Thursday, February 16, 2012

"வடக்கே பாரதிதாசன், தெற்கே பாரதியார்" - என் விகடனில் - கோ.சுகுமாரன்


"வடக்கே பாரதிதாசன்... தெற்கே  பாரதியார்!" -  கோ.சுகுமாரன்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் அதற்கு எதிரான குரலை உயர்த்தும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கோ.சுகுமாரன், புதுச்சேரி குறித்த தன் நினைவுகளையும் உணர்வுகளையும் இங்கு பகிர்ந்துகொள்கிறார்.

"புதுவையில் தற்போது மஞ்சினி நகர் என்று அழைக்கப்படும் பகுதிதான் என் முன்னோர்கள் பிறந்த பகுதி. எங்கள் தெருவுக்கு வடக்கில் பெருமாள் கோயில் வீதியில் பாரதிதாசன், தெற்கில் ஈஸ்வரன் கோயில் வீதியில் பாரதியார் வாழ்ந்த வீடுகள் உள்ளன. இரண்டு மகத்தான தமிழ் ஆளுமைகள் உலவிய வீடுகள் என்ற அறிதலே இல்லாமல் இந்த வீடுகளுக்குச் சென்று விளையாடுவோம்.

வீட்டுக்குத் தெரியாமல் கடலில் குளிப்பது ஆபத்தாக முடிவதால் குளிக்க வீட்டில் தடைபோடுவார்கள். கால் விரல்களுக்கு இடையே படிந்து இருக்கும் கடல் மணல், அணிந்து இருக்கும் துணியை நக்கி உப்புக் கரிக்கிறதா எனப் பார்த்து, கடலில் குளித்ததை உறுதிசெய்து கண்டிப்பார்கள். பல நேரங்களில் கடற்கரையில் சட்டை, காற்சட்டையைக் கழற்றிவைத்துவிட்டு குளிக்கப்போய், அவற்றைத் தொலைத்துவிட்டு நிர்வாணமாக வீட்டுக்குச் சென்று அடி வாங்கிய நாட்களும் உண்டு. ஒழுங்கு நிறைந்த வீதிகள்தான் எங்களுக்கு விளையாட்டுத் திடல். கோட்டிப் புல், கண்ணாமூச்சி, திருடன் போலீஸ் என, சகல விளையாட்டுக்களும் வீதியில்தான் நடக்கும். இன்று சிறுவர்கள் தங்களுக்கான வெளி இன்றி தவிப்பது பரிதாபம். சாதி அடையாளத்தை ஞாபகப்படுத்தும் ஊர்களின் பெயர்கள், தெருக்கள் முதலியார்பேட்டை, ரெட்டியார்பாளையம், கோமுட்டித் தெரு, செட்டித் தெரு, வெள்ளாள வீதி என, இன்றும் தொடர்வது அழகு நகரத்தின் அவலம்தான்!

நகரத்தைப் பிரிக்கும் வாய்க்காலுக்குக் கிழக்கே உள்ள பகுதி வெள்ளை நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள் பெரும் பகுதி வசித்து வருகின்றனர். பிரெஞசுக் குடியுரிமை பெறுவது என்பது ஒவ்வொரு இளைஞனின் கனவு. இதற்காக பிரெஞ்ச் கற்றுக்தரும் அலியான்ஸ் ஃபிரான்சேஸ், லிசேபிரான்சேஸ் பள்ளி முன்பு மாணவிளைக் காதலிக்க இளைஞர்கள் தவம் இருப்பது சுவாரஸ்யம் நிறைந்த தனிக் கதை. ஜீலை மாதம் மூன்று மாதத்துக்கு விடுமுறையில் தங்களின் சொந்த ஊருக்கு பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற குடும்பத்தினர் வருவர். நவீன பைக்கும், கையில் 'குர்மாத்தும்' அணிந்த இளைஞர்கள் எப்படியாவது அந்தக் குடும்ப இளம் பெண்களில் ஒருத்தியைக் காதலித்து பிரெஞசுக் குடியுரிமைப் பெற்று பிரான்சுக்குச் செல்ல எடுக்கும் பகீரத முயற்சிகளை ரசிக்காமல் இருக்க முடியாது.

அறிவுத்தளத்தில் இயங்குபவர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் ரோமன் ரோலண்ட், பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், புதுவை பல்கலைக்கழக நூலகங்கள் பெரும் தரவுகளைக் கொண்டு விளங்குகின்றன. வெள்ளை நகரத்தில் 1965 முதல் இயங்கிவரும் "கபே லூயின்" என்ற சிறிய ஹோட்டலில் ஒரு டீ குடித்துக்கொண்டே எம்.எல்.ஏக்ளும் அமைச்சகளும் விவாதிப்பது உண்டு.

அரசியல், இலக்கியம், அழகியல், நாகரிகம் தேய்ந்த எங்கள் அழகான தொருக்களில் நடைபோடுவது இன்றும் எனக்குக் கம்பீரமான அனுபவம்தான்!".

 
* இவர் 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' என்ற மனித உரிமைக்கான அமைப்பின் செயலாளராக உள்ளார்!

* வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, நெருக்கடி நிறைந்த சூழலில் அரசு அனுப்பிய மீட்புக் குழுவில் இடம் பெற்று ராஜ்குமார் உள்ளிட்டவர்களை மீட்டவர். அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் பாடுபட்டவர்!

* மாவோயிஸ்ட் ஆட்சி புரியும் நேபாளத்தில் மன்னராட்சி முடிந்து அங்கு நடந்த முதல் பொதுத் தேர்தலில் சர்வதேசத் தேர்தல் பார்வையாராகப் பணியாற்றிய 43 பேரில் சுகுமாரனும் ஒருவர்!

* காஷ்மீர், வடக்கிழக்கு மாநிலங்கள், நக்சல்களின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு, ஆபத்தான சூழலில் சென்று மனித உரிமை மீறல்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தியவர்!

* சிறைகளின் நிலைமைகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட அகில இந்திய குழுவில் இடம்பெற்று பல மாநிலச் சிறைகளுக்கு நேரில் சென்று அதன் நிலைமைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையாகத் தந்தவர்!

2 comments:

murugan said...

Very nice sir... I am Proud, as a Pondicherrian...

பி.என்.எஸ்.பாண்டியன் said...

என்ன தோழர் இது. முத்துமாரியம்மன் கோயில் தெருவுக்கு ஒரு வரலாறு உண்டு. முன்பெல்லாம் மதிய நேரங்களில் பெண்கள் வீட்டு வாயில்களில் பூக்களை கட்டிக்கொண்டு பேசிக் கொண்டே மாலை நேரத்தை நோக்கி பொழுதை நகர்த்துவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் புத்தக அலமாரி இருக்கும். வார இதழ்களை பரிவர்த்தனை செய்து கொள்வார்கள். மாலையில் அலுவலகம் விட்டு வரும் கணவன் அல்லது தந்தை, பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் பிள்ளைகளுக்கு மாலைநேர சிற்றுண்டி தயார் செய்து கொடுப்பார்கள். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் விளக்கேற்றி வைப்பார்கள். பொழுது சாய்ந்ததும் ஆண், பெண் சகலரும் கூடி திண்ணைக் கச்சேரி நடக்கும். இது நம் புதுச்சேரி மண்ணுக்கே உரித்தானது. இதையெல்லாம் எழுதுவதை விட்டு விட்டு பிரான்சுக்கு போக லவ் பண்ணலாம் என்று ஐடியா கொடுக்கிறீர்களே...