புதுச்சேரி அருகே திருவாண்டார்கோயிலில் உள்ள கே.சி.பி. காகிதத் தொழிற்சாலையில் உள்ள சுத்திகரிப்புத் தொட்டியில் விஷவாயு தாக்கி அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் சிவானந்தம், அபுதாகிர், ஜான்கென்னடி, ஸ்டாலின் சங்கர், அம்ருதின் ஆகியோர் இறந்தனர். மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இது குறித்து, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 31.12.2006 அன்று வெளியிட்ட அறிக்கை:
கே.சி.பி. காகிதத் தொழிற்சாலையில் ஐந்து தொழிலாளர்கள் இறந்தது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென புதுவை அரசை வற்புறுத்துகிறோம்.
தொழிலாளர்கள் இறந்ததற்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை தற்காலிகமாக தொழிற்சாலையை மூட அரசு உத்திரவிட வேண்டும்.
தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்புக் கருவிகள்கூட வழங்காமல் இதுபோன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதுதான் உயிரிழப்புக்குக் காரணம். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 20 இலட்சம் ரூபாய் இழப்பிடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சாலைக்குச் சென்று முறையாக ஆய்வு செய்ய தவறிய தொழிலாளர் துறை, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் 402 ஆபத்தான தொழிற்சாலைகள் இருப்பதாக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. இதுபோன்ற ஆபத்தான தொழிற்சாலைகளைக் கண்காணிக்க சுற்றுச்சூழல், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுயேட்சையான கண்காணிப்புக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிகிடைக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். மேலும், இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்ப உள்ளோம்.
பலியான தொழிலாளர் குடுபத்திற்கு
புதுவை அரசு நிதியுதவி
பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும், தெற்குப் பகுதி துணை ஆட்சியர் ஏ. வின்சென்ட் ராயர் தலைமையில் நீதிவிசாரணைக்கும் புதுவை அரசு உத்திரவிட்டுள்ளது.
தொழிசாலை நிர்வாகத்தினர் மீது வழக்கு
காவல்துறை நடவடிக்கை
இதனிடையே திருபுவனை காவல்துறையினர் கே.சி.பி. காகித தொழிற்சாலை மேலாளர், துணை மேலாளர், மேற்பார்வையாளர் இருவர் உட்பட 4 பேர் மீது இ.த.ச. 304 ஏ, 337 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment