“அவுங்களுக்கு தண்டனை கிடைச்ச பிறகு நிலைமை மாறியிருக்கு''
மேலவளவு வாக்குமூலங்கள் உணர்த்தும் உண்மைகள்
மேலவளவிலிருந்து கோ. சுகுமாரன்;
வாக்குமூலங்கள் தொகுப்பு : முருகப்பன்;
புகைப்படங்கள் : பாலா
சமூக இயலாமைகள் ஒழிப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து அய்ந்து ஆண்டுகள் ஆனபின்பும் "ஹரிஜன'ங்களின் பல்வேறு சிவில் இயலாமைகள், நமது கிராமங்களில் இன்னம் நீடிப்பது வருத்தமளிக்கிறது. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் "ஹரிஜன'ங்கள் மீதான சமூகத் தடைகளை ஒழிப்பதற்கு "அகில இந்திய ஹரிஜன சேவக் சங்கம்' தனது தீவிர இயக்கத்தைத் தொடங்கி, இப்போது 9 மாதங்கள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில் டீக்கடைகள், முடி திருத்தும் நிலையங்கள், கிணறுகள், குளங்கள், சாவடிகள் முதலானவற்றில் "ஹரிஜன'ங்களுக்கு உள்ள தடைகள் பற்றிப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சில இடங்களில், இந்தச் சட்டத்தைப் பிரச்சாரம் செய்து அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கிராம முன்சீபுகளே மிகப் பிற்போக்கானவர்களாகவும், "ஹரிஜன'ங்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு இடையூறாகவும் இருக்கிறார்கள். நம் சமூகத்தில் "ஹரிஜன'ங்களுக்கெதிரான பாரபட்சம், எவ்வளவு ஆழ்ந்து வேரூன்றியுள்ளது என்பதைக் காட்டுவதற்குச் சில சம்பவங்கள் கீழே தரப்படுகின்றன. ...
மேலவளவு என்ற இடத்தில், நான் இரண்டு "ஹரிஜன' பையன்களுடன் ஒரு டீக்கடைக்குச் சென்றபோது, அங்கு ஒரு குழுவினர் என்னைத் தாக்குவதாக அச்சுறுத்தி, அந்தப் பையன்களை விரட்டிவிட்டார்கள். டீக்கடைக்காரர் வேண்டுமென்றே ஒரு கண்ணாடித் தம்ளரை உடைத்தார். அங்கிருந்தவர்கள் எல்லோரும் அதற்கு நான் பணம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அடிபடுவேன் என்றும் சொன்னார்கள். ஆனால், நான் அருகிலிருந்த தொடக்கப்பள்ளியில் போய்ப் புகலடைந்தேன். பஞ்சாயத்து வாரியத் தலைவர் தலையிட்டபின் கூட்டத்தினர் மறைந்து போனார்கள்.கீழவளவு என்ற இடத்தில் ஹரிஜனங்கள் அழுக்கடைந்த ஒரு குட்டையிலிருந்து தண்ணீர் எடுக்கிறார்கள். அதில் மனிதர்கள் குளிக்கிறார்கள். மாடுகளும் குளிப்பாட்டப்படுகின்றன. ஹரிஜனங்கள் பொது ஊருணியில் போய்த் தண்ணீர் எடுக்குமாறு ஹரிஜனங்களுக்கு தைரியம் சொல்லப்பட்டது. ஆனால், அவர்கள் சென்றபோது சாதி இந்துக்கள் அவர்களைத் திட்டி மிரட்டினார்கள். அதனால் ஹரிஜனங்கள் ஊருணியில் தண்ணீர் எடுக்கத் துணியவில்லை.
கீழவளவில் காவல் நிலையம் ஒன்று இருக்கிறது. ஆனால், அங்குள்ள காவலர்கள் ஹரிஜனங்களின் இந்தக் கஷ்டங்களைப் பற்றி அலட்சியமாயிருக்கிறார்கள். ஆட்டுக்குளம் என்ற இடத்தில் நாங்கள் கூறியபடி பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்த ஹரிஜனங்களைச் சாதி இந்துக்கள் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் அவர்கள் அந்தக் கிணற்றில் மலத்தைப் போட்டார்கள். எட்டிமங்கலத்தில் ஊர்ச் சாவடியில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தபோது ஹரிஜனங்கள் அங்கு நுழைந்தார்கள் என்பதற்காக, அவர்கள் அரசுப் புறம்போக்கு நிலத்தில் போட்டிருந்த நெல் நாற்றாங்காலைச் சாதி இந்துக்கள் அழித்துவிட்டார்கள். இதைப்பற்றி ஹரிஜனங்கள் கொடுத்த புகார் மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.....
மேலூரிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள நாவினிப்பட்டியில் ஹரிஜனங்கள் பொங்கல் பண்டிகையின்போது நல்ல ஆடை அணிந்ததைக் கிராம முன்சீபே ஆட்சேபித்திருக்கிறார். அவர் இரண்டு ஹரிஜன இளைஞர்களைச் சட்டையையும் மேல் துண்டையும் அகற்றிவிடச் செய்தார். மேலும் அவர்களைக் கீழே விழுந்து கும்பிடச் செய்து, கோவணத்துடன் மட்டும் போகச் செய்தார்.மிகவும் வேதனையளிக்கும் ஒடுக்குமுறை, மதுரை நகலிருந்து பத்து மைல் தூரத்தில் உள்ள மண்குளத்தில் நடந்தது. அந்த ஊரில் டீக்கடையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட இரண்டு ஹரிஜன இளைஞர்கள், காவல் துறையினரிடம் புகார் செய்ததற்காக கிராம முன்சீப் அவர்கள் மீது கோபம் கொண்டார். ஊர்ப் பெரியவர்கள் அவர்களில் ஒருவரைத் தூணில் கட்டி வைக்கச் செய்து, சாதி இளைஞர் ஒருவரைவிட்டு இரக்கமின்றி அடிக்கச் செய்தார்கள். மற்றொரு ஹரிஜன், கிராம முன்சீபின் வேலையாளால் கத்தியால் தாக்கப்பட்டார். ஹரிஜனங்கள் ஊருணியிலிருந்து தண்ணீர் எடுத்ததற்காக, அவர்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்து அவர்களுக்கு வேலை கொடுக்க மறுத்தார்கள். கடைக்காரர்கள் அவர்களுக்கு உணவுப் பொருள்களை விற்க மறுத்து, இரண்டு நாள்கள் பட்டினியாயிருக்க வைத்தார்கள். வருவாய்க் கோட்ட அதிகாரி தலையிட்ட பின்புதான் நிலைமை சீரடைந்தது.
சமீபத்தில் இரண்டு ஹரிஜனங்களும் நானும் குளத்தில் குளித்துவிட்டுச் சாவடியின் எதிரே இருந்த காப்பி கிளப்பில் நுழைந்ததற்காகச் சாதி இந்துக்கள் விறகுக் கட்டைகளால் அடித்தார்கள். நாங்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றோம். எனக்கு வலது பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், வலது காலை ஊன்றி நடக்க முடியவில்லை.
கிராம முன்சீப் உள்ளிட்ட 16 பேர் மீது காவல் துறையினர் குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கிறார்கள்....."தென்னிந்தியாவில் ஹரிஜனங்களின் துன்பங்கள் : ஒரு சமூகத் தொண்டன் அனுபவம்' என அகில இந்திய ஹரிஜன சேவக் சங்கத்தின் மண்டல அதிகாரி ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் கூறியுள்ளதை, டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டு தீண்டாமை, தீண்டப்படாதவர்கள் பற்றி நூல் ஒன்றினை எழுதியுள்ளார்.அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளபடி, அன்றைக்கு மதுரை மாவட்டத்தில் அதுவும் குறிப்பாக மேலூர் வட்டத்தில் தீண்டாமைக் கொடுமை, எந்தெந்த வடிவங்களில் நிலவியதோ, அதே போன்ற நிலை இன்றைக்கும் அப்பகுதிகளில் தொடர்வது, தலித்துகள் தங்கள் விடுதலைக்கு நீண்ட நெடிய போராட்டங்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டியதை வலியுறுத்துகிறது.
மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கு, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை நடத்திவரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பொ. ரத்தினம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மேலவளவு வழக்கு குறித்து விளக்கமளித்து, நீதி கிடைக்க ஆதரவு திரட்டி வருகிறார். இதன் ஓர் அங்கமாக, 1.1.2006 அன்று புதுச்சேயில் நடைபெற்ற கூட்டத்தில் மேலவளவு கிராமத்திற்கு நேரடியாகச் சென்று உண்மை நிலையை அறிய தீர்மானிக்கப்பட்டது.
7.1.2006 அன்று வழக்கறிஞர்கள் பொ. ரத்தினம், பகத்சிங், அழகுமணி, பூபால், சுரேஷ், ராபர்ட் சந்திரகுமார், கோ. சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), மு.முத்துக்கண்ணு (இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை), ரா. முருகப்பன் (பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்), ம. இளங்கோ (தந்தை பெரியார் தி.க.), ரா. கலியபெருமாள் (நகராட்சி/கொம்யூன் பஞ்சாயத்து எஸ்.சி./எஸ்.டி. ஊழியர் ஒருங்கிணைப்பு), பாவாடைராயன், வேல்ருகன் (புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை), கோவிந்தசாமி (சமூக நீதிப் போராட்டக் குழு), பினேகாஸ் (சட்டக் கல்லூரி மாணவர்), பாலா (பத்திரிகையாளர்) ஆகியோர் அடங்கிய குழு, மேலவளவு சென்னகரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று வந்தது.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தது.இன்றைக்கும் தலித்துகள் செருப்புப் போடக் கூடாது, மேல் சட்டை, துண்டு அணியக்கூடாது என கள்ளர்கள் சட்டம் போட்டு வைத்திருப்பதாக மேலவளவு, சென்னகரம்பட்டி தலித்துகள் கூறினர். கள்ளர்கள், தலித்துகளோடு பேசினால் ரூ. 60 அபராதமாக ஊர்ப் பொதுவுக்கு செலவிட செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. தலித்துகள் மீது நடத்தப்படும் அத்துமீறல் குறித்து காவல் நிலையங்களில் புகார் கொடுத்தால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. கள்ளர்கள் மிரட்டி புகாரைத் திரும்ப பெறச் செய்துவிடுகின்றனர். மேலவளவு முருகேசன் வழக்கில் தண்டனை கிடைத்த பிறகு, ஓரளவுக்கு நிலைமை மாறி வருவதை அறிய முடிந்தது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முறையாக செயல்படுத்தினால், தலித்துகள் மீதான வன்முறை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தப்படும் என்பதை மேலவளவு வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை தெளிவாக்குகிறது.
மேலவளவு தலித்துகள் ஓரளவிற்கு குறைந்த அளவில் நலம் உடையவர்களாகவும், படித்தவர்களாகவும் இருப்பதனால் தீண்டாமை சாதிய அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், மேலவளவு கிராமத்தில் 6,000 கள்ளர் குடும்பம் இருப்பதால் வேறு வழியில்லாமல் தலித்துகள் கள்ளர்களுக்கு அஞ்சி வாழ வேண்டிய நிலையே தொடர்கிறது. இதுபோன்ற சூழலில், டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய தனிக் குடியிருப்பு முறை மிகவும் அவசியமானதாகிறது.
மேலவளவு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வேளையில், குற்றவாளிகள் யாரும் தப்பிவிடக் கூடாது என்பதை தலித்துகள் அனைவரும் வலியுறுத்தினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராமர் சிறையில் இருப்பது, தலித்துகளுக்கு ஓரளவுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளது.1992இல் கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்த காரணத்தினால் சென்னகரம்பட்டியைச் சேர்ந்த தலித்துகள் அம்மாசி, வேலு ஆகியோர் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டனர். இதில் முக்கியக் குற்றவாளியான ராமர், இவ்வழக்கில் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. 1992இல் நடந்த இக்கொடூர கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் இதுநாள் வரையில் வழக்கு விசாரணை நடைபெறவில்லை.
தமிழக அரசும், நீதித் துறையும் இதுபற்றி துளியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.அம்மாசி, வேலு கொலை செய்யப்படுவதற்கு முதல் நாளன்று குத்தகை எடுத்த நிலத்தில் நாற்று நட்ட காரணத்திற்காக ராமர் தலைமையில் கள்ளர்கள், சென்னகரம்பட்டி தலித்துகளைத் தாக்கியுள்ளனர். இதில் அம்மாசியின் மனைவி தொம்பா உள்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அப்போது, தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் சாதிக் கலவர வழக்குகளைத் திரும்பப் பெற்றபோது, இவ்வழக்கும் போதிய காரணமின்றி திரும்பப் பெறப்பட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், "இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ராமர் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து நீதிபதி கண்ணதாசன் உத்தரவிட்டார். குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட்டனர். இத்தாக்குதலில் பாதிப்பிற்குள்ளான அம்மாசியின் மனைவி, ஓராண்டு கழித்து இறந்து போனார்.
நன்கு அறியப்பட்ட சென்னகரம்பட்டி, மேலவளவு வழக்குகளின் நிலையே இதுவென்றால், அறியப்படாத தலித்துகளின் மீதான வன்கொடுமைகளுக்கு நீதி எட்டாத ஒன்றுதான்.சமூக விடுதலையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தலித் இயக்கங்கள் தேர்தல் கூட்டணியில் மூழ்கி இருக்கும் நேரமிது. சாதிய தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி குற்றமிழைத்துள்ள ஆதிக்கவாதிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்து, தலித்துகளை அடக்குமுறைகளிலிருந்து காப்பதும்தான் நம்முன்னுள்ள கடமை. தற்போதுள்ள அமைப்பு முறையில், சட்டமன்ற உறுப்பினர்களாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாவும் தலித்துகளை அரசியல் அதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்லலாம். ஆனால், தலித்துகளின் விடுதலை இதனையும் கடந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.எஸ் செல்லம்மா (42) : நான் பிறந்தது தும்பப்பட்டி. கக்கன்ஜி பிறந்த ஊரு. கக்கன் வகையறாவுல எனக்கு அவர் தாத்தா. எங்க அப்பா பேரு மொந்தைரியன். நானும் கொஞ்சம் கொஞ்சமா கட்சியில இருந்து மாதர் சங்கத் தலைவியா ஆனேன். அப்போது 100 பட்டா வாங்கிக் கொடுத்தேன். அரசாங்கத்துல வீடு கட்டிக் கொடுத்தாங்க.நம்ம சமுதாயத்துக்கு ஊருக்கு நான் நல்லதுதான் செய்து வரேன்.
அப்புறம் முருகேசன் தேர்தல்ல நின்ன பின்னாடி சம்பவத்துக்கப்புறம் என்னை நிக்கச் சொல்லி, மதுரை கலெக்டர் காசி விஸ்வநாதன் ஆளனுப்பினார். நான் அப்பா வீட்டில் இருந்தேன். அப்ப நான் சொன்னேன், வேண்டாம் ஆம்பள பயலுவ நின்னுட்டு இப்பிடி பிரச்சினை ஆயிப்போச்சி இனிமேல் எனக்கு வேண்டாம் என்று சொன்னேன். அதுக்கு காசி விஸ்வநாதன், இல்லம்மா நீங்க வந்தா எந்தப் பிரச்சினையும் இருக்காது; நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுவிங்கன்னு கலெக்டரே கேட்டாக.ஒரு நாள் ஊர்ல கூட்டம் போட்டு அன்னபோஸ்ட்டா யாராவது வரட்டும்னு கிராமத்துல கேட்டதுக்கு எங்க சமுதாயத்துல யாரும் ஒத்துக்கல.
அப்புறம் என்னைய, நல்ல வழியில வந்தபுள்ள; சொன்னா கேக்குன்னு என்னைய வந்து பார்த்துச் சொன்னாங்க. அப்ப எல்லாம் போட்டிதான். வாங்க நாமினேசன் கட்டுவோம்னாங்க. அப்ப எங்கூட 8 ஆம்பளைங்க போட்டி. ஒரு பொண்ணு நான்தான். முதல்லயும் நான் கட்டி இருந்தேன். எங்க சமுதாயத்துலயும் சரின்னாங்க. பிற்பாடு, எங்க ஆளுங்களே என்னை வாபஸ் வாங்கச் சொன்னாங்க. நான் கட்சில பொறுப்பில இருக்கேன், வாபஸ் வாங்கமாட்டேன்னு சொல்லிட்டேன்.
அப்பதான் எனக்கு கட்சில மாவட்டத் துணைத் தலைவர், தலைவருன்னு பொறுப்பு கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. அப்புறம் இப்ப, எல்லோருமே போட்டி நாமினேசன் பணம் கட்டினோம். எல்லோருக்கும் ஓட்டு விழுந்தது. ஆனா நான் கொஞ்சம் அதிக ஓட்டுல ஜெயிச்சேன்.உறுப்பினர்ல எங்க ஆளுங்க 2 பேர தவிர, மத்தவங்க கோனார் வீடு, முஸ்லிம் வீடு, பி.சி.ங்க, கள்ள வீட்டு ஆளுங்க, துணைத் தலைவரே எஸ்.சி.தான். எல்லாரும் ஏதாவது கேட்பாங்க. நான்தான் நம்ம ஊர்ல பிரச்சினை இல்லாம ஓட்டணும்னு பொறுமையா இருந்து நிர்வாகம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
இது கட்சி சீட்டு இல்ல. தலைவருங்கறது மக்கள் பார்த்து ஓட்டுப் போட்டு எடுக்கறதுதான். கட்சிக் கூட்டங்கள்ல பேர் போடுவாங்க போவேன். வாசன், இளங்கோவன் எல்லாம் இங்க வந்தாங்கன்னா, முதல் ஆளா என்னதான் கூப்பிட்டுப் பார்த்து, எப்படிமா இருக்க, நல்ல இருக்கியா, தைரியமா இரும்மானு சொல்லுவாங்க. நானும் தைரியமா இருக்கேன். நல்லா நிர்வாகம் பண்றேன்.ஏகாதசி (63) : நான் மாட்டு வியாபாரி. முருகேசன மேலவளவு ராசாமணி மகன் கண்ணன் வெட்டினாரு. நான் பார்த்தத அவங்க யாரும் பாக்கல. வீட்டுக்குத் திரும்பிட்டேன். எல்லாருக்கும் தெஞ்சதும் ஊர அழிக்கணும்னுதான் கிளம்பினாங்க. அதுக்குள்ள அதிகாரிக வந்து, போவப்படாதுன்னு, போலிசு எல்லாம் வந்து தடுத்துட்டாங்க. அந்த செட்டு ஆளுங்க எல்லாம் என்ன மிரட்டினாங்க, சாட்சி சொல்லக் கூடாதுன்னு. அழகர்சாமி, ரெங்கசாமி, ரெங்கநாதன் எல்லாம் ஜாமீன்ல வந்தப்ப எங்கிட்ட சொன்னாங்க. நான் அதெல்லாம் முடியாது, நடந்தத சொல்லு வந்தான்னு சொல்லிட்டன்.ராஜா : முருகேசன் கொலைக்குப் பின்னாடி தீண்டாமை எல்லாம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ஊருலயும் ஒரு மாத்தம் இருக்கு. சட்டைப் போட்டுக்கிட்டு ஊருக்குள் போகலாம். மேல துண்டு, செருப்பு எல்லாம் போட்டுகிட்டுப் போனா ஒரு மாதிரி பார்ப்பாங்க.
இப்ப அவங்களுக்குத் தண்டனை கிடைச்ச பிறகு, அதெல்லாம் மாறி கொஞ்சம் நார்மலா இருக்கு. முன்னாடி துண்டு, செருப்பு போட்டுக் கிட்டு போனா, பறயன் என்ன இப்படி வர்றான்னு பேசுவாங்க. ஆனா இப்ப அப்படி யாரும் பேசறது இல்ல.மொத்தமா வாக்காளர்கள் 6000 பேர். குடும்பம் 3000 இருக்கும். இங்க காலனில 600 குடும்பம். இங்க படிச்சிட்டு 5, 6 பேருதான் அரசு வேலைல இருக்காங்க. காலேஜ் படிச்சிட்டு ஒரு 10 பேர், +2 முடிச்சிட்டு 25 பேர் இருக்காங்க. முருகேசன் கொலை நடந்த பிறவு 5 ஆவது வரைக்கும் இங்கேயே பள்ளிகூடம் இருக்கு. அதுக்கு முன்னாடி ஊர்லதான் போய்ப் படிப்போம். அப்ப 10ஆவது வரைக்கும் இருந்தது.
இப்ப +2 ஆக்கியிருக்காங்க.போதராஜன் : முருகேசன் கொலைக்கு முன்னாடி கள்ளர் ஆளுக்கும் எங்களுக்கும் ஏதாவது பிரச்சினை, சண்டை வரும். ஆனா நாங்க யாரும் பயந்துகிட்டு போய் போலிஸ்ல புகார் எல்லாம் கொடுக்க முடியாது. அப்படி சண்டை நடந்ததுன்னு தெரிஞ்சா, எங்க ஆளுங்க ஒவ்வொருத்தருக்கும் "குடி'ன்னு சொல்லி ஒரு கள்ளர் இருப்பாங்க. உடனே அவங்கள கூட்டியாந்து சமரசம் பண்ணிடுவாங்க. அடிச்சிடுவாங்க. நாங்க போய் தீண்டாமை கேஸ்ல புகார் கொடுப்போம். உடனே கொடுத்தவனோட "குடி'ய அழைச்சிகிட்டு வந்து புகாரை வாபஸ் வாங்க வச்சிருவாங்க.
நான் பி.எஸ்.சி. டிகிரி முடிச்சிட்டு எலக்டீசியனாவும், எல்.அய்.சி. ஏஜெண்டாவும் இருந்துகிட்டு இருக்கேன். நான் 92இல் பி.எஸ்.சி. முடிச்சேன். எம்ப்ளாய்மென்டல பதிவு பண்ணியிருக்கேன். 7 பேர் அரசு வேலையில இருக்காங்க. ஒருத்தர் சர்வேயர், குடிசை மாற்று வாரியத்துல, போலிஸ்ல இருக்கிறாங்க. காலேஜ் லெக்சரர். அதிக பட்டப் படிப்பு நிறைய பேர் படிச்சிருக்காங்க. ஊர்ல மீனான்றவங்க வீட்டுக்கு வயரிங் வேலைக்கு என்னை கூப்பிட்டாங்க. அது பப்ளிக் பிளேஸ். பாதை 10 அடி பாதை. நன் ஒரு கோல் ஊன்றிதான் வயர் இழுத்தேன். பக்கத்து வீட்டுக்காரர் சொக்கு அதுக்கு எதிர்ப்பு தெவிச்சார். அது மட்டுமில்லாம நீ எப்படிடா இங்க வந்து கட்டலாம்னு என்னப் பிடிச்சி இழுத்து மரத்துல எத்தினாரு. அதுவேற காரியம். என் தொழில் மரத்துல கட்டறதுதான்.
வேலை கொடுக்கறதும், கொடுக்காததும் ஈ.பி.யில போய் நீங்க தடுங்கன்னு சொன்னேன். அவர் உட்கார்ந்திட்டாரு. அப்பவே, இந்தப் பக்கத்து வீட்டு பொண்ணு அய்யனாரு சம்சாரம் ரத்தினம், ஒரு பறயன் நீ எப்படி இழுத்து கட்டலாம்னு சொல்லிச்சு. அதனால நான் மேலவளவு போலிஸ் ஸ்டேஷன் போய் ரிப்போர்ட் செஞ்சேன். சிங் போலிசார் வந்து விசாரித்தார். புகாருக்கு ரசீதுகூட கொடுக்கல. முருகேசன் அண்ணன் கருப்பையா, இன்னும் கொஞ்சம் பேரு கேள்விப்பட்டு ஓடிவந்தாங்க. அப்புறம் எஸ்.பி.கிட்ட சொல்லி, அவர் சொன்னப்புறம்தான் சி.எஸ்.ஆர். கொடுத்தாங்க. நான் வாபஸ் வாங்க மறுத்துட்டேன்.நைட் 8 மணிக்கு சண்முகம் எஸ்.அய். வந்தாரு. ஆஸ்பத்திலே சேர மெமோ கொடுக்க மறுத்துட்டாறு. நானே ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயி எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில எப்.அய்.ஆர். போட்டாங்க. கேஸ் போட்டவங்க எம் பேர்லயும் கேஸ் போட்டுட்டாங்க. எம்பேர்ல அத்துமீறி நான் அந்த ஊருக்குள்ள நுழைந்ததாகவும், அரிவாளால வெட்டிடுவேன்னு மிரட்டினதாகவும் சொக்கு கொடுத்த புகார்ல எம் பேர்ல பொய்க் கேசு போட்டுட்டிருந்தாங்க.
அவங்க கள்ளர் தரப்புலகூட மனு கொடுக்கல. போலிஸ் அவங்களே எழுதி கேஸ போட்டுக்கிட்டான். இப்படி எம்பேர்ல கேஸ் போட்டதுகூட, எனக்கு 90 நாள் கழிச்சுதான் தெரியும். இந்த மாதிரி போலிஸ் இன்னும் ஆதரவா அவங்களுக்குதான் இருக்கு. இந்த மாதிரி கேஸ்னா கள்ளர் சமூகத்தில யாருமே போலிஸ் ஸ்டேஷன் வரமாட்டாங்க. நாங்க எல்லாம் போவோம். அவங்க வரமாட்டாங்க. அவங்களுக்காக சண்முகம் எஸ்.அய்.தான் வந்து இருந்து எல்லாக் காரியத்தையும் முடிச்சு கொடுப்பாரு.மணிமேகலை : எனக்கு 17 அல்லது 18 வயசுல கல்யாணம் நடந்தது. நான் 5ஆவது வரைக்கும் படிச்சிருக்கேன். என்னோட சொந்த ஊரு வினோபா நகர் காலனி. அங்க 500 வீடு இருக்கும். எங்க அப்பா பேரு காந்தன். எங்கம்மா பேரு கலியாணி. எங்கூட பிறந்தவங்க 5 பொம்பள பிள்ளைங்க 2 பையங்க. நாங்க அக்காளும், தங்கச்சியும் அண்ணன் தம்பிக்கு வாக்கப்பட்டோம். 2 பேருமே இறந்துட்டாங்க. அவளுக்கு 2 பொம்பள பிள்ளைக இருக்கு. அத எங்க அப்பா வீட்ல வச்சிகிட்டு அங்கேயே இருக்கு. எங்க தங்கச்சி வீட்டுக்காரர் ராஜா. முருகேசன் தம்பி.கொலை நடந்தப்புறம் கருணை அடிப்படையில கலைஞர் ஆட்சில 7 பேருக்குமே சாலைப் பணியாளர் வேலை போட்டு கொடுத்தாக அரசாங்கத்துல. 2 லட்சம் பணம் கொடுத்தாங்க. இந்த வீடு கட்டிக் கொடுத்தாங்க. வேலை செய்யற அண்ணிக்குதான் எங்களுக்கு சம்பளம்.சென்னகரம்பட்டி மேலூர் வட்டம்பெருமாள் (47) : அம்மாச்சி அம்மன் மண்டக் கோயிலுக்கு சொந்தமான நிலம். 20 வருசமா அவங்கதான் ஏலம் எடுத்தாங்க. அந்த தடவ நாங்க எஸ்.சி. எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஏலம் எடுத்தோம். மொத்த நிலம் 9 ஏக்கர் 27 சென்ட். அதை ஏலம் எடுத்திட்டோம்னுதான் படிப்படியாய் அந்தமாதிரி செஞ்சாங்க.
நாங்க ஏலம் எடுத்த பின்னாடி, அதிகாரிகள்ட்ட போய் அது செல்லாதுன்னு அறிவிக்கச் சொல்றாங்க. கமிஷனர் கன்பார்ம் ஆர்டரை எங்களிடம் கொடுத்தாரு. இந்து அறநிலையத் துறை சென்னையில் இருந்து இந்தக் கடிதம் வந்தது. இந்த வேலைகளை எல்லாம் சிவனாண்டி (எ) தர்மலிங்கம்தான் நின்று செய்கிறார். இவர் வி.ஏ.ஓ.ஆ இருந்தாரு. கொலை நடக்கும்போது அவர்தான் வி.ஏ.ஓ. பிரச்சினை இருந்தால் 144 அறிவிச்சாங்க. மேலூர் தாலுக்கா ஆபிஸ்ல பீஸ் கமிட்டி போட்டாங்க. அவங்களுக்கு நோட்டீஸ் போச்சி 5.7.92இல் அவங்க வரல. நாங்க மட்டும் ஒரு 10, 20 பேர் இருக்கோம். மேலூர் தாலுக்கா போனோம். நைட் 10 மணி வரைக்கும் இருந்தும் அவங்க வரல. சாகுல் அமீதுன்றவர்தான் தாசில்தாராக இருந்து பீஸ் கமிட்டிய கூட்டினாரு.
அவங்க வரலன்னு ராத்திரி கடைசி பஸ்சுக்கு நாங்க கிளம்பினோம். வக்கிராபுரத்துல பஸ் வழி மறிச்சி இழுத்து வேலு, அம்மாசிய கொலை பண்ணிபுடறாங்க.நல்லதம்பி (அம்மாசி மகன்) : இப்ப எனக்கு 45 வயசு. பீஸ் கமிட்டிக்கு நானுந்தேன் எங்க அப்பாகூட போயிருந்தேன். பஸ்ல வரும்போது சேகருன்றவன் மட்டும் மேலூர்லயே பஸ்ல ஏறினான். இவன் ராமர் மச்சான். கவுட்டியாம்பட்டி ஊர்க்காரன். வழியில வந்துகிட்டு இருக்கும்போதே ஒரு ஸ்டாப்ல எங்கடா ஆள காணோம் அப்படின்னு சொன்னான்.
அத கேட்ட நாங்களும் ஏதோ நடக்கப் போறதுன்னு இருக்கும்போது பஸ்ல மறிச்சாங்க. ராமர்தான் பஸ்ச மறிச்சது. கூட ஒரு 20 பேர் இருக்கும். கத்திய வீசினதும் டிரைவர் பஸ்ல இருந்தாரு. நாங்க டிரைவர்கிட்ட வண்டிய எடுயா என்று சொன்னோம். ஆனா எடுக்க விடல. உள்ள பூந்து 2 பேரை இழுத்தாங்க. பீட்டுக்காக இருந்த போலிஸ் மேலூர்ல சாப்பிட்டு அதே பஸ்ல வந்துகிட்டு இருந்தாங்க. அவங்களும், நீங்களும் இதுலதாண்டா சாவப் போறீங்க எடுறா துப்பாக்கியின்னு சொன்னாரு. எல்லாரும் திபுதிபுன்னு கீழே இறங்கிடுறாங்க. டிரைவரும் வண்டிய எடுத்துடுறாரு. ராமரும் சிவனாண்டியும் சேர்ந்து, வேலுவையும் எங்க அப்பாவையும் புடிச்சி இழுத்துடுறாங்க.
சிவனாண்டிதான் எங்க அப்பாவை கையில புடிச்சி தாங்கி இழுத்தாரு. அவ்வளவுதான் நாங்க பார்த்தது. புடிச்சி இழுத்ததுல வெளியில வந்த வேலு பயந்து ஓடுனாறு, அவன தொரத்திகிட்டு ராமர் ஓடுனாறு. அதான் நாபார்த்தது. அதுக்கப்புறம் நைட்டே எங்களுக்கு விசயம் தெரிஞ்சிடுச்சி. ஆனா போலிஸ் அவரை போகவிடாம தடுச்சிருச்சி. எங்க ஊர்ல 144 போட்டு போலிஸ் பந்தோபஸ்து இருந்தாங்க. நாங்க இல்லாமலே பாடிய கொண்டு போயிட்டாங்க. மறுநாள் காலையில 10 மணிக்குதான் எங்கள அழைச்சிகிட்டுப் போனாங்க. போலிஸ் யாரையும் கைது பண்லை. 13 வருசமா இந்த கேஸ் நிலுவையில இழுத்துகிட்டு இருக்கு.இந்த கொலைக்கு முன்னாடி கள்ளர் ஆளுக எங்க ஆளுங்கள 5 பேர் குத்திப்புட்டாக. அதில் எங்க அம்மா, சுரேஷ், ராஜேந்திரன், அவங்க அம்மா, ஓனயன் இந்த 5 பேருக்கும்தான் குத்து விழுது. எங்க அம்மாவுக்குதான் இதுல அதிக காயம். இதுக்கு கேஸ் கொடுத்தோம். இப்பதான் இந்தக் கேஸ தள்ளுபடி பண்ணிட்டாங்க.
எங்க அம்மா, இந்த குத்துபட்ட காயத்தால அடுத்த 2 வருசத்திலேயே இறந்திட்டாங்க. எங்க அப்பா இறந்ததுகூட எங்க அம்மாவுக்குத் தெரியாது. புதைச்சிட்டு அப்புறம் பொறுமையாதான் சொன்னோம்.
33 comments:
நன்றி உங்களின் பணி மேலான பணி வாழ்த்துக்கள்
நன்றி!
படிக்கப் படிக்க வெறுப்பும் விரக்தியுமாக இருக்கிறது...தகவல்களுக்கு நன்றிகள்.
(கில்லிக்கு நன்றி)
வலைத்தளத்திற்கு வந்து தங்களின் கருத்தை பதிவு செய்த
மனிதன், Boston Bala ,Srikanth ஆகியோருக்கு நன்றி!
கொடுமை ஐயா... ஆதிக்க சாதி வன்கொடுமைகள் வேரருக்கப்பட வேண்டும்.
/* அவுங்களுக்கு தண்டனை கிடைச்ச பிறகு நிலைமை மாறியிருக்கு */
உண்மை, இவ்வழி நிச்சயம் ஒரு மாற்றம் தரும். எந்த நிலையிலான நீதி மன்றமானாலும் - தாலுகா, மாவட்ட, மாநில கோர்ட் - இவை அனைத்தும் சமூகவியல் குற்ற வழக்குகளை, அபெக்ஸ் கோர்ட்டுகள் போல் விரைவான தீர்புகள் தர நிர்பந்த படுத்தபட வேண்டும். இவ்வகை கோர்ட்டுகள் கொடுக்கும் மாசத்துக்கொரு வாய்தாக்கள், என 10 ஆண்டுகள் இழுத்தடிக்கப் படமால், அபெக்ஸ் கோர்டுகள் போன்று 2/3 வாய்தாக்கள், 1 மாத காலம் என வழக்குகள் விரைவுபடுத்தபட்டால், தண்டனை பயம் வேகமாக பரவி இவ்வித வன்கொடுமைகள் விரைவாக குறையும்.
இப்போதுதான் உங்கள் ப்ளாக் வாசிக்க துவங்கியுள்ளேன், பொருமையாக அனைத்தையும் படிக்க வேண்டும். மிக்க நன்றி.
இத்தனை விதயங்களை ஒருங்கே சொன்னதற்கு நன்றி. மேலவளவு ஊரில் இன்னும் போராட்டங்கள் தொடர வேண்டும். தொடர்ந்து எதிர்ப்புக் காட்டிக் கொண்டே இருந்தால் தான், இந்தக் கொடுமைகள் நிற்கும்.
என் ஆதரவு உண்டு.
அன்புடன்,
இராம.கி.
Padika Padika Kobamum, Verupum Minjukirathu....
thanimanitha thaakuthal-il ellam eedupattu.. kalobarathai undupannum thamizmanam nanbargal.. indha pathivai kandukollaathathu migavum varutham alikindrathu..
தாங்கள் வலைப்பதிய வந்தமைக்கு மிக்க நன்றி...
முதல் வணக்கம் சகோதரரே. உம் செய்திகளின் ஆரம்பமே என் கண்களை கலங்க வைத்துவிட்டது. உமது சேவைக்கு நன்றி. நாம் இவ்வுலகத்தை மாற்றப் பிறந்திருக்கிறோம். இப்போது நாம் நடக்கும் பாதைகளில் இருக்கும் அனைத்து தடங்கள்களையும் உடைத்து, ஒதுக்கி தூர எறிந்து பாதையை செப்பனிட்டு, மெருகேற்றி நமக்குபின் நம் சந்ததிகள் அமைதியான, அழகான, பாதுகாப்பான பாதையில் பயணம் செய்ய இப்போதிருந்தே ஆயத்தம் செய்வோம்!
இதற்கான வேண்டிய அத்தனை சாதனங்களும், திறமைகளும் இப்போது நம்மிடம் இருக்கிறது.
தொடரும்..... நம் பாசம் கலந்த நட்பு!
டண்டணக்கா , இராம.கி, யாத்திரீகன் , குழலி / Kuzhali , மாசிலா ,நிர்மல்
வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
மதிப்பிற்குரிய கோ.சுகுமாரன்,
நெஞ்சைத் தொடும் பதிவு மட்டுமல்ல. படிக்கும் போது ஆத்திரம் பொங்கி எழுகிறது. தமிழகத்தில் இப்படியும் நடக்கிறது என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகள் பெரியார் வாரீசு என்றும் அண்ணாவின் வாரிசு என்றூம் திராவிட ஆட்சி என்றும் மார்புதட்டுபவர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும் போலுள்ளது உங்களின் பதிவைப் பார்த்ததும். சுகுமாரன், தயவு செய்து இது போன்ற , நிகழ்வுகளை எழுதுங்கள். பலரும் இந்த அநியாயத்தை அறியும் போது, இப்படியான அக்கிரமங்களுக்கெதிரகாக் கிளம்பியெழுவார்கள். என் போன்ற அறியாத பலரும் தெரிந்து கொள்ளவும் முடியும்.
சுகுமாரன்,
மன்னிக்க வேண்டும். என் முன்னைய பின்னூட்டத்தில் கடந்த 40 ஆண்டுகள் பெரியாரின் வாரீசுகள் என்றும் அண்ணவின் வாரீசுகள் என்றும் கூறிக்கொண்டு தமிழக்கத்தில் ஆட்சி செய்பவர்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? இவர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும் போலுள்ளது என எழுத நினைத்து, சில வரிகளை எழுதாமல் விட்டுவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.
திரு.சுகுமாரன் அவர்களே!
உங்களின் பணிக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியது.மேலும் புரட்சி இல்லமல் இவர்களை ஒடுக்கமுடியாது.அஹிம்சைக்கு மலர் வளையம் வைத்த்து வருடங்கள் ஆகிவிட்டன.
வைத்தவர்களும் மேல் ஜாதியினர் என்று மார்தட்டும் வெறிநாய்களே.மணிதர்களை மணிதர்களாக வாழவைக்காத மதங்கள் எதற்க்கு? ஒரே இறைவனை வணங்கி மணித்ர்கள் அணைவரும் சமமே.மணிதரில் ஏற்றதாழ்வுகளை ஏற்ப்ப்டுத்துபவன் தான் படைப்பிணங்களிளே கீழானவன் என்று போதித்து தீண்டாமையை இல்லாமல் ஆக்கிய இஸ்லாத்தின் பக்கம் வாருங்கள்.அரசியல் கட்சிகளை நம்பினால் அவர்களுக்கு இப்பிரச்சனை எப்படி பயன்படும் என்றுதான் பார்ப்பார்கள்.வாழ்ந்தால் உரிமையோடு மணிதனாக வாழ்வது இல்லையேல் வீரமரணம் அடைவது இதற்க்கு தீர்வு புரட்சி ஒன்றே.வாழ்க புரட்சி! ஒழிக தீண்டாமை!!
அன்புடன்
இறையடியான்
நன்றி சுகுமாரன் இப்பதிவிட்டமைக்கு.
உண்மை சுடும் தான்
எனினும்
உறங்காது வெளிப்படட்டும் உண்மை.
படிச்சுட்டு மனசே சரியில்லைங்க.
உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.
http://www.desipundit.com/category/tamil/
great work. thanks for documenting all these happenings.
drastic measures are the only way out. sooner the better.
வணக்கம்,
திரு துளசி அய்யா,
என் பதிவை தொடுப்பு கொடுத்தமைக்கு நன்றி!
திரு தருமி அவர்களுக்கும் நன்றிகள்.
வருகை தந்து கருத்துக்களைப் பதிவு செய்த மதுமிதா,வெற்றி, இறையடியான் ஆகியோருக்கும் நன்றி.
உங்களைப் போன்றோரின் ஆதரவு இருக்கும் வரை என்னைப் போன்றோரின் பணி தொடரும்.
தொடர்ந்து எழுதுவேன்.
வருகை தந்த அனைவருக்கும் நன்றி .
படிக்கும் போதே கண்ணீரும் வெறுப்பும் வந்தன. மானுடர் எல்லாரும் ஒன்று தானே, பிறக்கும் போதும் இறக்கும் போதும் எனக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லையே... ஏன் இப்படி! உங்களைப் போன்றோர் தாம் எனக்கு வாழ்வில் நம்பிக்கைக் கொடுக்கிறார்கள்... மிக்க நன்றி.
சீ! மிருகங்கள் கூட;இப்படி நடக்காது. இந்த துப்புக் கெட்ட அரசியல் வாதிகளும்; அதிகாரிகளும் என்ன??,செய்கிறார்கள்.தமிழன் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது. பதிவை தந்ததற்கு நன்றி!
யோகன் பாரிஸ்
அருந்ததி ராய்., ஆட்டையாம்பட்டி ராய் ஏதாவது எழுதி இருந்தா அதை காப்பி அடிச்சி ஒரு பதிவு போடுவது பலனளிக்கும்.
//Anonymous said...
அருந்ததி ராய்., ஆட்டையாம்பட்டி ராய் ஏதாவது எழுதி இருந்தா அதை காப்பி அடிச்சி ஒரு பதிவு போடுவது பலனளிக்கும்.//
உங்கள் கருத்து நியாமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் உண்மையான பெயரை குறிப்பிட்டு எழுதலாம்.
மறைந்து கொண்டு எழுத வேண்டியதில்லை.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் தீண்டாமைக் கொடுமை இன்னும் உள்ளது என்று தெரிந்து கொள்வதே மிகவும் அதிர்ச்சியாக உள்ளது!
உங்கள் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கும், இப்படிப்பட்ட விஷயங்களைப் பதிய வந்தமைக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்..
பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் "பூவே பூவே" என்று பாடிக் கொண்டு வந்த காலத்திலிருந்து எனக்கு ஷகீலாவை பிடிக்கும்..
காக்க காக்க பார்த்ததிலிருந்து கொத்தவரங்கா சுப்புவையும்..
வாழ்த்துக்கள் ஷகீலா..
படங்களுக்கு நன்றி டாஸ்மாக் கொமார்.
மணிதர்களை மணிதர்களாக வாழவைக்காத மதங்கள் எதற்க்கு? ஒரே இறைவனை வணங்கி மணித்ர்கள் அணைவரும் சமமே.மணிதரில் ஏற்றதாழ்வுகளை ஏற்ப்ப்டுத்துபவன் தான் படைப்பிணங்களிளே கீழானவன் என்று போதித்து தீண்டாமையை இல்லாமல் ஆக்கிய இஸ்லாத்தின் பக்கம் வாருங்கள்.
Is conversion an answer to
all the problems of Dalits.
Has Islam granted equal rights
to women.Is not islam denying
them fundamental rights.
இதெல்லாம் படிக்கும் பொழுது இதெல்லாம் ஒரு பக்கம் நடந்துகிட்டு இருக்கு இதையெல்லாம் பத்தி ஒண்ணும் செய்யாமல் என்னை போன்றவர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்க்கையை கவனிச்சிகிட்டு இருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது கொஞ்சம் வெட்கமாகக் கூட இருக்கிறது.
மிகவும் கொடுமையாக இருக்கிறது..
சில சமயம் நான் மேலூருக்கு பணிநிமித்தமாக field visit போவதுண்டு. மேலூர் என்றில்ல மொத்த மதுரையிலுமே (டவுன் உட்பட இப்படித்தான் மக்கள் உள்ளனர்) மக்கள் இப்படித்தான் சாதி வெறிகொண்டு உள்ளனர். இத்தனை அற்பத்தனமான மனிதர்கள் உள்ள ஊரா(மதுரை) சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது.. அடிப்படை மனிதாபிமான இல்லாதவர்களால் எப்படி கலை என்றும் இலக்கியம் என்றும் குப்பை கொட்ட முடிந்தது..?
மதுரையில் வசிப்பதற்கே பயமா இருக்கிறது.
இது போன்ற கொடுமைகள் மதுரையில் மட்டுமல்ல மற்ற தென்மாவட்டங்களிலும் நடக்கிறது.
நான் இதை நேரில் கண்டுருக்கிறேன் . நான் எனது அக்காவின் ஊருக்கு சென்றிருந்தேன் அது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள ஆறாம்பன்னை என்ற கிராமம் , அங்கு நான் என் மச்சானோடு சாலையில் நடந்து வந்து கொன்டுருந்தேன் அப்பொழுது ஒரு கள்ளர் இனத்தை சேர்ந்த ஒருவன் வந்தான் என் மச்சானை பார்த்து பெயர் சொல்லி அழைத்து ரொம்ப மரியாதை குறைவாக பேசினான் இதுக்கும் அவனுக்கு என்னைவிட வயது குறைவு. நான் கேட்டேன் மச்சானிடம் என்ன சின்ன பயன் இப்படி பேசறான் என்று, அதுக்கு அவர் சொன்னார் "அவன் தேவமார் பய்யன் அப்படித்தான் பேசுவான் என்று, இவர்கள் எப்பவுமே இப்படித்தான் இங்கு நடந்து கொள்வார்கள் ஏன்னென்றால் நாம் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் ஆச்சே(நான் பள்ளர் இனத்தைச்சார்ந்தவன்) என்று" எனக்கு அப்பவே உள்ளம் கொதித்தது என்ன கொடுமை இதுவென நினைத்துக்கொன்டேன், இந்த கேவலமான ஊரிலா என் அக்காவை திருமனம் செய்துகொடுத்தோம் என்று நொந்துகொன்டேன்.
அவர்கள் சொல்வதைத்தான் அங்கு கேட்கவேன்டுமாம். மீறி நடந்தால் அடிதான் விழும்.
அப்பொழுதுதான் நினைத்தேன் இது போன்ற கொடுமைகள் இன்னும் இந்தியாவில் நடந்து கொன்டுருக்கிறது என்று. ஆனால் இது போன்ற கொடுமைகளைக்கன்டு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். நம் இளைய சமுதாயமும் இதைப்பற்றி அக்கறையே இல்லாமல் இருக்கிறது.என்னைக்கேட்டால் மேலவழவும் ஆறாம்பன்னையும் ஒன்றே.
இந்த மானங்கெட்ட மனிதர்கள் என்று திருந்துவார்களோ!!!!!!!!!!!!!!!!!
இது போன்ற கொடுமைகள் மதுரையில் மட்டுமல்ல மற்ற தென்மாவட்டங்களிலும் நடக்கிறது.
நான் இதை நேரில் கண்டுருக்கிறேன் . நான் எனது அக்காவின் ஊருக்கு சென்றிருந்தேன் அது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள ஆறாம்பன்னை என்ற கிராமம் , அங்கு நான் என் மச்சானோடு சாலையில் நடந்து வந்து கொன்டுருந்தேன் அப்பொழுது ஒரு கள்ளர் இனத்தை சேர்ந்த ஒருவன் வந்தான் என் மச்சானை பார்த்து பெயர் சொல்லி அழைத்து ரொம்ப மரியாதை குறைவாக பேசினான் இதுக்கும் அவனுக்கு என்னைவிட வயது குறைவு. நான் கேட்டேன் மச்சானிடம் என்ன சின்ன பயன் இப்படி பேசறான் என்று, அதுக்கு அவர் சொன்னார் "அவன் தேவமார் பய்யன் அப்படித்தான் பேசுவான் என்று, இவர்கள் எப்பவுமே இப்படித்தான் இங்கு நடந்து கொள்வார்கள் ஏன்னென்றால் நாம் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் ஆச்சே(நான் பள்ளர் இனத்தைச்சார்ந்தவன்) என்று" எனக்கு அப்பவே உள்ளம் கொதித்தது என்ன கொடுமை இதுவென நினைத்துக்கொன்டேன், இந்த கேவலமான ஊரிலா என் அக்காவை திருமனம் செய்துகொடுத்தோம் என்று நொந்துகொன்டேன்.
அவர்கள் சொல்வதைத்தான் அங்கு கேட்கவேன்டுமாம். மீறி நடந்தால் அடிதான் விழும்.
அப்பொழுதுதான் நினைத்தேன் இது போன்ற கொடுமைகள் இன்னும் இந்தியாவில் நடந்து கொன்டுருக்கிறது என்று. ஆனால் இது போன்ற கொடுமைகளைக்கன்டு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். நம் இளைய சமுதாயமும் இதைப்பற்றி அக்கறையே இல்லாமல் இருக்கிறது.என்னைக்கேட்டால் மேலவழவும் ஆறாம்பன்னையும் ஒன்றே.
இந்த மானங்கெட்ட மனிதர்கள் என்று திருந்துவார்களோ!!!!!!!!!!!!!!!!!
//பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் "பூவே பூவே" என்று பாடிக் கொண்டு வந்த காலத்திலிருந்து எனக்கு ஷகீலாவை பிடிக்கும்..
காக்க காக்க பார்த்ததிலிருந்து கொத்தவரங்கா சுப்புவையும்..
வாழ்த்துக்கள் ஷகீலா..
படங்களுக்கு நன்றி டாஸ்மாக் கொமார்.//
அனாணி,
உங்கள் பதிலைப் பார்த்ததுமே நீங்கள் டாஸ்மார்க் கேசு என்பது நல்லாத் தெரியுது. நல்லாத் தெளிஞ்சவுடன் கொஞ்சம் படியுங்கள்.
பொதுவா பிராமண துவேஷம் செய்யும் பலரையும் இங்க காணலியே?
உங்க பணி மகத்தானது சார் தொடருங்கள். என்னால இப்போதைக்கு இதுமட்டும்தான் சொல்ல முடிகிறது.
வெற்றியின் சுட்டி மூலமாக உங்கள் பதிவிற்கு வந்து அதிர்ந்தேன். நகரங்களின் அவசர வாழ்க்கையில் பத்திரிகைகளின் மூலைக்குத் தள்ளப்படும் அவலங்களின் பரிமாணத்தை விவரமாக அறியும்போது நெஞ்சு பதறுகிறது. ஓட்டுவங்கி அரசியல் மக்களைப் பிரித்துவைத்தே ஆதாயம் காண்கிறது.அரசு இயந்திரமும் இவர்களுக்குத் துணையில்லாத அவலநிலையில் இந்த பதிவைப் போன்று நிஜத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பல்லூடக பிரசாரம் மிக அவசியமாகிறது.
சாதியின் பெயரால் மனிதனை மனிதன் தாழ்வாக பார்க்கும் கண்ணோட்டம் மாறும் வரையில் இது போன்ற வக்கிரங்கள் அரங்கேறவே செய்யும். பொருளாதார சமமின்மையும் இத்தகைய நிகழ்வுகளுக்கு அடிப்படயகின்றன .சாதி என்பது என்னை பொறுத்தவரையில் மனிதன் ஒழுக்கமாக குழு உணர்வோடு கலாச்சாராத்தை பேண கண்டறியப்பட்ட ஒரு விடயம் . அது இன்று திசை மாறி உயிர் கொலை பேண தலைப்பட்டு விடத்தை எண்ணியும் மேலவளவில் கொல்லபட்ட ஆறு சக மனிதர்களின் அநியாய கொலைக்க்காகவும் கள்ளன் என்ற முறையில் துயர் அடைகின்றேன் . அம்பேத்கர் முயற்சியில் வந்த இட ஒதுக்கிடு காரணமாகவே நான் மட்டுமல்ல ஏனை சாதி இந்துக்களும் பார்பன தளையில் இருந்து விடுபட்டோம் .
சாதியின் பெயரால் மனிதனை மனிதன் தாழ்வாக பார்க்கும் கண்ணோட்டம் மாறும் வரையில் இது போன்ற வக்கிரங்கள் அரங்கேறவே செய்யும். பொருளாதார சமமின்மையும் இத்தகைய நிகழ்வுகளுக்கு அடிப்படயகின்றன .சாதி என்பது என்னை பொறுத்தவரையில் மனிதன் ஒழுக்கமாக குழு உணர்வோடு கலாச்சாராத்தை பேண கண்டறியப்பட்ட ஒரு விடயம் . அது இன்று திசை மாறி உயிர் கொலை பேண தலைப்பட்டு விடத்தை எண்ணியும் மேலவளவில் கொல்லபட்ட ஆறு சக மனிதர்களின் அநியாய கொலைக்க்காகவும் கள்ளன் என்ற முறையில் துயர் அடைகின்றேன் . அம்பேத்கர் முயற்சியில் வந்த இட ஒதுக்கிடு காரணமாகவே நான் மட்டுமல்ல ஏனை சாதி இந்துக்களும் பார்பன தளையில் இருந்து விடுபட்டோம் .
Post a Comment