Sunday, June 29, 2008

புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது ஊழல் புகார்: தகவல் தர மறுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 24-06-2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கோரிய தகவல்களைத் தர மறுத்த தலைமைச் செயலக பொதுத் தகவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனாமில் தனியார் கேஸ் நிறுவனம் ஒன்றுக்கு சுற்றுலா துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அனுமதி பெற்றுத் தந்துள்ளார். இது குறித்து எதிர்க்கட்சிகள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ளன. மத்திய அரசுக்கும் புகார் மனுக்கள் அனுப்பியுள்ளன.

இந்நிலையில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி உரிய விசாரணை மேற்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டுமென தலைமைச் செயலர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஊழல் குற்ற்ச்சாட்டுகளை மூடிமறைக்க தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் முயற்சித்து வருவதாக தெரிகிறது.

ஊழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கோரியது குறித்த தகவல்களைத் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005’-ன் படி, தலைமைச் செயலக பொது தகவல் அதிகாரிக்கு (Public Information Officer) கடந்த 17-ந் தேதியன்று பதிவு அஞ்சல் மூலம் முறைப்படி விண்ணப்பித்து இருந்தோம்.

ஆனால், மேற்சொன்ன அதிகாரி விண்ணப்ப உறையை பிரித்துப் பார்த்துவிட்டு அந்த உறையை கடந்த 22-ந் தேதி திருப்பி அனுப்பியுள்ளார். இது தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

சட்டத்திற்குப் புறம்பான இந்த செயல் குறித்து தலைமைச் செயலரிடம் எழுத்து மூலம் புகார் செய்துள்ளோம். அதில், தகவல் தர மறுத்த பொதுத் தகவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளோம்.

மேலும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல், முறைகேடுகள் குறித்தும், புதுச்சேரி அரசு உயர் அதிகாரிகள் அதனை மூடிமறைப்பது பற்றியும் விரைவில் தில்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் மனு அளிக்க உள்ளோம்.

3 comments:

Anonymous said...

All I can say is nothing because your blog is not interesting to read.

Anonymous said...

மல்லாடியின் ஊழலை வெளிக்கொனற அல்லாடிபோகும் அரசும் ,தள்ளாடிதள்ளுபடி செய்ய உதவும் புதுச்சேரி அரசு உயர் அதிகாரிகள் தண்டிக்கப்படனும்.

Anonymous said...

திரு. அரங்கசாமி அவர்கள்
புதுச்சேரியை சுரண்டும் மல்லாடி கிருஷ்ணராவ், மாமா வல்சராஜ் ஆகியோர் மீது எப்போதுதான் நடவடிக்கை எடுப்பாருன்ன தெரியல...

அரங்கசாமிக்கு நல்ல நேரமா பார்த்து யாராவது சீக்கிரமா எடுத்துச் சொல்லுங்கப்பா...

கருவூலம் காலியாகப்போகுது...