Sunday, July 26, 2009

புதுச்சேரியின் புதிய ஆளுநர் பதவி ஏற்பதில் மரபு மீறப்பட்டுள்ளது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.07.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியின் புதிய ஆளுநர் பதவியேற்பின் போது புதுச்சேரி தலைமை நீதிபதிக்கு பதிலாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளது சட்டவிரோதமானது என்பதோடு, பிரெஞ்சு காலம் தொட்டு இருந்துவரும் மரபை மீறும் செயலாகும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.

புதுச்சேரியின் புதிய ஆளுநராக இக்பால்சிங் வரும் 27-ந் தேதி திங்களன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு புதுச்சேரியின் தலைமை நீதிபதி மேன்மைமிகு டி.கிருஷ்ணராஜா அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என செய்தி வெளியானது.

ஆனால், தற்போது புதுச்சேரி தலைமை நீதிபதிக்கு பதிலாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேன்மைமிகு எச்.எல்.கோகுலே அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பிரெஞ்சுக் காலம் முதல் ஆளுநர் பதவியேற்பின் போது புதுச்சேரி தலைமை நீதிபதியே பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற மரபை மீறியுள்ளது ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களை அவமதிப்பதாகும். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்த அவப்பெயர் வந்துவிட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

இந்திய அரசியல் சட்டத்தில் நேரடியாக சொல்லப்படாவிட்டாலும், நீண்ட காலமாக இருந்து வரும் மரபை சட்டமாகவே மதித்து செயல்படுவது நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். அதன் அடிப்படையில் பார்த்தால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி புதிய ஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது சட்டவிரோதமானது.

எனவே, சட்ட நடைமுறையையும், மரபையும் காக்கும் பொருட்டு, புதிய ஆளுநர் பதிவியேற்பின் போது புதுச்சேரி தலைமை நீதிபதி அவர்களே பதவி பிரமாணம் செய்து வைக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய உள்துறை செயலர், மத்திய சட்டத் துறை செயலர், புதுச்சேரி தலைமைச் செயலர், சட்டத் துறை செயலர் ஆகியோருக்கு மனு அளிக்க உள்ளோம்.

Wednesday, July 22, 2009

"சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு" நூல் (1250 பக்கங்கள்): வல்லினம் வெளியிட்டுள்ளது!

என் இனிய நண்பர் வல்லினம் மகரந்தன் நேற்று முன் தினம் நான் புதிதாக குடியேறிய வீட்டிற்கு வந்தார். கையில் ஒரு பெரிய புத்தகத்தோடு வந்தார். அவர் எந்த புத்தகம் வெளியிட்டாலும் உடனடியாக எனக்கு ஒரு பிரதியைக் கொடுத்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைவார்.

அதேபோல் தான் அன்றைக்கும் அவர் புதிதாக ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். மிகவும் பிரமிக்க வைக்கும் வகையில் "சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு" என்ற 1250 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. வல்லினம் வெளியீடாக வந்த அந்த புத்தகத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் வீ.அரசு அவர்கள் தொகுத்துள்ளார். அரிய முயற்சி இது. இதற்காக பேராசிரியர் வீ.அரசு, வல்லினம் மகரந்தன் ஆகியோரை அனைவரும் பாராட்ட வேண்டும்.

நான் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் போது சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள் பற்றி அறிந்துக் கொள்ள முடிந்தது. தமிழ் ஆசிரியர் இராதா அவர்கள் ஆண்டுதோறும் கம்பன் கலையரங்கில் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களை நடத்துவார். அவர் மரபு சார்ந்த நாடக கலைஞர். மிகவும் சிரமப்பட்டு நாடகங்களை நடத்துவார்.

சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி புதுச்சேரியில் பிறந்தவர்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. அவரது நினைவிடம் புதுச்சேரி கருவடிக்குப்பம் சுடுகாட்டில் இருக்கிறது. எப்போழுது சாவு விழுந்தாலும் எரியூட்ட அங்கு செல்லும் போதெல்லாம் அந்த நினைவிடத்தைப் பார்க்காமல் வரமாட்டேன். எளிமையாகவும் எப்போது ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தும் நினைவிடம் அது. ஆண்டுதோறும் நாடக கலைஞர்களும், கலை இலக்கிய பெருமன்றமும் அவரது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செய்து, நிகழ்ச்சிகள் நடத்துவது உண்டு. புதுச்சேரி அரசும் ஆண்டுதோறும் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

வீ.அரசு குறிப்பிடுவது போல 'புதுச்சேரியைச் சேர்ந்த இவர்கள் சுவாமிகள் பற்றிய ஆவணத்தைக் கொண்டு வருவதின் மூலம், சுவாமிகள் பற்றிய புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். சுவாமிகளுக்கும் புதுவைக்கும் நெருக்கமான உறவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.'

புதுச்சேரியின் மூத்த பத்திரிகையாளரான தணிகைத்தம்பி அவர்கள் எடுத்த ஆவணப் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி குறிப்பிடும் போது வெளிப்பட்ட பக்தி கவனிக்கதக்கது. சங்கரதாஸ் சுவாமிகளின் தோற்றம் எவரையும் வணங்கத் தோன்றும் தோற்றம்.

1867-இல் பிறந்து 1922-இல் மறைந்த சங்கரதாஸ் சுவாமிகள் படைத்த பதினெட்டுப் பனுவல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவை: ஞான செளந்தரி சரித்திரம், ஸதி அநுசூயா, கர்வி பார்ஸ், பிரஹலாதன் சரித்திரம், சாரங்கதரன், அல்லி சரித்திரம், சீமந்தனி நாடகம், சுலோசனா ஸதி, அபிமன்யு சுந்தரி, அரிச்சந்திரா, பவளக்கொடி சரித்திரம், நல்லதங்காள், வள்ளித் திருமணம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், லலிதாங்கி நாடகம், லவகுச நாடகம், பாதுபாபட்டாபிஷேகம்.

தொகுப்பாக பெரிய நூலாக வரும் போது படிப்பதில் சற்று மலைப்பு இருப்பது இயல்பான ஒன்றுதான். ஒருவருடைய படைப்பை முழுமையாக ஒருசேர படிப்பதன் மூலம் அவருடைய பன்முகப்பட்ட பார்வையை, முரண்பாட்டை, தொடர்ச்சியை நாம் உணர முடியும். அந்த வகையில் இந்த நூல் சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிய மதிப்பீட்டை அறிய பெரிதும் உதவும்.

நூலிற்கான அட்டைப் படத்தை ஓவியர் மருது மிகச் சிறப்பகாக வரைந்துள்ளார். சுவாமிகளின் உருவம் கோடுகளுக்குள் சிதையாமல் பதிவாகியுள்ளது.

முழுமையாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. காலத்தை ஒதுக்கிப் படித்து விட்டு அதிகம் எழுத முயல்கிறேன். நூலைப் பார்த்தவுடன் ஒரு ஆவலில் இதை எழுதியுள்ளேன்.

நூல் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள:

வல்லினம், எண். 9, செந்தமிழர் வீதி, நைனார்மண்டபம், புதுச்சேரி - 605 004. தொலைபெசி: 0413-2354115. மின்னஞ்சல்: vallinam@sifi.com.

விலை: ரூ. 700/-

Monday, July 13, 2009

சிந்தாநதி மரணம்: ஆழ்ந்த இரங்கல்!

சிந்தாநதி மரணச் செய்தி மிகவும் காலதாமதமாக வந்தடைந்தது. வீடு மாறியதால் இணைய இணைப்பு கிடைக்க ஏற்பட்ட காலதாமதம், ஒரு நல்ல பதிவரின் மரணத்திற்காக கூட அழ முடியாமல் செய்துவிட்டது.

சிந்தாநதி படைப்புகளை ஓரளவுக்கு படித்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், அவர் பரந்துப் பட்டு எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவலுடையவர். அதை நோக்கியே எழுதினார்.

அவரது இழப்பு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக வலைப்பதிவர்கள் என அனைவருக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோ.சுகுமாரன், புதுச்சேரி.

புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம்: வரவேற்கிறோம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.07.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வரவேற்கிறோம்.

பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் திருத்திய மோசடியை வெளிக் கொண்டுவந்த காரணத்திற்காக ஊழியர் ஜெயராமன் கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் குற்றவாளிகளை புதுச்சேரி போலீசார் கைது செய்யவில்லை.

கடந்த 18.02.2008 அன்று ஜெயராமன் தற்கொலைக்கு முயன்று பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மருத்துவர் முன்னிலையில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது மதிப்பெண் திருத்தியதை ஏற்றுக் கொள்ளும்படி பல்கலைக்கழக உயரதிகாரிகள் தன்னை கட்டாயப்படுத்தியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். அதன் பின்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், இக்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி, கடந்த 03.07.2009 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு விரிவான மனு ஒன்றை அனுப்பினோம்.

கொலையுண்ட ஜெயராமனின் தாய் மற்றும் அவரது அண்ணன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இக்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம்.

கொலைக் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதிக் கிடைக்க சி.பி.ஐ. உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

Sunday, July 12, 2009

அ.மார்க்ஸ் எழுதியுள்ள "காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே?" நூல் வெளிவந்துவிட்டது
























பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள "காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே?" நூல் வெளிவந்துவிட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி சார்பில் வெளிவந்துள்ள இந்நூல் மொத்தம் 200 பக்கங்கள். விலை ரூ. 100.

அகில இந்திய அளவிலான உண்மை அறியும் குழுவில் காஷ்மீர் சென்று அங்குள்ள நிலைமைகளை கண்டறிந்து அவற்றை தொகுத்து அளித்துள்ளார் அ.மார்க்ஸ்.

'எல்லை தாண்டிய பயங்கரவாதம்' தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால் என இந்திய அரசியல்வாதிகள் முன்வைக்கின்றனர். இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் வேர் காஷ்மீர் பிரச்சினையில் பதிந்துள்ளதை நாம் அறிவோம்.

'காஷ்மீர் பிரச்சினை' என்பது உண்மையில் "காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு ஜம்மு காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினை" என்பதன் சுருக்கமே.

காஷ்மீர் பிரச்சினையின் வரலாற்றை, அங்கு தீவிரவாதம் உருப்பெற்றதில் இந்திய அரசின் பங்கை, தன் நேரடிக் கள அனுபவங்களுடன் இணைத்து ஒரு புனைவுக்குரிய விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறார் அ.மார்க்ஸ்.

2009 தேர்தல் வரை காஷ்மீர் வரலாற்றை சொல்லும் நூலாசிரியர் புதிய சூழலில் மேலெழும் பல புதிய கேள்விகளை வழக்கம் போல் முன்வைக்கிறார். இக்கேள்விகள் காஷ்மீருக்கு மட்டுமல்ல தென் ஆசியாவில் நடைபெற்று வரும் இதர விடுதலைப் போராட்டங்களுக்கும் பொறுத்தமானவையே.

நூல் கிடைக்குமிடம்:

புலம்,
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
செல்: 97898 64555, 98406 03499.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com

Saturday, July 11, 2009

தொடரும் மரணங்கள் - பாதுகாப்பற்ற சிறை: கைதி எனும் மனிதனைப் பாதுகாப்போம்!

புதுச்சேரி மத்திய சிறையில் தொடரும் மரணங்களால் அங்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் நடந்த பழங்குடியின இளைஞர் மரணம் சாட்சியாக விளங்குகிறது.

திண்டிவனத்தைச் சேர்ந்த பழங்குடியின குறவர் வகுப்பைச் சேர்ந்த சரவணன் கடந்த 23-ந் தேதியன்று சந்தேக வழக்கில் ஒதியஞ்சாலை போலீசாரால் கைது செய்யப்பட்டு காலாபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு வலிப்பு நோய் வந்ததாக கூறி சிறைக் காவலர்கள் 25-ந் தேதியன்று காலை 8.30 மணிக்கு அவரை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றைய தினம் இரவு 10.55 மணிக்கு சரவணன் இறந்து போனார்.

சரவணன் மரணம் சந்தேகத்திற்குரியது என்று அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் 27-ந் தேதியன்று மருத்துவமனை சவக் கிடங்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவுக்கு காரணமான சிறைத்துறையினர், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். இப்போராட்டத்திற்குப் பல்வேறு அமைப்புகள் ஆதரவுத் தெரிவித்தன.

சரவணன் மரணம் குறித்த சந்தேகங்கள், மர்மங்கள் குறித்து பார்ப்பதற்கு முன், கடந்த சில அண்டுகளாக சிறையில் நடந்த தற்கொலைகள், மரணங்கள் பற்றி குறிப்பிடுவது அவசியம். 3.5.2005: சிறைச்சாலை நகரத்தின் மையப் பகுதியான நேரு வீதியிலிருந்த போது வெளியிலிருந்து வீசப்பட்ட பாக்கெட்டில் இருந்த விஷச் சாராயத்தை அருந்திய கைதிகள் அலி, ஜெகன், பெரியய்யா அகியோர் மரணமடைந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து அப்போது எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் போராடின. சிறையில் இருந்த வேறு கைதிகளைக் கொல்ல நடந்த சதி என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையொட்டி அரசு உடனடியாக ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி வேணுகோபால் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தது.

இக்கமிஷன் அறிக்கை தாக்கல் செய்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. அறிக்கை சட்டமன்றத்தின் முன் விவாதத்திற்கு வைக்கப்பட்டு அதன்மீது நடவடிக்கை எதுவும் எடுக்க அரசு முயலவில்லை. குற்றவாளிகளைக் காப்பாற்றவே அரசு இவ்வழக்கை மூடிமறைத்துள்ளது. சிறையில் இறந்த கைதிகள் குடும்பத்தினருக்கு இதுவரையில் குறைந்தபட்ச நிவாரணம்கூட வழங்கப்படவில்லை.

புதுச்சேரி அரசு கண்துடைப்பிற்காக சிறைக்கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட சில சிறை வார்டர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது. ஆனால், ஒரு சில நாட்களிலேயே பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். இன்றைய நாள் வரை இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

4.5.2007: ராம்மூர்த்தி (வயது: 31), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர், மனைவியை விவாகரத்து செய்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவின்படி மனைவிக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 20 ஆயிரத்தை வழங்கததால் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஓரிரு தினங்களிலேயே சிறையின் இரண்டாவது மாடியில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த வழக்கு தற்கொலை வழக்காகப் பதியப்பட்டு முடிக்கப்பட்டது.

21.4.2008: 1999-இல் தன் அண்ணன் மனைவியான பார்வதி என்ற இளம் பெண்ணை பாலியியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கொலை செய்த கமல் ஷா ஆயுள் தண்டனைப் பெற்று காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு மிகவும் பிரபலமான வழக்கு என்பதை அறிவோம்.

கைதி கமல் ஷா திடீரென ஸ்பூனால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார் என சிறைத் துறை கூறியது. ஆனால், இதை யாரும் நம்ப தயாராக இல்லை. கமல் ஷா கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதுவும் புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகேயுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது விட்டை அபகரிக்கும் நோக்கத்தோடு இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற பேச்சு அடிப்பட்டது. ஆனால், இந்த கோணத்தில் வழக்கை போலீசார் விசாரிக்கவில்லை.

6.6.2009: கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனைப் பெற்று காலாப்பட்டு புதிய சிறையில் இருந்த அரியாங்குப்பத்தைச் சேர்ந்த முருகன் (வயது: 31) உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்படும் என யாரோ சொன்னதை நம்பி, மனமுடைந்து சிறையிலுள்ள கண்காணிப்பு டவரில் ஏறி துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.

நேரு வீதியிலிருந்த பழைய சிறை போதிய இடவசதி இல்லாததால் இதுபோன்ற சம்பங்கள் நடக்கின்றன என்று அப்போதைய சிறைத் துறை ஐ.ஜி. வாசுதேவ ராவ் கூறியதை பொய்யாக்கியது இச்சம்பவம். இதிலும் இரண்டு வார்டர்களை தற்காலிக பணிநிக்கம் செய்ததோடு நடவடிக்கை முடிக்கப்பட்டது. வார்டர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு ஒரு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது தனிக்கதை.

கைதிகள் கமல் ஷா முருகன், ஆகியோரின் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி வீரநாத் ராவ் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அரசு அமைத்தது. கமல் ஷா தற்கொலை பற்றிய விசாரணை அறிக்கை கடந்த 23.1.2009 அன்று தாக்கல் செய்யப்பட்டும், இதுவரையில் அதன்மீது நடவடிக்கை இல்லை.

இதெல்லாம், புதுச்சேரி சிறையில் கடந்த காலங்களில் நடந்த அவலங்களின் தொகுப்பு. மேலே குறிப்பிட்ட எந்த வழக்கிலும் இதுநாள் வரையில் சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட கைதிகளின் குடும்பத்தினருக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

கடந்த கால நிலையே இதுவென்றால் அண்மையில் பழங்குடியின இளைஞர் மரணத்திற்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமகளிடம் துளியும் இல்லை என்பதை அரசு உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சரவணனின் உடலைப் பார்த்த போது, அவரது காது, மூக்கு, வாய் வழியாக ரத்தம் கசிந்திருந்தது. உடல் எங்கும் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. ஒரு பல் உடைந்திருந்தது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது சரவணன் வலிப்பு வந்து இறந்த்தாக கூறுவது நம்பும்படி இல்லை. அவர் கடுமையான சித்தரவதையை அனுபவித்து இறந்ததாகவே கருத வேண்டியுள்ளது.

மேலும், அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா? ஒன்றுமில்லை. அவர் மீது ஒதியஞ்சாலை போலீசார் சந்தேக வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளனர். அவரைப் பார்க்கும் போது சந்தேகப்படும்படி இருந்ததால் இந்த வழக்குப் போட்டதாக போலீசார் கூறுகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே அவரது மரணம். மிகவும் வறுமை நிலையில் உள்ள பழங்குடியின குறவர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பார்ப்பதற்கு சந்தேகப்படும்படி இருக்கிறார் என்று போலீசார் சொல்வது அவர்களது சமூக பார்வையில் உள்ள குறைப்பாட்டையே காட்டுகிறது.

ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 11 கட்டளைகள் இவரைக் கைது செய்யும் போதும் பின்பற்றப்படவில்லை. கைது செய்த போது தகவல் தராத போலீசார் இறந்த போது வீடு தேடி வந்து தகவல் சொன்னதாக அவரது மனைவி தெரிவித்தார்.

இதுபோன்ற மரணங்கள் நிகழும் போது சிறைத் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. இதனாலேயே இதுபோன்ற சம்பங்கள் தொடர்கின்றன. கைதி ஒருவர் சிறையில் இருப்பது என்பது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தான் என்பதால் அது ‘நீதிமன்ற காவல்’ ஆகும். அதாவது சிறைக் கைதிகளின் உயிருக்கு முழுப் பொறுப்பு நிதிமன்றமாகும். ஆனால், நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. இது தொடருமானால், மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை போய்விடும் ஆபத்துள்ளது.

தற்போது அமைந்துள்ள காலாப்பட்டு சிறை பல ஏக்கர் அளவுக் கொண்ட பெரிய சிறை. இதனை நிர்வகிக்க தற்போதைய ஊழியர் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போதைய ஊழியர் எண்ணிக்கையில் ஒரு சிறைத் துணைக் கண்காணிப்பாளர், இரண்டு உதவி சிறைக் கண்காணிப்பாளர், 10 வார்டர்கள் பதவிகள் நிரப்பபடாமல் உள்ளன. இதனால், கைதிகளை கண்காணிப்பதில் மிகுந்த சிரமம் இருப்பதாக கூறுகின்றனர் வார்டர்கள்.

‘குற்றத்தை வெறு குற்றவாளிகளை வெறுக்காதே’ என்று காந்தி கூறியதை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்கோ, குற்றவாளிக்கோ இவ்வாறு அநீதி இழைக்கப்படும்போது அனைவரும் அமைதியாக இருப்பது மிகப் பெரும் மனித உரிமை மீறலுக்கு மறைமுகமாக துணைப் போவதாகும். மெளனத்தைக் கலைந்து, உயர்ந்து நிற்கும் மதில் சுவற்றுக்குள் இருக்கும் சிறைக் கம்பிகளுக்குள் அடைப்பட்டிருக்கும் ‘கைதி’ எனும் மனிதனுக்கும் எதிராக குரல் கொடுப்போம் வாருங்கள்.

1934-இல் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களால் தொடங்கப்பட்டு தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரிவினரால் நடத்தப்படும் "சுதந்தரம்" இதழில் வெளியானது.

Saturday, July 04, 2009

குற்றவாளிகளை ஜாமீனில் விட நீதிபதியை நிர்பந்தம் செய்த மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ம்ற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு 03.07.2009 அன்று அனுப்பியுள்ள மனு:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் திருத்திய மோசடி குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரையில் இருவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தலைமறைவாக உள்ள டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் அவரது மகன் கிருபா ஸ்ரீதர் ஆகியோரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், மேற்சொன்ன டாக்டர் மற்றும் அவரது மகனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீது கடந்த 30.06.2009 அன்று நடந்த விசாரணையின் போது நீதிபதி ஆர்.ரகுபதி அவர்கள், ‘மனுதாரர்களுக்கு சாதகமாக உத்தரவிட மத்திய அமைச்சர் ஒருவர் தன்னை நிர்பந்தித்தார்’ என கூறியுள்ளார். இந்த செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ள அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நீதித்துறையின் செயல்பாட்டில் இந்த தலையீடு குறித்து நீதிமன்றத்தில் வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் தகவல் தெரிவித்த நீதிபதிக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மேற்சொன்ன நீதிபதி அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரின் பெயரை வெளியிட ஆவன செய்ய வேண்டுகிறேன்.

இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடப்பேன் என பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சர் ஒருவரால் நீதித்துறைக்கு விடப்பட்டுள்ள சவாலுக்கு இந்திய அளவில் பல்வேறு சட்ட வல்லுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அமைச்சரின் இந்த செயல் தண்டனைக்குரிய நீதிமன்ற அவமதிப்பு எனக் கருத்து தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.வர்மா அவர்கள் ‘இதுபோன்ற அதிகாரம்மிக்க, உயர் பொறுப்பிலுள்ள பலமிக்கவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சிறு குற்றங்கள் செய்தவர்களைத் தண்டிப்பதில் பொருளில்லை’ எனக் கூறியுள்ளதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

நீதிபதிகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யவும், நீதித்துறையின் மாண்பைக் காக்கவும் இச்சம்பவம் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். புதுச்சேரி பல்கலைகழகத்தில் நடந்த மதிப்பெண் திருத்திய மோசடியில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பணம் படைத்தவர்கள் கூட்டாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மோசடியை அம்பலப்படுத்திய பல்கலைக்கழக தேர்வுக் கட்டுபாட்டுத் துறை ஊழியர் ஜெயராமன் கடந்த 20.05.2008 அன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரையில் குற்றவாளிகள் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், இறந்து போனவரின் அண்ணன் துரைராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தன் தம்பி கொலையில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சம்பத், மற்றும் கெளரிபாய் உட்பட பலருக்குத் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இவ்வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது.

மேலும், மேற்சொன்ன ஜெயராமன் 18.02.2008 அன்று தற்கொலைக்கு முயன்று பிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது அவரிடம் காலாபட்டு போலீசார் ஒரு மருத்துவர் முன்னிலையில் வாக்குமூலம் பெற்றனர். அதில், மேற்சொன்ன இருவரும் மதிப்பெண் மோசடி குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி தன்னை வற்புறுத்தியாதாக கூறுயுள்ளார். அவரின் வாக்குமூலம் இன்றைக்கும் குற்றாவாளிகளை வெளிப்படுத்தும் மரண வாக்குமூலமாக திகழ்கிறது.

எனவே, புதுச்சேரி பல்கலைகழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும், இம்மோசடியை அமபலப்படுத்திய பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவும் ஆவன செய்ய வேண்டுகிறேன்.