சந்திப்பு : இரா.முருகப்பன்
கூத்தினை எப்படி மீளுருவாக்கம் செய்திருக்கின்றீர்கள்? அதனை எப்படி புதிய சமூக உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப் போகிறீர்கள்?
காலங்காலமாக பாரம்பரியமாக எம்மிடையே இருந்து வந்த பண்பாட்டு அடையாளங்கள் இப்போது கவனிக்கப்படாமல் வெற்று முழக்கங்களாக, பேச்சுக்கு மட்டுமே என அதிகாரத் தளங்களில் நீர்த்துப்போக, மக்கள் தங்கள் வாழ்வியல் அம்சங்களை இயல்பாகவே கடைப்பிடித்து வந்தார்கள். ஏற்கனவே கூறியது போன்று ஒரு அடிமை மனோபாவத்தை கற்றுத்தருகிற கல்வியாலும், ஊடகங்களால் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுவதாலும் இன்றைய நெருக்கடியான சூழலைக் கடந்துப் போகத் தெரியாமல், கடக்க வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் சமூகத்தின் அதிகார நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலமையில் இருந்து எப்படி மீள்வது என்பது குறித்து உரையாடுவதற்கான மக்கள் களங்கள் எதுவும் இல்லை. இதற்கான தேடலின் ஒரு பகுதியாகவும், தொடர்ச்சியாகவும்தான் கூத்து மீளுருவாக்கச் செயல்பாடு நடக்கிறது. மக்கள் மய்யப்பட்ட அபிவிருத்திக்கான மாற்றுக் கல்விமுறையாகச் செயல்படுவதே கூத்து மீளுருவாக்கத்திற்கான அடிப்படையாகும். மக்கள் தங்களுக்குத் தேவையான, பயன்படுகின்ற புதிய கல்வி முறையை, புதிய விவசாய அபிவிருத்தியை, புதிய சமூகத்தை உருவாக்கத் தேவையான அனைத்தையும் கூத்தின் மூலமாக&கூத்தரங்கின் வாயிலாகப் பேசி, உரையாடி, தங்கள் தேவைகளை தாங்களே அறிந்து, நிவர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளை தீர்மானிப்பதுதான் சமூக அபிவிருத்தியாகும். இந்த வேலையைத்தான் 'மூன்றாவது கண்' முன் முயற்சி எடுத்து தற்போது ஆறு கிராமங்களில் செயல்படுத்தி வருகிறது.
உலக மயமாக்கலின் விளைவால் சமூகம் தாராளமயப்படுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக சமுதாயச் சிதைவு ஏற்படுகிறது. இதனை மீட்டெடுத்து ஒருங்கிணைந்த புதிய சமூகமாக மீள எழும்புவதற்கான சிந்தனைகளையும், அவற்றை நடைமுறைபடுத்துவதற்கான வழிமுறைகளையும் நாங்கள் தேடுவது அவசியமாகிறது. சமூகம் பல்வேறு பாரம்பரிய கலைகளால் அடையாளம் காணப்படுகிறது. அதில் சாதிரீதியான ஏற்றத்தாழ்வுகள், பால்ரீதியான பாகுபாடுகள் என்கிற கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே நாங்கள் இது சார்ந்து இவற்றை கேள்விக்குட்படுத்திக்கொண்டு, இந்தச் சமுதாயச் சிதைவிலிருந்து எங்களை மீட்டெடுத்து, ஒன்றிணைப்பைக்கொண்ட, பன்மைத் தன்மை கொண்ட, வித்தியாசங்களைக் கொண்டாடுகின்ற சமுதாயமாக மீளுருவாக்கம் பெற்று வளர்வது எங்களுடைய தேவையாக உள்ளது.
பாரம்பரியக் கூத்து மரபு என்பதை கொஞ்சம் விரிவாகக் கூற முடியுமா?
பாரம்பரிய அரங்கு மகிழ்வூட்டலுக்கும், அறிவூட்டலுக்கும் மக்கள் ஒன்றாய்க் கூடுவதற்கான களமாக அமைவதுடன், சடங்குடன் சார்ந்து பக்திக்குரியதாகவும் அமைகிறது. கூத்தின் நோக்கம் நாடும், வாழ்வும் சிறக்கவே ஆடப்படுகிறது என்பது தெரிகிறது. எமது மரபு ரீதியான அரங்க அழகியல் இந்து சமயத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அரங்க வளர்ச்சியில் சமயம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதுவும் இந்து சமயம் இந்த அரங்கில் மேலாண்மை செலுத்தி அதன் வடிவத்தை தீர்மானித்திருக்கின்றது. இறைவன் அருளால் துக்கங்கள் நீங்கி சுகம் கிடைக்கும் என்ற சடங்கு கோட்பாடு, தமிழர் சமய வாழ்வில் கலந்துள்ளது. இந்த சடங்குக் கோட்பாட்டின் பின்னணியில் உருவான நாடகங்களில் அவலமுடிவு ஏற்படாது. கழுத்தை வெட்டும் வேளையில் வாள் மாலையிடும். கடவுள் தரிசனம் கிடைக்கும். பக்திபூர்வமாக எல்லாம் நிறைவு பெறும்.
கூத்தின் நடுப்பகுதி சிக்கலில் ஆரம்பித்து வளர்ச்சி அடைந்து உச்ச நிலைக்கு வரும். இந்த இடத்தில் தர்க்கபூர்வமாக முடிக்க முடியவில்லையெனில், முனிவர் பாத்திரம் தோன்றி சிக்கலை விடுவிக்கும். நாரதரும் கூட இப்பணிக்குப் பயன்படுத்தப்படுவதுண்டு. மேலும் பறையன் வருதல், பறை அறைதல், திருமணம் நடத்தல், வாழிபாடல் என்பவைகளுடன் மங்கல முடிவு என்பதும் மரபாகும். கூத்து, அதை ஆடும் மக்களின் வாழ்வாகவும், வழிபாடாகவும், வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் காணப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது, கூத்து சமஸ்கிருதமயப்பட்டதாகவும்; கூத்து ஆடப்படுகின்ற சடங்கு விழாக்கள் ''சிறுதெய்வக்'' கோயில் சடங்குகளாக பத்தாசி முறையிலமைந்தவையாகவும் இருப்பதாகும். கூத்து தனிமனிதனையோ அல்லது அவனது சிக்கல்களையோ இல்லாமல் சமூகத்தையே பார்க்கிறது. கூத்தில் தர்மம் முக்கியமுடையதாக இருக்கிறது. தர்மத்தின் பக்கம் மற்றும் எதிர்பக்கம் என்றே பார்க்கப்படுகிறது.
மேலும் கூத்தில் வேடர், பறையர், வண்ணார், வண்ணாத்தி போன்ற பாத்திரங்கள் நகைச்சுவை மிக்கதாக கீழ்நிலையில் படைக்கப்பட்டிருக்கும். அண்ணாவியாருக்கும் பறையருக்குமான உரையாடல் நகை சுவைமிக்கதாகவும்; கூத்தாடும் காலத்திற்கேற்பவும் இருக்கும். இதுவொரு சமூக அங்கதமாகவே இருக்கும். அந்தக் கூத்துக்கும் மேற்படி உரையாடலுக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. அதன் நோக்கம் நேரடியாக எதிர்கொள்ள முடியாத பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதே ஆகும். இந்த வகையில் கூத்தரங்கு நேரடி சமூக விமரிசனத்துடனும் தொடர்புபடுகிறது. கூத்தில் அங்கதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதிய ஒடுக்குமுறையை பாரம்பரியம் என்ற பெயரிலோ, கூத்தரங்கின் பண்பு என்ற பெயரிலோ நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. பெண்களை மெலியராகவும் பாலியல் பண்டங்களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் பண்பாடு என்ற பெயரில் பேணவும் முடியாது.
தர்மத்தை நிலைநிறுத்தும் அல்லது மீள நினைவூட்டும் சமூகச் சாதனமாக பாரம்பரிய அரங்கு நிகழ்கிறது என்ற கருத்தாக்கத்தை கண்மூடித்தனமாக ஏற்றுகொண்டுவிடவும் முடியாது. ஏனெனில் இதிகாசங்கள் தர்மத்தை நிலைநிறுத்துவதென்கின்ற கதையாடலின் ஊடாக அதிகாரத்தை நிலைநிறுத்தயிருப்பதையே அவதானிக்க முடிகிறது. சமகால பயங்கரவாதத்திற்கு எதிராக சனநாயகத்தை நிலைநிறுத்தும் சண்டைப் போல!
இந்த வகையில் சமூகத்தை வழிப்படுத்தும் சாதனமாக இயங்கிய கூத்து, சமூகத்தை விளங்கிக்கொள்ளும் சாதனமாகவும் காணப்படுகிறது. இது சமூகத்தையும், அரங்கையும் புதிது செய்வதன் தேவையை உணர்த்துகிறது. இதற்கு எமது எண்ணத்தை காலனித்துவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பது அவசியம். கூத்தின் புத்துருவாக்கம் என்பது உலமயமாதல் மற்றும் நவகாலனித்துவ சிந்தனைகளுக்கு எதிரான சுதேசியச் சிந்தனைப்போக்கின் முன்னெடுப்பே ஆகும். மரபுள் அடங்கிப்போதல் என்ற எமது மரபிலிருந்து எம்மை விடுவிப்பதே இதற்கு அவசியம். புதிய தேடலுக்கு இது எம்மை வழிபடுத்தும். இதைத்தான் நாங்கள் செய்கிறோம்.
அதை எவ்வாறு செய்துகொண்டிருக்கிறீர்கள்?
நாங்கள் ஒவ்வோரு கிராமமாக சென்று கூத்தாடும் அண்ணாவிமார்களுடனும், கூத்தர்களுடனும் அறிவையும், திறனையும் உரையாடுகிறோம். அவர்களுடனான உரையாடல்கள் மூலமாக பகிர்ந்து கொள்கிறோம். ஆரம்பத்தில் சிறிது கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இன்று நம்பிக்கையுடன் நிறையபேர் ஈடுபாடு காட்டுகிறார்கள். கூத்து குறித்து தொடர்ந்து கூத்தர்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம். இதுதான் இன்று எம்மக்களுக்கான உரையாடல் களமாக உள்ளது. மேலும் அகத்திருந்தும் புறத்திருந்தும் வரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் இயங்கவேண்டியுள்ளது. மேலும் கூத்துகளில் சமகாலக் கதைகளைப் பாடி ஆடுவதை முன்பு குற்றமாகக் கருதினார்கள். ஆனால் இன்று பாரம்பரியக்கூத்துகளில் முடிதரித்து வாளேந்தும் கூத்தரே, ''வீரமைந்தன்'' கூத்தில் சீருடையணிந்து துப்பாக்கி ஏந்தி ஆடுகிறார்கள்.
தமிழரது பாரம்பரியக் கூத்தினுடைய இயக்கம் சமூகக் குழுமம் சார்ந்தது. எனவே கூத்தை ஆடும் சமூகக் குழுமத்தில் ஏற்படும் சிந்தனை மாற்றமே கூத்தினை புதிய பொருள் கொண்டதாய் மாற்றும். சமயத்தின் பெயரால், சாதியின் பெயரால், இடத்தின் பெயரால் நடத்தப்படுகிற பாரம்பரிய கூத்துகளை, இவை எல்லாவற்றையும் கடந்த முழுச் சமூகத்திற்கும் உரியதாய் இயங்க வைப்பது பற்றிய சிந்தனையும், செயல்பாடுமே இன்றைய தேவையாய் உள்ளது. பாரம்பரிய கூத்தரங்கினை புத்துருவாக்கம் செய்வது என்பது. அதனை தலைமுறை தலைமுறையாக ஆடிவரும் சமூகக் குழுமத்தின் சிந்தனை மாற்றம் அடையும் போதுதான் முழுமையானதாகும்.
பாரம்பரியச் சிந்தனைப் போக்குடன் போராடுவதும், புதிய நிலைகளைப் புரிந்து கொள்ள முனைவதுடன் உணரவைக்கவும் வேண்டும். நிகழ்கால அனுபவங்களை முழுமையாக வெளிபடுத்த வாய்ப்புள்ளதா என்பது பற்றியும், செயல்முறை அனுபவங்களுக்கு வருவதுமான ஒரு தொடர்ச்சியான நடைமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது.
இதற்காக கூத்தை ஆடும் சமூகக் குழுமத்துடன் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்களுடன் இணைகிறோம். எங்கள் நோக்கங்களை அவர்களுக்கு புரியவைத்து, பகிர்ந்து கொள்ள முயல்கிறோம். அப்போது கிடைக்கிற எதிர்வினைகளை ஆராய்ந்து, இரு தரப்பும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பதுதான் படிநிலை வளர்ச்சி. இதுதான் பாரம்பரியக் கூத்துக் களங்களில் நிகழ்த்தப்பட்டு மெல்ல மெல்ல வெளிநோக்கிக் கொண்டுவருவதாக இருக்கும். இவை நவீன நாடகங்களுக்கும் புதிய பரிமாணங்களைக் கொடுக்கும்.
இவை எங்களுக்கான கடந்த காலத்தில் வேர்கொண்டு, எதிர்காலத்தை நோக்காக வைத்து சமகால அனுவங்களுடன் தொடர்புகொண்டு சுதேசிய நவீனவாதத்தை விருத்தி செய்ய வழிவகுக்கும். இந்தச் செயல்பாடு அரங்குடன் மட்டும் தொடர்புடையதல்ல; சமகால உலகச் சூழ்நிலையின் பின்னணியில் முழுச் சமூகமும் சார்ந்ததாகும்.
சடங்குகள் தற்போது சமற்கிருதமயமாக, அதாவது ஆகமமயமாகி வருகிறது என்கிறீர்களே எப்படி?
கிழக்கு மாகாணத்தின் மட்டகளப்பு சூழலை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், பாரம்பரியக் கலையாக கூத்து விளங்குவதுபோல், சமுதாய மயப்பட்ட நம்பிக்கையுடன் கூடிய இன்னொரு விழாவாக சடங்குகள் காணப்படுகின்றன. சடங்குகளின் நோக்கம், அதன் சாராம்சம், இந்த உலகத்தில் மனிதர்கள், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வது என்பதாகத்தான் இருக்கிறது. அதே நேரம் இந்த சடங்குகள் சூழல் சார்ந்து எங்களுடைய சாப்பாட்டு பழக்க வழக்கங்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தளத்தில் ஒன்றிணைந்து ஆற்றுப்படுத்தல்களை, வழிபடுதல்களை ஏற்படுத்துகின்ற களங்களாகவும் இது இருந்து வருகின்றது. ஆனால் எங்களின் நவீன அறிவு, நவீன கல்வி முறையானது இந்த விடயங்களை நாகரிகமற்றதாக, காட்டுமிராண்டித்தனமாக அல்லது மூடநம்பிக்கையாக பார்க்கின்ற பார்வையன்று மிக வலிதாகவே காணப்படுகின்றது.
இந்தப் பாரம்பரிய சடங்குகளுடைய சாதகம், பாதகத்தினை நாங்கள் அதனூடாக புரிந்து கொள்வதற்கு மாறாக, நவீன அறிவு எங்களில் ஏற்படுத்தியிருக்கின்ற சிந்தனை மாற்றத்தின் விளைவாக, ஒரு மூட நம்பிக்கையின் தளமாக அல்லது காட்டுமிராண்டித்தனமாக அல்லது பிற்போக்குதனமானதாக, நாகரீகமற்றைவையாக பார்க்கின்ற ஒரு பார்வை காணப்படுகின்றது. இன்றைய உலகமயமாக்கல் ஆக்கிரமிப்பு பண்பாட்டுச் சூழலில் மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிந்தனை ரீதியாக அவர்கள் மழுங்கடிக்கப்பட்டு, வெறும் நுகர்வுச் சக்தியாக ஆக்கப்படுகின்ற நிலைமையில், பலர் மூகச் சமூகமாய் தங்களுக்கிடையில் சந்தித்து உரையாடி செயற்படுகின்ற ஒரு சமூகமயப்பட்ட களங்களாக இருக்கிற பாரம்பரிய விழாவான சடங்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்த உலகமயமாகல் ஆக்கிரமிப்பு பண்பாட்டு சூழலுக்கு எதிராக, இந்த சடங்குகளை எப்படி பிரயோகிக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதின் வெளிப்பாடாக இந்த சடங்குகளில் காணப்படுகின்ற உலக மையப்பட்ட சிந்தனை, அதாவது உலகத்தில் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்வாகவும் வாழ்தலை அது அடிப்படையான நோக்கமாக கொண்டிருக்கிறது. சூழல் சார்ந்த வாழ்க்கைமுறை, உணவு முறை அதனூடான வாழ்வியல் அம்சங்கள் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் நாங்கள் மீளவும் ஒரு ஒருங்கிணைந்த சமுதாயமாக செயல்படுவதற்கான ஒரு சாத்தியப்பாடாக நாங்கள் சடங்குகளிலும் வேலை செய்கின்றோம்.
அதே நேரத்தில் கூத்தில் கூறியது போன்று சடங்குகள் சார்ந்தும் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள், பால் ரீதியான பாகுபாடுகள் குறித்தும் மீளுருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பான உரையாடல் இன்று மட்டக்களப்புச் சூழலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்றாவது கண்ணின் முக்கிய நோக்கமாகவும் அது அமைந்திருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் எதிர்கொள்கின்ற சாவால் என்னவென்றால் இந்தப் பாரம்பரிய சடங்கு கோயிலில் இப்போது ஆகம முறைகள் கொண்டுவரப்படுவதுதான். படித்தவர்களுடைய கருத்து நிலைமாற்றம், அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் இந்த் பாரம்பரிய முறைக்கும் ஆகம வழிபாட்டுக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்துகொள்ளாத நிலை, அவர்களிடம் செல்வாக்குச் செலுத்துகின்ற நவீன அறிவுசார்ந்த சிந்தனைப்போக்குகள் மிக வேகமாக ஆகம வழிபாட்டுக்குக் கொண்டுசெல்வதாக இருக்கிறது. இதில் அடிப்படையான விடயம் என்வென்றால் எல்லா மக்களும் நெருங்கி, ஒன்றாக இணைந்து செயற்பட்டு வந்த சடங்குமுறைகளில் இருந்து புறந்தள்ளப்படு, அன்னியப்படுத்தப்பட்டு வழிபட்டு செல்பவர்களாக மட்டுமே மாறியுள்ளதுதான்.
இதன் முக்கியமான இன்னொரு அம்சம் என்னவென்றால், மாரியம்மன் என்பது ராஜராஜேஸ்வரியாகவும், பெரியதம்பிரான் என்பது தக்கயாகேஸ்வரராகவும், வல்லியப்பர் வல்லிப்புர ஆழ்வாராகவும் மாற்றப்பட்டு, நேரிடையாக நாங்கள் சம்பந்தப்பட்ட சடங்குகளில் இருந்து புறந்தள்ளப்பட்டவர்களாக, எங்களை நாங்களே தீண்டத்தகாதவர்களாக ஆக்கிக் கொள்கின்ற நிலைமை ஏற்படுவதையும் அவதானிக்கலாம்.
எனது சொந்த இடமான யாழ்பாணம் கோன்டாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான வல்லியப்பர் கோயில் வல்லிப்புர ஆழ்வாராக மாற்றப்பட்டபின், அங்கு வந்த குருக்களே அர்ச்சனை தட்டுகளை 'உயர்சாதி' ஆட்களுக்கு கொடுப்பவர்களாக இருக்கின்றனர். முன்பு, வள்ளியப்பராக இருந்தபோது பிறசாதியினர் போகாத கோயில், இப்போது வள்ளிப்புர ஆழ்வாராக ஆனபின்பு பிறசாதியினர் போவதும், அந்தக் கோயிலுக்கு பொறுப்புடையவர்கள் அர்ச்சனை தட்டை எடுத்து பிற சாதியினருக்கு கொடுக்காமல், அந்த பூசாரியே நேரிடையாக கொடுப்பது என்பது, நாங்களாகவே எங்களை ஒரு தீண்டாமைக்கு உட்படுத்திக்கொள்கிற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை என்பது சடங்கு கோயில்கள், ஆகம மரபுக் கோயிலாக மாறுகின்தால்தான் என்பதினை தெளிவாகக் காணலாம்.
கூத்து, சடங்கு, பறை என்கிற இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், ஒரு சமுதாய மயப்பட்டதாகவும், மக்கள் மயப்பட்டதாகவும் சமுதாய விழாவாகவும் இருந்து வருகின்றது. சடங்கின் இயக்கத்தின் அடிநாதமாக பறையினுடைய அடி நாதம் காணப்படுகின்றது. கூத்திலும் பறை என்பது குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வருகின்றது. அதே நேரம் சாவு, சடங்கு, சமூகம், விழா சார்ந்த சமூகத்தின் பல்வேறு சமுதாய மையப்படுத்தப்பட்ட விழாக்களையும் ஊடுருவி கொண்டதாக இருக்கிறது. இன்றைய சமூகச் சூழலில் பல சாவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இந்த விடயங்கள் நிராகரிக்கப்படு, கைவிடப்பட்டு தவிர்க்கப்படவேண்டியவை என்று சொல்லப்படுகின்றது.
இந்த நேரத்தில், நாங்கள் சுயாதீனமான சமூகங்களாக வாழ்வதற்கானச் சாத்தியப்பாடுகளை ஆக்கிக்கொள்வது, சடங்கு வழிமுறைகளை ஒரு செயல்முறையாக அதற்கான சாதனமாக ஆக்கிக்கொள்வது என்ற வகையில், அதுவும் குறிப்பாக இன்றைய இலத்திரணவியல் ஊடகங்களின் ஆக்கிரமிக்குப்பின் காரணமாகவும், புதிய கல்வி முறைமையின் காரணமாகவும், உலமயமாக்கல் ஆக்கிரமிப்புப் பண்பாட்டு சூழல் காரணமாகவும் எங்கள் சமுதாயம் சிதைந்து வருகின்ற ஒரு சூழ்நிலையில், நாங்கள் சமத்துவமான சமூகங்களாக எங்களை மீளவும் உருவாக்கிக்கொள்ள ஒரு சமூக செயற்பாட்டுக் களமாக கூத்து சார்ந்து, சடங்கு சார்ந்து, பாரம்பரிய விளையாட்டுகள், கலைகள் சார்ந்து செயற்பட்டு வருகிறோம்.
இன்றைய போர்சூழலை மக்கள் எப்படி எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்?
எங்கள் இருப்பும், எங்கள் வாழ்வும் எங்கள் கைகளில் இல்லை. வாழ்தல் என்பது விபத்து போன்றது. எந்த நேரத்திலும் எவரும் கொல்லப்படலாம், கடத்தப்படலாம், காணாமல் போகலாம், இதுதான் யதார்த்தாமாக உள்ளது. யாரால் என்பது பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரியாது. இனங்காணப்படாத குழுக்களால் இவை நடைபெறுகின்றன. காணாமல் போனது குறித்தும், கடத்தப்பட்டது குறித்தும், கொல்லப்பட்டது குறித்தும் ஏராளமான கதைகள், நியாயப்படுத்தல்கள் தொடர்ந்து நடக்கும். எந்த நேரத்திலும், எவருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். நான் வாழ்கிறேன் என்றால் அது விபத்து. அகதியாக அட்டை பதியவும்; நிவாரணம் வாங்கவும் விதிக்கப்பட்டு முகாம்களில் கையேந்தி வரிசையில் நிற்கும் சமூகமாக மாற்றப்பட்டுள்ளோம். பண வசதி படைத்தவர் குழந்தைகளுக்கு on the spot admission ஏனைய குழந்தைகளுக்கு on the spot kidnapping or killing.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழப்பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி நகராமல் உள்ளதே. முடிவுதான் என்ன?
நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று பல நாடுகள் தலையிடுகின்றன. ஆனால் அந்த நாடுகள் எல்லாம் தங்கள் தேசத்து மக்களை, நாங்கள் எதிர்கொள்கிற பிரச்சனைக்களை விடவும் மிக மோசமாகத்தான் வைத்திருக்கின்றன. நடத்துகின்றன. எங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும், முடிவு செய்யவேண்டும். அதற்காக உரையாடல்களை கூட நாங்களேதான் முன்னெடுக்க வேண்டும். அரசியல் தீர்வு மட்டும் இல்லாமல், சமூக பொருளாதார ரீதியிலான தீர்வும் முக்கியம் என்பதை உணரவேண்டும். இதுகுறித்து சிந்தனை மாற்றம் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வேண்டும். அரசியல், வரலாற்று ரீதியாக மட்டுப்படுத்தி கொள்ளாது சமூக, பொருளாதார ரீதியாக சிந்தித்துச் செயற்படும் போதுதான் இலங்கைச் சூழலில் அரசியல் தீர்விற்கு போகமுடியும்.
-நிறைவு-
முந்தைய நேர்காணலின் பகுதி
நன்றி: தலித் முரசு, ஆகஸ்ட் 2007
1 comment:
அன்புள்ள நண்பர் அவர்களுக்கு,
வணக்கம்.
பேரா.முனைவர் இளங்கோவுக்கு நன்றி.
தங்களைக் குறித்துப் பல்வேறு வாய்ப்புகளில் தலித் முரசு முதலான இதழ்களில் அறிவேன்.பார்த்துமிருக்கிறேன்.
கூருணர்வு எனும் கூட்டுநோயால் - இணையமும் நானும் என்ற அளவில் இருக்கிறேன்.
நிகழ்ச்சிகளில் முன்புபோல் கலந்து கொள்ள இயலவில்லை.
இணயமுலாவவும் நடைப்பயிற்சிக்குமன்றி வெளியில் செல்வதுமில்லை.
இருப்பினும் உள்ளம் ஆகவும் தெளிவாகவுள்ளேன்.
எல்லா வகையிலும் தமிழ் நாடு-இனம்-மொழிக்குப் பாடாற்றுவதற்காக தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!
அன்புடன்,
தேவமைந்தன்
பிற:http://kalapathy.blogspot.com
http://360.yahoo.com/pasu2tamil
Post a Comment