Thursday, March 11, 2010

மகளிர் இடஒதுக்கீடு: சமூக அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.03.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

உலக மகளிர் தினத்தில் பெண்களுக்குப் பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார வரவேற்கிறோம்.

சமூகத்தில் சம பாதியாக உள்ள பெண்களுக்கு அதிகாரத்தில் இடமளிப்பது அவசியம். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளித்திடும் வகையில் மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில் இந்த இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்து சமூக நீதியைக் காத்திட வேண்டும். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இடஒதுக்கீட்டில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகத்தின் முதல்வர் கருணாநிதி மற்றும் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் ஆகியோர் சமூகத்தின் அடித்தளத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு சமநீதி கிடைக்க இந்த கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Wednesday, March 10, 2010

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி "மகளிர் தின விழா"


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா பாரதி பூங்கா எதிரில் உள்ள வணிக அவையில் 8.3.2010 அன்று காலை 10 மணியளவில்  நடைபெற்றது. இதில் 7 ஆண்டுகள் சிறை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டது.

இக்கருத்தரங்கத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

சமூக ஆர்வலரும், கவிஞருமான மாலதி மைத்ரி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், இளைஞர் நிறுவன பொறுப்பாளர் திலகவதி ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துரை வழங்கினர்.

முடிவில் கோவை சிறையில் இருக்கும் முஸ்லீம் கைதிகளின் குடும்பத்தினர் படும் துன்பங்களை விளக்கும் "நீதியைத் தேடி" என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

சிறையில் உள்ள ஆயுள் கைதிகளின் குடும்பத்தினர் திரளாக கலந்துக் கொண்டனர். சிறைக் கைதிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க தங்கள் துயரங்களை வெளிப்படுத்தினர்.

Tuesday, March 09, 2010

புதுச்சேரியில் மது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரியில்  மனித நேய மக்கள் கட்சி சார்பில் மது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 07.03.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், அண்ணா சிலை அருகில்  நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.எ.அஷ்ரப் தலைமை வகித்தார்.

புதிதாக 90 மதுக்கடைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரியில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்க அளவில் மனித நேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தின் அங்கமாக் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் இ.முகமது சலீம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ.அப்துல்ராஜாகான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி அமைப்பாளர் சு.பாவாணன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், சிங்காரவேலர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் கோ.செ.சந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு மது ஒழிப்பை வலியுறுத்தி பேசினர்.

சிறப்பு அழைப்பளராக  கலந்துக் கொண்ட மனித நேய மக்கள் கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் முத்துப்பேட்டை அப்துல் மாலிக் கணடன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்துக் கொண்டனர்.

Tuesday, March 02, 2010

லலித் கலா அகாடமி அதிகாரி அரிகரனை பணி நீக்கம் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 02.03.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

லலித் கலா அகாடமி மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரி அரிகரன் அரசு அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் சென்றது தொடர்பாக அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

லலித் கலா அகாடமி மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியான அரிகரன் பாரதியார் பலகலைக்கூடத்தின் முன்னாள் முதல்வர் ஆவார். இவர் கடந்த 2007, 2008 ஆண்டுகளில் அரசின் முன் அனுமதியின்றி அமெரிக்காவிற்கு பலமுறை சென்று வந்துள்ளார். அரசு ஊழியர்களின் நடத்தை விதிப்படி ஒரு அரசு ஊழியர் வெளிநாடு செல்ல முன் அனுமதி பெற வேண்டும் எனபது கட்டாயம்.

இதுகுறித்து அரசுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட புகார்களின் அடிப்படையில் அரசு ஏ.எப்.டி. பஞ்சாலையின் இணை நிர்வாக இயக்குநர் எஸ்.டி.சுந்தரேசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணை அதிகாரி உரிய விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த விசாரணை அறிக்கையில் அரிகரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன.

மேலும், அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தின் முதல்வராக இருந்த போது பல்வேறு ஊழல், முறைகேடுகள், கையாடல், நிர்வாக குளறுபடிகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அரசு அப்போதைய உள்ளாட்சி துறை இயக்குநர் தேவநீதிதாஸ் மற்றும் கலெக்டர் ராகேஷ் சந்திரா ஆகியோர் தலைமையில் இரண்டு விசாரணைக் குழுக்களை அமைத்தது. அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளும் அவருக்கு எதிராகவே உள்ளன.

தவறிழைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அதிகாரிகள் அவரை பாதுகாத்து வருகின்றனர். பாரதியார் பல்கலைக்கூட முதல்வராக இருந்த போது அவருக்கு எதிராக மிகப் பெரும் போராட்டம் நடத்தியதன் விளைவாகவே அவர் அங்கிருந்து மாற்றப்பட்டார். அதன்பின் அவர் லலித் கலா அகாடமியின் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்ற டிசம்பர் 1999 முதல் டிசம்பர் 2009 வரையில் எந்தவித பணியும் செய்யாத அவருக்கு அரசு 30 லட்சத்து 58 ஆயிரத்து 280 ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளது.

எனவே, புதுச்சேரி அரசு குற்றமிழைத்த அதிகாரி அரிகரனை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். இக்கோரிகையை வலியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதியன்று சட்டசபை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.