Wednesday, August 15, 2007

தினமணியின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் காலமானார் : அஞ்சலி


அரை நூற்றாண்டு காலமாகப் பத்திரிகை துறையில் பணியாற்றிய "தினமணி"யின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் காலமாகிவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெற்குப்பை என்ற சிறிய கிராமத்தில் பிறந்த இவர், மேலைச்சிவபுரியில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கி, மதுரை தியாகராசர் கல்லூரியில் பி.ஏ. படித்தார். பி.ஏ. தேர்வு முடிவு வருவதற்கு முன்னதாகவே, தனது 22-ஆம் அகவையில் மதுரையில் கருமுத்து தியாகராச செட்டியார் நடத்திய "தமிழ்நாடு" நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்து, மதுரையிலும் சென்னையிலும் நான்கு ஆண்டுகள் செய்தியாளராகப் பணிபுரிந்தார்.

பின்னர், 1960-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரான ராம்நாத் கோயங்கா நடத்திய செய்தி நிறுவனமான "இந்தியன் நியூஸ் சர்வீசில்" இணைந்து ஓராண்டு பணியாற்றினார். 1961-இல் "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில நாளிதழில் செய்தியாளராகப் பணியில் சேர்ந்தார்.

பின்னர், "தினமணி"யின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தினமணி ஆசிரியராகப் பதவியேற்று 9 ஆண்டுகள் பணியாற்றினார். தினமணி ஆசிரியராக இருந்தபோது, சென்னை "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" உறைவிட ஆசிரியராகவும் ஓராண்டு காலம் கூடுதல் பொறுப்பு வகித்தார். 2004-இல் தனது 69-ஆம் அகவையில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்றார்.

கல்லூரிக் காலம் தொடங்கிப் பெரியார் பற்றாளரான இவர், தீவிர கடவுள் மறுப்பாளராக வாழ்ந்தார். தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளைப் புறந்தள்ளி வந்தார். தமிழ்ப் பற்றாளர். அவர் கொண்ட கொள்கைகள் அவ்வப்போது பத்திரிகையில் வெளிப்படுவதுண்டு. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலமை உடையவர்.

இராம.திரு.சம்பந்தம் பற்றி எனக்குப் பல்வேறு தகவல்களைக் கூறி அறிமுகப்படுத்தியவர் தற்போது பி.பி.சி. தமிழோசையின் பொறுப்பாளராக இருக்கும் மணிவண்ணன். இராம.திரு.சம்பந்தம் அவர்களுடனான என் நட்பு மிகவும் நெருக்கமானதோடு, பாசப் பிணைப்புக் கொண்டது.

2000-ஆவது ஆண்டு சந்தன வீரப்பன் பிடியிலிருந்து கன்னட நடிகர் இராஜ்குமார் மீட்கப்பட்டு, நாங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சில நாட்களில், சென்னையில் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் மகள் அமலாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் நான் கலந்துக் கொண்டேன். அப்போது "இந்தியன் எக்ஸ்பிரஸ்" தலைமைச் செய்தியாளராக இருந்த கோலப்பன் எங்களிடம் வந்து, என்னையும், பேராசிரியர் கல்யாணியையும் (தற்போது கல்விமணி) இராம.திரு.சம்பந்தம் சந்திக்க வேண்டும் என்றுகூறி, அண்ணா சாலையில், "எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ்" வளாகத்திலிருந்த "தினமணி" அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவ்ர் "தினமணி"யின் ஆசிரியர்.

அங்கு ஆசிரியருக்கானத் தனி அறையில் நானும் கல்யாணியும் அவரைச் சந்தித்தோம். நடிகர் இராஜ்குமார் மீட்பு தொடர்பானச் செய்திகளை அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார். அப்போது இரவு 8.30 மணியிருக்கும். "பொதுவாக இந்த நேரத்தில் யாரையும் சந்திக்கமாட்டேன், வேலை பளு அதிகமாக உள்ள நேரமிது, பக்கங்களை முடிக்க வேண்டும், இருந்தாலும் உங்களைச் சந்திக்கிறேன்" என்று கூறினார். அவர் சாப்பிட கொண்டு வந்த உணவை எங்களுக்குப் பகிர்ந்தளித்தார்.

அப்போது கல்யாணி, தான் எழுதிய கிராமப்புற இடஓதுக்கீடு பற்றிய கட்டுரையை "தினமணி"யில் வெளியிட முடியுமா? என்று கேட்டு, கட்டுரையை அவரிடம் கொடுத்தார். அதைப் பார்த்த அவர் "பெரியதாக இருக்கிறது, இப்போது கட்டுரைப் பக்கத்தை இரண்டு பகுதியாகப் பிரித்துவிடோம். சுறுக்க முடியமா? சுகுமாரன் இதை "எடிட்" செய்து தாருங்கள்" என்று கூறினார். அவரது அறைக்குள் அவரது மேசையிலேயே அக்கட்டுரையை "எடிட்" செய்துக் கொடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு, "சரியாக இருக்கிறது, வெளியிடுகிறேன்" என்றுகூறி இரண்டு நாள் கழித்து வெளியிட்டார்.

பத்திரிகைத் துறையில் "பெரிய ஜாம்பாவனாக" கருதப்படும் இராம.திரு.சம்பந்தம் என்மீது நம்பிக்கை வைத்து, எனக்கு அப்பணியை அளித்தது அப்போது எனக்குப் பெருமையாக இருந்தது.

அதன்பின்னர், பல சந்தர்ப்பங்களில் அவரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளேன். அடிக்கடி தொலைபேசியில் அழைத்துப் பல்வேறு தகவல்கள் கூறியுள்ளேன். பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்றபின், அவரோடு ஒன்றிரண்டு முறைதான் பேச முடிந்தது. நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தபோது அவரைச் சென்று பார்க்க முடியாமல் போய்விட்டது.

14-08-2007 அன்று காலை 10 மணியளவில், "தினமணி"யின் புதுச்சேரி செய்தியாளர், அவர் இறந்துவிட்ட செய்தியைக் கூறினார். அதிர்ச்சியாக இருந்தது. இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்று எண்ணி சென்னைக்குத் தொடர்புகொண்டேன். அவரது இரு கண்களையும் இராஜன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் அகற்றிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். அவர் தன் இரு கண்களையும் தானம் செய்துள்ளார். மேலும், தன் உடலை இராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொடையாக அளித்துள்ளார். இறந்த ஆறு மணி நேரத்திற்குள் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைத்துவிட வேண்டும் என்பதால் அவரது உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆகையால், அவரது உடலைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

தமிழகத்தின் பல தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு என் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் அவரது மனைவி கண்ணாத்தாள் அவர்களுக்கும், உறவினர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் கடைசி வரையிலும் பத்திரிகையாளராகவே இருந்தார் என்பதற்குச் சான்று அவரைப் பற்றிய குறிப்பை அவரே, தனக்குப் பிடித்த கறுப்பு மையால் நல்ல ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார்.

தமிழகத்தில் பல செய்தியாளர்களை உருவாக்கிய இராம.திரு.சம்பந்தம், இளைய சமுதாயத்திற்குச் சிறந்த முன்மாதிரி. அவரது கடுமையான உழைப்பு அனைவரும் பின்பற்ற வேண்டியது.

காலம் ஒரு தலை சிறந்த பத்திரிகையாளரைக் கொண்டு சென்றுவிட்டது.

3 comments:

Anonymous said...

//அவரது இரு கண்களையும் இராஜன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் அகற்றிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். அவர் தன் இரு கண்களையும் தானம் செய்துள்ளார். மேலும், தன் உடலை இராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொடையாக அளித்துள்ளார். இறந்த ஆறு மணி நேரத்திற்குள் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைத்துவிட வேண்டும் என்பதால் அவரது உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது //

Simply Great ! i read Dinamani when he was editor for its editorials . Lets yougsters mould like him to donate orgons instead of cheap publicity by cine stars...

Thamizhan said...

கோயங்காக் கும்பலில் வேலை செய்தாலும் அவருடைய தனித் தன்மை,பகுத்தறிவு ந்திறைந்த அந்த எழ்த்துக்கள் சிறப்பானவை.
தின மணியிலே தமிழர்கள் பலரின் வாழ்க்கையை வித்தியாசமான வரலாறாக அருமையாக வெளியிட்டிருந்தார்.
கடைசி அன்பளிப்பாய் கண்களையும்,உடலையும் தந்துள்ளது மிகவும் மரியாதையுடன் போற்றப் பட வேண்டியது.

எஸ்.ஆர்.மைந்தன். said...

தினமணி முன்னாள் ஆசிரியர் சம்பந்தம், உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாகக் கொடுக்காமல், பெரும் பணக்காரர்கள் படிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு தானமாகக் கொடுத்ததை ஏற்க முடியவில்லை. வருத்தமாக உள்ளது.