புதுச்சேரி உருளையன்பேட்டை சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு (எ) குப்புசாமி அவர்களுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத் தகுதிக்கான போராட்டத்தில் நெருங்கிப் பழகி வருகிறேன். அரசியல் சூழ்ச்சி, கரவு இல்லாத மிகவும் வெளிப்படையான மனிதர். அவரை குறை கூற வேண்டும், விமர்சிக்க வேண்டுமென்று சில அரைவேக்காடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. அவை மக்களிடையே எடுபடவில்லை.
சென்ற 27.06.2025 அன்று, தில்லி ஜந்தர் மந்தரில் மாநிலத் தகுதிக்கான மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். ஏறக்குறை 250 பேரை ஒன்று திரட்டி, தில்லிக்கு அழைத்துச் சென்று, எவ்வித விமர்சனமும் இல்லாமல் இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பெருமை அவரை மட்டுமே சாரும்.
போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் ரயில் கட்டணம், சிறப்பான தங்குமிடம், உணவு என அனைத்தையும் தனது சொந்த செலவில் செய்தவர். பொதுநல அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் வந்த தோழர்களையும் தாயுள்ளத்தோடு கவனித்த கொண்டது என்றும் மறக்கவியலாது.
தில்லி மாநிலத் தகுதிப் போராட்டம் மக்களிடையே பெருமளவில் சென்றடைந்துள்ளது. ஊடகங்கள் மட்டுமல்லாது, சமூக ஊடகங்களிலும் போராட்ட செய்திகள் நிரம்பி வழிந்தன. தில்லியிலிருந்து திரும்பியவுடன் இன்றைக்கும் பலரும் பார்க்கும் இடமெல்லாம் கைக் குலுக்கிப் பாராட்டி வருகின்றனர்.
புதுச்சேரி பிரெஞ்சுக் காலத்தில் மாநிலமாக இருந்தது. 1.11.1954-இல் பிரெஞ்சு அரசிடமிருந்து விடுதலைப் பெற்றது (De Facto Merger).16.08.1962-இல் இந்திய ஒன்றிய அரசோடு இணைந்தது (De Jure Transfer Day). அப்போது ஏற்படுத்தப்பட்ட பிரெஞ்சிந்திய ஒப்பந்தம் செயல்பாட்டிலேயே இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. பிரதமர் நேரு அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன. பின்னர் யூனியன் பிரதேச சட்டம் 1963 மூலம் யூனியன் பிரதேசமாக சுருக்கப்பட்டது. இன்றைக்குப் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் ஏதுமின்றி, துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர் மூலம் மத்திய அரசின் நேரடி ஆட்சி நடக்கிறது.
இதை எதிர்த்துப் போராடும் அரசியல் வலிமையின்றி முதலைமைச்சர் ந.ரங்கசாமி உள்ளார். சட்டமன்றத்தில் மாநிலத் தகுதி வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 16ஆவது தீர்மானம் இன்னமும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மாநிலத் தகுதிக்காக 1 இலட்சம் கையெழுத்து வாங்கப்பட்டது. இதில் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தவிர்த்து பாஜகவினரும், காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் நாஜீம் தவிர்த்து திமுகவினரும் கையெழுத்திடவில்லை. பாஜகவும், திமுகவும் ஓரணியில் இருப்பது ஆச்சரியமில்லை.
கோ.நேரு அவர்கள் என் பால் மிகுந்த அன்பும், அக்கறையும் உடையவர். தில்லி போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் வெள்ளைச் சட்டை அணியும்படி எடுக்கப்பட்ட முடிவு பற்றி அறியாமல் நான் வண்ணச் சட்டை அணிந்திருந்ததைப் பார்த்துவிட்டு, வெள்ளைச் சட்டை ஒன்றை அளித்து அணியச் செய்தது நெகிழ்வான தருணம்.
சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு (எ) குப்புசாமி மாநிலத் தகுதிக்காக மட்டுமல்ல, மக்கள் பிரச்சனைகளுக்காகவும் சமரசமின்றி போராடி வருபவர். அவரின் அர்ப்பணிப்பான மக்கள் தொண்டிற்கு எந்தக் கொம்பனாலும், கொம்பியாலும் கலங்கம் கற்பித்துவிட முடியாது.
No comments:
Post a Comment