Tuesday, January 06, 2026

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 11 பேரை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசி ஆளுநர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.01.2026) விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 11 பேரை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசி துணைநிலை ஆளுநர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம் காசாக்குடிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (39), காசாக்குடிமேடு, காரைக்கால்மேடு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஜான்சினா (18), சந்திரநாத் (35), செல்வமணி (58), முருகன் (34), பிரதீப் (39), சக்திவேல் (34), ரஞ்சித் (37), வேலாயுதம் (50), மதியழகன் (43), மோகன்ராஜ் (51) ஆகியோர் கடந்த 29.12.2025 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கடந்த 02.01.2026 அன்று இவர்கள் கோடியக்கரைக்குத் தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராஜா உள்ளிட்ட மீனவர்கள் 11 பேரையும் கைது செய்துள்ளனர். படகையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் இவர்களைக் காங்கேசம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அதேபோல், இலங்கைக் கடற்படையினர் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 9 பேரை கைது செய்து, அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 73 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 751 படகுகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கைக் கடற்படை புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மீனவர்களும், சிறைப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் பெரும் துயரத்திற்கு உள்ளாகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 11 பேரை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசி துணைநிலை ஆளுநர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், செயலர், துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளோம்.

No comments: