Friday, September 18, 2020

துரோகம் தானே?

விழுப்புரத்தில் புதிதாக அமையவுள்ள பல்கலைக்கழகத்திற்குத் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை அளித்தவரும், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவரும், திமுக முன்னாள் அமைச்சருமான மறைந்த ஏ.கோவிந்தசாமி பெயர் வைக்க வேண்டுமென மருத்துவர் இராமதாசு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். ஏ.கோவிந்தசாமி முதுபெரும் திமுக தலைவர்களில் முகாமையானவர். இத்தனைக்கும் பாமக திமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகிற கட்சி.

திமுக சின்னத்தில் போட்டியிட்டு விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரை.ரவிக்குமார் வள்ளலார் பெயர் வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். வள்ளலார் பெயர் வைக்கக் கூடாது என்பதல்ல. ஆனால், திமுகவின் முதுபெரும் தலைவர் ஒருவர் பெயர் வைக்க வேண்டும் என பிற கட்சியிலிருந்து கோரிக்கை வரும் போது, அதை ஆதரிக்காமல் வேறொருவர் பெயர் வைக்க வேண்டுமென கோருவது சரியானதல்ல.

தலித் மக்களின் விடிவுக்கு உழைத்திட்ட, காங்கிரஸ் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எல்.இளையபெருமாள் பெயர் வைக்கக் கோரி இருந்தாலும், அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர், தன்னைத் தலித் அறிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் என்ற அடிப்படையில் கோருகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்திய அளவில் தலித் மக்களின் நிலைக் குறித்து ‘இளையபெருமாள் குழு அறிக்கை’ மிக முக்கியமான ஒன்று. திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சாராக இருந்த போது அவருக்குத் தமிழக அரசின் ‘அம்பேத்கர் விருது’ அளித்து சிறப்பித்தார். புதிய பல்கலைக்கழகத்திற்குப் பெயர் வைக்கும் அளவுக்குத் தகுதியான தலைவர்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற துரை.ரவிக்குமார் திமுகவிற்கும் தலித் அரசியலுக்கும் இழைக்கும் துரோகம் அல்லவா இது?

கோ.சுகுமாரன் / 18.09.2020

 

Sunday, September 06, 2020

வாங்க தோழர்..

1987-இல் எனக்கு வயது 20. கொல்லப்படுவதற்கு முன்பே தோழர் தமிழரசன் எனக்கு நெருக்கம். அவரோடு நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கெடுத்ததில்லை. ஆனால், தமிழ்நாடு விடுதலை என்ற அரசியல் முழக்கத்திற்காக வீச்சுடன் உழைத்திட்ட காலம். தோழர் தமிழரசன் வழியில், மீன்சுருட்டி சாதி ஒழிப்பு அறிக்கையின் அடிப்படையில் சாதி ஒழிப்புடன் கூடிய தமிழ்நாடு விடுதலையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டோம்.

தோழர் பொழிலன் வழிகாட்டலில் தமிழ்நாடு இளைஞர் பேரவை, தமிழ்நாடு மாணவர் பேரவையில் செயல்பட்ட காலம். செப்டம்பர் 1, 1987-இல் பொன்பரப்பியில் தோழர்கள் தமிழரசன், தருமலிங்கம், ஜெகன்நாதன், பழனிவேல், அன்பழகன் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டனர். தோழர்களின் இழப்பு ஒருபுறம் அரசின் மீது கடும் சினத்தை ஏற்படுத்தியது. மறுபுறம் நினைக்கும் போதெல்லாம் கண் கலங்கி உள்ளுக்குள் அழுவேன். ஈடு செய்ய முடியாத இழப்பு எனினும், ஈடு செய்தே ஆக வேண்டிய இழப்பு என்பதால் பின்னாளில் அவர் பாதையில் பயணித்து வழக்கு, சிறை எனத் திசை மாறியது வாழ்க்கை.

தோழர் தமிழரசனின் தாயார் பதூசி அம்மாளை நேரில் சென்று பார்க்க வேண்டும் என முடிவு செய்தோம். சொந்த ஊர் மதகளிர்மாணிக்கம் என்றாலும், அப்போது அவர் தமிழரசனின் தங்கை திருமணம் செய்துகொடுத்த ஊரான பொன்பரப்பி குடிக்காட்டில் இருந்தார். புலவர் கலியபெருமாள், பொழிலன், நான் ஆகிய மூவரும் பேருந்தில் சென்றோம். பொன்பரப்பி செல்வது அதுவும் புலவர் கலியபெருமாள் உடன் செல்வது மிகவும் ஆபத்தானது. கண்காணிப்புக் கடுமையாக இருந்த நேரம். நாங்கள் பிடிபட்டிருந்தால், அதுவும் பொன்பரப்பி செல்கிறோம் என்று தெரிந்திருந்தால் கட்டாயம் காவல்துறையின் கடும் சித்திரவதையைச் சந்தித்திருப்போம். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்போம். ஆனால், இதையெல்லாம் நன்கு அறிந்திருந்த புலவர் எங்களைப் பாதுகாப்போடு அழைத்துச் சென்றார். பேருந்தில் இருந்து ஒரு ஊரில் இறங்கினோம். அங்கிருந்து நீண்ட பயணம் போல் மிதிவண்டியில் பயணமானோம். புலவர் ஒரு மிதிவண்டியிலும், நானும் பொழிலனும் ஒரு மிதிவண்டியிலும் பயணமானோம். நான் ஒல்லியாக இருந்ததால் என்னை ஏற்றிக் கொண்டு மிதிவண்டியை ஓட்டிய பொழிலனுக்கு சிரமம் இருந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.

இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது. பயணம் முழுவதும் அடர்ந்த முந்திரிக் காட்டின் வழியாக ஒத்தையடிப் பாதையில். விவசாயிகள் விளைவிக்கும் முந்திரிக்கு விலை வைக்க முடியாமல் யாரோ நிர்ணயிக்கும் விலைக் கொடுக்க வேண்டிய நிலை. இதை எதிர்த்துப் போராடியதுதான் தோழர் தமிழரசனின் முதல் போராட்டம் என்றுகூட சொல்லலாம். இதன்பின்னர், கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயிகள் ஓரளவுக்குப் பயன்பெற்றனர். பொதுவுடமைத் தத்துவம் விதைக்கப்பட்ட செம்மண் பூமி அது. முந்திரிக் காட்டைவிட்டு வெளியே வந்ததும், எங்கெல்லாம் மக்கள் கூட்டம் இல்லாத வழியில் சென்று பொன்பரப்பி அடைந்தோம். பதூசி அம்மாளை சந்திக்க அவ்வீட்டிற்குள் சென்றோம்.

இந்திய ஒன்றிய அரசையே உலுக்கிய முனைமழுங்கா மாவீரனை ஈன்றெடுத்தத் தாயைக் காணப் போகிறோம் என்ற ஆவல். கறுத்த நிறம், நெடிய, திடமான ரவிக்கை அணியாமல் சேலை மட்டுமே உடுத்தி இருந்த கம்பீரமானப் பெண்மணி. எங்களைப் பார்த்ததும் “வாங்க தோழர்” என்று வரவேற்றார். இன்றும் அச்சொல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. புலவர் மட்டுமே அவருக்கு அறிமுகம். ‘இவங்க நம்ம தோழர்கள்’ என்று மட்டுமே சொல்லி அறிமுகப்படுத்தினார். அவரும் எங்களைப் பற்றி தெரிந்த கொள்ள ஆர்வமாக இல்லை. அது அன்றைய அரசியல் நடைமுறை. பெரும்பாலும் தலைமறைவுத் தோழர்களையே சந்தித்தவர்.

தோழர் தமிழரசன் மற்றும் தோழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் சொன்னார். அழுது புலம்பவில்லை. ஆனால், பெற்ற பிள்ளையை இழந்துவிட்டோம் என்ற சோகம் இழையோடியது. புலவரால் தீவிரப் பொதுவுடமை அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர் தோழர் தமிழரசன். ஆனால், இப்படி ஒரு அரசியல் வாழ்க்கைக்குக் கொண்டு சென்று பலியாக்கிவிட்டீரே என்ற சராசரி பெண்கள் நினைக்கும் சூழலில், அதுபற்றிய கவலை துளியும் இல்லாமல், புலவருடன் மிகுந்த அன்புடனும், மதிப்புடன் பேசினார். எளிய சிற்றூர் புறத்தைச் சேர்ந்த பதூசி அம்மாளின் வீரமும், அரசியலும் அதில் வெளிப்பட்டது. அப்போது தன் மகன் கொல்லப்பட வாய்ப்பில்லை என்ற கருத்து நிலவுவதையும் கூறினார். பின்னர் அவரிடமிருந்து விடைப் பெற்றோம். மீண்டும் முந்திரிக்காட்டின் ஊடே மிதிவண்டிப் பயணம்.

அந்தச் சிறிய வயதில் எனக்குப் பெருமைதரும் பயணமாக அமைந்த ஒன்று. இதுபோல், எத்தனையோ ஆபத்தான சவால் நிறைந்தப் பயணங்களை மேற்கொண்டவன். பதூசி அம்மாவுக்கு வயது 104. இன்றும் தன் வேலைகளைத் தானே செய்கிறார். மாட்டுக்குத் தீனி வைப்பது என அன்றாட பிற வேலைகளையும் செய்து வருகிறார்.

“வாங்க தோழர்” – எவ்வளவு பெரிய அங்கீகாரம். என்ன விலைக் கொடுத்தும் பெற முடியாத தகுதி இது. அந்தத் தகுதி எனக்குக் கிடைத்தது பெரும் பேறுதான்.

Thursday, September 03, 2020

அய்யா வே. ஆனைமுத்து அறிக்கை...

1987, செப்டம்பர் 1 அன்று பொன்பரப்பி சிற்றூரில் தோழர்கள் தமிழரசன், தருமலிங்கம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் ஆகியோரை தமிழகக் காவல்துறையினர் பொதுமக்கள் போர்வையில் அடித்துக் கொன்றனர். காயமடைந்து உயிரோடு இருந்தவர்களையும் சிகிச்சை அளிக்காமல் சாகடித்தனர். இதற்குக் காவல்துறை ரூ. 1 கோடி வரை செலவு செய்ததாக அப்போது கூறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் பொன்பரப்பி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். வங்கிக் கொள்ளை நடந்த போதும், அதைத் தொடர்ந்த தாக்குதலையும் நேரடியாக பார்த்தவர்களைச் சந்தித்துள்ளார். கிடைத்தத் தகவல்களை ஆங்கிலத்தில் 18 பக்க அறிக்கையாக அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கிற்கு அனுப்பியுள்ளார். அதில் தமிழரசன் மற்றும் தோழர்கள் உயிரைப் பறித்தது தவறு என்று தெளிவாகக் கூறியுள்ளார். அதோடு இதுகுறித்து தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். ஆனால், காவல்துறை இத்தாக்குதலில் ஈடுபட்டது பற்றி எதுவும் கூறவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்க வேண்டும். இருப்பினும், தோழர்கள் கொல்லப்பட்டது குறித்து அவரின் அறிக்கை ஓர் வரலாற்று ஆவணம்.