Tuesday, November 11, 2008

புதுச்சேரியில் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் காங்கிரசார் ரகளை: கண்டனம்!

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் கடந்த 01-11-2008 அன்று முத்தமிழ் மன்றத்தின் சார்பில் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமையினான ரவுடிக் கும்பல் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கலவரத்தில் ஈடுபட்டது.

இதை தட்டிக் கேட்ட அரசியல் கட்சி, சமுதாய இயங்கங்களின் தலைவர்கள் மீது புதுச்சேரி போலீசார் பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம.தி.மு.க. பொறுப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, கைதான தோழர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், ம.தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வ.செல்வராஜ், கபரியேல், அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, பார்வேட் பிளாக் தலைவர் முத்து, செந்தமிழர் இயக்கத் தலைவர் நா.மு.தமிழ்மணி, வெள்ளையணுக்கள் இயக்கத் தலைவர் பாவல், புரட்சிக் குயில் இலக்கியப் பாசறை ஆனந்தகுமார் ஆகிய கட்சி, இயக்கத் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் மீனவர் விடுதலை வேங்கைகள், புதுச்சேரி தமிழ் இளைஞர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புத் தொண்டர்கள் 80 பேர் தாங்களும் கைதாகிறோம் என்று கூறி கைதானர்கள்.

இந்நிலையில், இதுகுறித்து 03-11-2008 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காந்தீய வழியில் அமைதியாக நடந்த உண்ணாவிரதத்தில் ரகளை செய்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த இளைஞர் காங்கிரஸ் பாண்டியன் உள்ளிட்ட சட்டவிரோத கும்பலை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த 1-ஆம் நாளான்று முருங்கப்பாக்கத்தில் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து தமிழ் அமைப்பினர் போலீஸ் அனுமதி பெற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த இளைஞர் காங்கிரஸ் பாண்டியன் தலைமையிலான கும்பல் உண்ணாவிரதம் இருந்தவர்களைத் தாக்க முற்பட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளது. மேலும், அவர்கள் பாதுகாப்பிற்கு நின்ற போலீசாரை நெட்டித் தள்ளித் தகராறு செய்துள்ளனர். இதனால் உண்ணாவிரதப் போராட்டம் பாதியில் நின்றது.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை விமர்சித்துப் பேசியதாக கூறி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், ம.தி.மு.க. பிரமுகர் சந்திரசேகரன் ஆகியோர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் புதுச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உண்ணாவிரத்ததில் பங்கேற்காத, பேசாத லோகு.அய்யப்பன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உண்ணாவிரதத்தில் பேசியவர்கள் ஜனதா கட்சி சுப்பிரமணியசாமி சோனியா காந்தி பற்றி ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளனர். பாண்டியனுக்கு உண்மையில் சோனியா காந்தி மீது அக்கறை இருந்தால் சுப்பிரமணியசாமி மீதுதான் நடவடிக்கை எடுக்க கேட்க வேண்டும்.

அப்படியே சோனியாவை விமர்சித்துப் பேசியிருந்தாலும்கூட போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டது கிரிமினல் குற்றம். ஆளும் கட்சிப் பிரமுகர் என்பதால் இது போன்ற அராஜகத்தை அரசும், போலீசும் வேடிக்கைப் பார்ப்பது நல்லதல்ல.

உண்ணாவிரத்த்தில் ரகளை செய்த இளைஞர் காங்கிரசார் மீது இதுவரையில் போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குற்றவாளிகள் சுதந்தரமாக வெளியில் சுற்றித் வருகின்றனர். புதுச்சேரி போலீசின் ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக பாண்டியன் உள்ளிட்டவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை செய்யும் நோக்கோடு தாக்குதல், அச்சுறுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மக்களைத் திரட்டி மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்.

மேலும், பாண்டியன் போன்றவர்களின் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் ஏற்கனவே சரிந்து வரும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மேலும் சிதைக்கும் என்பதை காங்கிரஸ் தலைமைக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்கள் நலன் காக்கப் போராடியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

ரகளையில் ஈடுபடும் இளைஞர் காங்கிரசார்...


காங்கிரசாரின் அராஜகத்தை எதிர்த்த ஈழத் தமிழர் ஆதரவுத்
தோழர்களைக் கைது செய்யும் போலீசார்...

6 comments:

Anonymous said...

புதுவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றி யாரும் எழுதவில்லை பத்திரிக்கைகளின் மூலம் மட்டுமே அறிந்தோம் எனவே விரிவாக அவற்றை எழுத வேண்டுகிறேன்.

தமிழன் said...

இந்த தேசிய"வியாதிகள்" எப்போது திருந்துமோ என்று தெரியவில்லை.

இரா.சுகுமாரன் said...

காங்கிரசு கும்பல் வேண்டுமென்று திட்டமிட்டு மறியல் செய்தது மிகவு கண்டிக்கத்தக்கது.

இன்று வாலறுந்த நரிகள் போல் காங்கிரசு ஊளையிடுகின்றது.

இரா.சுகுமாரன் said...

காட்சிப்படத்தில் ஒலி இல்லை, காட்சிப்படம் முழுமையாகவும் வெளியிடப்படவில்லை. அப்படி வெளியிட்டிருந்தீர்கள் எனில் காங்கிரசு கட்சியினர் எப்படி காட்டுமிராண்டிகள் போல் நடந்து கொண்டார்கள் என்பது வெளி வந்திருக்கும். பாண்டியன் என்பவன் எப்படி வரையறையின்றி நடந்து கொண்டார் என்பதும் வெளிவந்திருக்கும். காவல் துறை அனுமதி பெற்ற பட்டினிப் போராட்டத்தில் அவர்கள் கத்தியது ஆகியவை எந்த வகையில் தேவையற்றது என்பதும், அது மிகப்பெரிய அத்து மீறல் என்பதையும் அனைவரும் பார்த்திருக்கலாம்.

காட்சிப்படம் இருந்தால் முழுமையாக வெளியிடுங்கள்

sathiri said...

நன்றிகள் சுகுமாரன். அடுத்ததாய் அந்தகாங்கிரஸ் காரரை இலங்கைக்குப்போய் இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து புலிகளை வேரறுக்கவேண்டியதுதானே. அதை விட்டிட்டு பாண்டிச்சேரியில் நின்று கூச்சலிட்டால் புலி செத்துபோயிடுமா. பாவம் பழம்பெரும் காங்கிரஸ்கட்சி

Anonymous said...

அய்யா வணக்கம் !

அந்த ’அழகு’பாண்டியின் திருமுகத்தை வெளியிட்டிருந்தால் மானிட்டர் அசிங்கமானாலும் பரவாயில்லை என்று காறித்துப்ப வசதியா இருந்திருக்கும்.

ம் ம் என்ன செய்ய சாராயக்காசு அப்படி வேலை செய்யுது.