Friday, August 29, 2008

கோவை : சிறைக் கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும் – கருத்தரங்கம்!


பதாகை...


திரளான முசுலீம் பெண்கள்...


அரங்கத்திற்குள் திரண்டிருந்த முசுலீம் மக்கள்...



அரங்கத்திற்கு வெளியே முசுலீம் மக்கள்...


மேடையில் தலைவர்கள்...


கோ.சுகுமாரன்...


மனித நீதிப் பாசறை (MNP) சார்பில் தமிழகத்தில் அண்ணா நூற்றாண்டையொட்டி ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலைச் செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என வலியுறுத்தி கோவையில் 24-08-2008 ஞாயிறன்று மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழக சிறைகளில் பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனைப் பெற்ற சிறைவாசிகள் பலர் 10 முதல் 21 ஆண்டு வரையில் விடுதலைச் செய்யப்படாமல் சிறையில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தலைவர்கள் பிறந்த நாளன்று இவ்வாறு சிறையில் உள்ள ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலை செய்வது வழக்கம். வரும் செப்டம்பர் 15 அன்று அண்ணா நூற்றாண்டு வருவதையொட்டி தமிழக அரசு ஆயுள் தண்டனைப் பெற்று 7 ஆண்டுகள் சிறையில் தண்டனை கழித்தவர்களை விடுதலைச் செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் உள்துறைச் செயலர் மற்றும் சிறைத் துறை கூடுதல் இயக்குநர் ஆகியோர் இரண்டு சுற்ற்றிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அதில் ஆயுத மற்றும் வெடி மருந்துச் சட்டப்படி தண்டனை அடைந்தவர்கள், மதக் கலவரத்தில் தண்டனை அடைந்தவர்கள், கீழ்நீதிமன்றத்தில் மரண தண்டனைப் பெற்று உயர்நீதிமன்றத்தாலோ, உச்சநீதிமன்றத்தாலோ ஆயுள் தணடனையாக குறைக்கப்பட்டவர்கள் என இந்த மூன்று வகையினருக்கு அண்ணா நூற்றாண்டில் தண்டனை குறைத்து விடுதலை செய்வது பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆயுள் சிறைவாசிகளை விடுதலைச் செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்துள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவால் பல்வேறு வழக்குகளிலுள்ள முசூலீம்கள் 72 பேரும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 17 ஆண்டுகள் கழித்த நளினி உட்பட நால்வரும், 21 ஆண்டுகள் கழித்த சந்தன வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்ளிட்ட தமிழக சிறைகளிலுள்ள ஆயுள் தணடனைச் சிறைவாசிகள் மொத்தம் 77 பேர் விடுதலை ஆகமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 72, 161 ஆகியவை தண்டனை பெற்றவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கும், அந்தந்த மாநில ஆளுநருக்கும் அதிகாரம் வழங்கியுள்ளது. இதில் பாகுபாடு காட்டுவது பிரிவு 14-க்கு முரணானது.

இது குறித்து அரியாணா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு முக்கிய தீர்ப்பு இவ்வாறு கூறுகிறது:

“கைதிகள் தணடனைக் குறைப்பைக் கோருவது அரசியல் சட்ட அடிப்படையில் உரிமை பெற்றவர்கள் அல்லர் என்ற போதிலும் தணடனைக் குறைப்பை அளிக்க வேண்டியது அரசின் சட்ட பூர்வமான கடமைகளில் ஒன்று. மாநில அரசுகள் இருக்கிற விதிகளுக்குட்பட்டு அரசியல் சட்டப் பிரிவுகள் 72 மற்றும் 161 பிரிவின் கீழ் பொது மன்னிப்பு அளிக்க விதிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். கைதிகளை வகை பிரிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்ற போதிலும், இவ்வாறு மேற்கொள்ளாப்படும் வகைப்பாடு குடிமக்களுக்கிடையே சமத்துவ உரிமையை அளிக்கும் அரசியல் சட்ட பிரிவு 14-க்கு முரணாக அமையக் கூடாது” என ஆணித்தரமாக கூறியுள்ளது.

இந்நிலையில், மனித நீதிப் பாசறை சார்பில் 24-08-2008 ஞாயிறன்று, கோவையில், சங்கமம் திருமண மண்டபத்தில், மாலை 5.45 முதல் இரவு 9.30 மணி வரையில் “சிறைக் கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும் – கருத்தரங்கம்” நடைபெற்றது.

கருத்தரங்கில் மனித நீதிப் பாசறை மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.முகமது ஷாஜகான் வரவேற்றார். மாநிலத் தலைவர் எம்.முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தமிழக மனித உரிமைக் கழக வழக்கறிஞர் பாவேந்தன், தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு (NCHRO) செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நவ்பல், மாநில செயலர் எம்.ரகமத்துல்லா, மறுமலர்ச்சி முசுலீம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக், தலித் இசுலாமிய கிறித்துவ கூட்டமைப்பு பொதுச்செயலர் ஏ.கே.முகமது அனீபா, சமூக ஆர்வலர் கோவை தங்கப்பா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலர் இ.எம்.அப்துர் ரகுமான், (அவரது பேச்சை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த சந்திரன் மொழிபெயர்த்தார்), அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் உரையாற்றினர்.

மனித நீதிப் பாசறை மாவட்ட தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்ட செயலர் எம்.ஒய்.அப்பாஸ் நன்றி கூற கருத்தரங்கம் நிறைவு பெற்றது.

கருத்தரங்கில் ஏராளமான பெண்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட மூசுலீம்கள் கலந்துக் கொண்ட்து எழுச்சியாக இருந்தது.

இந்நிகழ்ச்சியை அரும்பாடுபட்டு ஒருங்கிணைத்த “மனித நீதிப் பாசறை” அமைப்பை அனைவரும் பாராட்ட வேண்டும்.

அகில இந்திய அளவில் உருவாக்கப்பட்டுள்ள ‘அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழு’ சார்பில் சென்னையில் நடந்த அதன் தொடக்க விழாவில் பாகுபாடின்றி ஆயுள் சிறைவாசிகள அனைவரையும் விடுவிக்க கோரிக்கை எழுப்பப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

சிறைவாசிகளின் உரிமைக் குரல் முசுலீம்களின் வாக்கு வங்கியை நம்பியிருக்கும் தி.மு.க. அரசுக்கு எட்டுமா?


புகைப்படங்கள்: மனித நீதிப் பாசறை, கோவை.

மேலும் புகைப்படங்கள் பார்க்க

5 comments:

Anonymous said...

இதில் முஸ்லீம்களுக்கு ஒரு விதி,பிறருக்கு இன்னொரு விதி
என்று இல்லையே.செய்யப்பட்ட
குற்றங்கள்,வழங்கப்பட்ட தண்ட்னை
என்ற அடிப்படையில்தான் விடுதலை
செய்வது குறித்த விதிகள் உள்ளன.
அவ்வாறிருக்க இதை எப்படி முஸ்லீம்களுக்கு மட்டும் எதிரான
ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியும்.
மாதையனுக்கும் விடுதலை
இல்லை என்றுதானே அரசு சொல்கிறது.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

If human rights activits and groups feel that such a classification is arbitrary
and is against Article 14
why they have not approached the
Supreme Court or Madras Hight
Court seeking orders to quash
the orders issues by the state
government.
'சிறைவாசிகளின் உரிமைக் குரல் முசுலீம்களின் வாக்கு வங்கியை நம்பியிருக்கும் தி.மு.க. அரசுக்கு எட்டுமா?'
So you want the govt. to look at
the issue as an issue of appeasing
a vote bank.Is this a secular approach to issues.Do you want
Muslims to be exempted from the
order.The order does not differentiate on the basis of religion.So why do you want to
bring in religion here.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அன்பு நண்பர் ரவி சீனிவாஸ் அவர்களுக்கு, வணக்கம்.

பின்னூட்டமிட்டதற்கு நன்றி.

//If human rights activits and groups feel that such a classification is arbitrary
and is against Article 14
why they have not approached the
Supreme Court or Madras Hight
Court seeking orders to quash
the orders issues by the state
governmen//

தற்போது நீதிமன்றங்களில் உரிய நீதிக் கிடைப்பதில்லை. நீதி வாங்கப்படும் நிலையே உள்ளது.

நீதிமன்றத்திற்குள்ளும் அரசியல் உள்ளதால் முசுலீகளுக்கு மட்டுமல்ல சாதாரண குடி மகனுக்கும் நீதி கிடைப்பது அரிதாகி வருகிறது.

மதானி பிணை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அவருக்கு பிணை மறுத்து நீதிபதி பேசியதெல்லாம் மதவாத சக்கதிகளின் கருத்திற்கு ஒத்திருந்தது. இதுதான் இன்றைய நிலை.

தற்போது நடந்து வரும் நளினி வழக்கைப் பாருங்கள். ராஜீவ்காந்தியின் குடும்பமே அவருக்கு மன்னிப்பு வழங்கலாம் என்று கூறிவிட்ட நிலையில், பிரியங்காவே நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்த பின்பும், தமிழக அரசு ராஜீவ் பற்றி மிகுந்த கவலைப்படுவது வேதனைக்குரிய முரண்.

//'சிறைவாசிகளின் உரிமைக் குரல் முசுலீம்களின் வாக்கு வங்கியை நம்பியிருக்கும் தி.மு.க. அரசுக்கு எட்டுமா?'

So you want the govt. to look at
the issue as an issue of appeasing
a vote bank.Is this a secular approach to issues.Do you want
Muslims to be exempted from the
order.The order does not differentiate on the basis of religion.So why do you want to
bring in religion here.//

வாக்கு வங்கி அடிப்படையில் பிரச்சனையைப் பார்க்க வேண்டுமென்பது என் நிலை அல்ல. ஆனால்,முசுலீம்கள் பெரும்பகுதி தி.மு.க.விற்கே வாக்களித்துள்ளனர். இந்நிலையில் வாக்களித்த மக்களுக்கு உரிய உரிமை வழங்குவது அரசின் கடமை அல்லவா?

"மதசார்பின்மை" என்பது எல்லா மதத்தையும் சமமாக பார்ப்பது என்று தான் பொருள்.

ஆனால், தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக முசுலீம்கள் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருந்தனர். பலர் இன்னமும் சிறையில் உள்ளனர்.

அதே நேரத்தில் கோவையில் இந்து மத வெறியர்கள் நடத்திய தாக்குதலில் 19 முசுலீம்கள் பலியானார்கள். மேலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முசுலீம்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வழக்குகளில் இன்று ஒருவர் கூட சிறையில் இல்லை.

இதன் பொருள் உங்களுக்கு விளங்கும் என நம்புகிறேன்.

பெரும்பான்மை மத வெறிக்கு சிறுபான்மை மக்கள் பலியாகும் போது பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பது தான் உண்மையான "மதசார்பின்மை."

ஒடுக்குபனையும் ஒடுக்குமுறைக்கு ஆளாகிறவனையும் ஒரே தட்டில் வைப்பது "மதசார்பின்மை" என்றால் அது எப்படி நியாமாக இருக்க முடியும்?

சாதி, மத, பால், இன அடிப்படையில் ஒடுக்குமுறை நடந்தால், ஒடுக்கப்படும் பிரிவினருக்கு ஆதரவு அளிப்பதுதான் சரியானது. அதுதான் சமூக நீதி.

இந்த அடிப்படை கோட்பாட்டின் அடிபடையில் தலித், முசுலீம், பெண்கள் பிரச்சனைகளை அனுகி வருகிறோம்.

தமிழக அரசு போட்டுள்ள உத்தரவில் 'மதக் கலவரத்தில் தண்டனை அடைந்தோர்'எனக் கூறுவது முசுலீம்களைத் தான் என்பதைச் சொல்லித் தெரிந்துக் கொள்ள வேண்டிதில்லை.

மத கலவரத்தில் எனக்குத் தெரிந்த வரையில் இந்துக்கள் யாரும் ஆயுள் தணடனைப் பெற்று சிறையில் இல்லை. ஆனால், முசுலீம்கள் 72 பேர் உள்ளனர்.

சாதி, மதம், பால், இன வேறுபாடுகள் இருக்க வேண்டுமென நானோ அல்லது என்னைப் போன்ற மனித இரிமை ஆர்வலர்கலோ விரும்புவதில்லை. ஆனால், அவை இருக்கிற வரை நாம் இவ்வாறு நிலை எடுப்பது தவிர்க்க முடியாது.

நன்றி...

ரவி ஸ்ரீநிவாஸ் said...

சுகுமாரன்
உங்கள் கருத்துக்களை ஏற்க இயலாது.ஏனெனில் மதரீதியாக
இதை அணுகுவது தவறான
முடிவுகளுக்கே இட்டுச் செல்லும்.
இந்து அமைப்புகள் இதே போன்ற
கோரிக்கைகளை வேறு ஒரு தருணத்தில் எழுப்பக்கூடும்.அப்போது
உங்களைப் போன்றவர்கள் என்ன
நிலை எடுப்பீர்கள்.

‘இந்த வழக்குகளில் இன்று ஒருவர் கூட சிறையில் இல்லை.'

இதன் பொருள் என்ன? எத்தனை
பேர் தண்டிக்கப்பட்டார்கள், எத்தனை
பேர் அரசின் கொள்கை காரணமாக
சீக்கிரம் விடுதலைப் பெற்றார்கள்?
இதே போல் பிற வழக்குகளில்
அரசின் கொள்கை காரணமாக
எத்தனை முஸ்லீம்கள் சீக்கிரம்
விடுதலை பெற்றார்கள்?.என்ற
விபரங்களின் அடிப்படையில்
இதை விவாதிப்பது நல்லது.

குறிப்பிட்ட ஆண்டுகள் சிறையில்
கழித்தவர்கள் யாராக இருந்தாலும்
விடுவிக்க கோருவது என்பதை
புரிந்து கொள்ள முடியும்.ஆனால்
அதை விடுத்து தண்டிக்கப்பட்டவர்கள்
எந்த மதத்தினர் என்ற அடிப்படையில்
அணுகுவது சரியல்ல.

இந்துக்கள் திமுகவிற்கு ஒட்டு போட்டார்கள் என்பதற்காக தண்டிக்கப்படவர்களுள் இந்து மதத்தினைச் சேர்ந்தவர்களுக்கு
சிறப்பு சலுகைகளை இந்துக்கள்
எதிர்ப்பார்ப்பது முறையாகுமா?

”ஆனால்,முசுலீம்கள் பெரும்பகுதி தி.மு.க.விற்கே வாக்களித்துள்ளனர். இந்நிலையில் வாக்களித்த மக்களுக்கு உரிய உரிமை வழங்குவது அரசின் கடமை அல்லவா?”

முஸ்லீம்கள் எதிராக வாக்களித்திருந்தால் அரசு வேறு விதமாக நடந்து கொள்ள வேண்டுமா?
முஸ்லீம்களுக்கு என்று ஒரு விதி,
இந்துக்களுக்கு என்று ஒரு விதி
வைத்து அரசு இது போன்றவற்றில்
செயல்பட்டால் அதன் விளைவுகள்
விபரீதமாக இருக்கும்.

அது போல் கைதிகளை தண்டனை காலத்திற்கு முன்னரே விடுதலை செய்வதில் பெண்களுக்கு ஒரு விதி,
ஆண்களுக்கு ஒரு விதி என்று அரசு
நடந்து கொண்டால் அது சரியாகுமா.

மாதையன் முஸ்லீம் அல்லவே,
ராஜுவ் காந்தி வழக்கில் சிறையில்
ஆயுள் தண்டனை பெற்று எந்த
முஸ்லீமும் இல்லையே.

1997 நவம்பரில் கோவையில்
நடந்தது, 1998 பிப்ரவரி மாதம்
கோவையில் நடந்ததும் ஒரே
மாதிரியான சம்பவங்கள் அல்ல.
முன்னது ஒரு போலிஸ்காரர்
கொலை செய்யப்பட்டதால்
ஏற்பட்ட கலவரம்.பின்னது
திட்டமிட்டு செய்யப்பட்ட
குண்டுவெடிப்பு.இரண்டையும்
ஒன்றாக கருத முடியாது.
அன்று போலிஸ்காரரைக் கொன்றது
இந்த்துவ அமைப்புகளா?பின்
மூன்று மாதங்கள் கழித்து
குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதும்
இந்த்துவ அமைப்புகளா?

எந்த ஒரு அரசும் ராஜிவ் காந்தி கொலை வழக்கு போன்றவற்றில்
இப்படித்தான் நடந்து கொள்ளும்.
வழக்கின் தன்மை அப்படி.
தனிப்பட்ட முறையில்
சில நபர்களுக்கு இருக்கும்
கருத்துக்கள்
அரசின் கருத்தாக இருக்க
வேண்டியதில்லை.

இறுதியாக அண்மையில் உச்சநீதி
மன்றம் வழக்கொன்றில் தந்துள்ள
தீர்ப்பு ஆயுள்கைதிகளை குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்த பின் விடுதலை செய்வதை கேள்விக்குறியாக்கியுள்ளது.

'நீதிமன்றத்திற்குள்ளும் அரசியல் உள்ளதால் முசுலீகளுக்கு மட்டுமல்ல சாதாரண குடி மகனுக்கும் நீதி கிடைப்பது அரிதாகி வருகிறது'.

இதற்கு தீர்வு மதரீதியாக பிரச்சினைகளை அணுகுவது அல்ல.

மனித உரிமை அமைப்புகள் தங்கள்
தனித்தன்மை,நம்பத்தன்மையை
மத ரீதியாக மனித உரிமை பிரச்சினைகளை அணுகும் போது
இழக்கும் ஆபத்து இருக்கிறது.
பரந்துபட்ட,அனைத்து பிரிவினரின்
ஆதரவை மனித உரிமை அமைப்புகள்
பெற விரும்பினால் அவை மதரீதியான அணுகுமுறைகளை
கைவிட வேண்டும்.குறிப்பிட்ட ஆண்டுகளை சிறையில் கழித்த
அனைத்து கைதிகளையும் விடுதலை
செய்யக் கோரினால் அதை புரிந்து
கொள்ள முடியும்.அதை விடுத்து
அதில் இத்தனை பேர் முஸ்லீம்கள்,
ஒட்டுப் போட்ட முஸ்லீம்களுக்கு
அரசு இதைச் செய்ய வேண்டும்
என்று கோருவது சரியல்ல.

வீரப்பன் இந்து என்பதற்காக
எந்த இந்து அமைப்பும் அவரைக்
கொண்டாடவில்லை.இந்து என்பதால்
பொது மன்னிப்பு வழங்கு என்று இந்து
அமைப்புகள் கோரவில்லை.

சுப.நற்குணன்,மலேசியா. said...

வணக்கம்.

எனது 'திருமன்றில்' திரட்டியில் தங்களின் வலைப்பதிவை இணைத்துள்ளேன். பார்க்கவும்.

http://thirumandril.blogspot.com/

தாங்கள் விரும்பினால் திருமன்றிலுக்கு உங்கள் வலைப்பதிவில் தொடுப்பு கொடுக்கலாம்.

நன்றி.