Sunday, March 16, 2025

சட்டமன்றத்தில் அறிவித்தபடி மாநிலத் தகுதி கோரி டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தாதது ஏன்? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.03.2025) விடுத்துள்ள அறிக்கை:

சட்டமன்றத்தில் அறிவித்தபடி புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கக் கோரி டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தாதது ஏன்? என்பது பற்றி முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த 14.08.2024 அன்று புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்கள் 'சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பினர் என அனைவரையும் டில்லி அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநிலத் தகுதி வழங்க வலியுறுத்துவோம்' என அறிவித்தார். ஆனால், இதுவரையில் சட்டமன்றத்தில் அறிவித்தபடி செய்யவில்லை.

ஆனால், தற்போது முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்கள் 'துணைநிலை ஆளுநர் வரும் 15ஆம் நாளன்று குஜராத் செல்கிறார். அப்போது பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மாநிலத் தகுதி, நிதிக்குழுவில் சேர்ப்பது குறித்துப் பேசுவார். மாநிலத் தகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று சட்டமன்றத்தில் பேசியுள்ளார். இது கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போன்றதாகும்.

சட்டமன்றத்தில் மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இதுவரையில் 15 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசு புதுச்சேரி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சார்பில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க வலியுறுத்த முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, March 13, 2025

1ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை: பள்ளி தாளாளர், முதல்வரை போக்சோ வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும்!

 


முதலமைச்சரிடம் பொதுநல அமைப்புகள் மனு!!

புதுச்சேரி பொதுநல அமைப்புகள் சார்பில் நேற்று (13.03.2025) மாலையில் முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஜெ.சம்சுதீன், புரட்சியாளர்  அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், புதுவை எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், சுற்றுச்சூழல் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத் தலைவர் இரா.சுகுமாரன், மக்கள் மன்றத் தலைவர் மு.நாராயணசாமி, பி போல்ட் தலைவர் பஷீர் அகமது ஆகியோர் மனு அளித்தனர். 

அம்மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி தவளக்குப்பம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவி (வயது 7) ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைச் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவ்வழக்கில் அப்பள்ளியின் ஆசிரியர் மணிகண்டன் மீது போக்சோ சட்டப் பிரிவு 6-ன்கீழ் வழக்குப் பதிந்து,  கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்ற போதுதான் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தெரிய வந்துள்ளது. மேலும், நான்கு மாதங்களாக பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கூறியுள்ளனர்.

பள்ளி மாணவிகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பள்ளி தாளாளர் ராமு, முதல்வர் யுவராஜ் ஆகியோர் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளனர். இதன்மூலம், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது போக்சோ சட்டப்படி குற்றமாகும். தமிழகத்தில் இதுபோன்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் மீது போக்சோ வழக்குப் பதிந்து, கைது செய்யப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன. 

எனவே, பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் அப்பள்ளியின் தாளாளர் ராமு, முதல்வர் யுவராஜ் ஆகியோரை மேற்சொன்ன போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்த்து கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், மேற்சொன்ன வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்குப் பிணை கிடைக்காமல் நடவடிக்கை எடுத்து, அவரை சிறையில் வைத்தே புலன்விசாரணை முடித்து, குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து, வழக்கை நடத்தி தண்டனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமியான மாணவிக்கு உரிய உயர் சிகிச்சை அளிக்கவும், உளவியல் கவுன்சிலிங் வழங்கவும், ரூபாய் 25 இலட்சம் நிவாரணம் வழங்கவும் வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இம்மனு உள்துறை அமைச்சர், தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர், டிஜிபி, டி.ஐ.ஜி., சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி., தெற்குப் பகுதி எஸ்.பி. உள்ளிட்டோருக்கும் அளிக்கப்பட்டது.