Friday, December 20, 2024

மூத்த வழக்கறிஞர் ஆர்.பலராமன் மறைவு: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு இரங்கல்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.12.2024) விடுக்கும் இரங்கல் குறிப்பு:

புதுச்சேரி மூத்த வழக்கறிஞர் ஆர்.பலராமன் அவர்கள் மறைவுக்கு 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

மூத்த வழக்கறிஞர் ஆர்.பலராமன் (வயது 88) நேற்று (19.12.2024) உடல்நலம்குன்றி காலமானார்.

புதுச்சேரி மூத்த  வழக்கறிஞர் ஆர்.பலராமன் அவர்கள் கற்றுத் தேர்ந்த வழக்கறிஞர் என்பதோடு பல வழக்குகளைத் திறம்பட நடத்தியவர். 

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மறைந்த எஸ்.இராஜசூர்யா அவர்கள் தலைமையில் இயங்கிய காவலர் புகார் ஆணையத்தின் (Police Complaints Authority) உறுப்பினராக இருந்து பொறுப்புடன் பணியாற்றியவர். 

காவலர் புகார் ஆணையத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பல்வேறு புகார்கள் அளித்த போது அதன் மீது பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க உரிய உத்திரவுகள் வழங்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர். 

புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்திற்குக் குறிக்கோள்கள், விதிகளை உருவாக்கிப் பதிவு செய்ய காரணமாக இருந்தவர். 

அவரது மறைவு வழக்கறிஞர் சமூகத்திற்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வழக்கறிஞர்கள் உட்பட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, December 09, 2024

வில்லியனூர் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் ஊழல், முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.12.2024) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் நடந்த ஊழல், முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டும் பணி கடந்த 11.02.2022 அன்று தொடங்கியது. ரூபாய் 60 கோடியில் 360 மீட்டர் நீளம் 18 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் கடந்த 28.10.2024 அன்று துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் புயல், மழையின் போது இப்பாலத்தின் கிழக்குப் பகுதி இணைப்புச் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாதத்திற்குள்ளேயே விரிசல் ஏற்பட்டதற்குப் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும்தான் பொறுப்பு. பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடும் அரசசையும், பொதுப்பணித்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இப்பாலத்தைக் கட்ட பொறுப்பாக இருந்த பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவர் பதவி உயர்வுப் பெறவும், தேசிய நெடுஞ்சாலைப் பிரிவுதான் வேண்டுமென ஆட்சியாளர்களுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இப்பதவியைப் பெற்றவர் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அதிகாரியால் எப்படி இப்பாலத்தை முறையாகக் கட்டி இருக்க முடியும். இப்பாலம் கட்டியதில் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளன.

இப்பாலம் ஒதுக்கப்பட்ட நிதி முழுவதையும் செலவழித்து முறையாகக் கட்டப்பட்டுள்ளதா, மக்கள் பயணம் செய்ய பாதுகாப்பானதா என்பது குறித்து வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் நடந்த ஊழல், முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டும்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலர், சி.பி.ஐ. இயக்குநர், துணைநிலை ஆளுநர் உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்ப உள்ளோம்.

Thursday, December 05, 2024

காரைக்கால் சிறையில் சிறைவாசி தற்கொலை சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்காதது ஏன்? விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்திரவு!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.12.2024) விடுத்துள்ள அறிக்கை:

காரைக்கால் மாவட்ட சிறையில் தண்டனைச் சிறைவாசி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்காதது ஏன்? என்பது குறித்து 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்திரவுப் பிறப்பித்துள்ளது.

கடந்த 08.06.2024 அன்று, காரைக்கால் மாவட்டச் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைச் சிறைவாசி பிரதீஷ் (வயது 23) த/பெ. பழனிச்சாமி என்பவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் குறித்து கடந்த 18.06.2024 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பி இருந்தோம். அதில் பிரதீஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்குச் சிறைத் துறையும், புதுச்சேரி அரசும்தான் பொறுப்பு. பணியில் அலட்சியமாக இருந்த சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி இருந்தோம்.

இப்புகாரைப் பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 26.11.2024 அன்று உத்திரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பதிவகத்தில் (Registry) இந்த காவல் மரணம் தொடர்பாக எந்த தகவலும் காணப்படவில்லை. எனவே, காரைக்கால் மாவட்ட நடுவர் (மாவட்ட ஆட்சியர்), முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர், காரைக்கால் மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் இக்காவல் மரணம் பற்றி தகவல் தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது. இந்த உத்திரவின் நகல் டி.ஜி.பிக்கும் அனுப்பி வைத்துள்ளது.

மேலும், மரணம் ஏற்பட்டதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அறிக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணைய வடிவப்படி காலாப்பட்டு மத்திய சிறை உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட சுகாதாரப் பரிசோதனை அறிக்கை, காலவரிசைப்படி முந்தைய சிறை உள்ளிட்ட சிறைகளில் நோய்களுக்குச் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் சிகிச்சை அளிக்கப்பட்ட முழு மருத்துவ ஆவணங்கள், பிரேத விசாரணை அறிக்கை, தட்டச்சு செய்யப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கை, விசரா, ஹிஸ்டோபேத்தாலஜி ஆய்வுகள், தடய அறிவியல் துறை அறிக்கையின் அடிப்படையிலான மரணத்திற்கான காரணம், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்கவும் உத்திரவிட்டுள்ளது.

மேலும், நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, இறுதி முடிவு மற்றும் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை, குற்ற நடவடிக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்கவும் உத்திரவிட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 14.12.1993 அன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கு வழிகாட்டுதல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் காவல் மரணம் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் குறித்து மாவட்ட நடுவர் (மாவட்ட ஆட்சியர்), காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையப் பதிவாளருக்கு 24 மணிநேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய நேரத்திற்குள் தகவல் தெரிவிக்கவில்லை என்றால் சம்பவத்தை மூடிமறைக்க முயற்சித்ததாக கருதப்படும் என்று கூறியுள்ளது.

மேலும், கடந்த 21.06.1993 அன்று மேற்சொன்ன வழிகாட்டல் காவல் மரணம் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் குறித்து மட்டுமல்ல, நீதித்துறைக் காவலில் நடந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டுமென்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழிகாட்டல் ஒன்றை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பியுள்ளது.

எனவே, காவல் மரணம் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் நடந்தால் மாவட்ட நடுவர் (மாவட்ட ஆட்சியர்), காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் 24 மணிநேரத்திற்குள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குத் தகவல் அனுப்ப தலைமைச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.