ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்பும் நடவடிக்கையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மீது பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்காததைக் கண்டித்து, பழ.நெடுமாறன் 12-09-2007 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
முதல்வர் கருணாநி்தியின் உறுதிமொழியோடு பழ.நெடுமாறன் அவர்களைச் சந்தித்த பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வலியுறுத்தினார். அதனை ஏற்று பழ.நெடுமாறன் 15-09-2007 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பழ.நெடுமாறன் கூறியதாவது:
"இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி பெற்று விட்டோம். ஆனால், இந்திய அரசு 7 மாதங்களாக அதை அனுப்ப மறுப்பு தெரிவித்து வந்தது. அதை எதிர்த்துதான் எனது உண்ணாவிரதம்.
நான் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது தமிழக அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள் எனது போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் என் அருகிலேயே அமர்ந்திருந்தனர்.
பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு முதல்வரிடம் பேசும்போது, இந்த பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என்று அவர் உறுதிமொழி அளித்துள்ளார். அதை நிறைவேற்ற தானும் முயற்சி எடுப்பதாக மருத்துவர் இராமதாசு கூறியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்புவதில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி வலியுறுத்துவார்."
இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட பழ.நெடுமாறன் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சி்கிச்சைப் பெற்று வருகிறார். சி்கிச்சை முடிந்து நாளை (17-09-2007) வீடு திரும்புவார் என்று தெரிகிறது. பழ.நெடுமாறன் அவர்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தன் காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு நாட்களாக நடந்த போராட்டத்தினால் ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப மத்திய அரசு இன்னும் சில நாட்களில் அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது.
1 comment:
தமிழகம் இந்தியாவின் அங்கமாக இருப்பதனால், தமிழகத்தின் பெரும்பான்மையான தமிழ் மக்களினதும்,மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழக அரசின் உணர்வுகளுக்கும் இந்திய நடுவண் அரசு மதிப்பளிக்கும் என நம்புகிறேன்.
பழ.நெடுமாறன் ஐயா, அண்ணன் வைகோ, மருத்துவர் இராமதாசு ஐயா மற்றும் முதல்வர் கருணாநிதி போன்றோரின் நடவடிக்கைகள் மெச்சத்தக்கது.
Post a Comment