Friday, May 21, 2010

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பெயரைக் கெடுக்கும் வகையில் சுவரொட்டி: விளக்கம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 21.05.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

அமைச்சர் ஷாஜகான் பதவி விலக கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பெயரைப் போன்ற தோற்றமுடைய அமைப்புப் பெயரில் புதுச்சேரி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமைச்சர் ஷாஜகான் மீது சென்னை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை நடத்த தடை விதிக்க தொடரப்பட்ட வழக்கை கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்ய கோரி நேற்றைய தினம் புதுச்சேரி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்படிருந்தன. இந்த சுவரொட்டிகள் “மனித உரிமைக் கூட்டமைப்பு, தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் பாரதீய ஜனதா கட்சி, காலாப்பட்டு தொகுதி” ஆகியவற்றின் பெயரில் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த சுவரொட்டிகள் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஒட்டப்பட்டதாக மக்கள் எண்ணும்படி திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ளன. கூட்டமைப்பு பெயரைப் போன்ற தோற்றமுடைய அமைப்புப் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

அமைச்சர் ஷாஜகான் வழக்கு குறித்து அனைத்து ஆவணங்களையும் சேகரித்து எங்களது சட்ட வல்லுநர்களிடம் உரிய சட்ட ஆலோசனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். அதன் பின்னரே, இப்பிரச்சனை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்ய உள்ளோம்.  

மக்களைப் பிரித்து மலிவான அரசியல் செய்யும் மதவாத அமைப்புகள், கட்சிகள் ஆகியவற்றோடு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஒருபோதும் இணைந்து செயல்படாது. இந்நிலையில், கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நல்ல பெயரையும், ஆதரவையும் சீர்குலைக்கும் வகையில் மதவாத கட்சியின் பெயரோடு சேர்ந்து இருப்பதுபோல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.  

அண்மைக் காலமாக மனித உரிமை என்ற பெயரில் போலியான அமைப்புகள் கட்டப் பஞ்சாயத்து செய்வது, சட்டத்திற்குப் புறம்பாகவும் செயல்படுவது குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு தகவல்களைத் திரட்டி வருகிறோம். இது பற்றி விரைவில் புதுச்சேரி அரசுக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்.

Saturday, May 15, 2010

புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு

நாள்: 16-05-2010  ஞாயிறு,

நேரம்: காலை 10 முதல் மாலை 6 மணி வரை,

இடம்: வணிக அவை, (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி.


தொடக்க நிகழ்வு

காலை 10.00 மணி முதல் 11.30 மணிவரை

தலைமை:

திரு.இரா.சுகுமாரன் அவர்கள்

ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.

வரவேற்பு:

திரு.ஏ.வெங்கடேஷ் அவர்கள், திரட்டி.

மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை:

முதுமுனைவர் -செந்தமிழ் அந்தணர்- கழக இலக்கிய செம்மல்

திரு. இரா. இளங்குமரனார் அவர்கள்.

நூல் வெளியீடு:

தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?.

தொகுப்பு: புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள்

வெளியிடுபவர் :

பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்

முதல் படி பெறுபவர்:

திரு கோ.சுகுமாரன் அவர்கள்,

செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், INFITT).

 முற்பகல் 11.30 மணி முதல் 1.30 மணிவரை

 முதல் அமர்வு

தலைமை

பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள், புதுச்சேரி

முன்னிலை:

திரு ஓவியர் இரா.இராசராசன் அவர்கள்

திரு ம.இளங்கோ, அவர்கள்

திரு க. அருணபாரதி அவர்கள், மென்பொருள் வல்லுநர்.
கருத்துரை:

திரு.இராம.கி அவர்கள் பொறியாளர்

பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் (INFITT), சென்னை

 திரு மணி.மு.மணிவண்ணன் அவர்கள், பொறியாளர் சென்னை,

முனைவர் சொ.சங்கரபாண்டி அவர்கள்,

தமிழ்மணம்- வலைப்பதிவுகளின் திரட்டி, அமெரிக்கா,

திரு விருபா.குமரேசன் அவர்கள்,

விருபா.காம், சென்னை.

--------------------------------------------------------------------------------------

 உணவு இடைவேளை: பகல் 1.30 மணிமுதல் 2.30 மணிவரை

மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 -------------------------------------------------------------------------------------

பிற்பகல் அமர்வு

பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை

தலைமை:

 திரு.தமிழ நம்பி அவர்கள்

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு

முன்னிலை:

திரு.வீரமோகன் அவர்கள்

திரு. சீத்தா .பிரபாகரன் அவர்கள்,

திரு.ஓவியர். பா.மார்கண்டன் அவர்கள்

கருத்துரை:

பேராசிரியர். செல்வக்குமார் அவர்கள்,

வாட்டலூ பல்கலைக்கழகம். கனடா,

திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா,

திரு. மா,பூங்குன்றன் அவர்கள்,

தென்மொழி, சென்னை.

திரு.சுப. நற்குணன் அவர்கள், மலேசியா,

திரு, சீனு. அரிமாப்பாண்டியன் அவர்கள்,

செயலர், தனித்தமிழ்க் கழகம, புதுச்சேரி,

திரு. க. தமிழமல்லன் அவர்கள்

தலைவர், தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி,

திரு. ந.மு தமிழ்மணி அவர்கள்

அமைப்பாளர் , செந்தமிழர் இயக்கம்,புதுச்சேரி

திரு. கோ.தாமரைக்கோ அவர்கள்,

பாவலர் அரங்க. நடராசன் அவர்கள்

தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி

திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்

தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி

திரு. எழில் . இளங்கோ அவர்கள்

தமிழியக்கம், விழுப்புரம்,

நிறைவு நிகழ்வு

மாநாட்டு நிறைவுரை:

பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்

நன்றியுரை:

திரு. இரா. மோகனகிருஷ்ணன் அவர்கள்

புதுவை.காம்
----------------------------------------------------------------------------------------------------
வெளிநாடுகளில் இருந்து உரையாற்றும் அறிஞர்களின் உரை இணைய வழியாக நேரடியாக ஒளி/ஒலிபரப்பப்படும்.
----------------------------------------------------------------------------------------------------

நிகழ்ச்சி ஏற்பாடு:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர்

மூலக்குளம் புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com,

இணையம் : www.pudhuvaitamilbloggers.org

வலைப்பூ : www.puduvaibloggers. blogspot.com

அனைவரும் வருக! ஆதரவுத் தருக!!

Tuesday, May 11, 2010

மதிப்பெண் மோசடி - ஜெயராமன் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் சி.பி.ஐ. கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.05.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியை வெளிக் கொண்டு வந்த பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்த சி.பி.ஐ.க்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார பாராட்டுக்களைத் தெரிவித்து கொள்கிறோம்.
   
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியைக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்திய காரணத்தினால் பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கடந்த 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டுமென அவரது குடும்பத்தினரும், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பினரும் தொடர்ந்துப் போராடினர். இதன்பின்னர், இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. 
 
தற்போது இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறையின் ஊழியரான கன்னியப்பன் என்பவரை சி.பி.ஐ. போலீசார் நேற்றைய தினம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சி.பி.ஐ. போலீசாரின் இந்த கைது நடவடிக்கை இக்கொலை வழக்கில் நீதி நிலை நாட்டப்படும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. சவால்கள் நிறைந்த இப்பணியை மேற்கொண்ட சி.பி.ஐ. காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும், மதிப்பெண் மோசடி மற்றும் ஜெயராமன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் பாகுபாடின்றி கைது செய்ய சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.