Sunday, September 29, 2024

சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண நிதி ஒதுக்கீடு குறித்து கல்வித்துறை உண்மைக்கு மாறான அறிக்கை: முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!


 மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!! 

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.09.2024) வெளியிட்ட அறிக்கை:

சிபிஎஸ்இ 10, 12ஆவது வகுப்புத் தேர்வுக் கட்டண நிதி ஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிட்டுள்ளதால், இதுகுறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

சிபிஎஸ்இ 10, 12ஆவது தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென கடந்த 26.09.2024 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தோம். இது செய்தியாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறியதோடு, செய்தி வெளியிட்ட பத்திரிகைகளை மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் சிபிஎஸ்இ 04.10.2024 அன்றைக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று 04.09.2024 நாளிட்ட சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நிதித்துறையின் பட்ஜெட் அதிகாரியால் பட்ஜெட் மதிப்பீடு 26.09.2024 அன்று வழங்கப்பட்டுள்ளது. செலவீனங்கள் ஒப்புதல் பெற பரிசீலனையில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

அதாவது 04.09.2024 நாளிட்ட சிபிஎஸ்இ அனுப்பிய சுற்றறிக்கைக் கிடைத்தவுடன் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலதாமதமாக கடைசி நேரத்தில் நடவடிக்கை எடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், நிதி ஒதுக்கீடு இன்னமும் செய்யவில்லை பரிசீலனையில்தான் உள்ளது எனவும் கூறியுள்ளார். நிதி ஒதுக்கீடு குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்னமும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு கோப்புக்கு ஒப்புதல் பெற்று தேர்வுக் கட்டணம் செலுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

மேலும், அந்த அறிக்கையில் செய்தி வெளியிட்ட பத்திரிகைகளை மிரட்டும் தொனியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் அவலங்களையும் செயலற்ற போக்கையும் செய்தியாக வெளியிட்டால், அதைச் சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகியின் செயலாகும். அதைவிடுத்து உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்காத பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் பத்திரிகைகளை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. மேலும், இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.

எனவே, இது குறித்து முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Thursday, September 26, 2024

சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை: உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.09.2024) விடுத்துள்ள அறிக்கை:

கல்வித்துறை அலட்சியத்தால் சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் 10ஆவது மற்றும் 12ஆவது வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு 10ஆவது மற்றும் 12ஆவது மாணவர்கள் தேர்வு விண்ணப்பத் தொகையாக கடந்த பல ஆண்டுகளாக சுமார் ரூ.235 அளவில் தமிழக அரசுக்குச் செலுத்தி வந்தது. தற்போது சி.பி.எஸ்.இ-ல் 5 பாடங்களுக்குத் தேர்வுக் கட்டணம் ரூ,1500, ஒவ்வொரு கூடுதல் பாடத்திற்கும் ரூ.300 கூடுதல் கட்டணம், செய்முறைத் தேர்வுக் கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.150, அக்டோபர் 5ஆம் தேதிக்குப்பின் ஒவ்வொரு மாணவருக்கும் தாமதக் கட்டணம் ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், பட்டியலின வகுப்பினருக்குச் சலுகைக் கட்டணம் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ரூ.1200 என்று கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது புதுச்சேரி அரசு, ஆண்டு வருமானம் ரூ.1,50,000-க்கும் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுக் கட்டணம் செலுத்தும் என்று தெரிகிறது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ இணைப்பு முழுவதற்கும் பொறுப்பில் உள்ள கல்வித்துறை இணை இயக்குநர் சி.பி.எஸ்.இ-ல் வரும் 2025-இல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழக்கமாக அரசு செலுத்தும் தேர்வுக் கட்டணம் குறித்து எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை. தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி நாள் 04.10.2024 என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போதுதான் தப்பும் தவறுமான கோப்புகளுடன் அலைந்து கொண்டிருக்கிறார். இரண்டு கோடி ரூபாய்களுக்கு மேல் சம்பந்தப்பட்ட கோப்பு அரசு செயலர், தலைமைச் செயலர் போன்றவர்கள்தான் முன் வைக்க முடியும். இதை அறியாமல் தனக்கு அதிகாரம் இல்லை என்றுகூட தெரியாமல் கோப்பில் கையெழுத்திட்டு ஒப்புதல் பெற மேலும் காலதாமதத்திற்கு வழி வகுத்துள்ளார்.

சி.பி.எஸ்.இ பிரிவுக்கு போதிய அனுபவமுள்ள பள்ளி முதல்வர்கள் இருந்தும், எந்த அனுபவமும் இல்லாத இரண்டு மூன்று ஆசிரியர்களைத் துறையிலேயே தன் கீழ் வைத்துக் கொண்டு இணை இயக்குநர் செயல்பட்டு வருகிறார். இதனால் இன்று 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விஷயத்தில் பெரும் கவனக் குறைவுடன் நடந்து கொண்டதுடன், புதுச்சேரி அரசையும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளார்.

எனவே, துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், கல்வி அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித்துறை செயலர் ஆகியோர் இதில் தலையிட்டு தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 04.10.2024 என்பதால், போதிய நிதி ஒதுக்கீடு செய்து தேர்வுக் கட்டணம் செலுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் தேர்வு எழுத ஆவன செய்ய வேண்டும்.

இதுகுறித்து புதுச்சேரி அரசு தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். மாணவர்களின் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் அலட்சியமாக இருந்த கல்வித்துறை இணை இயக்குநர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Friday, September 20, 2024

காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி தூக்குப் போட்டுத் தற்கொலை: நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.09.2024) விடுத்துள்ள அறிக்கை:

காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி விவேகானந்தன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விசாரணை சிறைவாசியான விவேகானந்தன் (வயது 56) காலாப்பட்டு மத்திய சிறையில் கடந்த 16.09.2024 அன்று கழிவறையில் துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றக் காவலில் சிறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதற்கு அரசும், சிறைத்துறையும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். சிறையில் பணியில் அலட்சியமாக இருந்த சிறைத்துறையினர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 08.06.2024 அன்று காரைக்கால் கிளைச் சிறையில் ஆயுள் தண்டனைச் சிறைவாசி பிரதீஷ் கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரையில் அரசும், சிறைத்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதுச்சேரி சிறைகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது ஏற்புடையதல்ல என்பதோடு, இவை அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். சிறைச்சாலைகள் சிறைவாசிகளைத் திருத்தும் மையங்களாக (Correctional Centers) இருக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகள் வழங்கியுள்ளது.

மேலும், சிறைவாசி விவேகானந்தன் தற்கொலை சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.

சிறைவாசி விவேகாந்தன் உயிரிழப்பிற்கு அரசும், சிறைத்துறையும் பொறுப்பு என்பதால் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பி உள்ளோம்.

Saturday, September 07, 2024

தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் 157ஆவது பிறந்த நாள்: தமிழ் அமைப்பினர் நினைவிடத்தில் மலரஞ்சலி!


நாடகத் தந்தை எனப் போற்றப்படும் தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் 157ஆவது பிறந்த நாளையொட்டி, கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அமைந்துள்ள நினைவிடத்தில் இராதே அறக்கட்டளை சார்பில் இன்று (07.09.2025) காலை 10.30 மணிக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு இராதே அறக்கட்டளை தலைவர் பொறிஞர் இரா.தேவதாசு தலைமைத் தாங்கினார்.

அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பாசுகரன் (எ) தட்சணாமூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு சங்கரதாசர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், வலைப்பதிவர் சிறகம் தலைவர் இரா.சுகுமாரன், வெற்றித் தமிழர் பேரவைத் தலைவர் தி.கோவிந்தராசு, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், செயலாளர் இராஜா, புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், திராவிடர் கழகம் மண்டலத் தலைவர் வே.அன்பரசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சீ.சு.சாமிநாதன், சுற்றுச்சூழல் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, தமிழ்தேசிய பேரியக்கத் தலைவர் இரா.வேல்சாமி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஜே.சம்சுதீன், செயலாளர் பலுலுல்லா, சான்றோர் பேரவை குமரவேல், பொறிஞர் கண்ணன், பாவலர் இளமுருகன், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் வேணு. ஞானமூர்த்தி, தமிழறிஞர் கோ.தாமரைக்கோ, நாடகக் கலைஞர் நந்தகோபால், ஓவியர் இராஜராஜன், நட்புக்குயில் அமைப்புத் தலைவர் சீனு.தமிழ்மணி, புதுச்சேரி நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் குமரன், பொருளாளர் இரா.ராஜ்குமார், கலை இலக்கியப் பேரவைப் பொறுப்பாளர் எலிசபத் ராணி, ஐயப்பன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் வணக்கம் செலுத்தினர்.

பாவலர் பாட்டாளி பைரவி தலைமையில் சங்கரதாசருக்கு பாமாலை சூட்டும் பாவரங்கம் நடைபெற்றது. இதில் 15 பாவலர்கள் கலந்துகொண்டு பாமாலை சூட்டினர். முடிவில் செல்வி இரா.சுகன்யா நன்றி கூறினார்.

தமிழ் அமைப்புகள் சார்பில் சங்கரதாசர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.