Wednesday, April 19, 2006

ஆக்கப்பூர்வமான வன்முறை என்று ஒன்றில்லை

நேர்காணல் : கோ. சுகுமாரன்

டாக்டர் கே. பாலகோபால், இந்திய அளவில் புகழ்பெற்ற மனித உரிமைப் போராளிகளில் குறிப்பிடத்தகுந்தவர். இவர் ‘ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் குழு'வின் பொதுச் செயலாளராக இருந்தவர். தற்பொழுது ‘மனித உரிமைக் கழக'த்தின் பொதுச் செயலாளராக செயல்படுகிறார். ஆந்திராவில் வெகு மக்கள் ஆதரவுடன் 18 மாவட்டங்களில் இவ்வமைப்பு செயல்படுகிறது. மனித உரிமை அமைப்புகள் மக்கள் இயக்கமாக செயல்பட முடியாது; சிறிய குழுவாகத்தான் இருக்க முடியும் என்பதை செயலளவில் மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.


1994 இல் கர்னூலில் நடைபெற்ற ‘ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் குழு'வின் மாநில மாநாட்டில் இவரது அறிக்கை, 18 மணி நேரம் விவாதிக்கப்பட்டது. அரசு வன்முறையும், தனி அமைப்பு வன்முறையும் எதிர்க்கப்பட வேண்டும் என்ற இவரது கருத்துகள், அப்போது நீண்ட விவாதத்திற்குள்ளானது. இதன் தொடர்ச்சியாக, மேற்குறிப்பிட்ட நக்சலைட் ஆதரவு மனித உரிமை அமைப்பிலிருந்து விலகி, தனி அமைப்பு உருவாக்க வேண்டிய நிலைக்கு இவர் தள்ளப்பட்டார். ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றிவரும் இவர், செயல்தளத்தில் மட்டுமல்லாது எழுத்துத் தளத்திலும் பங்களிப்பு செலுத்தி வருகிறார். காவல் துறையின் அதிகாரம் மேலோங்கி இருக்கும் ஆந்திராவில், உயிருக்கு அச்சுறுத்தலுள்ள சூழலில் இவருடைய துணிவான மனித உரிமை செயல்பாடு, பலராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

தங்களுடைய குடும்பப் பின்னணி, சமூகப் பின்னணி...என்னுடைய குடும்பம், ஆந்திரப் பிரதேசத்தின் ராயல்சீமா பகுதியைச் சேர்ந்தது. இப்பகுதி கடுமையான வறட்சிக்கும், ‘குழு' வன்முறைக்கும் புகழ் பெற்ற இடம். என்னுடைய அம்மாவின் தந்தை, பார்ப்பனிய மரபுவழிச் சடங்குகளில் தேர்ந்த பயிற்சி பெற்றவர். இவர் மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவருக்கு அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள அக்கிரகாரத்தில் பங்கு இருந்தது. இப்பகுதி, ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதிகளைப் போல மிகவும் வறண்டு காணப்பட்டது. என்னுடைய தந்தையின் குடும்பம், கடப்பாவில் உள்ள நகர்ப்புறத்தைச் சேர்ந்த கீழ் நடுத்தர வர்க்கமான பார்ப்பனக் குடும்பம். என் தந்தை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கிளை மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். எனது தாய் 14 முறை கருவுற்றுப் பதினோரு குழந்தைகளைப் பெற்றார்; அதில் மூவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். என்னுடைய தாய் எங்கள் எட்டு பேருடைய (4 சகோதரர்கள், 4 சகோதரிகள்) வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தினார்.

என்னுடைய தந்தை ஒரு சராசரி ஆணாகவே இருந்தார். அவருடைய ஒரே கடமை, எங்களுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களைச் செலுத்துவது தவிர வேறில்லை என்று நம்பிக் கொண்டிருந்தார். அதுகூட அந்தக் காலத்தில் நகராட்சிப் பள்ளிகளிலும், அரசுக் கல்லூரிகளிலும் எங்களுக்கு நல்ல முறையிலும், இலவசமாகவுமே கற்றுக் கொடுக்கப்பட்டது. என்னுடைய தந்தைக்கு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுதல் வந்ததால், மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் நான் படிக்க நேர்ந்தது. என்னுடைய அறிவியல் இளங்கலைப் படிப்பை திருப்பதியில் படித்து 1972 இல் பட்டம் பெற்றேன். என்னுடைய அறிவியல் முதுநிலைப் படிப்பையும், கணிதவியலில் முனைவர் பட்டத்திற்கானப் படிப்பையும், தெலுங்கானா பகுதி வாரங்கல்லில் உள்ள’முஜினல் பொறியியல் கல்லூரி'யில் (தற்பொழுது அது ‘தேசியத் தொழில்நுட்ப நிறுவனம்' என்று அழைக்கப்படுகிறது) படித்தேன். வாரங்கல் பகுதி, 1946 - 57 காலகட்டத்தில் தெலுங்கானாவின் விவசாயிகள் எழுச்சிப் போராட்டத்திற்குப் பெயர் பெற்ற இடமாகும். 1970 களின் மத்தியில் இவ்வியக்கம், சிறீகாகுளத்திலிருந்து தெலுங்கானாவிற்கு மாறியதிலிருந்து இன்னும் பல வழிகளில் குறிப்பாக, நக்சலைட் இயக்கத்திற்கு மய்யமான இடமாக அது விளங்குகிறது.

நீங்கள் ஒரு மனித உரிமைப் போராளியாக எவ்வாறு பணியாற்றத் தொடங்கினீர்கள்?

நான் முதன் முதலில் வாரங்கல்லில்தான் நக்சலைட்டு இயக்கத்துடன் தொடர்பு கொண்டேன். அதற்கு முன்பு, திருப்பதியில் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, கணிதம் இயற்பியல் வேதியியல் ஆகிய வகுப்புகளைத் தவிர்த்துவிட்டு, பெரும்பாலான கல்லூரி நாட்களை சிறீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகத்தில்தான் செலவழித்து வந்தேன். வரலாறு, தத்துவம், ஆங்கில இலக்கியம், மனோதத்துவம், தர்க்கவியல் மற்றும் வானவியல் குறித்து நிறையப் படித்தேன். நான் வெகு விரைவில் பெர்ட்ரண்ட்ரசல் மற்றும் அவருடைய இடதுசாரி சிந்தனைகளின் பால் ஈர்க்கப்பட்டேன். எனவே, அப்போது எனக்கு கம்யூனிஸ்ட்டுகள் மனதளவில் நல்லவர்களாகவும், சிந்தனை அளவில் இறுக்கமானவர்களாகவும் பட்டார்கள்.

நான் வாரங்கல்லில் இருந்தபோதுதான் நக்சலைட் இயக்கத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. இதற்கு முஜினல் பொறியியல் கல்லூரி, ஒரு மய்ய இடமாக அமைந்தது. 1975 சூனில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது, சுராபனானி ஜனார்த்தனன் என்ற நக்சலைட் போராளிதான் முதல் முறையாகக் கொல்லப்பட்டவர். அவர் இக்கல்லூரியின் மாணவர். மற்றொருவர் செருகு ராஜ்குமார். இவர் தற்பொழுது சி.பி. அய். (மாவோயிஸ்ட்) இன் மய்யக் குழு உறுப்பினராக இருக்கிறார். ராஜ்குமார் அடிக்கடி என்னிடம் அரசியல் பேசுவார். ஆனால், கம்யூனிஸ்டுகள் உள்ளத்தால் நல்லவர்கள்; அவர்களுடைய தத்துவம் பலமற்றது என்ற என்னுடைய சிந்தனையில் எந்த மாற்றம் ஏற்படவில்லை. பெர்ட்ரண்ட் ரசலிடமிருந்து பெற்ற ஆய்வு அணுகுறையின் அடிப்படையில், என்னால் ‘நெருக்கடி நிலையை'ப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம்.

கம்யூனிஸ்டுகளிடம் இதற்கு விடை இருப்பதாக எனக்குத் தோன்றியது. இருப்பினும், முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்சியம் குறித்த நூல்கள், எனக்குச் சிறிதும் உதவவில்லை. நான் தற்செயலாக டி.டி. கோசாம்பியைப் படிக்க நேர்ந்தபோதுதான் மார்க்சியத்தின் சாரத்தைப் புரிந்து கொண்டேன். அதன்பிறகுதான் நான் ‘மூலதனம்' மூன்று தொகுப்புகளையும் படித்தேன். இருப்பினும், கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், ஒரு போராளியாக மாறுவேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அங்குள்ள ‘இந்திய புள்ளியியல் நிறுவனத்தில்' கணிதத்தில் முனைவர் பட்டத்திற்கான உயர் ஆய்வை மேற்கொள்ள, 1978 இல் டெல்லிக்குச் சென்றேன்.

அங்கு சென்ற ஒன்றரை ஆண்டுகளிலேயே என்னால் அந்தப் பாடத்தின் தன்மையையும், அதில் ஆய்வு செய்பவர்களின் திறமையையும், செயல்பாட்டையும் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் படிப்பு மீது எனக்கிருந்த ஈர்ப்பு குறைந்ததால், கணிதவியல் ஆராய்ச்சியாளராக மாறுவதைவிட ஒரு போராளியாக மாறுவது என்று முடிவு செய்தேன். என்னுடைய ஆய்வு முடியும் முன்பே நான் மீண்டும் வாரங்கலுக்கே வந்துவிட்டேன். எனக்கு ‘ககாட்டியா பல்கலைக் கழக'த்தில் உள்ள கணிதவியல் துறையில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. நான் அப்போது ‘இயக்கத்திற்காகப் பணியாற்ற' முடிவு செய்தேன். நான் இயக்கம் என்று குறிப்பிடுவது ‘நக்சலைட் இயக்கம்'.

அந்தக் காலகட்டத்தில், ஆந்திர மாநிலத்தில் சிவில் உரிமைகளுக்காகப் பணியாற்றுவது என்பது, மிகவும் மரியாதைக்குரிய ஒன்றாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அதிலும் குறிப்பாக அறிவுஜீவிகள் நக்சலைட் இயக்கத்திற்கு வேலை செய்வது என்பது, மிகுந்த மரியாதையுடன் பார்க்கப்பட்டது. இந்த வகையில்தான் நான் ஒரு மனித உரிமைப் போராளியாக மாறினேன். மற்றபடி மனித உரிமைகளை முற்றாகப் புரிந்து கொண்டு நான் மாறவில்லை. அறிவாளிகள் நக்சலைட்டுகளுக்குச் செய்யக்கூடிய ஒரே உதவி என்ற முறையில், ‘ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழக'த்தினர் நச்சலைட்டுகளுக்கு உதவி செய்தனர். நான் 1983ஆம் ஆண்டே இவ்வமைப்பின் பொதுச் செயலாளரானேன். இதன் பின்னணியில் மிகச் சாதாரணமான காரணங்களே இருந்தன. இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்புடைய அமைப்புகளில் இப்படிதான் நடக்கும்.

இன்று, என்னைப் பொறுத்த வரையில், மனித உரிமை அமைப்புகளில் இருக்கும் என்னுடைய சகப் போராளிகளைப் பொறுத்தவரையில், ஓர் ஆரோக்கியமான முழுமையான மனித உரிமை இயக்கம் என்ற அளவில் எங்களுடைய தொடக்கம் சிறப்பானதாக இல்லை. இதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. எனினும், நாங்கள் அரசுக்கும் நக்சலைட் இயக்கத்திற்கும் இடையில் பணியாற்றுவது அப்போதும் இப்போதும் பயனுள்ளதாக இருப்பதாகவே உணர்கிறோம். ஆனால், இது தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கக் கூடாது. இத்தகைய செயல்பாடுகள் அரிதாகவும், உரிமைகள் பற்றிய இருவிதமான விழிப்புணர்வுகளும் கலந்ததாக இருந்தது.


ஒரு மனிதனின் உரிமையை அரசு பறிக்கக்கூடாது என்ற விடுதலைச் சிந்தனை ஒரு புறம், புரட்சி செய்வதற்கான உரிமை வேண்டும் என்ற சிந்தனை மறுபுறம். இது எங்கு போய் முடியும் என்றால், ஒரு தனி மனிதனை எந்த விதத்திலும் மதிக்காத ஓர் அரசை அமைப்பதில் போய் முடியும். மனித உரிமைக் கோட்பாடு என்பது, தனி மனிதனின் உரிமைகளை முழுமையாக அங்கீகரிப்பதாக இருக்கிறது. அதே சமயத்தில் ஒரு மேம்பட்ட சமூகத்தைத் தீவிரமான வழிகளில் முன்னெடுப்பதையும் அங்கீகரிக்கிறது. ஆனால், அரசு எந்திரத்திற்கு எதிராக தனி மனிதனின் உரிமைகளை நிலைநிறுத்துவது என்பது மட்டும் தனி மனிதனின் எல்லாவித உரிமைகளையும் செயல்படுத்துவது என்பதாக அமையாது. மேம்பட்ட சமூகம் என்பது, எல்லா அம்சங்களிலும் இப்போதிருக்கும் சமூகத்தைவிட உரிமைகளை மதிப்பதாக அமைய வேண்டும். உண்மையில், மனித உரிமைக் கோட்பாடு என்பது மேற்குறிப்பிட்ட இரு அம்சங்களை மட்டுமே சார்ந்தது அல்ல. அது மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்க்கிறது. அவர்களுக்கான தகுதிகளையும் வாய்ப்புகளையும் சமமான அளவில் பகிர்ந்தளிக்கிறது. இந்தக் கருத்துதான் இந்தியாவில் புத்தன் காலத்திலிருந்தே, பார்ப்பன சமூகத்திற்கும் நாகரிகத்திற்கும் எதிராக, மனித உரிமைக் கோட்பாடு என்பதற்கான உண்மையான அர்த்தத்தையும் உயிர்ப்பையும் தந்திருக்கிறது.

மக்கள் யுத்தக் குழுவின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்துச் சொல்லுங்கள்.

மக்கள் யுத்தக் குழுவின் (தற்பொழுது சி.பி.அய். மாவோயிஸ்ட் என்று அழைக்கப்படுகிறது) தொடக்கத்தை, அவர்களின் எழுத்துக்களிலிருந்தே கொள்ள முடியும். எனக்கு இது பற்றி குறைந்த அளவே தெரியும். ஏனெனில், அதைத் தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. நக்சலைட் இயக்கத்திற்கான என்னுடைய ஆதரவு, பெருமளவு அதனுடைய சமூகத் தாக்கத்தால் ஏற்பட்டதுதான். இந்தப் பொருளில், நக்சலைட் இயக்கத்தின் (மக்கள் யுத்தக் குழு மட்டும் அல்ல) தோற்றம், கிராமத்தில் உள்ள ‘ரயத்' கூலி சங்கத்தை (விவசாயத் தொழிலாளர் சங்கம்) அடிப்படையாகக் கொண்டிருந்தது. இத்தகைய சங்கங்கள், பன்கத் தன்மை வாய்ந்த போராட்டத்தின் கருவாக இருந்தன: நிலத்திற்கானப் போராட்டம், கூலி உயர்வுக்கானப் போராட்டம், கொத்தடிமை முறைக்கு எதிரானப் போராட்டம், ஏழை / தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கும் நிலச்சுவான்தார்களுக்கு எதிரானப் போராட்டம், தீண்டாமைக்கு எதிரானப் போராட்டம், தங்களுக்குள் ஏற்படும் சண்டைகளை நிலச்சுவான்தார்களின் பஞ்சாயத்தால் தீர்த்துக் கொள்வதற்குப் பதில் மக்கள் தாங்களாகவே தீர்த்துக் கொள்வது போன்றவற்றை இந்தச் சங்கங்கள் முன்னெடுத்தன.

இத்தகைய செயல்பாடுகளே நக்சலைட் இயக்கத்தின் உயரிய நோக்கமாக இருந்தது. கிராமத்தில் நிலவும் சமூக உறவுகளைத் தலைகீழாக மாற்றுவது என்பதுதான் அதனுடைய அடிப்படையான நோக்கமாக இருந்தது. கணக்கிடக்கூடிய அளவில் நிலப்பங்கீட்டில் பெருமளவு மாற்றங்கள் இல்லை எனினும், கூலி உயர்வு கிடைத்தது; கொத்தடிமை முறை முழுமையாக ஒழிந்தது. கிராமத்தில் நிலவிய அதிகார உறவுகள், முன்பு எப்போதும் இல்லாத வகையில் மாறிவிட்டது.

நக்சலைட் இயக்கத்தின் ‘வளர்ச்சி' குறித்து ஒருவர் பேச வேண்டும் எனில், பின்வரும் மய்யப்புள்ளிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ரயத்' கூலி சங்கத்தின் வெற்றிகரமானப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு பயன்படுத்திய கடும் ஒடுக்குறை; நக்சலைட்டுகளின் வன்முறை வடிவங்கள் குறிப்பாக மக்கள் யுத்தக் குழுவின் வன்முறை வழிமுறைகள்; இதற்கு எதிராக மேலும் அதிகமான வன்முறையை அரசு ஏவியது; இதற்கெதிராக மேலும் வன்முறையைக் கடைப்பிடித்த மக்கள் யுத்தக் குழு என ஒன்றிலிருந்து மற்றொன்றாகச் சுழன்று வந்தது. கட்சி ஒரு முழுமையான புரட்சிகர இயக்கமாக முதிர்ச்சி அடைந்து விட்டது என்று அவர்களுடைய வெளியீடுகள் குறிப்பிடலாம். ஆனால், இது விவாதத்திற்குட்பட்டது.

ஓர் உண்மையான மக்கள் இயக்கத்தின் சீரழிவுக்கு, ஓரளவு பயிற்சி பெற்ற போராளிகள் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி ஓடிவிடும் தன்மைக்கு யார் முழு காரணமாக இருந்தாலும், குறிப்பாக மக்கள் யுத்தக் குழுவின் புரட்சிகர இயக்கச் செயல்பாடுகளில் வெகுமக்களுடைய பங்களிப்பு என்பது, பெருமளவில் குறைந்து விட்டது. இயக்கத்தின் மய்யமான சங்கத்தில் இருந்துதான் ஆயுதமேந்திய குழுக்கள் தேர்வு செய்யப்பட்டனர். காவல் துறை மற்றும் அரசின் பிற நிறுவனங்களுக்கு எதிராகத் தோன்றிய கெரில்லா போராட்டம், கிராமங்களின் சமூக, பொருளாதாரப் போராட்டங்களுக்கு மாற்றாக அமைந்தது. சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்களாகவே கையிலெடுத்துப் போராடுவதற்குப் பதில், அவை ஆயுதக் குழுக்களாலேயே கையிலெடுக்கப்பட்டன. முன்பு ஒரு போராட்டம் செய்திருக்கக்கூடிய விஷயத்தை நக்சலைட்டுகளால் கிராமத்தில் ஒட்டப்படும் ஒரு சுவரொட்டியே சாதிக்கக்கூடிய அளவுக்கு நிலைமை மாறியிருந்தது. ஆனால், மறுபுறம் மக்கள் யுத்தக் குழு, ராணுவ ரீதியாக மேலும் மேலும் தேர்ந்து விளங்கியது. காவல் துறை அதிகாரிகளே அவர்களுடைய ஆற்றலைப் பார்த்து வியக்குமளவுக்கு மாறியது.

இன்றையச் சூழலில், ஆயுதப் போராட்டம், மனித உரிமைகள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையிலான பிரச்சினைகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

ஒரு மனித உரிமை இயக்கத்திற்கு உள்ளார்ந்த மாண்புகள் இருக்கின்றன. உடலுழைப்பற்ற வர்க்கம் செய்யக்கூடிய ஒரு புரட்சியாக இதைப் பார்க்க முடியாது. ஆயுதப் போராட்டம் என்பது எப்பொழுதுமே சிக்கலுக்குரியது. ஓர் உண்மையான மனித உரிமைப் போராளி, ஒருபோதும் வன்முறையை ஆதரிக்க முடியாது. வன்முறையில் ஈடுபடுகின்றவர்கள் ஒருபோதும் மனித உரிமைப் போராளிகளாக இருக்க முடியாது. வன்முறைதான் பல நேரங்களில் நீதி கிடைக்க வழி செய்கிறது என்றும், வன்முறையை ஆதரிப்பவர்கள் சொல்வது போல் உலகில் பெறப்பட்ட அனைத்து வெற்றிகளுக்கும் வன்முறைதான் காரணம் என்பதும் உண்மையல்ல. பல ஆண்டுகளாகவே இந்த சிக்கலைப் பற்றி நாங்கள் மிகத் தீவிரமாக விவாதித்து வந்திருக்கிறோம். எங்களால் ஒரு தீர்வுக்கும் வர முடிந்தது பல பிரச்சினைகளும் சிரமங்களும் இருக்கத்தான் செய்தன ஆனால் பல வழிகளிலும் நடைமுறையில் அனைத்து அம்சங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வாக அது இருந்தது.

சமூகத்தின் கட்டுமானத்தில் எண்ணற்ற வன்முறைகள் நிலவும்போது வறியவர்களை பலம் பொருந்தியவர்கள் தாக்குவது, பசி, வறுமை, கல்வியின்மை, திட்டமிடப்பட்ட பாகுபாடுகள், தீண்டாமை முதலியன... இருப்பினும், அனைத்துவகை அரசியல் வன்முறையையும் கண்டிப்பது என்பது சரியல்ல. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையை ஆதரிப்பவர்கள் அல்ல; ஆனால், சமூகம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதைப் ‘புரிந்து கொள்ள' வலியுறுத்துவது ஒருவகையான ஆதரவை வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இது வன்முறையை ஆதரிப்பதைத் தடுக்கிறது (இதுதான் மரண தண்டனைக்கு எதிரான முக்கியமான வாதம்).

இருப்பினும், நாம் முழுமையற்ற ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். இந்நிலையில் நாம் வெறும் அரசியல் வழிமுறைகளை மட்டுமே கோர முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் எனில், மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையை ஆதரிப்பதில்லை. ஆனால் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் ஆகியோருக்கு ஆதரவான அரசியல் வன்முறையின் பின்னணியை இந்தச் சமூகம் புரிந்து கொள்ள வலியுறுத்துகின்றனர். வன்முறையைத் தூண்டும் இந்நிலையை மாற்ற அவர்கள் முயலுகின்றனர். அதே நேரத்தில், அவர்கள் அனைத்து வகை அறியாமைகளையும், அநீதிகளையும் புரட்சியாளர்களின் வன்முறையையும் கண்டிக்கின்றனர். இந்தப் புரிதலில்கூட மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். என்னைப் பொறுத்த அளவில், 25 ஆண்டுகளாக, விடுதலைக்காகத் தொடர்ச்சியான, திட்டமிட்ட வன்முறையை அருகில் இருந்து பார்த்து வருகின்றவன் என்ற வகையில் வன்முறை என்பது சில நேரங்களில் ஒரு தேவையான தீமை. ஆனால், அது தேவைப்பட்டாலும் ஒரு தீமையே!

ஆக்கப்பூர்வமான முறையில் வன்முறையைப் பயன்படுத்துவது பற்றி இடதுசாரி அறிவுஜீவிகள் பேசுவதை அடிக்கடி கேட்க முடிகிறது. ஆக்கப்பூர்வமான வன்முறை என்று ஒன்று கிடையாது என்பது என்னுடைய உறுதியான கருத்து. அனைத்து வன்முறையும் அழிவைத் தருபவைதான். அழிவு என்பதற்குப் பல பயன்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். இப்படிப்பட்ட ஒரு அழிவுக்கு தற்போதைய சூழலில் ஒரு தேவை இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், இருக்கும் மாற்று வழிகள் இதைவிட மேலும் அழிவுகளைத் தருபவைகளாக இருக்கின்றன. வன்முறையைத் தவிர்ப்பது என்பது, நம்மீது நிகழ்த்தப்படும் நியாயமற்ற வன்முறையை ஒத்துக் கொள்வதாகக்கூட முடிந்து விடலாம். இந்த நிலையில், வன்முறையைத் தவிர வேறு வழியில்லை. எப்படி இருந்தாலும், வன்முறை என்பது அடிப்படையிலேயே மனிதத் தன்மையற்றது. இந்தக் காரணத்தை மட்டும் முன்வைத்து வன்முறையை நாம் முழுமையாகத் தவிர்ப்பது என்பது, தற்கால சமூகச் சூழலில் சாத்தியமில்லை.-

பேட்டி அடுத்த இதழிலும்...

நன்றி: தலித்முரசு

1 comment:

Anonymous said...

வருக வருக, புதுவை கோ.சுகுமாரன் தமிழ்மணம் வாசகர்கள் சார்பாக தங்களை வரவேற்கிறேன் மனித உரிமைகள் தொடர்பாக தங்களின் தகவல்கள் எங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம். நீங்கள் நேரடியாக இணையத்திலும் எழுதத் தொடங்குங்கள்

புதுவைத்தமிழன்