Friday, March 07, 2008

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் - சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 05-03-2008 அன்று விடுத்த அறிக்கை:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் பாடி வழிபடலாம் என்ற அரசின் உத்தரவை செயல்படுத்த தடையாக உள்ள தீட்சிதர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக கோயிலுக்குள் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமி மற்றும் மனித உரிமை அமைப்பினர் மீது போடப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழில் வழிபட வேண்டும் என கோரிக்கை எழுப்புவது என்பது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதின் அங்கம். இதை உணராமல் சில மதவாத கட்சிகள் கோயிலுக்குள் இயக்கங்களுக்கு என்ன வேலை என்று கேட்பது கண்டனத்திற்குரியது.

சிதம்பரம் கோயிலுக்குள் தீட்சிதர்கள் கொலை, பாலியல் விவகாரம் என தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட விரும்புகிறேன். (Crl. O.P. No. 27486 of 2006.)

கோயிலுக்குள் சிவனடியார் ஆறுமுகசாமி தேவாரம், திருவாசகம் பாடிய பின் தீட்சிதர்கள் சிற்றம்பல மேடை தீட்டுப்பட்டுவிட்டது எனக் கூறி தூய்மைப்படுத்தி பூஜை செய்துள்ளனர். இது ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே இழிவுபடுத்தும் காட்டுமிராண்டித்தனமான செயல்.

தீட்சிதர்களின் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 comments:

TBCD said...

ஐயா,
இந்த தீட்டுக் கழித்தல், தீண்டாமைச் சட்டத்தின் கீழ் வருமா.

மனித இனத்தை இழிவு செய்த தீட்சிதர்களுக்கெதிரான, என் கண்டனங்களையும் இங்கே பதிகிறேன்.

Anonymous said...

அய்யா,

இப்படி எல்லாம் விபரீதமா எழுதினால், பேசினால் நீங்கள் மஞ்சத்துண்டு மாபியா கோஷ்டியின் அடிவருடி. தீவிரவாதி.

தீட்டு, ஆகமம் இதை எல்லாம் ஏத்துகிட்டாதான் நீங்க துவேஷம் இல்லாதவர்.