Sunday, March 23, 2008
நாம் ஒன்று சேர்வதை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் - கோவை இராமகிருட்டிணன் பேச்சு.
சாதி ஒழிப்பு கூட்டியக்கம் கோபி நம்பியூரிலே மாரியப்பனுக்கு திருமண மண்டபம் தர மறுத்ததில் தொடங்கிய இந்த கூட்டியக்கம் பேரெழுச்சியோடு இன்றைக்கு சாளரப்பட்டி அருந்ததிய மக்களுக்காகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை இங்கு நடத்துகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்திலே தலைவர் அதியமான் சொன்னது போல தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா தலித் இயக்கங்களையும், சுய மரியாதை இயக்கங்களையும் மனித உரிமை இயக்கங்களையும் ஒன்றிணைத்து இன்றைக்கு ஒன்றுபட்டு விட்டோம்; ஒன்றுபட்டு விட்டோம் என்கிற குரலோடு இங்கே கூடியிருக்கிறோம்.
சாளரப்பட்டிக் கலவரம் தாக்குதல் கொடூரமான நிலையில் நடந்திருக்கின்றது. அந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் அங்கே ஆதிக்கச் சாதியினராக இருப்பவர்கள் பத்து தேனீர் கடைகளிலே தனிக் குவளைகள் இருக்கின்றதென்று நீண்டகாலமாக காவல்துறைக்கு புகார் செய்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது அவர்கள் பத்துக் கடைகளையும் மூடி விடுவோம் என்று மூடி விட்ட நிலையிலே இரண்டு கடைகள் மட்டும் அதிலே அங்கு இருக்கக்கூடிய ஆதிக்க சாதியிலே வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் இரண்டு கடைகளை திறந்தபோது இன்றைக்குத் தாக்குதல் நடத்திய எட்டு கடைக்காரர்களும் அந்த ஊர் மக்களும், ஆதிக்கச் சாதியினரும் அந்த இரண்டு தேனீர் கடைகளையும் தாக்கியிருக்கிறார்கள்.
அந்த தாக்குதல் நடத்திய போது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்குமேயானால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திலே அன்றைக்கே அப்போதே நடவடிக்கை எடுத்திருக்குமானால் இவ்வளவு பெரிய, நூற்றுக்கணக்கான அருந்ததிய மக்கள் - 80 வயது வேலம்மாள் முதல் 5 வயது சிறுவன் வரைக்கும் தாக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். அப்போதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதல் நடந்த போதும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதை நான் சொல்லவில்லை. காவல்துறையே பத்திரிகைக்கு செய்தி கொடுத்து இருக்கிறது. நாங்கள் குறைவானவர்கள் இருந்தோம், ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லுகிறார்கள் என்றால், அப்போது காவல்துறை ஒப்புக் கொள்கிறது. அங்கு தாக்குதல் நடந்தது உண்மை. நாங்கள் அங்கு ஒன்றும் செய்ய முடியவில்லையென்று சொல்கின்றார்கள். ஏன் இவர்கள் 20 பேர் இருந்தால், அங்கே தாக்குதலை சமாளிக்க முடியாதா? டி.எஸ்.பி.க்கு எதற்காக துப்பாக்கி தரப்பட்டிருக்கிறது? காவல்துறை ஆய்வாளருக்கு எதற்காக துப்பாக்கி தரப்பட்டிருக்கிறது? ஒரு சந்தேகம். ஏன் என்று சொன்னால், தமிழ்நாட்டில் அதுவும் கோவை மாவட்ட மக்களுக்கு மிகுந்த சந்தேகம் வந்துவிட்டது. இனி அந்தத் துப்பாக்கிகள் அவர்களுக்கு தரப்படுமா? அல்லது சந்தனக் கடத்தல்காரர்கள் கத்தியைக் காட்டிய உடனே தரக்கூடிய காவல்துறை ஆயிற்றே! இவர்களுக்கு எதற்குத் துப்பாக்கி என்று பறித்துக் கொள்வார்களா என்ற நிலை இருக்கிறது. அங்கே 20 பேர் பார்த்துக் கொண்டு இருந்தோம் என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
அதே நேரத்திலே பொய்யான வழக்குகள் ஆதித் தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் மீது. என்னவென்று கேட்டால் கோயிலுக்குள் நுழைய முயன்றதால் என்று சொல்லிப் பொய்யாக பதிவுச் செய்து, இந்தத் தாக்குதல் தொடங்கியதற்கு இவர்கள் காரணம் என்பதுபோல ஒரு பொய்யான காரணத்தை காவல்துறையே உருவாக்கி பத்திரிகையிலே செய்திகள் தருகிறார்கள்.
அதோடு மட்டுமல்ல, இங்கேயுள்ள காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், அவர் வீட்டிலே, அவர் சமூகத்திலே அவர் என்ன சாதியினராக வேண்டுமானாலும் இருக்கலாம். காவல்துறையிலேயும் அவர்கள் வீட்டிலே என்ன சாதியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவர்கள் காக்கிச் சட்டை போட்ட பின்னால் அவர்கள் மக்கள் நலப் பணியாளர்கள். அவர்களுக்குள் சாதி இருக்கக் கூடாது. ஆனால், அந்த துணைக் கண்காணிப்பாளர், நான் இந்த சாதி தான் என்று குறிப்பிட்டுச் சொல்லி, இங்கே தன்னை அடையாளப் படுத்துகிறார். அதனுடைய விளைவு, இதே உடுமலையிலேயே அந்த துணைக் கண்காணிப்பாளர் ஈசுவரன் அவர்கள் வந்த பின்னால் துங்காவி, அனுப்பட்டி, வல்லக்குண்டாபுரம், கொங்கல் நகரம், சாளையூர், தும்பலப்பட்டி - ஐந்து கிராமங்களிலே இதே போல தாக்குதல்கள் தலித்துக்கள் மீது நடந்திருக்கிறது. அந்த அய்ந்து கிராம நிகழ்ச்சிகளிலும் இதே நிலையை அவர் கையில் எடுத்து நியாயம் வழங்கவில்லை. தலித்துக்களை முடக்கி அவர் உயர்சாதியினருக்கு துணைப் போயிருக்கின்றார். ஆகவே, அரசு உடனடியாக அந்த துணைக் கண்காணிப்பாளரை இங்கிருந்து மாற்ற வேண்டும். இன்னும் சொல்லப் போனால், எந்த ஆதிக்கச் சாதிகள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த பகுதியிலே அவர்கள் சார்ந்த அதிகாரிகளை நியமிக்கக் கூடாது. நியமித்தால் அவர்கள் சாதிக்குத்தான் துணைப் போகின்றார்கள். அதனால் தான் இந்த முழக்கத்திலே அதை மய்யமாக வைக்கப்பட்டது.
அதேபோல, அந்த பள்ளியிலே தலைமையாசிரியர் - பள்ளியைப் போய் தாக்கப் போகின்றார்கள். என்ன கொடுமை என்று சொன்னால், சாதிவெறி தாண்டவம், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை எவ்வளவு கூர்மைப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், அந்த சாளரப்பட்டிப் பள்ளியிலே தாக்குதலுக்குப் போனவர்கள், அதே பள்ளியிலே ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற தலித் மாணவனை அடிக்கப் போயிருக்கின்றார்கள். பேனாவை கத்தியாகப் பயன்படுத்திக் கொண்டு, “உன்னையெல்லாம் இதிலே குத்த வேண்டும்” என்று சொல்லி தாக்குதலுக்குப் போயிருக்கிறார்கள். பத்து வயது, பனிரெண்டு வயது சிறுவர்களெல்லாம், அவர்களுக்கு உண்மையாக உள்ளத்துக்குள் இருந்திருக்காது - பெரியவர்கள் செய்வதைப் பார்த்து அவர்கள் செய்திருக்க முடியும். ஆனால், அங்கு என்ன நிகழ்ந்திருக்கிறது என்று சொன்னால், தலைமையாசிரியர் அங்கே இவர்கள் தாக்கப் போகின்றபோது இப்போது வேண்டாம், நான் மணியடித்து விடுகிறேன்; அவர்கள் வெளியே வந்த பின்னால் தாக்குதல் நடத்துங்கள் என்று வழிவகை செய்திருக்கிறார.
இப்படி பள்ளிக்கூடம் தாக்கப்பட்டிருக்கிறது. அவர் (தலைமையாசிரியர்) அந்த குழந்தைகளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். அந்தப் பள்ளியிலே நூற்றுக்கணக்கான தலித் மாணவர்கள் இன்றைக்கு வரைக்கும் அச்ச உணர்வோடு படிக்க முடியாத, படிக்கப் போக முடியாத சூழல் இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு நாம் இங்கே கடலென கூடியிருக்கின்ற அனைத்து அமைப்புகளும் ஒன்றுபட்டு இருக்கிறோம். பெரிய மகிழ்ச்சி. நாம் ஒன்று சேருவதை யார் தீர்மானிக்கிறார்கள் என்றால் எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள். இந்த ஒற்றுமை தமிழ்நாடு முழுவதும் மலர வேண்டும்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினார்; எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டேன் என்று. இப்போது நாம் பாடுவோம். எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தலித்துகள் ஒன்றாதல் கண்டே என்று நாம் புதிய கவிதை பாட வேண்டும். இந்த ஒற்றுமை மலர வேண்டும். சாளரப்பட்டில் தாக்க வந்த அந்த ஆதிக்கச் சாதிகள் யாரென்று பார்க்கவில்லை. அத்தனை பேரும் திரண்டு வந்தார்கள். நாம் நம் மக்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? அதற்கு இந்த ஒற்றுமை வேண்டும். ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!
பெரியார் இயக்கத்தின் நோக்கம் - இதுதான்!
இன்றைக்கு வடக்கும் மேற்கும் இணைந்திருக்கிறது. பிரிந்திருந்த நம்மையெல்லாம் ஆதிக்கச் சாதி எதிரிகள் ஒன்றுபடுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆயிரங்கோடி நன்றிகள். இதற்காக 80 வயது பாட்டி வேலம்மாள் இரத்தம் சிந்தியிருக்கின்றார். 5 வயது விக்னேஷ் இரத்தம் சிந்தியிருக்கின்றார். அவர்கள் சிந்திய இரத்தம் நம்மை இன்றைக்கு ஒன்றுபடுத்தியிருக்கின்றது. ஒற்றுமையில் பெரியார் கண்ட, பெரியார் இயக்கத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது.
நன்றி: பெரியார் முழக்கம்.
புதுச்சேரி: ஊழல் அமைச்சர்கள் சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்துக் கொள்ளக் கூடாது!
நீதிமன்ற உத்தரவுப்படி ஊழல் வழக்குப் பதியப்பட்டுள்ள அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோரை உடனடியாக பதவியை விட்டு நீக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
வரும் 25-ந் தேதி முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க இருக்கிற நிலையில், ஊழல் அமைச்சர்கள் இக்கூட்டத் தொடரில் கலந்துக் கொள்வது என்பது சட்டமன்ற ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் முரணானது. சட்டமன்ற கூட்டத் தொடருக்கு முன்னாள் ஊழல் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்து சட்டமன்ற மாண்பைக் காப்பாற்ற வேண்டும்.
ஊழல் அமைச்சர்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படிதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் அமைச்சர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த புதுச்சேரி போலீசை அனைவரும் பாராட்டுகின்றனர். ஆனால், அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் வழக்குப் போட்ட போலீஸ் மீது குறை சொல்வதும், ஊழலுக்கு வெளிப்படையாக துணைப் போவதும், குற்றத்தை நியாயப்படுத்துவதும் கண்டனத்திற்குரியது.
அண்மைக் காலமாக சில அமைச்சர்கள் சட்டத்திற்குப் புறம்பாகவும், சட்டமன்ற மரபுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளாட்சித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிப் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட்டுள்ளன.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியில் பேசியுள்ளது அவர் ஏற்றுக் கொண்ட ரகசியக் காப்புப் பிரமாணத்திற்கு எதிரானது. இது சட்டப்படி குற்றமாகும். இது குறித்து புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர், செயலாளர் ஆகியோரிடம் விரிவான புகார் மனு அளிக்க உள்ளோம்.
புதுச்சேரி அரசு ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆதரவாக இருப்பது குறித்து ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டவர்களுக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம்.
ஊழல் அமைச்சர்களுக்கு புதுச்சேரி அரசு ஆதரவாக இருப்பதால், இந்த அரசின் கட்டுபாட்டில் இருக்கும் போலீசார் மேற்கொள்ளும் விசாரணைக்குப் பல்வேறு வகையில் குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் வல்சராஜ் தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி போலீசார், அரசு வழக்கறிஞர் உரிய முறையில் ஆதாரங்களை முன் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது.
எனவே, அமைச்சர் வல்சராஜ், ஷாஜகான் மீதான ஊழல் வழக்கை உடனடியாக சி.பி.ஐ. விசாரணக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரி அமைச்சர் வல்சராஜ் பதவி விலக கோரி சட்டசபை முற்றுகை - 500 பேர் கைது!
புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி 13-03-2008 காலை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம், மாகேயில் கூட்டுறவுத் தகவல் தொழில் நுட்ப மையத்திற்கு நிலம் வாங்கியதில் நடந்த ஊழல், முறைகேடுகள் தொடர்பாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் வழக்குப் புலன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சர் இ.வல்சராஜை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், ஜனநாயக முன்னேற்றக் கழக அமைப்பாளர் பா.அழகானந்தம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, தமிழர் திராவிடர் கழகத் தலைவர் மு.அ.குப்புசாமி உள்ளிட்ட கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்துக் கொண்ட 150 பெண்கள் உட்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
Saturday, March 08, 2008
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள புதுச்சேரி அமைச்சர் வல்சராஜை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், ஜனநாயக முன்னேற்றக் கழக அமைப்பாளர் பா.அழகானந்தம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, தமிழர் திராவிடர் கழகத் தலைவர் மு.அ.குப்புசாமி உள்ளிட்ட கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் 07-03-2008 அன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு அளித்த மனு:
புதுச்சேரி மாநிலம், மாகேயில் கூட்டுறவுத் தகவல் தொழில் நுட்ப மையத்திற்கு நிலம் வாங்கியதில் நடந்த ஊழல், முறைகேடுகள் தொடர்பாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் வழக்குப் புலன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் இ.வல்சராஜ் தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிப்பது என்பது வழக்கு விசாரணைக்குப் பல்வேறு வகையில் குந்தகம் விளைவிக்கும் என அஞ்சுகிறோம். அவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கு ஆவணங்களைத் திருத்தவும், சாட்சிகளைக் கலைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடைபெறாது. தார்மீக அடிப்படையிலும் அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.
எனவே, நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் இ.வல்சராஜ் தொடர்ந்து பதவியில் நீடிப்பதால், புதுச்சேரி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையின் விசாரணை முறையாகவும், நேர்மையாகவும் நடக்காது எனக் கருதுகிறோம்.
மேலும், ஊழல் அமைச்சர் இ.வல்சராஜ் ஆதரவாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வி.நாராயணசாமியும், சில அமைச்சர்களும் வெளிப்படையாகவே ஆதரவளிப்பதோடு, ஊழலுக்குத் துணைப் போவதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
எனவே, இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையால் வழக்குப் பதியப்பட்டு, வழக்கு விசாரணை நடந்துக் கொண்டிருக்கிற நேரத்தில், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள அமைச்சர் இ.வல்சராஜ் நடத்தும் கூட்டங்களில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையைப் பொறுப்பில் வைத்திருக்கும் தலைமைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துக் கொள்வது ஏற்புடையதாக இல்லை. குற்றம்சாட்டப்பட்டவரும், புலன் விசாரணை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறைப் பொறுப்பு வகிக்கும் அதிகாரியும் ஒன்றாக ஒரே இடத்தில் கூடிப் பேசுவது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதனால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
எனவே, இதுபோன்ற கூட்டங்களில் தலைமைச் செயலர் மற்றும் உயரதிகாரிகள் கலந்துக் கொள்வதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஊழல் அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வரும் 13-03-2008 வியாழனன்று புதுச்சேரி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
Friday, March 07, 2008
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் - சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் பாடி வழிபடலாம் என்ற அரசின் உத்தரவை செயல்படுத்த தடையாக உள்ள தீட்சிதர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக கோயிலுக்குள் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமி மற்றும் மனித உரிமை அமைப்பினர் மீது போடப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
தமிழில் வழிபட வேண்டும் என கோரிக்கை எழுப்புவது என்பது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதின் அங்கம். இதை உணராமல் சில மதவாத கட்சிகள் கோயிலுக்குள் இயக்கங்களுக்கு என்ன வேலை என்று கேட்பது கண்டனத்திற்குரியது.
சிதம்பரம் கோயிலுக்குள் தீட்சிதர்கள் கொலை, பாலியல் விவகாரம் என தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட விரும்புகிறேன். (Crl. O.P. No. 27486 of 2006.)
கோயிலுக்குள் சிவனடியார் ஆறுமுகசாமி தேவாரம், திருவாசகம் பாடிய பின் தீட்சிதர்கள் சிற்றம்பல மேடை தீட்டுப்பட்டுவிட்டது எனக் கூறி தூய்மைப்படுத்தி பூஜை செய்துள்ளனர். இது ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே இழிவுபடுத்தும் காட்டுமிராண்டித்தனமான செயல்.
தீட்சிதர்களின் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.