வரும்.
திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் எங்கள் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் சாட்சி சொல்ல வந்த போது அவரை மீண்டும் சந்தித்தோம். அப்போது அவர் தோழர் பொழிலனை பேச அழைத்த போது, அவர் எங்களைப் பார்த்து அடிக்கடி சொல்லும் ஒரு கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தி திட்டியதை மறக்க முடியாது. அதன் பின்னர், இடைப்பட்ட காலத்தில் திருச்சி ராம்ஜி நகரில் உள்ள ‘கேப்மாரி” சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்துச் சென்று, இதேபோல் சித்திரவதைச் செய்து கொன்றுவிட்டதாக புகார் எழுந்தது. அதன்பின்னர், சில காலம் மனநிலை பிழன்று திரிந்ததாகவும் கேள்விப்பட்டேன். பிறகு டி.எஸ்.பி. பதவி உயர்வுப் பெற்று பணியில் இருந்ததாகவும் கூறினார்கள்.
நேற்றைய தினம் காலையில் ஒரு நண்பர் கைபேசியில் அழைத்து இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி இறந்துப் போய்விட்டார் என்றும், அவரது உடல் இறுதி சடங்கிற்காக குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள அவரது சொந்த கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். எனக்கு வருத்தப்படுவதா, மகிழ்ச்சி அடைவதா என்ற ஊசலாட்டம் எழுந்தது. ஒருவரது மரணம் நமக்கு இப்படி ஒரு ஊசலாட்டத்தைத் தந்துள்ளதை எண்ணியபடியே இருந்தேன். அதற்குக் காரணம் மக்களின் விடுதலைக்குப் பாடுபட்ட எண்ணற்ற தோழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியவர் என்பதுதான். அந்த தோழர்களின் வழிமுறையில் நமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் என்பது என்றும் போற்றப்பட வேண்டியது.
சுருக்கமாகச் சொல்லப் போனால், திருச்சி – கடலூர் மாவட்ட எல்லையில் வெள்ளாற்று கரையிலுள்ள கிராமங்களிலும், முந்திரிக்காடுகளிலும் இவர் செய்த சித்திரவதையால் கதறிய கதறல்கள் இன்றுகூட கேட்கக்கூடும். அவை மார்க்சிய – லெனினிய தத்துவத்தை ஏற்றுச் செயல்பட்ட எண்ணற்ற தோழர்களின் வெளிவுலகிற்குத் தெரியாத, பதிவுச் செய்யப்படாத வரலாற்றின் கதறல்களின் எதிரொலிகள்.
இப்போது உங்களுக்குப் புரியும் இந்தக் கொடிய போலீஸ் அதிகாரியின் மரணம் ஏன் என்னுள் எந்தவித சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்று...