ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் ரகளை செய்து கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் 05-11-2008 அன்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
போராடிய தமிழ் அமைப்பினர் மீது வழக்குப் போட உத்தரவிட்டதன் மூலம் தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், தமிழருக்கு எதிரானப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் உள்துறை அமைச்சர் வல்சராஜ் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
கடந்த 1-ஆம் நாளன்று முருங்கப்பாக்கத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் அமைதியாகப் போராடியவர்கள் மீது இளைஞர் காங்கிரஸ் பாண்டியன் தலைமையிலான கும்பல் தாக்குதல் நடத்தி, ரகளையில் ஈடுபட்டது. அங்கிருந்த போலீசாரையும் ஆபாசமாகப் பேசி தாக்க முற்பட்டது. இந்த சம்பவம் அனைத்தும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே நடந்தது. இச்சம்பவம் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு எந்தளவு சீர்கெட்டுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிகிறது.
சட்டத்திற்குப் புறம்பாக வன்முறையில் ஈடுபட்ட பாண்டியன் உள்ளிட்ட கும்பல் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த வன்முறையை தட்டிக் கேட்ட கட்சி, இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தவர்களை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க உள்துறை அமைச்சர் வல்சராஜ் தொலைபேசியில் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், வன்முறையில் ஈடுபட்ட பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பாண்டியனோடு உப்பளம் வெடிகுண்டு வழக்கிள்ள குற்றாவாளிகளும் இருந்துள்ளனர் என்பது பத்திரிகை மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள் மூலம் தெரிகிறது.
பாண்டியன் தலைமையிலான கும்பல் ஆளுநர் மாளிகை வாயிலிலும் தாராறு செய்துள்ளது. அப்போது பாண்டியன் புதுச்சேரியின் தலைமை நிர்வாகியான ஆளுநரை தரக்குறைவாகவும், தங்கள் தயவில் பதவிக்கு வந்தவர் என்றும் இழிவுபடுத்திப் பேசியுள்ளார். இந்த சம்பவம் நடந்த போது போலீசார் அருகிலிருந்து வேடிக்கைப் பார்த்துள்ளனர்.
குறிப்பாக தற்போதைய ஆளுநர் அவர்கள் போராட்ட குணம்மிக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை இழிவுபடுத்தியது ஒட்டுமொத்த அந்த சமூகத்தையே இழிவுப்படுத்தியதாக கருத வேண்டியுள்ளது. ஆளுநர் மாளிகைக்கு செல்வதற்குமுன் பாண்டியன் உள்துறை அமைச்சர் வல்சராஜ் அறையில் இருந்துள்ளார். இதனால், இதன் பின்னணியில் அமைச்சர் வல்சராஜ் செயல்படுகிறார் என குற்றம்சாட்டுகிறோம்.
திட்டமிட்டு உண்ணாவிரத்த்தில் கலவரம் செய்த பாண்டியன் உள்ளிட்டவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லையேல், மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.
அமைச்சர் வல்சராஜ் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. தமிழ் அமைப்பினர் மீது கடும் நெருக்கடியும், அடக்குமுறையும் ஏவப்படுகிறது. இது அவரது தமிழ் இன விரோதப் போக்கைக் காட்டுகிறது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பாண்டியன் போன்ற சமூகத்திற்கு விரோதாமான நபர்கள் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடக்குமுறையால் தமிழ் உணர்வையும், தமிழர்களையும் ஒடுக்கிவிட முடியாது என்பதை புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம். இந்த தமிழருக்கு எதிரான வன்முறைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் ஒன்று கூடிப் போராட்ட திட்டங்களை வகுக்க உள்ளோம். ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்களுக்கு புதுச்சேரி தமிழர்கள் ஆதரவு தர வேண்டுகிறோம்.
செய்தியாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள்:
சு.பாவாணன், அமைப்புச் செயலர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
அரசு.வணங்காமுடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரா.மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள், கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தங்க.கலைமாறன், தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி, வ.செல்வராஜ், பொறுப்புக் குழு உறுப்பினர், ம.தி.மு.க., இரா.வீராசாமி, துணைத் தலைவர், பெரியார் தி.க., சி.மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, ந.மு.தமிழ்மணி, அமைப்பளர், செந்தமிழர் இயக்கம்,
எஸ்.யூ.முத்து, தலைவர், பார்வர்டு பிளாக் கட்சி, தி.சஞ்சீவி, தலைவர், இராஷ்டிரிய ஜனதா தளம், ஆ.மு.கிருஷ்ணன், புதுச்சேரி முத்தமிழ் மன்றம்,
நடராசன், முரசொலி பேரவை, ச.ஆனந்தகுமார், புதுவைக் குயில் இலக்கியப் பாசறை, இரா.சுகுமாரன், புரட்சிகர இளைஞர் முன்னணி, கலைப்புலி சங்கர், இளைஞர் அணித் தலைவர், தமிழர் தேசிய இயக்கம்.