Wednesday, October 15, 2008

ஈழத் தமிழர் நலன் காக்க தமிழக கட்சிகள் நிறைவேற்றிய தீர்மானங்களை புதுச்சேரி அரசு ஆதரிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 15-10-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர் நலன் காக்கும் வகையில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையில் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் வகையில் சிங்கள அரசு இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிங்கள அரசின் இந்த இன அழிப்பு நடவடிக்கையை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் கண்டித்துள்ளனர்.

தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட இராணுவ உதவிகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழகக் கடசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் போரை இரண்டு வாரத்திற்குள் நிறுத்த மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.களும் பதவி விலக நேரிடும்’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை வரவேற்பதோடு, தமிழக கட்சிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழக கட்சிகள் நிறைவேறியுள்ள தீர்மானங்களை ஆதரிக்க வேண்டும். இல்லையேல், புதுச்சேரி காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதோடு, ஒட்டுமொத்த தமிழர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.

அனைத்துக் கட்சித் தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு ‘இந்த தீர்மானங்களை முழு மனதோடு ஆதரிக்கின்றோம், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவோம்‘ எனக் கூறியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஈழத் தமிழர் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

5 comments:

சிவா சின்னப்பொடி said...

இந்தப் பேரெழுச்சியை சீர் குலைப்பதற்கு தமிழர் விரோத சக்கதிகள் முயலக் கூடும்.அதை முறியடிக்க வேண்டிய கடமை தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்களுக்குண்டு

Anonymous said...

உங்கள் முயற்சியும் ஆதரவும் எங்கள் நெஞ்சை நெகிழ வைக்கின்றது.

ஒரு ஈழத்துத் தமிழன்

Anonymous said...

உங்கள் முயற்சியும் ஆதரவும் எங்கள் நெஞ்சை நெகிழ வைக்கின்றது.

ஒரு ஈழத்துத் தமிழன்

Anonymous said...

புலிகளைக் காப்பாற்ற கருணாநிதி முயல்கிறார்: கனிமொழியின் ராஜிநாமா நடவடிக்கை வடிகட்டிய மோசடி நாடகம்
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா

சென்னை, அக். 15: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று கோருவதன் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"2 வாரங்களுக்குள் போர் நிறுத்தம் வர நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா என்று ஒரு தீர்மானத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றி உள்ளனர். இதன் மூலம் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முதல்வர் முயல்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கையில் இப்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கையில் இப்போது நடப்பது விடுதலைப் புலிகள் எனும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இதில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவிடாமல், அவர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன. இது உடனே நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துச் செல்ல விடுதலைப் புலிகள் தடை செய்யக் கூடாது என்று விடுதலைப்புலி நண்பர்கள் மூலம் கருணாநிதி வலியுறுத்தி இருக்கலாம்.

மத்திய அரசுக்கு 2 வார அவகாசம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பது மிகப் பெரிய மோசடி நாடகம்.

மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் 6 மாதங்களில் முடியவுள்ளது. அதனால் பெரிய நஷ்டமில்லை என கருணாநிதி கருதுகிறார் போலும். ஆனால், மத்திய அமைச்சர்களைப் பற்றி தீர்மானத்தில் ஏதும் குறிப்பிடவில்லை.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, இலங்கைத் தமிழர்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியையே ராஜிநாமா செய்ததாகச் சொல்லும் கருணாநிதி, இன்னும் 30 மாதங்கள் பதவிக் காலம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வோம் என ஏன் சொல்லவில்லை? மாநில அரசே பதவி விலகும் என ஏன் அறிவிக்கவில்லை?

கருணாநிதி சொன்னதை செய்யக் கூடிய மத்திய அரசு இருக்கிறது. எனவே, கருணாநிதி வேண்டுகோளை ஏற்று, பிரதமர் தொலைபேசியில் இலங்கை அதிபரை தொடர்புகொண்டு பேசுவார் அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை இலங்கைக்கு அனுப்பி இந்தியாவின் கவலையை தெரிவிக்கச் சொல்வார். பின்னர் ""மத்திய அரசு சரியான பாதையில் செல்கிறது'' என்று அறிக்கைவிட்டு, தனக்கு வெற்றி கிடைத்ததாக கருணாநிதி சொல்வார். இதுதான் அவர் நடத்தப்போகும் நாடகம்.

தமிழக மக்களவை உறுப்பினர்கள் ராஜிநாமா செய்தாலும், பிரதமரை அறிக்கை விடச் செய்து அமைச்சர்கள் பதவியில் நீடிக்க வைக்க தேவையான ஏற்பாட்டினை கருணாநிதி செய்வார்.

இதுபோன்ற கண்துடைப்பு நாடகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

உண்மையில் இலங்கைத் தமிழர் மீது அக்கறை இருந்தால் அமைச்சரவையில் இருந்து திமுக விலகுவதாக உடனே அறிவிக்க வேண்டும். அனைத்து தமிழக மக்களவை உறுப்பினர்களும் அரசுக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் திமுக அரசு பதவி விலக முன்வர வேண்டும்' என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, அக். 15: கனிமொழியின் ராஜிநாமா நடவடிக்கை வடிகட்டிய மோசடி நாடகம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக கருணாநிதியின் மகள் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்து விட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது கனிமொழிக்கு அக்கறை இருந்தால், மாநிலங்களவைத் தலைவரிடம் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை இன்றைய தேதியிட்டு கொடுத்திருக்க வேண்டும். தன் தந்தையிடம் பின் தேதியிட்டு கொடுத்துள்ளார். கனிமொழியின் ராஜிநாமாவுக்கு அது எழுதப்பட்டிருக்கும் காகிதத்தின் மதிப்புக் கூட கிடையாது. இது வடிகட்டிய மோசடி நாடகம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.


http://www.thenee.com/html/161008-3.html

Anonymous said...

அக்கரைப்பற்று வம்மிமடுக்குளப் பிரதேசத்தில் விவசாயத் தெழிலில் ஈடுபட்டள்ள தமிழ், முஸ்லிம் விவசாயிகள் நால்வரை பிரபாகரன் தலைமையிலான பிணம் தின்னும் பயங்கரவாதிகள் இன்று சுட்டுக்கொன்றுள்ளார்கள். சின்னத்தம்பி, சுந்தரலிங்கம் (49)கோளாவில் மற்றும் சின்னவன் ஆகிய தமிழர்களும் மொஹமட் அபூபக்கர் (68) அக்கரைப்பற்று மற்றும் முஹமட் இஸ்மாயில் ஹயாத்து பாபா (56) அக்கரைப்பற்று ஆகியோருமே பயங்கரவாதிகளின் பசிக்கு இரையாக்கப்பட்டவாகள் என அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://vizhippu.net/node/14727