Tuesday, May 11, 2010

மதிப்பெண் மோசடி - ஜெயராமன் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் சி.பி.ஐ. கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.05.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியை வெளிக் கொண்டு வந்த பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்த சி.பி.ஐ.க்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார பாராட்டுக்களைத் தெரிவித்து கொள்கிறோம்.
   
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியைக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்திய காரணத்தினால் பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கடந்த 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டுமென அவரது குடும்பத்தினரும், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பினரும் தொடர்ந்துப் போராடினர். இதன்பின்னர், இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. 
 
தற்போது இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறையின் ஊழியரான கன்னியப்பன் என்பவரை சி.பி.ஐ. போலீசார் நேற்றைய தினம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சி.பி.ஐ. போலீசாரின் இந்த கைது நடவடிக்கை இக்கொலை வழக்கில் நீதி நிலை நாட்டப்படும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. சவால்கள் நிறைந்த இப்பணியை மேற்கொண்ட சி.பி.ஐ. காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும், மதிப்பெண் மோசடி மற்றும் ஜெயராமன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் பாகுபாடின்றி கைது செய்ய சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

No comments: