Sunday, September 30, 2007

இந்து மதவெறி பிடித்த வேதாந்தி உருவ பொம்மை எரிப்பு - 150 பேர் கைது - படங்கள்









புதுச்சேரியில், 28-09-2007 அன்று, பெரியார் தி.க. முன்முயற்சியில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து, இராமர் பாலம் என்ற பெயரில் தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான பார்ப்பன, இந்து மதவெறி சக்திகளுக்கு எதிராக சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் முடிவில் இந்து மத வெறிபிடித்த வேதாந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

உத்திரபிரதேசம் விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த ராம் விலாஸ் வேதாந்தி, தமிழக முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் துண்டிக்க வேண்டுமென "பட்வா" கட்டளை பிறபித்தார். இதற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைக் கண்டித்தும், மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் பெரியார் தி.க. தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மீனவர் விடுதலை வேங்கைகள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், புரட்சியாளர் அம்பேத்க்ர் தொண்டர் படை, செந்தமிழர் இயக்கம், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை, செம்படுகை நன்னீரகம், சமூக நீதிப் போராட்டக் குழு, வெள்ளையணுக்கள் இயக்கம் ஆகியவை இணைந்து இப்போராட்டத்தை நடத்தின.

ஊர்வலத்திற்கு பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் பா.சக்திவேல், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகரி, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை தலைவர் பொ.தாமோதரன், சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில் அ.மஞ்சினி, வெள்ளையணுக்கள் இயக்கம் சார்பில் பாவல், செம்படுகை நன்னீரகம் செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் தி.க. அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செயலாளர் சு.விசயசங்கர், பொருளாளர் வீரமோகன், துணைத் தலைவர் இரா.வீராசாமி, இளைஞர் அணித் தலைவர் சா.சார்லசு, செயலாளர் செ.சுரேசு, செய்தி தொடர்பாளர் ம.இளங்கோ உட்பட ஏராளமான தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வேதாந்தியை கடுமையான சட்டத்தில் கைது செய், இந்துமத-பார்ப்பன அமைப்புகளான பா.ஜ.க., இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், சிவசேனா போன்ற அமைப்புகளைத் தடை செய் என்று முழக்கமிட்டனர்.

ஊர்வலத்தைத் தடுத்த காவல்துறையினரோடு மோதல் ஏற்பட்டது. காவல்துறை தடுத்தையும் தாண்டி ஊர்வலத்தினர் முன்னேறி வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Thursday, September 20, 2007

புதுதில்லியில், உலக வங்கியின் தாக்கங்கள் குறித்து மக்கள் தீர்ப்பாயம்

புதுதில்லியில் 2007, செப்டம்பர், 21 முதல் 24 வரை 4 நாட்கள் உலக வங்கி குறித்து மக்கள் தீர்ப்பாயம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகள் மீது வளர்ச்சி என்ற பேரில், உலக வங்கியின் திட்டங்களால் எவ்வாறு நமது வளங்கள் சுரண்டப்படுகின்றன என்பதை வெளிக் கொண்டு வருவதற்கான முன்முயற்சியே இந்த மக்கள் தீர்ப்பாயம்.

உலக வங்கி, அடித்தட்டில் உழலும் பாதிக்கப்பட்ட சமூகத்தினரிடையே ஏற்படுத்திய தாக்கங்கள்:
குறிப்பாக -

1)பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், ஆதிவாசிகள், விவசாயிகள்.

2)சுற்றுச் சூழல், மனித உரிமைகள்.

3)மிகப் பெரிய மூலதனம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக உலக வங்கியின் திட்டங்கள்.

4)சமூக வளர்ச்சிக்கானத் திட்டங்களாகிய வறுமை ஒழிப்பு, ஏற்றதாழ்வைக் குறைத்தல், உணவு, கல்வி, மருத்துவம் போன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தலையிடுதல் (எடுத்துக்காட்டாக மானியம் வெட்டு).

5)அரசு, தனியார் துறையிலும் ஒளிவுமறைவின்மை, ஊழல், பதிலளிக்கும் கடமை ஆகியவற்றால் ஏற்பட்ட தாக்கங்கள்.

6)நாட்டின் ஆளுகை, இறையாண்மை, ஜனநாயக மதிப்பீடுகள் மீதான தாக்கம்.

7)சமூகத்தில் உண்டாக்கப்படும் மோதல்கள், இராணுவமயமாக்கல்.

ஆகியவை குறித்து இத்தீர்ப்பாயத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

இதில், உலக வங்கித் திட்ட்த்தால் பாதிக்கப்பட்டோர், இவற்றை எதிர்த்துப் போராடும் இயக்கத்தினர், அரசுத் தரப்பினர், உலக வங்கிப் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

இத்தீர்ப்பாயத்தில், எழுத்தாளர்கள் அருந்த்திராய், மகேஸ்வதா தேவி, முன்னாள் நீதிபதிகள் பி.பி.சாவந்த், எச்.சுரேஷ், உஷா, சமூக ஆர்வலர்கள் மெகர் இஞ்சினியர், அருணா ராய், பேராசிரியர் அமித் பதூரி உள்ளிட்டவர்கள் நடுவர்களாக இருந்து வழிநடத்த உள்ளனர்.
சமூக ஆர்வலர் மேதா பட்கர், பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய், மனித உரிமை ஆர்வலர், மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், பிரசாந்த் பூஷன், அர்ஷ் மந்தர் உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்க உள்ளனர்.

இந்தியா முழுவதும், உலக அளவிலும் செயல்படும் 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இத்தீர்ப்பாயத்தை நடத்துகின்றன. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம், மாணவர் சங்கம் ஆகியவையும் இவ்வமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன.
இத்தீர்ப்பாயத்தில் தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பலர் கலந்துக் கொள்கின்றனர். புதுச்சேரியிலிருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், சென்னயிலிருந்து தோழமை அமைப்பு சார்பில் அ.தேவநேயன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு:

உலக வங்கி தீர்ப்பாயம்

Sunday, September 16, 2007

முதல்வர் கருணாநிதி மீது பழ.நெடுமாறன் நம்பிக்கை

ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்பும் நடவடிக்கையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மீது பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்காததைக் கண்டித்து, பழ.நெடுமாறன் 12-09-2007 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.

முதல்வர் கருணாநி்தியின் உறுதிமொழியோடு பழ.நெடுமாறன் அவர்களைச் சந்தித்த பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வலியுறுத்தினார். அதனை ஏற்று பழ.நெடுமாறன் 15-09-2007 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பழ.நெடுமாறன் கூறியதாவது:

"இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி பெற்று விட்டோம். ஆனால், இந்திய அரசு 7 மாதங்களாக அதை அனுப்ப மறுப்பு தெரிவித்து வந்தது. அதை எதிர்த்துதான் எனது உண்ணாவிரதம்.

நான் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது தமிழக அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள் எனது போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் என் அருகிலேயே அமர்ந்திருந்தனர்.

பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு முதல்வரிடம் பேசும்போது, இந்த பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என்று அவர் உறுதிமொழி அளித்துள்ளார். அதை நிறைவேற்ற தானும் முயற்சி எடுப்பதாக மருத்துவர் இராமதாசு கூறியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்புவதில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி வலியுறுத்துவார்."

இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட பழ.நெடுமாறன் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சி்கிச்சைப் பெற்று வருகிறார். சி்கிச்சை முடிந்து நாளை (17-09-2007) வீடு திரும்புவார் என்று தெரிகிறது. பழ.நெடுமாறன் அவர்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தன் காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாட்களாக நடந்த போராட்டத்தினால் ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப மத்திய அரசு இன்னும் சில நாட்களில் அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Saturday, September 15, 2007

பழ.நெடுமாறன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து கொண்டார்.

பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு உறுதிமொழியை ஏற்று பழ.நெடுமாறன் இன்று (15-07-2007) மதியம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் போர் நடந்து வருவதைத் தொடர்ந்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் உணவு, மருந்து கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் செயல்படும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு தமிழகமெங்கும் ரூ.1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள் திரட்டினர். அதனை யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பி வைக்க அனுமதி கோரினர். ஆனால், அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதனிடையே, பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் உணவு, மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தினர். அதன்பின்னும், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நாகப்பட்டினம், இராமேசுவரம் ஆகிய பகுதிகளின் கடல் வழியாக படகு மூலம் சேகரித்த உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல தியாகப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இதன்படி, இரண்டு குழுவினர் 07-09-2007 முதல் 11-09-2007 வரை பரப்புரை மேற்கொண்டனர். திருச்சியிலிருந்து நாகை வரையிலும், மதுரையிலிருந்து இராமேசுவரம் வரையிலும் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் ஏராளமான வாகனங்களில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

இதன்படி, 12-09-2007 அன்று காலை 10 மணியளவில் பழ.நெடுமாறன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு இயக்கத்தினர் உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுடன் நாகப்பட்டினம் கடற்கரை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது தமிழகப் போலிசார் நாகைக் கடலோர மீனவர்களிடம் படகுகள் தரக் கூடாது என்று மிரட்டியது தெரிய வந்துள்ளது. இதனைக் கண்டித்து, பழ.நெடுமாறன் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். போலிசார் பின்னர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுதலைச் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பழ.நெடுமாறன் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தோடு 13-09-2007 உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்துப் போட்டு, அத்துமீறி நடந்துள்ளனர். இதனைப் படம்பிடித்த ஒரு தனியார் தொலைக்காட்சி புகைப்படக்காரரை தாக்கியுள்ளனர்.

இதனிடையே, தமிழக முதல்வர் கருணாநிதி 14-09-2007 அன்று இரவு பழ.நெடுமாறன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அக்கடித விவரம்:

பேரன்புடைய நெடுமாறன் அவர்களுக்கு,
வணக்கம்.

ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நான் ரயிலில் அமர்ந்து இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாநிலைப் போராட்டம், உங்கள் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல. தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணாநோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன்.

ஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
மு. கருணாநிதி.


இக்கடிதத்தை ஏற்காத பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 14-07-2007 அன்று பதில் கடிதம் எழுதினார். அதன் விவரம்:

முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

13.09.2007 நாளிட்ட தங்கள் மடல் கிடைக்கப்பெற்றேன்.

என் உடல்நிலை குறித்த அக்கறையுடனும் என் கோரிக்கை குறித்த பரிவுடனும் தாங்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளுக்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கள அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார முற்றுகைக்கு உள்ளாகி பட்டினியிலும் நோயிலும் அல்லற்படும் 5 லட்சம் யாழ்ப்பாண தமிழர்களுக்கு வழங்கிட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரட்டப்பட்ட சற்று ஏறக்குறைய 1 கோடிரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதில் தராமல் இந்திய அரசு 7 மாத காலமாக இழுத்தடித்து வருவதனை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.

தாங்கள் சேலம், ஈரோடு சுற்றுப்பயணத்தை முடித்து தலைநகரம் திரும்பிய பின்னர் இது குறித்து ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.

இந்த அணுகுமுறை அடிப்படையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தங்களை சந்தித்து பேச அணியமாக உள்ளது.

எனவே இந்நிலையில் என் கால வரம்பற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடர வேண்டிய தேவை உள்ளது என்பதனை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள
பழ. நெடுமாறன்.


இச்சூழலில், தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சியினரும் (அ.தி.மு.க., காங்கிரஸ், தி.மு.க. தவிர), இயக்கத்தினரும் பழ.நெடுமாறன் உடல்நிலையைக் கணக்கில் கொண்டு, அவரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தினர்.

இன்று (15-09-2007) மதியம் பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்குச் சென்று பழ.நெடுமாறன் அவர்களைச் சந்தித்தார். பா.ம.க. தலைவர் கோ.க.மணி உடனிருந்தார்.

அப்போது அவர் முதல்வர் கருணாநி்தி அளித்த உறுதிமொழியைத் தெரிவித்து, உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். அவரிடம் சில விளக்கங்களைக் கேட்டறிந்த பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். உடனே, மருத்துவர் இராமதாசு அளித்த பழச்சாறை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். கடந்த 4 நாட்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

அப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடனிருந்தார். தமிழக அளவில் ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் திரண்டிருந்தனர்.

மக்கள் போராளி ஷிலா திதியை விடுதலை செய்ய கையெழுத்திடுங்கள்

ஒரிசாவைச் சேர்ந்த ஆதிவாசிப் பெண் ஷிலா திதி ஒரிசா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், பீகார் மக்களுக்காகப் பாடுபட்டு வரும் ஆற்றல்மிக்க களப்போராளி. இவர் “நரி முக்தி சங்” என்ற அமைப்பின் முன்னாள் தலைவர்.

ஷிலா திதி கடந்த 2006 அக்டோபர் 7 அன்று, ஒரிசா மாநிலம், சுந்தர்கார்க் மாவட்டத்திலுள்ள லத்திகட்டா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆம்ஜோர் கிராமத்தில் போலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர்மீது அரசுக்கு எதிராக “தேச துரோக” குற்றம் செய்ததாக பொய் வழக்குப் போட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஷிலா திதி அருகிலுள்ள சி.ஆர்.பி.எப். முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டு, 2 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் போலிஸ் காவலில் விசாரணைக்காக எனக் கூறி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் 4 நாட்கள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். போலிசாரின் சித்திரவதையால் அவரது முன்தலையிலும் வயிற்றிலும் கடுமையான ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. போலிசார் அவரது காலிலும், பாதத்திலும் லத்தியால் அடித்து மிருகத்தனமாக தாக்கியுள்ளனர். மேலும், அவரது கண்களைத் துணியால் கட்டி, அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்துள்ளனர்.

மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த போலிசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்துள்ளனர்.

அவர் ரூர்கெலா சிறையில் 6 மாதங்கள் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது ஜார்க்கண்டடில் உள்ள சாய்பாசா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறை நிர்வாகத்தினர் படிப்பதற்கு அவருக்கு இதழ்களோ, புத்தகங்களோ கொடுக்க மறுத்து வருகின்றனர். மேலும் எழுதுவதற்கு பேனாவோ, தாளோ கூட கொடுக்க மறுத்துள்ளனர். கடந்த 2007 ஜூலை 7-அன்று அவர் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்திலும் பிணை கிடைத்துள்ளது. ஆனால், சிறையிலிருந்து வெளியே வந்த அவரை சிறை வாசலிலேயே போலிசார் மேலும் பல்வேறு பொய் வழக்குகளில் கைது செய்துள்ளனர்.

ஷிலா திதி ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் தன்னம்பிக்கையும் கொள்கைப்பற்றும் மிகுந்தவர். சமூகத்தில் அடிமைத்தனத்தில் உழன்று கொண்டிருக்கும் பெண்களுக்கு ஆதரவாக, அவர்களின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். காலம் காலமாக நிலவிவரும் பழக்க வழக்கங்கள், மரபுகள் பெண்களை இரண்டாந்தார குடிமக்களாகவே வைத்துள்ளதை உணர்ந்து அதற்கு எதிராக செயல்பட்டு வருபவர்.

இதன் விளைவே அவர் பெண்களின் பங்கேற்புடன் “நரி முக்தி சங்” என்ற அமைப்பை நிறுவினார். காலப் போக்கில் இந்த அமைப்பு வலுவானதாக மாறியது. இதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் உறுப்பினராகி, தங்கள் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு பெற்றுள்ளனர். “நரி முக்தி சங்” பெண்கள் மீதான சுரண்டல், ஆதிக்கம், பாகுபாடு போன்ற ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்த்துப் போராடி வருகிறது. இந்த அமைப்பினால் நூற்றுக்கணக்கானப் பெண்கள் கல்வியறிவு பெற்று முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இதற்கு ஷிலா திதியின் அயராத உழைப்பு, சமரசமற்ற போராட்டம் ஆகியவையே காரணம். மேலும், அவர் அரச வன்முறைக்கு எதிராகவும் போராடினார். பல்வேறு பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு வாடும் ஆயிரக்கணக்கான ஆதிவாசி ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு உறுதுணையாக, உற்ற தோழியாக இருந்து, அவர்களின் விடுதலைக்குப் பாடுபட்டுக் கொண்டிருந்தவர். நசுக்கப்பட்ட வகுப்பான ஆதிவாசி சமூகத்திலிருந்து மக்கள் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மூத்த பெண் விடுதலைப் போராளி ஷிலா திதி. அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த கொடிய நிலைக்குக் காரணமான அரசையும், அதன் ஏவலாளியான போலிசையும் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

இந்நிலையில், ஷிலா திதிக்கு நீதிக் கிடைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

•ஷிலா திதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
•அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
•பெண்கள் விடுதலைக்காகப் போராடியவர் என்ற அடிப்படையில்,சிறையில் அவருக்கு “அரசியல் சிறைவாசி” என்ற தகுதி அளிக்கப்பட வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்திடும் வகையில் கீழ்காணும் முகவரிக்குள் சென்று கையெழுத்திட வேண்டுகிறோம்.

கையெழுத்திட கிளிக் செய்யவும்

மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய பெண்கள் ஆணையம் ஆகியவற்றுக்கும் மனு அனுப்ப வேண்டுகிறோம்.

The Chairperson,
National Human Rights Commission (NHRC),
Faridcot House, Copernicus Marg,
New Delhi – 110 001.

Fax: 011-23385368.
Mobile: 98102 98900.
E-Mail: covdnhrc@nic.in


The Chairperson,
National Commisson for Women,
4, Deen Dayal Upadhayaya Marg,
New Delhi – 110 002.

Phone: 011-23237166,23236988.
Fax: 011-23236154.
Complaint Cell: 011-23219750.
E-Mail: ncw@nic.in

Friday, September 14, 2007

பழ.நெடுமாறன் மீது தமிழகப் போலிசார் அத்துமீறல் - கண்டனம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 14-09-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிப்பதன் மூலம் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை அரசு கொழும்பு தலைநகரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ9 நெடுஞ்சாலையை மூடியதின் விளைவாக அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள்கூட கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர். இதையொட்டி, தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் ரூ.1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள் சேகரித்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். ஆனால், இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. தமிழக அரசும் அனுமதி பெற்றுதர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 12-09-2007 அன்று, சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல முயற்சித்த போது, தமிழகப் போலிசார் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை நாகப்பட்டினம் கடற்கரையில் கைது செய்தனர். இந்நிலையில், ஈழத்தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்கும் வரை பழ.நெடுமாறன் சென்னையில் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தோடு நேற்றைய தினம் (13-09-2007) உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்துப் போட்டு, அத்துமீறி நடந்துள்ளனர். இதனைப் படம்பிடித்த ஒரு தனியார் தொலைக்காட்சி புகைப்படக்காரரை தாக்கியுள்ளனர். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறன் கையைப் பிடித்து இழுத்து அடக்குமுறையை ஏவியுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

பழ.நெடுமாறன் அவர்கள், தமிழக முதல்வரால் “நேருவின் மகளே” என்று வர்ணிக்கப்பட்ட இந்திரா காந்தியால் “என் மகன் நெடுமாறன்” என்று அழைக்கப்பட்டவர். பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற சீடராவார். கன்னட நடிகர் இராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட போது, கடும் நெருக்கடியில் அப்போதைய தி.மு.க. அரசு திணறிய போது, தன் உடல்நிலையைப் பற்றிக்கூட கவலைப்படாமல் காட்டிற்குச் சென்று நடிகர் இராஜ்குமாரை மீட்டவர். தமிழ், தமிழர் நலனுக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்.

இதுபோன்று பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான பழ.நெடுமாறன் அவர்களிடம் தமிழகப் போலிசார் அத்துமீறி நடந்ததை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வேடிக்கைப் பார்ப்பது அழகல்ல. உடனடியாக இந்த அத்துமீறலில் ஈடுபட்ட போலிசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமேனக் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்க இந்திய, தமிழக அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். ஈழத் தமிழர்கள் துயர் துடைக்க தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு குரல் எழுப்ப வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

செய்தி வெளியிட்டுள்ள இதழ்கள்:

மாலை மலர், தமிழ் முரசு, தினமணி, தினகரன், தினத்தந்தி.

Thursday, September 13, 2007

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் பழ.நெடுமாறன் மீது போலிசார் அடக்குமுறை-பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்-பதற்றம்

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் இன்று (13-09-2007) வியாழக்கிழமை சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.

அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் பழ.நெடுமாறன் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை இன்று காலையில் தொடங்கினார். அப்போது அந்த வளாகத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்த தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டப் பந்தலைப் பிரித்துப் போட்டு, இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தக் கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் மூத்த தலைவரான பழ.நெடுமாறனின் கையைப் பிடித்து இழுத்துள்ளனர். "இது எங்களுக்குச் சொந்தமான இடம். இங்கே உண்ணாவிரதம் இருப்பதை யாரும் தடுக்க முடியாது" என்று அங்கிருந்தவர்கள் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைப் படம் பிடித்த "சன்" தொலைக்காட்சி உள்ளிட்ட பத்திரிகைத் துறையினரைப் போலிசார் தாக்கியுள்ளனர். இதனால் காவல்துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே அங்கு மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து போலிசார் வெளியேறினர்.

சென்னையில் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை பழ.நெடுமாறன் மெற்கொண்டதைத் தொடர்ந்து, அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் செயலாளர் தியாகு, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், தமிழக அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி, சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் அங்கு திரண்டுள்ளனர். போலிசாரின் அடக்குமுறையை அனைவரும் கண்டித்துள்ளனர்.

பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருக்கும் பகுதிக்குள் செல்ல செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரையும் போலிசார் அனுமதிக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் வளாகத்திற்கு வெளியே போலிசார் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. செய்தியறிந்து தமிழகம் முழுவதுமுள்ள தமிழ் உணர்வாளர்கள் சென்னையை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.

Wednesday, September 12, 2007

"எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்துப் போராடும்" - பழ.நெடுமாறன்.

12-09-2007: இலங்கையில் வாடும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள் படகு மூலம் எடுத்துச் செல்ல முயன்ற தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களைத் தமிழகப் போலிசார் கைது செய்து நாகை அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

அப்போது பழ.நெடுமாறன் அளித்த பேட்டி:

ஈழத் தமிழர்களுக்கு மனித நேய அடிப்படையில் திரட்டி வைத்திருந்த உதவிப் பொருட்கள் மருந்து, உணவுப் பொருட்கள் அனுப்புவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது.

பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு நாங்கள் திரட்டி வைத்திருந்த பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிச் செல்ல படகுகளைத் தயார் செய்து வைத்திருந்தோம். மாநில அரசு படகு தரக் கூடாது என மீனவர்களை மிரட்டியுள்ளது. இதனால் யாரும் படகு தரவில்லை. இது எங்களுடையப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். அதனால் எங்கள் குழு உடனடியாக கூடிப் பேசி முடிவெடுத்து, இன்று முதல் நான் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பது என்றும், மற்றவர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது என்றும் முடிவு செய்துள்ளோம். அதன்படி போராட்டத்தைத் தொடர்கிறோம்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்து போராட்டத்தை நடத்தும்.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இலங்கைக்குப் படகுமூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல முயன்ற பழ.நெடுமாறன் கைது

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் போர் நடந்து வருவதைத் தொடர்ந்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் உணவு, மருந்து கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் செயல்படும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு தமிழகமெங்கும் ரூ.1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள் திரட்டினர். அதனை யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பி வைக்க அனுமதி கோரினர். ஆனால், அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதனிடையே, பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் உணவு, மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தினர். அதன்பின்னும், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நாகப்பட்டினம், இராமேசுவரம் ஆகிய பகுதிகளின் கடல் வழியாக படகு மூலம் சேகரித்த உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல தியாகப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இதன்படி, இரண்டு குழுவினர் 07-09-2007 முதல் 11-09-2007 வரை பிரச்சாரம் மேற்கொண்டனர். திருச்சியிலிருந்து நாகை வரையிலும், மதுரையிலிருந்து இராமேசுவரம் வரையிலும் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் ஏராளமான வாகனங்களில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

இதன்படி, 12-09-2007 அன்று காலை 10 மணியளவில் பழ.நெடுமாறன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு இயக்கத்தினர் உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுடன் நாகப்பட்டினம் கடற்கரை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்றனர். அப்போது, மீனவர்களிடம் போலிசார் படகுகள் கொடுக்கக் கூடாது என மிரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பழ.நெடுமாறன், நாகை கடற்கரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து அமர்ந்து கொண்டார். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

செய்வதறியாது தவித்த போலிசார் பின்னர் பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நாகை அருகேயுள்ள காடம்பாடி காவலர் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதனிடையே, பழ.நெடுமாறன் “ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்துகள் அனுப்ப மத்திய, மாநில அரசுகள் தடை போடுகின்றன. என்ன விலைக் கொடுத்தாவது எடுத்த செயலை முடிப்போம். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்” என அறிவித்துள்ளார். அவரோடு கைது செய்யப்பட்ட அனைவரும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழக அரசும் காவல்துறையும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

பழ.நெடுமாறன் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதத்தால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sunday, September 09, 2007

பொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி


ஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. மக்களுக்கு ஜனநாயகத்தின் தூண்கள் மீதான நம்பிக்கையைக் குலைத்துவிடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் அருகேயுள்ள உப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சுஜாதா. 12 வயது. 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. அதே பள்ளியில் படிக்கும் கார்மேகம் என்ற மாணவன் சுஜாதா மீது காதல் (?) கொண்டு, அவரை 6.4.1997 அன்று கடத்திச் சென்றுள்ளான். இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருச்சியிலுள்ள தன் நண்பர் வீட்டில் 18 நாட்கள் தங்கிய இருவரும், பின்னர் புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளனர். அங்கு யாருடைய ஆதரவும் இல்லாததால், ஒரு நாள் இரவு முழுவதும் இரயில் நிலையத்தில் தங்கியுள்ளனர். அப்போது, சுஜாதாவை அங்கேயே விட்டுவிட்டு கார்மேகம் தப்பிச் சென்றுள்ளார். அதன்பின் சுஜாதா என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இதனிடையே, சுஜாதாவின் தந்தை சேவகன் தொண்டி காவல் நிலையத்தில் தன் மகள் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அப்புகார் மீது 26.4.1997 அன்று முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, போலிசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பின்னர், புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகியோர் மீது சுஜாதாவை பாலியல் வன்கொடுமைச் செய்து, கொலைச் செய்ததாகவும், கார்மேகம் கடத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில், கிருஷ்ணமூர்த்தி ஆட்டோ ஓட்டுநர். அவரது தந்தை ஒரு முன்னாள் இராணுவ வீரர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, கிருஷ்ணமூர்த்தியை 24.01.1998 அன்று போலிசார் அழைத்துச் சென்றுள்ளனர். தொண்டி காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன், காவல் ஆய்வாளர்கள் மாதவன், பாஸ்கரன் உள்ளிட்ட போலிசாரால் பல நாட்கள் சட்ட விரோதக் காவலில் வைத்து, கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவரைத் தலைக்கீழாகத் தொங்கவிட்டு அடித்துள்ளனர். இதனால் அவரது வலது முட்டி எலும்பு முறிந்துள்ளது. பின், அவரிடம் சுஜாதாவைக் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலைச் செய்து, உடலை சுடுகாட்டில் எரித்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும், சுஜாதாவின் உடலை எரிக்க கொண்டு சென்ற 5 லிட்டர் பிளாஸ்டிக் பெட்ரோல் கேன் ஒன்றையும் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர், கிருஷ்ணமூர்த்தியை திருவாடனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை நடுவண் சிறையில் அடைத்துள்ளனர். 90 நாட்களுக்கு மேல் சிறையிலிருந்த அவர் பின்னர் பிணையில் வெளியே வந்துள்ளார். இதே வழக்கில் சென்னையில் மீன் வியாபாரம் செய்துகொண்டிருந்த பழனியை ஒன்றரை ஆண்டு கழித்துப் போலிசார் கைது செய்தனர்.

மேலும், கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன் இராமச்சந்திரனையும் போலிசார் கடுமையாக சித்தரவதை செய்துள்ளனர். அவரையும் தலைகீழாகத் தொங்கவிட்டு உடம்பெல்லாம் அடித்துள்ளனர். 10 நாட்கள் கழித்து அவரைப் போலிசார் வெளியே விட்டுள்ளனர். வெளியேவந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளார். இவர் புதுக்கோட்டையிலுள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இதுபோல, சட்டவிரோதக் காவலில் பலரையும் வைத்து போலிசார் விசாரித்துள்ளனர்.

இதனிடையே, போலிசாரின் இந்த நடவடிக்கை மீது நம்பிக்கை இழந்த சேவகன், தன் மகள் காணாமல் போனது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்ப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்தமனுவை விசாரித்த நீதிமன்றம், 26.06.1998 அன்று சுஜாதா காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாராணைக்கு மாற்றி உத்திரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. போலிசாரும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், தொண்டி போலிசார் வழியிலேயே வழக்கைக் கொண்டு சென்றுள்ளனர். கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகியோர் மீது சுஜாதாவைக் பாலியல் வன்கொடுமைச் செய்து கொலைச் செய்ததாககவும், கார்மேகம் கடத்தியதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டு காலமாக நடந்து வருகிறது.

வழக்குச் செலவுக்காக கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான இரண்டு வீட்டு மனைகளை ரூபாய் 2 இலட்சத்து 75 ஆயிரத்திற்கும், விவசாய நிலத்தை ரூபாய் 50 ஆயிரத்திற்கும் விற்றுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை முடியும் நிலையில் 11.10.2006 அன்று மதுரை நீதிமன்றத்தில், தீடீரென தன் கணவர் மற்றும் கைக் குழந்தையுடன் ஆஜரானார் காவல்துறையால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட சுஜாதா. காவல்துறையினரும், நீதித்துறையினரும் வெட்கித் தலைகுனிந்தனர்.

அப்பாவிகளான கிருஷ்ணமூர்த்தியும் பழனியும் போலிசின் அலட்சியத்தால் குற்றவாளிகளாக்கப்பட்டு, 9 ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைந்ததோடு, ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக பழியையும் சுமந்துள்ளனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நவம்பர் 2006-இல் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகியோரை சட்ட விரோதக் காவலில் சித்திரவதை செய்து, பொய் வழக்குப் போட்ட போலிசார் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு 22-08-2007 அன்று நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனித உரிமைக்காகப் பாடுபடும் மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், சகாய பிலோமின்ராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆஜராகி வாதாடினர். சுஜாதா தன் குழந்தையுடன் ஆஜரானார்.

அப்போது அரசு வழக்கறிஞர் “இந்தப் பெண் சுஜாதா அல்ல, இந்தப் பெண் நாடகமாடுகிறார்'' என்று தெரிவித்தார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, “இவர் உங்கள் மகள் என்று எப்படி உறுதி செய்தீர்கள்“ என்று சுஜாதாவின் தந்தை சேவகனிடம் கேட்டார். “என் மகளுக்கு மாடு முட்டி காயம் இருக்கும் அதை வைத்து கண்டுபிடித்தேன்“ என்றார். பிறகு இந்த வழக்கை விசாரித்த ஆய்வாளர் மாதவனிடம் (தற்போது காவல் துணைக் கண்காணிப்பாளர்) “இவர் சுஜாதா என்று எப்படி உறுதி செய்தீர்கள்“ என்று நீதிபதி கேட்டார். அதற்கு அவர் “விசாரணையில் இந்தப் பெண் சுஜாதா என்று உறுதியானது“ என்று தெரிவித்தார். பின்பு சுஜாதாவிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டார். சுஜாதா நடந்த சம்பவத்தை விளக்கியதோடு, “புதுக்கோட்டையில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தேன். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இரண்டு பேருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது“ என்று கூறினார்.

இறுதியில் நீதிபதி ராஜசூர்யா, “இந்தப் பெண் சுஜாதாதானா என்பதை உறுதி செய்ய மரபணு சோதனை நடத்திட வேண்டும். அந்த அறிக்கையை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்“ என உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி “இந்த வழக்கால் எங்கள் குடும்பமே பாதிக்கப்பட்டது. வழக்குக்குப் பல ஆயிரம் செலவு செய்திருக்கிறோம். எங்களுடைய சொத்தெல்லாம் விற்றோம். 9 ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைந்திருக்கிறேன். இதையெல்லாம்விட அப்பாவியான என்னை, ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலிசும், இந்த சமுதாயமும் குற்றம் சுமத்தியதைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பதால் இந்த உலகமே இதை நம்பியது. ஆட்டோ ஓட்டுநர் அனைவரும் குற்றவாளிகளா?“ என்று முகத்தில் அறைந்ததுபோல் கேட்டார்.

எந்த தவறும் செய்யாத கிருஷ்ணமூர்த்தியும் பழனியும் தங்கள் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கவும், நீதிக்காகவும் வானுயர்ந்து நிற்கும் மதுரை உயர்நீதிமன்ற நெடிய படிகளை இன்றும் ஏறிக் கொண்டிருக்கின்றனர்...

''உரியதை நிரூபிக்க
அன்று எவ்வளவோ
மன்றாடிய என் சொற்கள்
இறுதியில் தன்
உதிரத்தை இழந்தது

அன்று என் சொற்கள்
மெளனமாக இருந்திருக்கலாம்''

- மெய்யருள்