Sunday, April 06, 2014

கச்சத்தீவுப் பயணம் (1): கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோயில் உருவாக்கம்!


சென்ற மார்ச் முதல் வாரத்தில் சென்னையிலிருந்து நண்பர் தேவநேயன் கைப்பேசிக்கு அழைத்தார். ‘நாம் இருவரும் ஒன்றாக வெளியூர் சென்று வெகு நாட்களாகிறது. கச்சத்தீவுக்குச் செல்வோமா? பேராசிரியர் (எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர்) அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். உங்களின் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அட்ரஸ் புரூப் மற்றும் போட்டோ ஐ.டி. நகல்கள் அனுப்பி வையுங்கள். நான் விண்ணப்பத்தை மின்னஞ்சலில் அனுப்புகிறேன். அதைப் பூர்த்தி செய்து அனுப்பி வையுங்கள்’ என்று கூறினார். அதன்படியே அனுப்பியும் வைத்தார். நானும் அவர் சொன்னபடி விண்ணப்பத்தையும், ஆவணங்களையும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு கூரியரில் அனுப்பி வைத்தேன். கச்சத்தீவுக்கு முதல் முறையாக செல்வது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

நமக்குச் சொந்தமான கச்சத்தீவு மீட்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை தமிழ்நாட்டில் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. 1974ல் மத்தியில் இந்திரா காந்தி, தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியின் போது, இந்திய அரசுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு முழுவதுமாக தாரை வார்க்கப்பட்டது. இதைக் கண்டித்தும், கச்சத்தீவை மீட்பது ஒவ்வொரு தமிழனின் கடமை என்றும் ஈழப் பிரச்சனைக் குறித்த கூட்டங்களிலும், போராட்டங்களிலும் நான் எழுச்ச்சியுடன் முழங்கியது நினைவுக்கு வந்தது.    

இலங்கையில் சிங்கள அரசு இனவெறியோடு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அக்காலத்தில், அதாவது 1983ம் ஆண்டு முதல் கச்சத்தீவுக்கு மக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. 1983 வரையில், அங்குள்ள புனித அந்தோணியார் கோயிலுக்குத் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை மார்ச் மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்குச் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பின்னர் 2001 முதல் ஆண்டிற்கு இருநாட்கள் மட்டுமே திருவிழா நடைபெற்றது. இனப் பிரச்சனை உக்கிரத்தில் இருந்த 1984 முதல் 2001 வரையில் இலங்கை அரசாங்கம் கச்சத்தீவுக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. 2002ல் சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்ற போது 2002, 2003, 2004 ஆகிய மூன்று ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று மீண்டும் அந்தோணியார் கோயில் திருவிழாவை நடத்தினர். அதாவது இந்த மூன்று ஆண்டுகளும் இலங்கை அரசு தமிழக மக்கள் உட்பட யாரையும் தீவுக்குள் அனுமதிக்கவில்லை. இதன் மூலம் தமிழக மக்கள் கச்சத்தீவுக்குச் சென்று வழிபடும் உரிமையை சிங்கள அரசு தொடர்ந்து மறுத்தது சிங்கள அரசின் இத்தடையை மீறி இராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மீனவ மக்கள் கச்சத்தீவுச் சென்று திருவிழாவை நடத்தினர். இதன் மூலம் தங்களின் உரிமையை நிலைநாட்டியுள்ளனர். இந்த உரிமையைப் பெற்றுத் தந்ததன் பின்னணியில் அப்போதைய பாம்பன் பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகள் இருந்துள்ளார் என்பது போராட்ட வரலாறு. அவரின் முயற்சியாலும், ஊக்கத்தாலும்தான் இராமேஸ்வரம் பகுதி மீனவ மக்கள் தடையை மீறி கச்சத்தீவுச் சென்றனர். இப்போராட்ட வரலாறு குறித்துப் பின்னர் விரிவாக எழுதுகிறேன். 2003க்குப் பின்னர் கச்சத்தீவில் திருவிழாவும் நடைபெறவில்லை. அங்கு எவரையும் சிங்கள அரசு அனுமதிக்கவுமில்லை. 

இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்று 2009க்குப் பின் அங்கு நிலைமை சீரானப் பிறகு 2010 முதல் மீண்டும் தொடங்கி கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா நடைபெற்று வருகிறது. இருநாட்டு மக்களும் இயல்பாக பெரும் கெடுபிடிகளின்றி ஆண்டுதோறும் அங்குச் சென்று புனித அந்தோணியாரை வழிபட்டு வருகின்றனர். அனுமதியின்றி கச்சத்தீவு சென்று திருவிழா நடத்திய பிற்பாடு, இலங்கை அரசாங்கம் தமிழக மீனவர்களும், பொதுமக்களும் ஆண்டுதோறும் கச்சத்தீவுக்குச் சென்று வருவதை ஒழுங்குப்படுத்தியது. கச்சத்தீவு செல்வோர் முறைப்படி இராமநாதபுரம் மாவட்டம், வேர்கோடு பங்குத்தந்தை மூலம் தமிழக அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசுப் பயணிகளின் பின்னணிப் பற்றிக் காவல்துறை, மத்திய/மாநில உளவுத்துறை மூலம் ஆய்வுச் செய்து பின்னர் முறைப்படி அனுமதி அளிக்கும். இன்றுவரையில் இம்முறைக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.     

ஓரிரு நாட்கள் கழித்து தேவநேயன் மீண்டும் பேசினார். ‘கச்சத்தீவுக்குச் செல்ல நமக்கு சிறப்பு அனுமதிக் கிடைத்துவிட்டது. நான், நீங்கள், என் அண்ணன் தாமஸ் ஆகியோர் செல்கிறோம். வரும் மார்ச் 15 அன்று  இராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து காலையில் படகு மூலம் செல்கிறோம், மாலையில் அந்தோணியார் திருவிழா தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கோயிலில் கொடியேற்றம். பிறகு சிலுவைப் பாதை ஊர்வலம். இரவு அங்குத் தங்குகிறோம். 16 அன்று காலையில் திருப்பலிப் பூசை, வழிபாடு முடிந்த பின்னர் அங்கிருந்துப் புறப்படுகிறோம். நாம் 13 அன்று இரவுப் புறப்பட்டு 14 காலையில் இராமேஸ்வரம் சென்றடைகிறோம். அன்று பகலில் இராமேஸ்வரம் பகுதிகளைச் சுற்றிப் பார்ப்போம். இரவுத் தங்கிவிட்டு காலையில் கச்சத்தீவுப் புறப்படுகிறோம்’ என்று ஒரு ஆசிரியர் மாணவருக்குச் சொல்வது போல் சொன்னதோடு, பயணத்திற்குத் தேவையானவற்றை பட்டியலிட்டு எடுத்துக் கொள்ள சொன்னார். மேலும், எவை எல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் பட்டியலிட்டார். நானும் சரி என்று சொல்லிவிட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தேன். கச்சத்தீவுப் பற்றி ஓரளவுக்கு அறிந்திருந்தாலும், அங்கு ஏன், யாரால் அந்தோணியார் கோயில் கட்டப்பட்டது. அத்திருவிழாவின் சிறப்புகள் என்ன என்பது குறித்த விவரங்களை அறிந்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவலும் கூடியது. அதுகுறித்த தேடுதலும் தொடங்கியது.  

கச்சத்தீவு இராமேஸ்வரம் தீவுலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கையிலுள்ள நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைத்துள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம், இலங்கை நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து 45 நிமிடங்கள் பயணம் செய்தால் கச்சத்தீவை சென்றடையலாம். சுமார் இரண்டரை சதுர கி.மீ. சுற்றளவுக் கொண்ட மணற் திட்டாக (Sand Dune) உள்ள அழகிய தீவிது. இருநாட்டு மீனவர்களும் கடலில் இயற்கைச் சீற்றத்தினாலோ அல்லது கடற் கொள்ளையர்களாலோ ஆபத்து ஏற்பட்டால், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இறைவனிடம் வேண்டுவது வழக்கம். மேலும், கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது பெருமளவில் மீன்கள் படுதலுக்காகவும் வேண்டுதல் செய்வது வழக்கம். கடலில் ஆபத்து நேர்வதிலிருந்து தங்களை இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில், சென்ற நூற்றாண்டில் கச்சத்தீவில் ஒரு சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தைச் சீனிக்குப்பன் படையாட்சி என்பவர் நிறுவியுள்ளார். அதுகுறித்த வரலாற்றுக் குறிப்புகளைப் பார்ப்போம்.

'1913இல் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுப் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பாலை தீவிலும் 1895இல் புனித அந்தோனியர் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் இக்கடற்பரப்பில் மீன் பிடித்தலுக்காகச் சென்ற கரையோர மீனவர்கள் கடலில் அடிக்கடி தாம் சந்திக்கும் ஆபத்துக்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும், தொழில் முயற்சிகள் நல்லமுறையில் கைகூட வேண்டுமென்று கருதி “பாதுகாவலராக” புனித அந்தோனியார் சொரூபம் ஒன்றை வைத்து சிறிய ஆலயம் ஒன்றைக் கட்டியிருக்க வேண்டும் என சொல்லப்படுகின்றது. ‘இந்தக் கோவிலை நம்புதாளை என்ற சிற்றூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கட்டினார். அவர் சென்ற படகு புயலில் சிக்கியபோது அவர் அந்தோனியாரை வேண்டிக் கொண்டார். அதன் காரணமாக அவர் புயல் அபாயத்திலிருந்து தப்பியதாகவும் அதனால் அவர் அந்தக் கோயிலைக் கட்டினார்” (பி. நாராயணன் 1983) என்றும் கூறப்படுகின்றது. “இராமாயணபுரத்தின் 1972 வர்த்தமானப்படி இத்திருவிழாவின்போது இராமேஸ்வரத்துக்கு அண்மையிலுள்ள தங்கச்சி மடத்திலிருந்து ஒரு கத்தோலிக்கக் குருவானவர் கச்சதீவுக்குப் போய் அங்கு கிருவிருந்து நடத்துவார். இந்தத் தேவாலயம் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவரான சீனிக்குப்பன் படையாட்சியால் கட்டப்பட்டது (ஏ. சூசை ஆனந்தன் 1994)’ என்று ‘கச்சத்தீவு: அன்றும் இன்றும்’ என்ற நூலில் யாழ். பல்கலைக்கழகப் புவியியற்றுறை விரிவுரையாளர் ஏ. சூசை ஆனந்தன் கூறியுள்ளார். 

‘1939-ஆம் ஆண்டில், இராமநாதபுர மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாழையைச் சார்ந்த மீனவர், சீனிக்குப்பன் என்பவர் கச்சத்தீவில் அந்தோணியார் கோவிலை எழுப்பினார். அவரைத் தொடர்ந்து இராமேசுவரம் ஓலைகுடா மீனவக் கிராமத்தைச் சார்ந்த அந்தோணிப்பிள்ளை எனும் மீனவர் அக்கோவிலுக்கு ஓடுகள் வேய்ந்தார் (2:1:1951). புனித அந்தோணியார், ஏசுவின் சீடர்களில் ஒருவர். இவரே, கச்சத்தீவின் காப்புக் கடவுள்; பரவர் குல பாதுகாவலர் எனக் கொண்டனர், வணங்கி வந்தனர். 1972இல் இந்திய அரசு வெளியிட்ட அரசிதழ் ஆணையின்படி, இராமநாதபுரம் அருகிலுள்ள தங்கச்சி மடத்திலுள்ள கத்தோலிக்கப் பாதிரியார் பொடேல் (பிரஞ்சுக்காரர்) அந்தோணியார் திருவிழாக் காலங்களில் கச்சத்தீவுக்குச் செல்வார். வழிபாடு நடத்துவார். அன்று கச்சத்தீவில் அந்தோணியார் விழாவும், பண்ட மாற்று வணிகமும் அரசியல் தலையீடு இல்லாமல் நடந்தது. கோவில் கண்காணிப்பு யாழ்ப்பாண கிறித்தவத் திருச்சபையிடமே இருந்தது’ என்று ‘வரலாற்றில் கச்சத்தீவு’ என்ற நூலில் உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன் கூறியுள்ளார். இதுதான் கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோயில் கட்டப்பட்ட வரலாற்று சுருக்கம்.

கச்சத்தீவுக்குப் பயணத்திற்காக இராமேஸ்வரம் செல்லும் நாளும் வந்தது. மார்ச் 13 அன்று இரவு 11.45 மணிக்கு சரியான நேரத்திற்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்குப் பாண்டியன் விரைவு வண்டி வந்தது. நான் ஏற வேண்டிய பெட்டியின் கதவருகே நின்றுக் கொண்டு என்னை வரவேற்றார் தேவநேயன். அவர் கொண்டு வந்தப் புட்டியிலிருந்த சிறிதளவு தண்ணீரை குடித்து விட்டு எனக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் படுத்துக் கொண்டேன். ரயில் தனக்கேயுரிய ‘தடக் தடக் தடக்’ சத்தத்துடன் வேகமாக ஓடியது. என் சிந்தனையும் அதனுடனேயே ஓடிக் கொண்டிருந்தது.   

பயணம் தொடரும்...

No comments: