Sunday, April 25, 2021

தமிழறிஞர் பிரான்சுவா குரோ மறைந்தார்: தமிழுக்குப் பேரிழப்பு!

நாங்கள் எல்லாம் செல்லமாக “தாத்தா” என்று அழைக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் பிரான்சுவா குரோ (Francois Gros) தனது 88ஆவது அகவையில் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் இந்தியவியல் துறையின் ஆய்வாளரான கண்ணன்.எம். மூலம் அறிமுகமானவர். கற்றுத் தேர்ந்த, அறிவார்ந்தத் தமிழறிஞர். பழகுவதற்கு எளிய மனிதர். அவருடன் தேநீர் கடையில் தேநீர் பருகியபடி உரையாடிய நாட்களை நினைத்தால் கண்கள் கலங்குகின்றன. நிறை குடம் அவர். என்றும் தளும்பியது கிடையாது.

1960களின் தொடக்கத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த பிரான்சுவா குரோ (1933 – 2021) பாரீசில், பாரீஸ் பல்கலைக்கழகத்தின் Ecole Pratique Des Hautes Etudes என்ற உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான (Philology) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் துவக்கிய பிரான்சுவா குரோ 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ்வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப் பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது. பரிபாடல் (1968) திருக்குறள் காமத்துப்பால் (1993) இரண்டும் பிரெஞ்சில் நூல் வடிவம் பெற்றுள்ளன. காரைக்கால் அம்மையார் குறித்த நூலையும் பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார். தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பும்  வெளிவந்துள்ளது.

அவர் இடைக்காலத் தென்னிந்திய வரலாறு மற்றும் தொல்லியல் குறித்த நூல்களும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக உத்திரமேரூர், திருவண்ணாமலை  உள்ளிட்ட கோயில் நகரங்களின் வரலாறு  பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.

பிரான்சுவா குரோ, கண்ணன்.எம். ஆகியோர் இணைந்து பாரதியார் தொடங்கி ஆத்மாநாம், பிரமிள், வில்வரத்னம் (இலங்கை) போன்றோரது கவிதைகள் உள்ளடக்கிய 200 கவிதைகளைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளனர். அதேபோல், தேர்த்ந்டுக்கப்பட்ட 20 சிறுகதைகளையும் பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளனர்.  

தென்னிந்திய வரலாற்று அட்லஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் கி.பி. 1600  வரலாற்றுக்கு முந்தைய தென்னிந்திய வரலாற்றை வரைபடங்களாகச் சித்தரித்துள்ளார்.  இது உலகிலேயே சிறந்த, அரிய தொகுப்பு என்கிறார் கண்ணன்.எம்.

இலக்கியம் மட்டுமன்றி வரலாறு, பண்பாடு, தொல்லியல் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். புகழ்ப் பெற்ற வரலாற்றிஞர் ரொமீலா தாப்பரின் சகோதரர்  ரோமேஷ் தாப்பருடன் நட்பாக இருந்துள்ளார். அதேபோல், பிபின் சந்திரா, லோகேஷ் சந்திரா போன்றோருடன் நட்புடன் இருந்துள்ளார்.  கலை வரலாற்றறிஞர் கபில வட்சாயயன் உடனும் நட்புடன் இருந்தார். அவருடனான நட்பு பயன் தரக் கூடியது என்று பிரான்சுவா குரோ கூறியுள்ளார்.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்டசோழபுரம் கோயில் குறித்த நூல்கள் வெளிவர காரணமாக இருந்துள்ளார்.

பிரெஞ்சு, சமற்கிருதம், லத்தீன, கிரேக்க மொழிகள் மட்டுமின்றி தமிழிலும் புலமைப் பெற்ற அறிஞராக இருந்துள்ளார். 1994-இல் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடந்த மாநாடு தவிர்த்து, 1996-இல் கோலாலம்பூர் தொடங்கி 1995-இல் தஞ்சாவூரில் நடந்தது வரையில் அனைத்து உலகத் தமிழ் மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். இம்மாநாடுகளில் கல்விக் கற்பிக்கும் முறைக் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டிருந்ததாகவும்  கூறியுள்ளார்.

பிரான்சுவா குரோவிற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் செயல்படும் மத்திய செம்மொழி உயராய்வு நிறுவனத்தால் வழங்கப்படும் 2008 – 2009 ஆண்டிற்கான குறள்பீட விருதும், ரூ. 5 லட்சம் தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.  

பிரான்சுவா குரோ பிரான்சின் தென்கிழக்கில் உள்ள லியோன் நகரத்தில் வாழ்ந்துவந்தார்.  ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதக் காலத்தைப் புதுச்சேரியில் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட்டு வந்தார். அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் புதுச்சேரிக்கு வராமல் பிரான்ஸ் நாட்டிலேயே தங்கியிருந்தார். பிரான்சுவா குரோ தன்னிடமிருந்த ஆயிரக்கணக்கான அரிய நூல்களைக் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கியுள்ளார்.

“தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி அறிவித்தது மட்டும் போதாது. அருங்காட்சியகத்தில் உள்ள செவ்வியல் கலைப்பொருட்கள் இறந்துப் போய்விடுகின்றன. அவற்றை அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். அவற்றை வெகுமக்களின் பொது பண்பாட்டிற்குள் எடுத்துச் செல்ல வேண்டும். இதைச் செய்வதற்கான ஆய்வு, சிறந்த கல்வி கற்பிக்கும் முறைகள், தமிழில் கல்விச் சார்ந்த மொழிநுட்பங்கள் (Education tools in Tamil) உருவாக்க வேண்டும். இது தமிழ்நாடு மேலைநாடுகளுக்குத் தமிழைக் கற்றுத் தர ஏதுவாக இருக்கும்” என்று பிரான்சுவா குரோ கூறியுள்ளார்.

ஒரே மகனான இவருக்கு, பொறிஞரான அவரது தந்தையார் இலக்கிய நூல்களைக் கொடுத்து ஊக்கப்படுத்தி உள்ளார். தந்தையின் ஊக்கத்தால் உலகப் புகழ்ப் பெற்ற அறிஞராக மிளிர்ந்துள்ளார் பிரான்சுவா குரோ.

பிரான்சுவா குரோவின் மறைவு தமிழ் செவ்வியல் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, நவீனத் தமிழ் இலக்கியத்திற்கும் பேரிழப்பாகும். மொத்தத்தில், தமிழ் மொழிக்குப் பேரிழப்பாகும்.

துயரமான இத்தருணத்தில் அவருடனான உறவை எண்ணிப் பெருமை அடைகிறேன்..

அவருக்கு என் ஆழ்ந்த அஞ்சலி..

கோ.சுகுமாரன்

No comments: