Friday, February 02, 2007

விஜயா வழக்கு : போலீசார் பணி நீக்கம்

படம்: இரா. முருகப்பன்

மக்கள் உரிமைக கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03-01-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:

அத்தியூர் விஜயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற புதுச்சேரி போலீசாரின் ஜாமீனை ரத்து செய்ய தமிழக - புதுச்சேரி அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

செஞ்சி அருகேயுள்ள பழங்குடிப் பெண் அத்தியூர் விஜயாவை ஒரு திருட்டு வழக்கு விசாரணைக்காக சென்ற புதுச்சேரி போலீசார் 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் கடந்த 11-8-2006 அன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 6-11-2006 அன்று ஜாமீன் வழங்கியுள்ளது. குற்றமிழைத்த போலீசார் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர்.

தீர்ப்பு வழங்கப்பட்டு 3 மாதத்திற்குள் ஜாமீன் வழங்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது பாதிக்கப்பட்ட விஜயாவிற்கு கிடைத்துள்ள நீதியைக் கேள்விக்குள்ளாக்கும் என அச்சப்படுகிறோம்.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக - புதுச்சேரி அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி கடந்த டிசம்பர் 30-ந் தேதியன்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.பொ. இரத்தினம் அவர்கள் தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளோம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

தண்டனைப் பெற்ற போலீசார் இதுவரையில் பணிநீக்கம் செய்யப்படாதது கண்டனத்திற்குரியது. தண்டனைப் பெற்ற போலீசார் அனைவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.

பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் பெண் அத்தியூர் விஜயாவிற்கு நீதிகிடைக்க அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் போராட முன்வர வேண்டுகிறோம்.

தண்டனைப் பெற்ற போலீசார் பணி நீக்கம்: அரசு நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து 04-01-2007 அன்று பாலியல் வன்கொடுமை செய்த போலீசார் 1. நல்லாம் கிருஷ்ணராயபாபு (ஆய்வாளர்), ராஜாராமன் (உதவி துணை ஆய்வாளர்), சசிகுமார் நாயர் (தலைமைக் காவலர்), பத்மநாபன், முனுசாமி, சுப்புராயன் (காவலர்கள்) ஆகியோரை பணிநீக்கம் செய்து புதுவை அரசு உத்தரவிட்டது.

2 comments:

Thangamani said...

உங்கள் முனைப்பான பங்களிப்புக்கும் தகவலுக்கும் நன்றி!

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

திரு. தங்கமணி அவர்களுக்கு,
ஊக்கப்படுத்தியமைக்கு
மிக்க நன்றி.