மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 21.10.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் நடந்து வரும் மக்களின் தொடர் போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.
திருநெல்வேலி மாவட்டதில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்ய அரசின் உதவியுடன் அணுமின் நிலையம் ஒன்றை மத்திய அரசு அமைத்து வருகிறது. இந்த அணுமின் நிலையம் அபாயகரமானது என்றும், இது செயல்பட தொடங்கினால் ஏற்படும் கதிர்வீச்சால் மக்களுக்கு பேராபத்து உண்டாகும் என அறிவியல் வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர்.
இந்த அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரை கிராமத்தில் கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 18ந் தேதியன்று மூன்றாவது கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இதனிடையே, மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 15 பேர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவில் போராடும் மக்களின் பிரதிநிதிகள் யாரும் சேர்க்கப்படவில்லை எனக் கூறி போராட்டக் குழுவினர் நிபுணர் குழுவை நிராகரித்துள்ளனர்.
இந்நிலையில், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தமிழக தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், அந்த அமைப்பைச் சேர்ந்த மதுரை வழக்கறிஞர் ரஜினி, பழனிச்சாமி ஆகியோர் நாளை (22.10.2011) இடிந்தகரைக்கு நேரில் சென்று போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.
மேலும், அம்மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளனர்.
2 comments:
அணு அரசியலுக்கு பின்னணி பற்றி பதிவு செய்யுங்கள், செய்திவசிப்புக்கு நம் இல்லை ....
கோமகன் அய்யா, இதுவெல்லாம் அன்றாட செய்திதாள்களுக்கு கொடுக்கும் அறிக்கைகள். இதற்கு மேல் எழுதினால் அவர்களுக்கு புரியாமல் வெளியிடாமல் விட்டுவிடுவார்கள். மக்களுக்கு சில செய்திகளை கொண்டு செல்ல இந்த மொழியில்தான் எழுத வேண்டியிருக்கிறது.
Post a Comment