Monday, October 21, 2024

தலித் பெண்ணை சாதியை கூறி ஆபாசமாக பேசிய புகாரில் வழக்குப் பதிவு செய்ய பி.சி.ஆர். பிரிவு போலீஸ் அதிகாரிகள் மறுப்பு: டி.ஜி.பி. தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

 



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.10.2024) விடுத்துள்ள அறிக்கை:

தலித் பெண்ணை சாதியை கூறி ஆபாசமாக பேசிய புகாரில் வழக்குப் பதிவு செய்ய பி.சி.ஆர். பிரிவு போலீஸ் அதிகாரிகள் மறுத்துள்ளதால் டி.ஜி.பி. தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி மணலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் சாந்தாலட்சுமி (வயது 31) கலப்புத் திருமணம் செய்துகொண்டவர். இவரது கணவரின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் கடந்த 05.10.2024 அன்று மாலை 5.30 மணியளவில் சாந்தாலட்சுமியை சாதியை கூறி ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து கடந்த 06.10.2024 அன்று பாதிக்கப்பட்ட தலித் பெண் சாந்தாலட்சுமி கோரிமேட்டில் உள்ள பி.சி.ஆர். பிரிவு உதவி ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் கொடுத்து 15 நாட்கள் ஆகியும் இதுநாள்வரையில் இப்புகார் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. பி.சி.ஆர். பிரிவு போலீஸ் அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை (Preliminary inquiry) செய்து வருவதாக கூறி வழக்குப் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர். மேலும், முதல்கட்ட விசாரணை என்ற பெயரில் சாட்சிகளை மிரட்டி வருகின்றனர்.

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி அளிக்கப்படும் புகார் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய முதல்கட்ட விசாரணை தேவையில்லை. கைது செய்ய ஒப்புதல் தேவையில்லை என இச்சட்டப் பிரிவு 18(ஏ) தெளிவாக கூறியுள்ளது. மேலும், இச்சட்டப்படி முன்ஜாமீன் கிடையாது என்பதால் வழக்குப் பதிவு செய்த உடனேயே குற்றமிழைத்தவர்களைக் கைது செய்ய வேண்டும். இல்லையேல், இவ்வாறு நடவடிக்கை எடுக்காத எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சாராத அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை எனவும் இச்சட்டம் கூறுகிறது.

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். இதற்கென முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு (State Level Vigilance and Monitoring Committee) அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இக்குழு முறைப்படி செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, இதில் டி.ஜி.பி. தலையிட்டு மேற்சொன்ன புகார் மீது வழக்குப் பதிவு செய்து குற்றமிழைத்த இருவரையும் உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து முதலமைச்சர், தலைமைச் செயலர், டி.ஜி.பி., மாவட்ட ஆட்சியர், எஸ்.எஸ்.பி (குற்றம் மற்றும் புலனாய்வு) உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

No comments: