Thursday, January 23, 2025

தனியார் பள்ளியில் +1 மாணவருக்குக் கத்திக்குத்து, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.01.2025) விடுத்துள்ள அறிக்கை: 

புதுச்சேரி தனியார் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக +1 மாணவருக்குக் கத்திக்குத்து, ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதற்குப் பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம் என்பதால் 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பேஸ்புக் செய்தி தொடர்பாக மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் நேற்றைய தினம் +1 மாணவரை சக மாணவர் கத்தியால் குத்தியுள்ளார். மேலும், அம்மாணவரிடம் இருந்துப் போலீசார் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளைப்  பறிமுதல் செய்துள்ளனர்.  

மாணவர்களிடையே வன்முறைக் கலாச்சாரம் பரவுவதற்குப் பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கத் தவறியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக சலுகைகள் அளித்து அதன்மூலம் லாபமடைந்து வருகின்றனர். 

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகள் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பித்து அவர்களைச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க வேண்டும். அதைவிடுத்து மாணவர்களைக் குற்றம் செய்பவர்களாக ஆக்குவது இளம் தலைமுறையைப் பாதிக்கும்.  

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கும் வகுப்புகள் (Moral classes) தற்போது நடத்தப்படுவதில்லை. பள்ளி மாணவர்கள் மத்தியில் விளையாட்டு, கலை, இலக்கிய ஆர்வம் வளர்தெடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த கவுன்சிலிங் அளிக்க வேண்டும். பள்ளி மாணவர்களை வெறும் பாடத்தை மட்டுமே மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக உருவாக்கக் கூடாது. 

பள்ளிக் கல்வித்துறை ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படக் கூடாது. மாணவர்களின் நலனே முதன்மையானது என செயல்பட வேண்டும்.

இச்சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் காலம்தாழ்த்தி வருகின்றனர். எனவே, காவல்துறை உயரதிகாரிகள் தலையிட்டு உடனே வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மாணவர் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயார் செய்ததாகவும், அரியாங்குப்பத்தில் பட்டாசு வாங்கி அதிலிருந்து வெடிமருந்துகளைப் பிரித்து வெடிகுண்டு தயாரித்ததாகவும் தெரிகிறது. மாணவனுக்குப் பட்டாசு விற்றவர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிய வேண்டும். பட்டாசு விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

Sunday, January 12, 2025

காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம்: உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.01.2025) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த 10.01.2025 அன்று காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி நாராயணன் (வயது 45) நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டு சிறைக்குத் திரும்பியுள்ளார். சிறையில் உடல்நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காலாப்பட்டு காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, விடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்துபோன நாராயணனின் உறவினர்கள் அவருக்குச் சின்ன வயது, எவ்வித நோயும் இல்லை என்பதால் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறியுள்ளனர்.

கடந்த 16.09.2024 அன்று சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விசாரணை சிறைவாசியான விவேகானந்தன் (வயது 56) காலாப்பட்டு மத்திய சிறையில் கழிவறையில் துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த 08.06.2024 அன்று காரைக்கால் கிளைச் சிறையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைச் சிறைவாசியான பிரதீஷ் (வயது 23) கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பிரதீஷ் தற்கொலை குறித்து தகவல் தெரிவிக்காததால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் முழு விவரங்களையும் அளிக்குமாறு டி.ஜி.பி., காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்திரவுப் பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் சிறைகளில் சிறைவாசிகள் மரணம் அடிக்கடி நடக்கிறது. சிறைவாசிகளைப் பாதுகாப்பதில் புதுச்சேரி அரசும், சிறைத்துறையும் தோல்வி அடைந்துள்ளது.

சிறைவாசி நாராயணன் மரணத்திற்கு புதுச்சேரி அரசும் சிறைத்துறையும் பொறுப்பு (Vicariously liable) என்பதால், அவரது குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே இறந்துபோன சிறைவாசிகள் விவேகானந்தன், பிரதீஷ் குடும்பத்தினருக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

 எனவே, காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

 இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்ப உள்ளோம்.