Saturday, February 15, 2025

1ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் தொடர் பாலியல் துன்புறுத்தல்: கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (15.02.2025) விடுத்துள்ள அறிக்கை:

1ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் மாணவ, மாணவியருக்குப் பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணமான பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

தனியார் பள்ளி 1ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அச்சிறுமியின் குடும்பத்தினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் 7 மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்திய பின்னர்தான் ஆசிரியர் மணிகண்டன் மீது தவளக்குப்பம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவர், பள்ளிக்குத் தற்காலிகமாக சீல் வைக்கப்படும், புகார் கூறிய மாணவியின் தந்தை உள்ளிட்ட உறவினர்களைத் தாக்கிய போலீசார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், குற்றமிழைத்த ஆசிரியருக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தரப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. அ.குலோத்துங்கன் உறுதியளித்த பின்னர் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆசிரியர் மணிகண்டன் மாணவிக்கு 4 மாதங்களாக தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர். பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோர் மீதும் போக்சோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து குற்றமிழைத்த ஆசிரியருக்குத் தண்டனைப் பெற்றுத் தர வேண்டும்.

மூலக்குளம் தனியார் பள்ளியில் மாணவர் சக மாணவரைக் கத்தியால் குத்தினார், அம்மாணவரிடமிருந்து வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி +2 மாணவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு, மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். புதுக்குப்பம் தொடக்கப் பள்ளியில் பழைய நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து 5ம் வகுப்பு மாணவி ஒருவர், 4ம் வகுப்பு மாணவர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பல சம்பவங்களை மூடி மறைத்துள்ளனர். இதனால் குற்றமிழைத்த ஆசிரியர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைக் கண்காணிப்பதே இல்லை. இதனால் மாணவ, மாணவியர் பாதிக்கும் நிலைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மாணவ, மாணவியருக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், கல்வி அமைச்சர் இதில் தலையிட்டுப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் (Director), இணை இயக்குநர் (Joint Director), முதன்மைக் கல்வி அதிகாரி (Chief Educational Officer) ஆகியோரை உடனே இடமாற்றம் செய்து, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இல்லையேல், பொதுநல அமைப்புகள் சார்பில் கல்வித்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என புதுச்சேரி அரசை எச்சரிக்கிறோம்.

No comments: