சந்திப்பு : இரா.முருகப்பன்
கூத்தினை எப்படி மீளுருவாக்கம் செய்திருக்கின்றீர்கள்? அதனை எப்படி புதிய சமூக உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப் போகிறீர்கள்?
காலங்காலமாக பாரம்பரியமாக எம்மிடையே இருந்து வந்த பண்பாட்டு அடையாளங்கள் இப்போது கவனிக்கப்படாமல் வெற்று முழக்கங்களாக, பேச்சுக்கு மட்டுமே என அதிகாரத் தளங்களில் நீர்த்துப்போக, மக்கள் தங்கள் வாழ்வியல் அம்சங்களை இயல்பாகவே கடைப்பிடித்து வந்தார்கள். ஏற்கனவே கூறியது போன்று ஒரு அடிமை மனோபாவத்தை கற்றுத்தருகிற கல்வியாலும், ஊடகங்களால் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுவதாலும் இன்றைய நெருக்கடியான சூழலைக் கடந்துப் போகத் தெரியாமல், கடக்க வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் சமூகத்தின் அதிகார நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலமையில் இருந்து எப்படி மீள்வது என்பது குறித்து உரையாடுவதற்கான மக்கள் களங்கள் எதுவும் இல்லை. இதற்கான தேடலின் ஒரு பகுதியாகவும், தொடர்ச்சியாகவும்தான் கூத்து மீளுருவாக்கச் செயல்பாடு நடக்கிறது. மக்கள் மய்யப்பட்ட அபிவிருத்திக்கான மாற்றுக் கல்விமுறையாகச் செயல்படுவதே கூத்து மீளுருவாக்கத்திற்கான அடிப்படையாகும். மக்கள் தங்களுக்குத் தேவையான, பயன்படுகின்ற புதிய கல்வி முறையை, புதிய விவசாய அபிவிருத்தியை, புதிய சமூகத்தை உருவாக்கத் தேவையான அனைத்தையும் கூத்தின் மூலமாக&கூத்தரங்கின் வாயிலாகப் பேசி, உரையாடி, தங்கள் தேவைகளை தாங்களே அறிந்து, நிவர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளை தீர்மானிப்பதுதான் சமூக அபிவிருத்தியாகும். இந்த வேலையைத்தான் 'மூன்றாவது கண்' முன் முயற்சி எடுத்து தற்போது ஆறு கிராமங்களில் செயல்படுத்தி வருகிறது.
உலக மயமாக்கலின் விளைவால் சமூகம் தாராளமயப்படுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக சமுதாயச் சிதைவு ஏற்படுகிறது. இதனை மீட்டெடுத்து ஒருங்கிணைந்த புதிய சமூகமாக மீள எழும்புவதற்கான சிந்தனைகளையும், அவற்றை நடைமுறைபடுத்துவதற்கான வழிமுறைகளையும் நாங்கள் தேடுவது அவசியமாகிறது. சமூகம் பல்வேறு பாரம்பரிய கலைகளால் அடையாளம் காணப்படுகிறது. அதில் சாதிரீதியான ஏற்றத்தாழ்வுகள், பால்ரீதியான பாகுபாடுகள் என்கிற கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே நாங்கள் இது சார்ந்து இவற்றை கேள்விக்குட்படுத்திக்கொண்டு, இந்தச் சமுதாயச் சிதைவிலிருந்து எங்களை மீட்டெடுத்து, ஒன்றிணைப்பைக்கொண்ட, பன்மைத் தன்மை கொண்ட, வித்தியாசங்களைக் கொண்டாடுகின்ற சமுதாயமாக மீளுருவாக்கம் பெற்று வளர்வது எங்களுடைய தேவையாக உள்ளது.
பாரம்பரியக் கூத்து மரபு என்பதை கொஞ்சம் விரிவாகக் கூற முடியுமா?
பாரம்பரிய அரங்கு மகிழ்வூட்டலுக்கும், அறிவூட்டலுக்கும் மக்கள் ஒன்றாய்க் கூடுவதற்கான களமாக அமைவதுடன், சடங்குடன் சார்ந்து பக்திக்குரியதாகவும் அமைகிறது. கூத்தின் நோக்கம் நாடும், வாழ்வும் சிறக்கவே ஆடப்படுகிறது என்பது தெரிகிறது. எமது மரபு ரீதியான அரங்க அழகியல் இந்து சமயத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அரங்க வளர்ச்சியில் சமயம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதுவும் இந்து சமயம் இந்த அரங்கில் மேலாண்மை செலுத்தி அதன் வடிவத்தை தீர்மானித்திருக்கின்றது. இறைவன் அருளால் துக்கங்கள் நீங்கி சுகம் கிடைக்கும் என்ற சடங்கு கோட்பாடு, தமிழர் சமய வாழ்வில் கலந்துள்ளது. இந்த சடங்குக் கோட்பாட்டின் பின்னணியில் உருவான நாடகங்களில் அவலமுடிவு ஏற்படாது. கழுத்தை வெட்டும் வேளையில் வாள் மாலையிடும். கடவுள் தரிசனம் கிடைக்கும். பக்திபூர்வமாக எல்லாம் நிறைவு பெறும்.
கூத்தின் நடுப்பகுதி சிக்கலில் ஆரம்பித்து வளர்ச்சி அடைந்து உச்ச நிலைக்கு வரும். இந்த இடத்தில் தர்க்கபூர்வமாக முடிக்க முடியவில்லையெனில், முனிவர் பாத்திரம் தோன்றி சிக்கலை விடுவிக்கும். நாரதரும் கூட இப்பணிக்குப் பயன்படுத்தப்படுவதுண்டு. மேலும் பறையன் வருதல், பறை அறைதல், திருமணம் நடத்தல், வாழிபாடல் என்பவைகளுடன் மங்கல முடிவு என்பதும் மரபாகும். கூத்து, அதை ஆடும் மக்களின் வாழ்வாகவும், வழிபாடாகவும், வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் காணப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது, கூத்து சமஸ்கிருதமயப்பட்டதாகவும்; கூத்து ஆடப்படுகின்ற சடங்கு விழாக்கள் ''சிறுதெய்வக்'' கோயில் சடங்குகளாக பத்தாசி முறையிலமைந்தவையாகவும் இருப்பதாகும். கூத்து தனிமனிதனையோ அல்லது அவனது சிக்கல்களையோ இல்லாமல் சமூகத்தையே பார்க்கிறது. கூத்தில் தர்மம் முக்கியமுடையதாக இருக்கிறது. தர்மத்தின் பக்கம் மற்றும் எதிர்பக்கம் என்றே பார்க்கப்படுகிறது.
மேலும் கூத்தில் வேடர், பறையர், வண்ணார், வண்ணாத்தி போன்ற பாத்திரங்கள் நகைச்சுவை மிக்கதாக கீழ்நிலையில் படைக்கப்பட்டிருக்கும். அண்ணாவியாருக்கும் பறையருக்குமான உரையாடல் நகை சுவைமிக்கதாகவும்; கூத்தாடும் காலத்திற்கேற்பவும் இருக்கும். இதுவொரு சமூக அங்கதமாகவே இருக்கும். அந்தக் கூத்துக்கும் மேற்படி உரையாடலுக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. அதன் நோக்கம் நேரடியாக எதிர்கொள்ள முடியாத பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதே ஆகும். இந்த வகையில் கூத்தரங்கு நேரடி சமூக விமரிசனத்துடனும் தொடர்புபடுகிறது. கூத்தில் அங்கதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதிய ஒடுக்குமுறையை பாரம்பரியம் என்ற பெயரிலோ, கூத்தரங்கின் பண்பு என்ற பெயரிலோ நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. பெண்களை மெலியராகவும் பாலியல் பண்டங்களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் பண்பாடு என்ற பெயரில் பேணவும் முடியாது.
தர்மத்தை நிலைநிறுத்தும் அல்லது மீள நினைவூட்டும் சமூகச் சாதனமாக பாரம்பரிய அரங்கு நிகழ்கிறது என்ற கருத்தாக்கத்தை கண்மூடித்தனமாக ஏற்றுகொண்டுவிடவும் முடியாது. ஏனெனில் இதிகாசங்கள் தர்மத்தை நிலைநிறுத்துவதென்கின்ற கதையாடலின் ஊடாக அதிகாரத்தை நிலைநிறுத்தயிருப்பதையே அவதானிக்க முடிகிறது. சமகால பயங்கரவாதத்திற்கு எதிராக சனநாயகத்தை நிலைநிறுத்தும் சண்டைப் போல!
இந்த வகையில் சமூகத்தை வழிப்படுத்தும் சாதனமாக இயங்கிய கூத்து, சமூகத்தை விளங்கிக்கொள்ளும் சாதனமாகவும் காணப்படுகிறது. இது சமூகத்தையும், அரங்கையும் புதிது செய்வதன் தேவையை உணர்த்துகிறது. இதற்கு எமது எண்ணத்தை காலனித்துவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பது அவசியம். கூத்தின் புத்துருவாக்கம் என்பது உலமயமாதல் மற்றும் நவகாலனித்துவ சிந்தனைகளுக்கு எதிரான சுதேசியச் சிந்தனைப்போக்கின் முன்னெடுப்பே ஆகும். மரபுள் அடங்கிப்போதல் என்ற எமது மரபிலிருந்து எம்மை விடுவிப்பதே இதற்கு அவசியம். புதிய தேடலுக்கு இது எம்மை வழிபடுத்தும். இதைத்தான் நாங்கள் செய்கிறோம்.
அதை எவ்வாறு செய்துகொண்டிருக்கிறீர்கள்?
நாங்கள் ஒவ்வோரு கிராமமாக சென்று கூத்தாடும் அண்ணாவிமார்களுடனும், கூத்தர்களுடனும் அறிவையும், திறனையும் உரையாடுகிறோம். அவர்களுடனான உரையாடல்கள் மூலமாக பகிர்ந்து கொள்கிறோம். ஆரம்பத்தில் சிறிது கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இன்று நம்பிக்கையுடன் நிறையபேர் ஈடுபாடு காட்டுகிறார்கள். கூத்து குறித்து தொடர்ந்து கூத்தர்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம். இதுதான் இன்று எம்மக்களுக்கான உரையாடல் களமாக உள்ளது. மேலும் அகத்திருந்தும் புறத்திருந்தும் வரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் இயங்கவேண்டியுள்ளது. மேலும் கூத்துகளில் சமகாலக் கதைகளைப் பாடி ஆடுவதை முன்பு குற்றமாகக் கருதினார்கள். ஆனால் இன்று பாரம்பரியக்கூத்துகளில் முடிதரித்து வாளேந்தும் கூத்தரே, ''வீரமைந்தன்'' கூத்தில் சீருடையணிந்து துப்பாக்கி ஏந்தி ஆடுகிறார்கள்.
தமிழரது பாரம்பரியக் கூத்தினுடைய இயக்கம் சமூகக் குழுமம் சார்ந்தது. எனவே கூத்தை ஆடும் சமூகக் குழுமத்தில் ஏற்படும் சிந்தனை மாற்றமே கூத்தினை புதிய பொருள் கொண்டதாய் மாற்றும். சமயத்தின் பெயரால், சாதியின் பெயரால், இடத்தின் பெயரால் நடத்தப்படுகிற பாரம்பரிய கூத்துகளை, இவை எல்லாவற்றையும் கடந்த முழுச் சமூகத்திற்கும் உரியதாய் இயங்க வைப்பது பற்றிய சிந்தனையும், செயல்பாடுமே இன்றைய தேவையாய் உள்ளது. பாரம்பரிய கூத்தரங்கினை புத்துருவாக்கம் செய்வது என்பது. அதனை தலைமுறை தலைமுறையாக ஆடிவரும் சமூகக் குழுமத்தின் சிந்தனை மாற்றம் அடையும் போதுதான் முழுமையானதாகும்.
பாரம்பரியச் சிந்தனைப் போக்குடன் போராடுவதும், புதிய நிலைகளைப் புரிந்து கொள்ள முனைவதுடன் உணரவைக்கவும் வேண்டும். நிகழ்கால அனுபவங்களை முழுமையாக வெளிபடுத்த வாய்ப்புள்ளதா என்பது பற்றியும், செயல்முறை அனுபவங்களுக்கு வருவதுமான ஒரு தொடர்ச்சியான நடைமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது.
இதற்காக கூத்தை ஆடும் சமூகக் குழுமத்துடன் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்களுடன் இணைகிறோம். எங்கள் நோக்கங்களை அவர்களுக்கு புரியவைத்து, பகிர்ந்து கொள்ள முயல்கிறோம். அப்போது கிடைக்கிற எதிர்வினைகளை ஆராய்ந்து, இரு தரப்பும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பதுதான் படிநிலை வளர்ச்சி. இதுதான் பாரம்பரியக் கூத்துக் களங்களில் நிகழ்த்தப்பட்டு மெல்ல மெல்ல வெளிநோக்கிக் கொண்டுவருவதாக இருக்கும். இவை நவீன நாடகங்களுக்கும் புதிய பரிமாணங்களைக் கொடுக்கும்.
இவை எங்களுக்கான கடந்த காலத்தில் வேர்கொண்டு, எதிர்காலத்தை நோக்காக வைத்து சமகால அனுவங்களுடன் தொடர்புகொண்டு சுதேசிய நவீனவாதத்தை விருத்தி செய்ய வழிவகுக்கும். இந்தச் செயல்பாடு அரங்குடன் மட்டும் தொடர்புடையதல்ல; சமகால உலகச் சூழ்நிலையின் பின்னணியில் முழுச் சமூகமும் சார்ந்ததாகும்.
சடங்குகள் தற்போது சமற்கிருதமயமாக, அதாவது ஆகமமயமாகி வருகிறது என்கிறீர்களே எப்படி?
கிழக்கு மாகாணத்தின் மட்டகளப்பு சூழலை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், பாரம்பரியக் கலையாக கூத்து விளங்குவதுபோல், சமுதாய மயப்பட்ட நம்பிக்கையுடன் கூடிய இன்னொரு விழாவாக சடங்குகள் காணப்படுகின்றன. சடங்குகளின் நோக்கம், அதன் சாராம்சம், இந்த உலகத்தில் மனிதர்கள், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வது என்பதாகத்தான் இருக்கிறது. அதே நேரம் இந்த சடங்குகள் சூழல் சார்ந்து எங்களுடைய சாப்பாட்டு பழக்க வழக்கங்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தளத்தில் ஒன்றிணைந்து ஆற்றுப்படுத்தல்களை, வழிபடுதல்களை ஏற்படுத்துகின்ற களங்களாகவும் இது இருந்து வருகின்றது. ஆனால் எங்களின் நவீன அறிவு, நவீன கல்வி முறையானது இந்த விடயங்களை நாகரிகமற்றதாக, காட்டுமிராண்டித்தனமாக அல்லது மூடநம்பிக்கையாக பார்க்கின்ற பார்வையன்று மிக வலிதாகவே காணப்படுகின்றது.
இந்தப் பாரம்பரிய சடங்குகளுடைய சாதகம், பாதகத்தினை நாங்கள் அதனூடாக புரிந்து கொள்வதற்கு மாறாக, நவீன அறிவு எங்களில் ஏற்படுத்தியிருக்கின்ற சிந்தனை மாற்றத்தின் விளைவாக, ஒரு மூட நம்பிக்கையின் தளமாக அல்லது காட்டுமிராண்டித்தனமாக அல்லது பிற்போக்குதனமானதாக, நாகரீகமற்றைவையாக பார்க்கின்ற ஒரு பார்வை காணப்படுகின்றது. இன்றைய உலகமயமாக்கல் ஆக்கிரமிப்பு பண்பாட்டுச் சூழலில் மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிந்தனை ரீதியாக அவர்கள் மழுங்கடிக்கப்பட்டு, வெறும் நுகர்வுச் சக்தியாக ஆக்கப்படுகின்ற நிலைமையில், பலர் மூகச் சமூகமாய் தங்களுக்கிடையில் சந்தித்து உரையாடி செயற்படுகின்ற ஒரு சமூகமயப்பட்ட களங்களாக இருக்கிற பாரம்பரிய விழாவான சடங்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்த உலகமயமாகல் ஆக்கிரமிப்பு பண்பாட்டு சூழலுக்கு எதிராக, இந்த சடங்குகளை எப்படி பிரயோகிக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதின் வெளிப்பாடாக இந்த சடங்குகளில் காணப்படுகின்ற உலக மையப்பட்ட சிந்தனை, அதாவது உலகத்தில் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்வாகவும் வாழ்தலை அது அடிப்படையான நோக்கமாக கொண்டிருக்கிறது. சூழல் சார்ந்த வாழ்க்கைமுறை, உணவு முறை அதனூடான வாழ்வியல் அம்சங்கள் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் நாங்கள் மீளவும் ஒரு ஒருங்கிணைந்த சமுதாயமாக செயல்படுவதற்கான ஒரு சாத்தியப்பாடாக நாங்கள் சடங்குகளிலும் வேலை செய்கின்றோம்.
அதே நேரத்தில் கூத்தில் கூறியது போன்று சடங்குகள் சார்ந்தும் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள், பால் ரீதியான பாகுபாடுகள் குறித்தும் மீளுருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பான உரையாடல் இன்று மட்டக்களப்புச் சூழலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்றாவது கண்ணின் முக்கிய நோக்கமாகவும் அது அமைந்திருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் எதிர்கொள்கின்ற சாவால் என்னவென்றால் இந்தப் பாரம்பரிய சடங்கு கோயிலில் இப்போது ஆகம முறைகள் கொண்டுவரப்படுவதுதான். படித்தவர்களுடைய கருத்து நிலைமாற்றம், அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் இந்த் பாரம்பரிய முறைக்கும் ஆகம வழிபாட்டுக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்துகொள்ளாத நிலை, அவர்களிடம் செல்வாக்குச் செலுத்துகின்ற நவீன அறிவுசார்ந்த சிந்தனைப்போக்குகள் மிக வேகமாக ஆகம வழிபாட்டுக்குக் கொண்டுசெல்வதாக இருக்கிறது. இதில் அடிப்படையான விடயம் என்வென்றால் எல்லா மக்களும் நெருங்கி, ஒன்றாக இணைந்து செயற்பட்டு வந்த சடங்குமுறைகளில் இருந்து புறந்தள்ளப்படு, அன்னியப்படுத்தப்பட்டு வழிபட்டு செல்பவர்களாக மட்டுமே மாறியுள்ளதுதான்.
இதன் முக்கியமான இன்னொரு அம்சம் என்னவென்றால், மாரியம்மன் என்பது ராஜராஜேஸ்வரியாகவும், பெரியதம்பிரான் என்பது தக்கயாகேஸ்வரராகவும், வல்லியப்பர் வல்லிப்புர ஆழ்வாராகவும் மாற்றப்பட்டு, நேரிடையாக நாங்கள் சம்பந்தப்பட்ட சடங்குகளில் இருந்து புறந்தள்ளப்பட்டவர்களாக, எங்களை நாங்களே தீண்டத்தகாதவர்களாக ஆக்கிக் கொள்கின்ற நிலைமை ஏற்படுவதையும் அவதானிக்கலாம்.
எனது சொந்த இடமான யாழ்பாணம் கோன்டாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான வல்லியப்பர் கோயில் வல்லிப்புர ஆழ்வாராக மாற்றப்பட்டபின், அங்கு வந்த குருக்களே அர்ச்சனை தட்டுகளை 'உயர்சாதி' ஆட்களுக்கு கொடுப்பவர்களாக இருக்கின்றனர். முன்பு, வள்ளியப்பராக இருந்தபோது பிறசாதியினர் போகாத கோயில், இப்போது வள்ளிப்புர ஆழ்வாராக ஆனபின்பு பிறசாதியினர் போவதும், அந்தக் கோயிலுக்கு பொறுப்புடையவர்கள் அர்ச்சனை தட்டை எடுத்து பிற சாதியினருக்கு கொடுக்காமல், அந்த பூசாரியே நேரிடையாக கொடுப்பது என்பது, நாங்களாகவே எங்களை ஒரு தீண்டாமைக்கு உட்படுத்திக்கொள்கிற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை என்பது சடங்கு கோயில்கள், ஆகம மரபுக் கோயிலாக மாறுகின்தால்தான் என்பதினை தெளிவாகக் காணலாம்.
கூத்து, சடங்கு, பறை என்கிற இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், ஒரு சமுதாய மயப்பட்டதாகவும், மக்கள் மயப்பட்டதாகவும் சமுதாய விழாவாகவும் இருந்து வருகின்றது. சடங்கின் இயக்கத்தின் அடிநாதமாக பறையினுடைய அடி நாதம் காணப்படுகின்றது. கூத்திலும் பறை என்பது குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வருகின்றது. அதே நேரம் சாவு, சடங்கு, சமூகம், விழா சார்ந்த சமூகத்தின் பல்வேறு சமுதாய மையப்படுத்தப்பட்ட விழாக்களையும் ஊடுருவி கொண்டதாக இருக்கிறது. இன்றைய சமூகச் சூழலில் பல சாவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இந்த விடயங்கள் நிராகரிக்கப்படு, கைவிடப்பட்டு தவிர்க்கப்படவேண்டியவை என்று சொல்லப்படுகின்றது.
இந்த நேரத்தில், நாங்கள் சுயாதீனமான சமூகங்களாக வாழ்வதற்கானச் சாத்தியப்பாடுகளை ஆக்கிக்கொள்வது, சடங்கு வழிமுறைகளை ஒரு செயல்முறையாக அதற்கான சாதனமாக ஆக்கிக்கொள்வது என்ற வகையில், அதுவும் குறிப்பாக இன்றைய இலத்திரணவியல் ஊடகங்களின் ஆக்கிரமிக்குப்பின் காரணமாகவும், புதிய கல்வி முறைமையின் காரணமாகவும், உலமயமாக்கல் ஆக்கிரமிப்புப் பண்பாட்டு சூழல் காரணமாகவும் எங்கள் சமுதாயம் சிதைந்து வருகின்ற ஒரு சூழ்நிலையில், நாங்கள் சமத்துவமான சமூகங்களாக எங்களை மீளவும் உருவாக்கிக்கொள்ள ஒரு சமூக செயற்பாட்டுக் களமாக கூத்து சார்ந்து, சடங்கு சார்ந்து, பாரம்பரிய விளையாட்டுகள், கலைகள் சார்ந்து செயற்பட்டு வருகிறோம்.
இன்றைய போர்சூழலை மக்கள் எப்படி எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்?
எங்கள் இருப்பும், எங்கள் வாழ்வும் எங்கள் கைகளில் இல்லை. வாழ்தல் என்பது விபத்து போன்றது. எந்த நேரத்திலும் எவரும் கொல்லப்படலாம், கடத்தப்படலாம், காணாமல் போகலாம், இதுதான் யதார்த்தாமாக உள்ளது. யாரால் என்பது பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரியாது. இனங்காணப்படாத குழுக்களால் இவை நடைபெறுகின்றன. காணாமல் போனது குறித்தும், கடத்தப்பட்டது குறித்தும், கொல்லப்பட்டது குறித்தும் ஏராளமான கதைகள், நியாயப்படுத்தல்கள் தொடர்ந்து நடக்கும். எந்த நேரத்திலும், எவருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். நான் வாழ்கிறேன் என்றால் அது விபத்து. அகதியாக அட்டை பதியவும்; நிவாரணம் வாங்கவும் விதிக்கப்பட்டு முகாம்களில் கையேந்தி வரிசையில் நிற்கும் சமூகமாக மாற்றப்பட்டுள்ளோம். பண வசதி படைத்தவர் குழந்தைகளுக்கு on the spot admission ஏனைய குழந்தைகளுக்கு on the spot kidnapping or killing.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழப்பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி நகராமல் உள்ளதே. முடிவுதான் என்ன?
நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று பல நாடுகள் தலையிடுகின்றன. ஆனால் அந்த நாடுகள் எல்லாம் தங்கள் தேசத்து மக்களை, நாங்கள் எதிர்கொள்கிற பிரச்சனைக்களை விடவும் மிக மோசமாகத்தான் வைத்திருக்கின்றன. நடத்துகின்றன. எங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும், முடிவு செய்யவேண்டும். அதற்காக உரையாடல்களை கூட நாங்களேதான் முன்னெடுக்க வேண்டும். அரசியல் தீர்வு மட்டும் இல்லாமல், சமூக பொருளாதார ரீதியிலான தீர்வும் முக்கியம் என்பதை உணரவேண்டும். இதுகுறித்து சிந்தனை மாற்றம் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வேண்டும். அரசியல், வரலாற்று ரீதியாக மட்டுப்படுத்தி கொள்ளாது சமூக, பொருளாதார ரீதியாக சிந்தித்துச் செயற்படும் போதுதான் இலங்கைச் சூழலில் அரசியல் தீர்விற்கு போகமுடியும்.
-நிறைவு-
முந்தைய நேர்காணலின் பகுதி
நன்றி: தலித் முரசு, ஆகஸ்ட் 2007
Thursday, August 16, 2007
"பன்மைத் தன்மைக் கொண்ட சமூகமாக மீண்டெழுகிறோம்" - ஈழக் கலைஞர் சி.ஜெய்சங்கர்
Wednesday, August 15, 2007
தினமணியின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் காலமானார் : அஞ்சலி
அரை நூற்றாண்டு காலமாகப் பத்திரிகை துறையில் பணியாற்றிய "தினமணி"யின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் காலமாகிவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெற்குப்பை என்ற சிறிய கிராமத்தில் பிறந்த இவர், மேலைச்சிவபுரியில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கி, மதுரை தியாகராசர் கல்லூரியில் பி.ஏ. படித்தார். பி.ஏ. தேர்வு முடிவு வருவதற்கு முன்னதாகவே, தனது 22-ஆம் அகவையில் மதுரையில் கருமுத்து தியாகராச செட்டியார் நடத்திய "தமிழ்நாடு" நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்து, மதுரையிலும் சென்னையிலும் நான்கு ஆண்டுகள் செய்தியாளராகப் பணிபுரிந்தார்.
பின்னர், 1960-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரான ராம்நாத் கோயங்கா நடத்திய செய்தி நிறுவனமான "இந்தியன் நியூஸ் சர்வீசில்" இணைந்து ஓராண்டு பணியாற்றினார். 1961-இல் "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில நாளிதழில் செய்தியாளராகப் பணியில் சேர்ந்தார்.
பின்னர், "தினமணி"யின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தினமணி ஆசிரியராகப் பதவியேற்று 9 ஆண்டுகள் பணியாற்றினார். தினமணி ஆசிரியராக இருந்தபோது, சென்னை "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" உறைவிட ஆசிரியராகவும் ஓராண்டு காலம் கூடுதல் பொறுப்பு வகித்தார். 2004-இல் தனது 69-ஆம் அகவையில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்றார்.
கல்லூரிக் காலம் தொடங்கிப் பெரியார் பற்றாளரான இவர், தீவிர கடவுள் மறுப்பாளராக வாழ்ந்தார். தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளைப் புறந்தள்ளி வந்தார். தமிழ்ப் பற்றாளர். அவர் கொண்ட கொள்கைகள் அவ்வப்போது பத்திரிகையில் வெளிப்படுவதுண்டு. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலமை உடையவர்.
இராம.திரு.சம்பந்தம் பற்றி எனக்குப் பல்வேறு தகவல்களைக் கூறி அறிமுகப்படுத்தியவர் தற்போது பி.பி.சி. தமிழோசையின் பொறுப்பாளராக இருக்கும் மணிவண்ணன். இராம.திரு.சம்பந்தம் அவர்களுடனான என் நட்பு மிகவும் நெருக்கமானதோடு, பாசப் பிணைப்புக் கொண்டது.
2000-ஆவது ஆண்டு சந்தன வீரப்பன் பிடியிலிருந்து கன்னட நடிகர் இராஜ்குமார் மீட்கப்பட்டு, நாங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சில நாட்களில், சென்னையில் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் மகள் அமலாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் நான் கலந்துக் கொண்டேன். அப்போது "இந்தியன் எக்ஸ்பிரஸ்" தலைமைச் செய்தியாளராக இருந்த கோலப்பன் எங்களிடம் வந்து, என்னையும், பேராசிரியர் கல்யாணியையும் (தற்போது கல்விமணி) இராம.திரு.சம்பந்தம் சந்திக்க வேண்டும் என்றுகூறி, அண்ணா சாலையில், "எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ்" வளாகத்திலிருந்த "தினமணி" அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவ்ர் "தினமணி"யின் ஆசிரியர்.
அங்கு ஆசிரியருக்கானத் தனி அறையில் நானும் கல்யாணியும் அவரைச் சந்தித்தோம். நடிகர் இராஜ்குமார் மீட்பு தொடர்பானச் செய்திகளை அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார். அப்போது இரவு 8.30 மணியிருக்கும். "பொதுவாக இந்த நேரத்தில் யாரையும் சந்திக்கமாட்டேன், வேலை பளு அதிகமாக உள்ள நேரமிது, பக்கங்களை முடிக்க வேண்டும், இருந்தாலும் உங்களைச் சந்திக்கிறேன்" என்று கூறினார். அவர் சாப்பிட கொண்டு வந்த உணவை எங்களுக்குப் பகிர்ந்தளித்தார்.
அப்போது கல்யாணி, தான் எழுதிய கிராமப்புற இடஓதுக்கீடு பற்றிய கட்டுரையை "தினமணி"யில் வெளியிட முடியுமா? என்று கேட்டு, கட்டுரையை அவரிடம் கொடுத்தார். அதைப் பார்த்த அவர் "பெரியதாக இருக்கிறது, இப்போது கட்டுரைப் பக்கத்தை இரண்டு பகுதியாகப் பிரித்துவிடோம். சுறுக்க முடியமா? சுகுமாரன் இதை "எடிட்" செய்து தாருங்கள்" என்று கூறினார். அவரது அறைக்குள் அவரது மேசையிலேயே அக்கட்டுரையை "எடிட்" செய்துக் கொடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு, "சரியாக இருக்கிறது, வெளியிடுகிறேன்" என்றுகூறி இரண்டு நாள் கழித்து வெளியிட்டார்.
பத்திரிகைத் துறையில் "பெரிய ஜாம்பாவனாக" கருதப்படும் இராம.திரு.சம்பந்தம் என்மீது நம்பிக்கை வைத்து, எனக்கு அப்பணியை அளித்தது அப்போது எனக்குப் பெருமையாக இருந்தது.
அதன்பின்னர், பல சந்தர்ப்பங்களில் அவரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளேன். அடிக்கடி தொலைபேசியில் அழைத்துப் பல்வேறு தகவல்கள் கூறியுள்ளேன். பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்றபின், அவரோடு ஒன்றிரண்டு முறைதான் பேச முடிந்தது. நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தபோது அவரைச் சென்று பார்க்க முடியாமல் போய்விட்டது.
14-08-2007 அன்று காலை 10 மணியளவில், "தினமணி"யின் புதுச்சேரி செய்தியாளர், அவர் இறந்துவிட்ட செய்தியைக் கூறினார். அதிர்ச்சியாக இருந்தது. இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்று எண்ணி சென்னைக்குத் தொடர்புகொண்டேன். அவரது இரு கண்களையும் இராஜன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் அகற்றிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். அவர் தன் இரு கண்களையும் தானம் செய்துள்ளார். மேலும், தன் உடலை இராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொடையாக அளித்துள்ளார். இறந்த ஆறு மணி நேரத்திற்குள் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைத்துவிட வேண்டும் என்பதால் அவரது உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆகையால், அவரது உடலைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.
தமிழகத்தின் பல தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு என் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் அவரது மனைவி கண்ணாத்தாள் அவர்களுக்கும், உறவினர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் கடைசி வரையிலும் பத்திரிகையாளராகவே இருந்தார் என்பதற்குச் சான்று அவரைப் பற்றிய குறிப்பை அவரே, தனக்குப் பிடித்த கறுப்பு மையால் நல்ல ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார்.
தமிழகத்தில் பல செய்தியாளர்களை உருவாக்கிய இராம.திரு.சம்பந்தம், இளைய சமுதாயத்திற்குச் சிறந்த முன்மாதிரி. அவரது கடுமையான உழைப்பு அனைவரும் பின்பற்ற வேண்டியது.
காலம் ஒரு தலை சிறந்த பத்திரிகையாளரைக் கொண்டு சென்றுவிட்டது.
வணிக அவையின் சொத்துகளை அரசே ஏற்று, தேர்தல் நடத்த புதுச்சேரி முதல்வரிடம் வலியுறுத்தல்
புதுச்சேரியில் உள்ள வணிக அவையின் சொத்துகளை அரசே ஏற்று தேர்தலை நடத்தி வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில வணிக சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 14-08-2007 அன்று புதுவை முதல்வர் ந.ரங்கசாமியிடம் நேரில் அளிக்கப்பட்ட மனுவின் விவரம்:
கடந்த 1966 ஜூலை 17-ஆம் நாளன்று வணிக அவைக்கான தேர்தல் அறிவிப்பை புதுச்சேரி ஆளுநர் வெளியிட்டார். மேயர் தலைமையில் தேர்தல் நடந்தது. இதுதான் வணிக அவையில் நடந்த கடைசி தேர்தல்.
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிந்த பின்னரும் இதுவரை வணிக அவைக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. வணிக அவைக்குத் தேர்தல் நடத்துவது புதுச்சேரி அரசின் கடமை.
தேர்தலை நடத்தத் தவறியதால் வணிக அவையின் சொத்துகள் முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன. பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவை ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வணிக அவையின் சொத்துகள் இச்சங்கத்தின் சொத்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த வணிக அவையை உண்மையான வியாபாரிகளின் அமைப்பாக மாற்றுவதற்கு வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப் பிரச்சி்னையில் தாங்கள் தலையிட்டு வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் வணிக அவையின் சொத்துகளை அரசே ஏற்று தேர்தலை நடத்தி வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.
இம் மனு அளிக்கும்போது முதலியார்பேட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.இராஜசேகரன், செயலர் ஆர்.திருவேங்கடம், ஆலோசகர் இரா.அழகிரி, புதுவை மளிகை மொத்த வியாபாரிகள் சங்கச் செயலர் எஸ்.கே.தண்டபாணி, நுகர்பொருள் விநியோகிப்பாளர் சங்கச் செயலர் மொ.தேவகுமார், பெரிய மார்க்கெட் மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எ.சதாசிவம், செயலர் வி.இராமலிங்கம், வணிக அவை உறுப்பினர் ஏ.எஸ்.முகமது நிஜாம், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Wednesday, August 08, 2007
புதுச்சேரி வணிக அவையின் சொத்துக்களை மாற்றம் செய்யக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரியில் பிரெஞ்சு டிகிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வணிக அவைக்குச் சொந்தமான சொத்துக்களை உள்ளது உள்ளபடியே (Status Quo) வைத்திருக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் தாக்கல் செய்த மனுமீது தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி. ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 16-ஆம் நாளன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :
புதுச்சேரியிலுள்ள வணிக அவை கடந்த 1849-இல் உருவாக்கப்பட்டது. இதற்கு 1914 மார்ச் 7-இல் சட்டப்படியான அந்தஸ்து வழங்கப்பட்டது. மேலும், வணிகர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு கடந்த 1934 ஜுலை 6-இல் பிரெஞ்சு குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு பிரெஞ்சு டிகிரி உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயல்பட்டு வந்தது.
மேற்சொன்ன பிரெஞ்சு டிகிரியில் வணிக அவைக்கு யார் யார் உறுப்பினராகலாம். தேர்தல் நடத்துவது, தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல் இறுதி செய்வது, பிரச்சினைகள் ஏற்படும்போது தீர்ப்பது குறித்து வரையறை செய்யப்பட்டுள்ளது.
வணிக அவை உருவாக்கப்பட்டபின் அதற்கென சுப்பையா சாலையில் 12 குடோன்கள் வாங்கப்பட்டன. சுய்ப்ரேன் வீதியில் அலுவலகத்திற்கென ஒரு கட்டடம் வாங்கப்பட்டது. இந்த சொத்துக்கள் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான பணத்திலிருந்து வாங்கப்பட்டன. இந்த சொத்துக்கள் அனைத்தும் புதுச்சேரி அரசுக்குச் சொந்தமானவை.
கடந்த 17-07-1966-இல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வணிக அவையின் உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் 1968 டிசம்பர் 3-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. தேர்தல் புதுச்சேரி மேயர் தலைமையில் நடந்தது. இதுதான் வணிக அவையில் நடந்த கடைசி தேர்தல். இத்தேர்தலின்படி தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 1975 வரை அதாவது 6 ஆண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தனர். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தற்போது வழக்கின் வாதிகளான நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோரும் எஸ்.பாக்கியம் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரும் மேற்சொன்ன நா. கோவிந்தசாமி, அ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் தொடர்ந்து உறுப்பினர்களாக நீடித்தனர். மேலும், தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் வணிக அவைக்குச் சொந்தமான சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்த முற்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்தபின்னரும் இதுவரையில் வணிக அவைக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. மேற்சொன்ன நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வணிக அவையின் சொத்துக்களை வாடகைக்கு விடுதல், வாடகை வசூலித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.
இந்திய அரசியல் சட்டம் பிரிவு 294, 295-படி வணிக அவைக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் புதுச்சேரி அரசுக்குச் சொந்தமானவை. அப்போதைய வருவாய்த் துறையால் `பதாந்த்' என்ற வரி வசூல் மூலம் கிடைத்த தொகையில் இருந்து இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டன. மேலும், வணிக அவைக்கு தேர்தல் நடத்தும் கடமை புதுச்சேரி அரசினுடையது. ஆனால், இவ்வழக்கின் வாதிகளான தலைமைச் செயலர், உள்ளாட்சித் துறை செயலர், புதுச்சேரி நகராட்சி மேயர் ஆகியோர் தேர்தல் நடத்த தவறியதலால் வணிக அவையின் சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தபடுவதோடு பல்வேறு ஊழலுக்கு வழி வகுத்துள்ளது.
இதன் உச்சகட்டமாக பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவையை மேற்சொன்ன நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஒரு சங்கமாக புதுச்சேரி சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், சங்கங்களின் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர். பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவையின் சொத்துக்கள் அனைத்தையும் இச்சங்கத்தின் சொத்துக்களாக மாற்றியுள்ளனர். மேலும், நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்களைச் சங்கங்களின் பதிவுச் சட்டப்படி பதியப்பட்ட வணிக அவையின் ஆயுள்கால உறுப்பினராக அறிவித்துக் கொண்டனர். இவர்களின் இந்த நடவடிக்கை மாபெரும் பகல்கொள்ளையாகும்.
இதுகுறித்து கடந்த 21-10-2005 அன்று புதுச்சேரி அரசுக்கு, வணிக அவையில் ஊழல், முறைகேடுகள் செய்த நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி மனு அனுப்பி இருந்தேன். ஆனால், இதுநாள்வரை அம்மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த நீதிமன்றத்தில் உரிய நிவாரணம் வேண்டி இம்மனுவை தாக்கல் செய்துள்ளேன்.
எனவே, இந்த நீதிமன்றம் கீழ்காணும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுகிறேன்.
1. சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், சங்கங்களின் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ள வணிக அவையின் செயல்பாடுகளுக்கு இவ்வழக்கு முடியும் வரையில் இடைக்கால தடை விதித்து உத்திரவிட வேண்டும்.
2. புதுச்சேரி அரசின் தலைமைச் செயலர், உள்ளாட்சித் துறை செயலர், புதுச்சேரி நகராட்சி மேயர் ஆகியோர் வணிக அவையின் நிர்வாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர உத்தரவிடவேண்டும்.
3. பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவைக்கு தகுதியானவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து புதுச்சேரி நகராட்சி மேயர் உறுப்பினர் பட்டியல் தயார் செய்ய உத்தரவிட வேண்டும்.
4. இவ்வாறு இறுதி செய்யப்பட்ட உறுப்பினர் பட்டியல் அடிப்படையில் பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவைக்குத் தேர்தல் நடத்த தலைமைச் செயலருக்கு உத்திரவிட வேண்டும்.
5. சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், சங்கங்களின் பதிவுச் சட்டப்படி பதிவு, செய்யப்பட்ட வணிக அவையின் சான்றிதழை செல்லாது என அறிவித்து உத்திரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு மீது கடந்த 27-07-2007 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் கீழ்க்காணும் உத்திரவைப் பிறப்பித்துள்ளது.
வாதிகளான நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், அதற்கு இருவரும் வரும் 16-08-2007 அன்று விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே தீர்வு காணப்படும்.
இந்த இடைப்பட்ட காலத்தில், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில் வணிக அவையின் சொத்துக்களை உள்ளது உள்ளபடியே வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.கீதா, அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் கே.சசிதரன் ஆஜரானார்கள்.
Tuesday, August 07, 2007
“என்கவுன்டர்’’ செய்த போலீஸ் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் - கோ.சுகுமாரன்
போலி மோதல் கொலைகள் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் 21-07-2007 சனியன்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கோ.சுகுமாரன் கலந்துக் கொண்டு பேசியதாவது:
இந்தியா முழுவதும் போலி மோதல் கொலை தொடர்பாகப் போடப்படுகின்ற முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது ஏன் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது தனிப்பட்ட காவலதிகாரிகளோ, காவல்துறை உயரதிகாரியோ தீர்மானிப்பது இல்லை. குறிப்பிட்ட மக்கள் சமூகத்தை நோக்கி இந்த மோதல் ஏவப்படுகின்றது. இதன் பின்னனியைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியம் வரும். தொடக்கத்தில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விசாரணை என்ற பெயரில் அவர்களுடைய வீடுகளில் இருந்தோ அல்லது தெருக்களில் இருந்தோ அழைத்துச்சென்று, மோதலில் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லி கொலை செய்வது நடந்தது.
ஆனால், இன்று குஜராத்திலும், மும்பையிலும் போலிமோதலில் இஸ்லாமியர்களைக் குறி வைத்துள்ளார்கள். மும்பையில் தாதாக்களைக் கொல்கிறோம் என்ற பெயரில், ஒரு தாதா குழுவிடம் பணம் பெற்றுக்கொண்டு இன்னொரு தாதா குழுவில் உள்ளவர்களைச் சுட்டுக்கொன்று பெரும் பணக்காரர்களாக, கோடீசுவரர்களாக ஆகியுள்ளனர் பல போலீஸ்காரர்கள் என்ற செய்தியெல்லாம் இப்போது வந்து கொண்டிருக்கிறது. இந்த போலீஸ்காரர்களைப் பத்திரிகைகளும், அரசாங்கமும் ’என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகள்’ என்று சொல்லி, இதற்காவவே இவர்கள் பிறந்து வளர்ந்தவர்கள் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தி, என்கவுண்டருக்கு ஆதரவாக ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
1996-ஆம் ஆண்டு ஆந்திராவில் மிக அதிகமாக என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டபோது, இந்திய அளவிலான உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டபோது, அதில் நானும், இங்குள்ள பேராசியர் சரஸ்வதி அவ்ர்களும் பங்குபெற்று, ஆந்திராவில் நக்சல்பாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள 4 மாவட்டங்களைச் சுற்றிப் பார்த்தோம். அந்த ஆண்டில் மட்டும் 165-க்கும் மேற்பட்டவர்கள் மோதல் என்ற பெயரில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வேடிக்கை என்னவென்றால், ஒரு போலிமோதல் நடந்த இடத்தை பத்திரிக்கையாளர்கள் சென்று பார்த்தபோது, அங்கு சில இடங்களில் போலீசார் சிலர் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த பள்ளங்கள் எல்லாம் நக்சல்பாரிகள் குண்டு வீசியதால் ஏற்பட்டது என்று பின்பு காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆந்திராவில் பல மாவட்டங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இயக்கத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று வாராங்கல் மாவட்ட ஆட்சியரே எங்களிடம் கூறினார். அப்போது சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்துகொண்டு லேப்டாப்பில் கிராமங்களை இணைப்பதாகக் கூறிகொண்டிருந்த நேரம்.
மக்களுக்காக பள்ளிகளை நடத்துவது, தண்ணீர் மற்றும் சாலை வசதிகள் போன்ற மக்களுக்குத் தேவையானவைகளை செய்துகொண்டிருந்த இயக்கத்தைச் சேராத, அந்த பொதுநலவாதிகளை எல்லாம் ஆந்திர அரசு நக்சலைட் என்ற பெயரில் சுட்டுக்கொன்றது. 1996-1998 காலகட்டத்தில்தான் மிக அதிகமாக என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்துப் போராட்டங்களும் நிறைய நடந்தது. அதன் தொடர்ச்சியாகத்தன் தேசிய மனித உரிமைகள் ஆணையம், என்கவுண்டர் நடந்தால் உடனடியாக அதை நிகழ்த்திய காவல்துறை அதிகாரிகள் மீது இ.த.ச பிரிவு 302-இன் படி கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலை அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரரேசங்களுக்கும் பிறப்பித்தது. ஆனால், இதை யாரும் கண்டுகொள்வது இல்லை.
கடந்த மாதம் 26-ஆம் தேதி மும்பையில், போலிமோதல் படுகொலை குறித்து ஒரு இந்திய அளவிலான மாநாடு நடைபெற்றது. ஆந்திரா, குஜராத், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இருந்து நிறைய பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து நானும், முத்துலட்சுமிவீரப்பன், அக்னி சுப்ரமணியன் போன்றோர் பங்கேற்றோம். என்கவுண்டரில் கொல்லப்பட்ட பல்வேறு இசுலாமிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பேசினார்கள். அப்போதுதான், இதுவரையில் இந்தியாவில் மோதல் என்ற பெயரில் கொல்லப்பட்டவர்கள் குறித்த முழுப்பட்டியல் நம்மிடம் இல்லை என்பதை உணர்ந்தோம். இதுவரை நடந்த போலிமோதல் கொலைகளைத் தொகுப்பதற்காக, இங்கு வந்துள்ள மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எச்.சுரேஷ் தலைமையில் ஒரு ஆவணப் பதிவகம் தொடங்கப்பட்டது.
இதுபோன்ற மாநாடு மற்றும் கருத்தரங்களை இப்போது நடத்தவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டில் 1996 முதல் 2007 வரை ஏறத்தாழ 24 பேர் போலிமோதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இப்போதுள்ள திமுக அரசு 2006-இல் பதவியேற்றதிலிருந்து இன்றுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். அதிமுக ஆட்சியில் போலிமோதலில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவியை, திமுக தேர்தலில் நிற்கவைத்து போலிமோதலுக்கு எதிராக இருப்பதாகக் கூறி வாக்குகளைப்பெற்று இன்று மத்திய அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது. ஆனால், இன்று இந்த திமுக ஆட்சியில்தான் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்திய அளவில் நக்சல்பாரிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக போலிமோதல் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதுபோல், தமிழகத்தில் காவல்துறையினர் சாதி அடிப்படையில் போலி மோதலை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் தஞ்சைப்பகுதியில் முட்டை ரவி என்பவரை போலீசார் படுகொலை செய்தனர். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திமுகவிற்கும் நெருக்கமானவர். கோபமுற்ற கள்ளர்களைச் சமாதானம் செய்வதற்காக தலித் சமூகத்தைச் சேர்ந்த மணல்மேடு சங்கரை கொலைசெய்தனர்.
மணல்மேடு சங்கர் நீதிமன்றக்காவலில் இருக்கும்போது, தான் போலீசாரால் என்கவுண்டரில் கொலை செய்யப்படலாம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் வழக்கில், நீதிமன்றத்தில், காவலதிகாரி ஜாபர்சேட் என்கவுண்டர் போன்ற திட்டம் எதுவும் இல்லை, அப்படி எதுவும் செய்யமாட்டோம் என்றும் உரிய பாதுகாப்பு அளிக்கிறோம் என்றும் கூறினார். ஆனால், அடுத்த சிலவாரங்களில் மணல்மேடு சங்கர் போலிமோதலில் படுகொலை செய்யப்பட்டார். இதுமட்டுமில்லாமல் அரசியல் ரீதியாக பாமக-விற்கு தொல்லை தரவேண்டும் என்பதற்காக, அக்கட்சிக்கு ஆதரவாக இருந்த பங்க் குமார் என்பரை கொலை செய்தனர்.
காவல்துறை இன்று அரசாங்கத்தின் கைக்கூலியாக இருந்துகொண்டு, அரசாங்கம் என்ன நினைக்கிறதோ அதை செய்வதற்கு என்கவுண்டரை பயன்படுத்துகிறார்கள். இதுதான் இன்றைய தமிழகத்தின் மோசமான நிலை.
இப்போது விஜயகுமாரை தேனிமாவட்டத்தில் நக்சல்பாரிகளைப் பிடிப்பதற்காக அனுப்பி இருக்கிறார்கள். வீரப்பனைப் பிடிக்க அனுப்பப்பட்ட காவலதிகாரிகள் பலரும் விஜயகுமாருடன் இணைக்கப்பட்டுள்ளார்கள். இன்று சட்டத்தின்படி பார்த்தால் விஜயகுமார் ஒரு கொலைக் குற்றவாளி். இதுவரை 12 பேரை போலிமோதல் என்ற பெயரில் சுட்டுக் கொலை செய்துள்ளார். நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு அழைத்துசெல்லும் வழியில் ராஜாராமனை சுட்டுக்கொன்றார்கள். ஏற்கனவே பிடித்து வைத்திருந்த் சரவணனை, ராஜாராமனை கடத்த முயன்றதாகக் கூறி சுட்டுக்கொன்றார்கள். இதெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலைகள். இத்துடன் வீரப்பன் படுகொலையும் அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் உள்ளது. சி.பி.ஐ விசாரனை கேட்டு போடப்பட்டுள்ள வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலைமையில் தேனி மாவட்டத்திற்கு விஜயகுமாரை அனுப்பியிருப்பது என்பது, தமிழக அரசு அப்பட்டமாக என்கவுண்டர் செய்வதை ஆதரிக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.
எனவே, அரசு உடனடியாக விஜயகுமாரை அப்பகுதியிலிருந்து திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்கவேண்டும். விஜயகுமார் குழுவினரை பெரியகுளம் பகுதிக்கு அனுப்புவதன் மூலம், ஏதோ அந்தப் பகுதியே மிகமோசமான, பதட்டமான பகுதி என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.
இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். முன்பெல்லாம் என்கவுன்டர் நடப்பது முடிந்த பிறகுதான் நமக்குத் தெரியும், பத்திரி்கைகளில் செய்தி வரும். ஆனால், இப்போதெல்லாம் அடுத்து யாரைக் கொலை செய்யப்போகிறார்கள் என்பதெல்லாம் வெளியிலே தெரிகிற அளவிற்கு மிக மோசமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த அளவிற்கு என்கவுன்டருக்கு ஆதரவான கருத்து உருவாக்கப்படுகிறது. சிலநாட்களுக்கு முன்பு கடலூர் பதிப்பு மாலைமலர் செய்தித்தாளில் , சிதம்பரம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளது என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. விசாரித்துப் பார்த்தால், தற்போது கோவை சிறையில் உள்ள வல்லம்படுகை சந்திரன் என்பவரை என்கவுன்டர் செய்வதற்காக திட்டமிட்டுள்ளார்கள் என தெரியவந்தது.
இப்படியாக, அடுத்து யாரை கொல்லப்போகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்ற அளவிற்கு மிக மோசமான அளவில் மனித உரிமை மீறல் நடந்துகொண்டிருக்கின்றது.
ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் பாதுகாப்பை உறுதி செய்வது நீதிமன்றம்தான். அதனால்தான் கைதுசெய்யப்பட்டவரை போலீசாரே வைத்துக்கொள்ளாமல், நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கிறார்கள். ஆனால், இப்போதெல்லாம் நீதிமன்றக்காவலில் உள்ளபோதுதான் போலிமோதல் என்ற பெயரில் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. இது குறித்து நீதித்துறை கொஞ்சமும் அக்கறை செலுத்துவதில்லை. நீதித்துறையின் இந்த பொறுப்பற்ற செயல்குறித்தும் நாம் பேசவேண்டும்.
இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், ரவுடிகள் மட்டுமே என்கவுன்டர் என்றபெயரில் கொலை செய்யப்படுவதில்லை. போலீசார் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் என்கவுன்டர் பெயரில் கொலை செய்வார்கள். அது நீங்களாகவும் இருக்கலாம், நானாகவும் இருக்கலாம்.
நம்முடைய உரிமையைக் காப்பதற்காகத்தான் என்கவுன்டர் வேண்டாம் என்கிறோம். அரசியல் சட்டமும் வேண்டாம் என்கிறது. நக்சல்பாரி இயக்கத்தினரும், தமிழ்த் தேசிய அமைப்பினரும் இதை அரசியல் ரீதியானப் பிரச்சினையாக பார்க்கவேண்டும். வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இம்மாநாட்டிற்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமை தங்கினார். மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எச்.சுரேஷ், எழுத்தாளர் பிரபஞ்சன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் வழக்கறிஞர் பாவேந்தன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் பேராசிரியை சரஸ்வதி, தாருல் இசுலாம் அமைப்பு குலாம் முகமது, தமிழக மனித உரிமைக் கழகம் அரங்க. குணசேகரன், தமிழ்த் தேசிய வழக்கறிஞர் நடுவம் வழக்கறிஞர் புகழேந்தி, இந்திய மக்கள் வழக்கறிஞர் சங்கம் வழக்கறிஞர் கபிலன், மனிதம் அக்னி சுப்பிரமனியம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்பு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உதயம் மனோகரன், பேராசிரியர் சிவகுமார், குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் வெ.பாலு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினிகாந்த், வழக்கறிஞர்-கவிஞர் கனகவேல் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
ஆந்திராவிலிருந்து, ஆந்திர சிவில் உரிமைக் குழு சார்பில் கிராந்தி சைத்தன்யா, கர்நாடகாவிலிரிந்து மக்கள் ஜனநாயக கழகம் சார்பில் பேராசிரியர் இராமசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.
Subscribe to:
Posts (Atom)