தோழர் பிரசந்தா படம்: கோ.சுகுமாரன்.
நேபாளத்தில் இந்து-மன்னராட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அங்கு கடந்த ஏப்ரல் 10-அன்று அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது. நேபாளத்தின் முக்கிய கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
தற்போதைய நிலவரம்: (15-04-2008 காலை) மொத்தம் அறிவிக்கப்பட்டவை-122, மாவோயிஸ்ட் கட்சி-68, நேபாள காங்கிரஸ்-21, ஐக்கிய மா-லெ-19, மாதேசி மக்கள் உரிமை அமைப்பு-9, இதர-5.
நேபளத்தில் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ள உறுப்பினர்கள்-240, கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில்-335, நியமன உறுப்பினர்கள்-26 ஆக மொத்தம் 601 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
கடந்த 10 ஆண்டு காலமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்ட் கட்சி தேர்தல் பாதையை தேர்தெடுத்ததன் மூலம் தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர், தோழர் பிரசந்தா நேபாள மக்களின் ஒருமித்த ஆதரவு பெற்று தனிப் பெரும் தலைவராக உருவெடுத்துள்ளார்.
கடந்த 2006-இல், நேபாளத்தில் மாவோயிஸ்ட் கட்சியும், அங்குள்ள 7 கட்சிகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டு இடைக்கால ஆட்சி அமைத்தனர். இதன்மூலம் பழமையான, நிலவுடைமை, இந்துத்துவ குணமுடைய 240 ஆண்டு கால மன்னரட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது நேபாளத்தில் அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் நடைபெற்றுள்ளது.
மார்க்சிய-லெனினிய கொள்கை, கோட்பாட்டின் வழி உருவான மாவோயிஸ்ட் கட்சி ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து தேர்தல் பாதைக்கு வந்துள்ளது குறித்து பல்வேறு மாற்றுக் கருத்துகளும் நிலவுகின்றன.
ஆனால், நேபாளத்தில் அமைதி திரும்பி, ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளதை உலக மக்கள் அனைவரும் வரவேற்கின்றனர். இது நேபாளத்தைப் பொறுத்த வரையில் மாபெரும் வரலாறாகவே கருதப்படுகிறது.
மக்கள் வாக்கு அளிக்க காட்டிய ஆர்வம், ஈடுபாடு ஆகியவை நேபாள தேர்தல் அந்நாட்டு மக்களுக்கு ஒரு ‘ஜனநாயகத் திருவிழா’வாகவே இருந்தது கவனிக்கத்தக்கது. இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் நேபாளிகள் வாக்கு அளிக்க நேபாளம் சென்று திரும்பியுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் இருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் பேராசிரியர் சே.கோச்சடை, இந்திய மக்கள் வழக்கறிஞர் சங்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க மைய செயற்குழு உறுப்பினர் மாந்தநேயன், மனித உரிமைப் பாதுகாப்பு மையப் பொறுப்பாளர் வழக்கறிஞர் இராஜு உள்ளிட்ட 13 பேர் சர்வ தேச தேர்தல் பர்வையாளர்களாக நேபாளம் சென்று திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
3 comments:
நேபாளில் மாவோயிஸ்டுகளின் தேர்தல் வெற்றி பற்றி, தமிழ் இணையத்தில் அறிவித்ததற்கு நன்றி. பரந்துபட்ட மக்களுக்கு இப்படியான செய்திகள் போய்ச்சேர வேண்டும். நானும் மிக விரைவில் நேபாளின் மாவோயிஸ்டுகள் பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரை எழுத இருக்கிறேன்.
-கலையரசன்
http://kalaiy.blogspot.com
அதேபோல் தங்களின் சிறந்த அனுபவத்தையும் இங்கே பதிவு செய்வது உதவிகரமாக அமையும். வாழ்த்துக்கள்.
மன்னராட்சியை வீழ்த்திய கம்யூனிச தோழர்களுக்கு வீரவணக்கங்கள்.
Post a Comment